கலை கலாசாரத்தை நாடி கொரோனா காலத்தில் ஹஜ் பெருநாளை பாதுகாப்பாக கொண்டாடுவது எப்படி?

கொரோனா காலத்தில் ஹஜ் பெருநாளை பாதுகாப்பாக கொண்டாடுவது எப்படி?

2021 Jul 19

வருடத்தில் இருமுறை முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாடுகிறார்கள். அவை, நோன்பு பெருநாள் மற்றும் ஹஜ் பெருநாள் ஆகும். முஸ்லிம்களின் ஹிஜ்ரி நாட்காட்டியின் இறுதி மாதமான துல்ஹஜ் மாதத்தின் பத்தாம் நாள் கொண்டாடப்படுவதே ஹஜ் பெருநாள் ஆகும்.

பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் அற்ற இப்ராஹீம் நபிக்கு இஸ்மாயில் (நபி) மகனாகப் கிடைக்கப் பெற்றார். அப்படி அருளாக கிடைக்கப்பெற்ற இஸ்மாஈல் நபியை அல்லாஹ்வின் கட்டளைக்கு ஏற்ப, இப்ராஹீம் நபி அறுத்துப் பலியிட  முனைந்து, இறைவன் மீது தாம் கொண்டிருந்த இறை நம்பிக்கையை உலகுக்கு பறைசாற்றினார். இது 5000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவமாகும். இச்சம்பவத்தை நினைவு கூறும் முகமாக, உலக முஸ்லிம்கள் அனைவரும் தத்தம் வசதிக்கேற்ப ஆடு, மாடு, ஒட்டகம், செம்மறி ஆடு போன்ற கால்நடைகளை  அறுத்துப் பலியிட்டு (குர்பான்) குடும்பத்தினர், வசதி குறைந்தவர்கள், ஏழை எளியோர் போன்றோருடன் பகிர்ந்து கொள்கின்றனர். அத்தோடு ஒவ்வொரு வருடமும் துல்ஹஜ் மாதம் பிறை 8 தொடக்கம் 13  வரை இறுதி யாத்திரையான ஹஜ்ஜை உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் இன, மத, நிற பேதமின்றி நிறைவேற்றுகின்றனர்.

அந்த வகையில் முழு உலகையுமே ஆட்கொண்டுள்ள கண்ணுக்குத் தெரியா கொரோனா வைரஸின் தாக்கத்தினால் பலர் உயிர்களை இழந்தும், இன்னும் பலர் தனிமைப்படுத்தல் முகாம்களிலும் மேலும் சிலர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு இலங்கை  மட்டும் விதிவிலக்கல்ல. இலங்கையிலும் கொரோனா வைரஸ் அதன் தாக்கத்தை வெளிக்காட்டுகிறது.

இதனால் கடந்த இரு வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலேயே முஸ்லிம்கள் தமது இறுதி கடமையை நிறைவேற்றுகின்றனர்.  சவுதி அரசும் அண்மையில் உள்ள ஒரு சில நாடுகளுக்கே புனித யாத்திரையான ஹஜ்ஜை நிறைவேற்ற அனுமதியளித்துள்ளது. இது முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை துர்பாக்கிய சந்தர்ப்பம்கும்.

அத்தோடு அரச சட்டங்களுக்கு உட்பட்டு முஸ்லிம் கலாசார அமைச்சு, வக்ப் சபை, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஆகியோரின் வழிகாட்டுதல்களின் கீழ் பெருநாட்களை கொண்டாடுகின்றனர்.

பொதுவாக முஸ்லிம்கள் சுபுஹு தொழுகை (அதிகாலையில் எழுந்து நின்று தொழும் தொழுகை) முடிந்து சூரியன் உதயமாகி இருபது நிமிடங்களுக்குப் பிறகு இஸ்ராக் நேரத்தில் ஹஜ் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். தொழுகையை நிறைவேற்றிய பின்னர் மூத்தவர்கள், இளையவர்களின் நல்வாழ்விற்கு நல்லாசி வழங்குவர். அதன்பின்னரே வீட்டிற்குச் சென்று காலை சிற்றுண்டி உண்ண வேண்டும். இவ்வாறே முஸ்லிம்கள் ஹஜ் பெருநாள் தினத்தை ஆரம்பிப்பார்கள். ஆயினும் இவ்வருடம் கொரோனா காரணமாக குடும்ப ஒன்றுகூடல் மற்றும் இதர ஒன்றுகூடல்களை தவிர்த்து அனைவரும் தத்தம் வீடுகளிலேயே ஹஜ் பெருநாளை கொண்டாடும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர்.  இதுவே காலத்தின் கட்டாயமாக உள்ளது.

கடந்த வருடத்தைப் போன்று இவ்வருடமும் எவ்வித ஆரவாரமும் இன்றி அமைதியான முறையில் முரண்பாடுகள் அற்ற வகையில் அரசுக்கு கட்டுப்பட்டு நாட்டின் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப மக்கள் அனைவரும் அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள கொரோனா கால அறிவுறுத்தல்களை பின்பற்றி இவ்வருட ஹஜ் பெருநாளை கொண்டாடுவோமாக.

அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here