கலை கலாசாரத்தை நாடி நவராத்திரி கால நியதிகள்

நவராத்திரி கால நியதிகள்

2020 Oct 17

அவனின்றி அனுவும் அசையாது. அவளின்றி அவன் அசையான் என சிவத்தில் பாதியாக விளங்கும் சக்தியினை நோக்கி ஒன்பது ராத்திரிகள் அனுஷ்டிக்கப்படும் விரதமே நவராத்திரி விரதம் ஆகும். நவராத்திரி விரதமானது தட்சணாய காலம் எனப்படும் புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை நோக்கி அனுஷ்டிக்கப்படுகிறது. இது புரட்டாசி மாதம் அமாவசை கழிந்த பூர்வ பட்ச பிரதமை திதியில் வசந்த நவராத்திரியுடன் ஆரம்பமாகி நவமி சாரதா நவராத்திரி வரையான காலம் வரை அனுஷ்டிக்கப்படுகிறது. நம்மில் பலருக்கு நவராத்திரி விரதத்தின் போது பூஜை முறைகள் பற்றிய தெளிவான தகவல்கள் தெரியாது. அதனால் நவராத்திரி காலத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய பூஜை முறைகள் இதோ!  உங்களுக்காக,

நவராத்திரி காலங்களில் கும்பம் வைத்தல் சிறப்பான ஒன்றாகும். சிலர் கும்பம் வைப்பதோடு நிறுத்தி விடுகின்றனர். ஒழுங்கான முறையில் பூஜிப்பது கிடையாது. இது விரத பங்கத்தினை ஏற்படுத்தக் கூடும் ஆகையால் நவராத்திரி காலங்களில் கும்பம் வைக்கும் போது அந்த கும்பத்தினை தேவியின் உருவாக பாவித்து வாசணை மிகுந்த மலர்கள், கனி வகைகள், நெய், பால், வெல்லம் கலந்த சுவையான நிவேதனய்களை படைத்து தேவியை மகிழ்விக்கும் படியான தோத்திர பாடல்களை பாடி வழிபடுதல் வேண்டும்.

உங்களது வீட்டில் இரண்டிலிருந்து பத்து வயதிற்குட்பட்ட நோயற்ற ஆரோக்கியமான பெண் குழந்தைகள் இருப்பார்களேயானால் அவர்களை நவராத்திரி நாட்களில் அம்பிகையைப் போல் அலங்கரித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்பிகையின் வடிவமாக பாவித்து அவர்களுக்கு வாய்க்கு சுவையன அமுது படைத்து அவர்களுக்கு ஆடை, ஆபரணம், பழம், தாம்பூலம், பூக்கள், கண்ணாடி, சீப்பு போன்ற பொருட்களை கொடுத்து மகிழ்வித்தல் வேண்டும். இவ்வாறு செய்தல் அம்பிகையை மகிழ்விப்பதற்கு ஒப்பாகும்.

நவராத்திரி நாட்களில் முதல் நாள் ஒருத்தர் இரண்டாம் நாள் இருவர் என ஒன்பது நாட்களும் சுமங்கலிப் பெண்களை தெரிவு செய்து அவர்களுக்கு நலங்கு மஞ்சளிட்டு சாப்பாடு போட்டு மங்கல பொருட்கள் கொடுத்து மகிழ்விப்பதும் தேவியை மகிழ்விப்பதற்கு ஒப்பாகும். வசதியானவர்கள் ஒன்பது நாட்களும் ஒன்பது சுமங்கலிகளுக்கு வீதம் இச்சடங்கினை செய்யலாம்.

நவராத்திரி முதலாம் நாள்
திதி = பிரதமை
அம்பிகையின் நாமம் = சைலபுத்திரி, குமாரி
நிவேதனம் = வெண் பொங்கல்
பூக்கள் = சிவப்பு நிற அரளி

நவராத்திரி இரண்டாம் நாள்
திதி = துவிதியை
அம்பிகையின் நாமம் = பிரம்மசாரிணி, திரிமூர்த்தி
நிவேதனம் = எள்ளோதரை
பூக்கள் = மஞ்சள் நிற கொன்றைப் பூ, சாமந்தி, நீலோற்பலம், நீலசம்பங்கி

நவராத்திரி மூன்றாம் நாள்
திதி = திருதியை
அம்பிகையின் நாமம் = சந்திரகாண்டி, கல்யாணி
நிவேதனம் = சர்க்கரைப் பொங்கல்
பூக்கள் = செண்பகப் பூ, வில்வதனம்

நவராத்திரி நான்காம் நாள்
திதி = சதுர்த்தி
அம்பிகையின் நாமம் = கூஷ்மாண்டி, ரோகினி
நிவேதனம் = கதம்ப சாதம்
பூக்கள் = செந்தாமரை, ரோஜா

நவராத்திரி ஐந்தாம் நாள்
திதி = பஞ்சமி
அம்பிகையின் நாமம் = ஸ்கந்த மாதா, காளி
நிவேதனம் = தயிர் சாதம்
பூக்கள் = கதம்பம், மனோ ரஞ்சிதம்

நவராத்திரி ஆறாம் நாள்
திதி = சஷ்டி
அம்பிகையின் நாமம் = காத்யாயினி, சண்டிகா
நிவேதனம் = பால் சாதம்
பூக்கள் = சம்பங்கி, செண்பகம், இருவாட்சி

நவராத்திரி ஏழாம் நாள்
திதி = சப்தமி
அம்பிகையின் நாமம் = கானராத்திரி, சாம்பவி
நிவேதனம் = எலுமிச்சை சாதம்
பூக்கள் = மல்லிகை, முல்லை

நவராத்திரி எட்டாம் நாள்
திதி = அஷ்டமி
அம்பிகையின் நாமம் = மகா கௌரி, துர்க்கை
நிவேதனம் = தேங்காய் சாதம்
பூக்கள் = வெண் தாமரை

நவராத்திரி ஒன்பதாம் நாள்
திதி = நவமி
அம்பிகையின் நாமம் = சித்திதா, சாரதா, சரஸ்வதி, சுபத்ரா
நிவேதனம் = உளுந்து வடை
பூக்கள் = துளசி, வெள்ளை மலர்கள்

பத்தாம் நாள் விஜயதசமி
திதி = தசமி
அம்பிகையின் நாமம் = விஜயை, விஜய ஸ்ரீவித்யா, லக்ஷமி
நிவேதனம் = பால்
பூக்கள் = வாசனைப் பூக்கள்

இந்த பட்டியலில் உள்ளவாறு பூஜிக்க முடியாதவர்கள் கவலைக் கொள்ள வேண்டாம். தூய அன்போடு எந்தப் பெயர் கூறி எந்த மலரால் பூஜித்து எவ்வாறான நிவேதனம் படைத்தாலும் மனதில் தூய்மையும் பக்தியும் நிறையப் பெற்றிருந்தால் போதும் அம்பிகை மனமிரங்கி அருள் செய்வாள்.

இது தவிர மாலையில் சுண்டல் நிவேதனம் செய்து கொலுவுக்கு வரும் சுமங்கலிப் பெண்கள் மற்றும் கன்னிப் பெண்களுக்கு தாம்பூலத்தோடு கொடுப்பது சகல பாக்கியங்களையும் பெற்று தரும்.

இந்த வருடம் நவராத்திரி விரதத்தினை எமது இல்லங்களில் சரியான முறையில் கடைபிடித்து அம்பிகையின் அருள் பெறுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php