கலை கலாசாரத்தை நாடி மருத்துவமும் மகத்துவமும் கொண்ட வாழை மரம்.

மருத்துவமும் மகத்துவமும் கொண்ட வாழை மரம்.

2020 Nov 20

கிராமங்களில் ஒவ்வொரு வீட்டின் பின்புறத்தில் காணப்படும் தோட்டத்திலும் வாழைமரம் காணக்கூடியதாக இருக்கும் ஏனெனில் வாழை மரம் பொருளாதார ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் பல பலன்களை தரக் கூடியது. வாழை மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பயனைத் தரக் கூடியது. வேண்டாமென கழித்துக் கட்டுமளவிற்கு வாழை மரத்தில் ஏதுமே இல்லை.

விசேட பண்டிகை காலங்கள், விழாக்கள், திருமண மற்றும் பூப்புனித நீராட்டு விழா போன்ற வைபவங்களின் போது வாழைக் கன்றுகளை வாசலின் இரு பக்கங்களிலும் கட்டி வைப்பது வழக்கம். இதன் பின் மருத்துவமும் அலங்காரமும் மறைந்துள்ளது. அத்தோடு இது செல்வம், வளம் மற்றும் மங்களகரம் போன்றவற்றை வெளிப்படுத்தும் அடையாளமாக விளங்குகின்றது. வாழை மரத்தின் வேர், வாழைப்பூ, வாழைத் தண்டு மற்றும் இலைகளை கொண்டு தயாரிக்கப்படும் சாறானது உடலில் உள்ள நோய்களை குணப்படுத்துகின்றது. வாழையிலையில் உணவினை சாப்பிடும் போது உடல் ஆரோக்கியம், ஆயுள் மற்றும் இளமை ஆகியன சீராகி அதிகரிக்கின்றன. வாழைக்காய் கூடுதலாக தென்னிந்தியர்கள் மற்றும் தமிழர்கள் தங்கள் உணவில் விரும்பி சேர்த்து சாப்பிடும் ஓர் உணவாகும். வாழைக்காயைக் கொண்டு தயாரிக்கப்படும் பஜ்ஜி மற்றும் சிப்ஸ் போன்ற சிற்றுண்டிகள் சிறுவர்களிடம் மட்டுமன்றி பெரியவர்களிடமும் மாறா இடத்தை பிடித்துள்ளன. வாழைப் பழத் தோலானது சாயமிடலுக்கும் பற்களில் உள்ள கறையினை நீக்குவதற்கும் பயன்படுகிறது. சோர்ந்து களைப்பாக இருக்கும் போதும் உடலில் சக்தி குறையும் போதும் வாழைப்பழம் உடன் சக்தி மற்றும் ஆற்றலினை பெற்றுத் தரக் கூடியதாக காணப்படுகிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகளவில் காணப்படுகிறது. வாழைப் பூ சிறுநீரக கற்கள், மலச்சிக்கல் மற்றும் கிட்னி சார்ந்த நோய்களிலிருந்து குணம் தரக் கூடிய ஒன்றாக விளங்குகிறது. வாழையின் நார் பூக்களை தொடுத்து கட்டி மாலையாக மாற்றுவதற்கு உதவுகிறது.

மருத்துவம் மற்றும் அலங்காரத்திற்காக மட்டுமல்லாது சாஸ்திர சம்பிரதாயப்படி மேற்கொள்ளப்படும் சில சடங்குகளிலும் வாழை மரத்தினை பயன்படுத்துகின்றனர். வாழை மரத்திற்கு தெய்வத்தினதும் பெண்ணினதும் குணம் இருப்பதாக நம்பப்படுகிறது. அதனால் களத்திர தோஷம் மற்றும் இரண்டு திருமணம் நடைபெறக் கூடிய வாய்ப்பும் சிலரது ஜாதகத்தில் காணப்படும். அவ்வாறான ஜாதகர்களுக்கு திருமணத்தின் முன் வாழைமரமொன்றிற்கு தாலி கட்டி சாங்கியம் செய்வது வழக்கம். இவ்வாறு செய்வதால் இரண்டாவதாக இடம்பெறும் திருமணம் எந்தவொரு தடங்களின்றியும் எந்தவொரு இன்னலின்றியும் சிறப்பானதாக அமையும் என நம்பப்படுகிறது.

இவ்வாறாக வேர் முதல் நார் வரை பலபயன்களை தரக் கூடிய வாழை மரத்தினை உங்கள் வீட்டில் வளர்ப்பதற்கான இடவசதி இருக்குமேயானால் குறைந்தது ஒரு வாழை மரத்தினையாவது வளர்க்க முயற்சியுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php