கலை கலாசாரத்தை நாடி மிரட்டும் பேய்முகமூடிகள்

மிரட்டும் பேய்முகமூடிகள்

2022 Jan 25

இலங்கையில் மிகப் புராதன காலத்திலிருந்து உருவாக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு வரும் பேய்மூகமுடிகள் நீங்கள் அறிந்ததொன்றே. ஆனால் அதன் வரலாற்றை நீங்கள் அறிந்ததுண்டா? அதைப்பற்றியே இந்த பதிவில் அறிந்துகொள்ள போகிறோம்.

கலாசார அல்லது இன வேறுபாட்டைப் பொருட்படுத்தாமல் முகமூடி என்பது உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான சாதனமாகும். இது அணிபவரின் முகத்தை மறைக்கவும் உதவுகின்றது. பேய்முகமூடிகள் என்பது சிங்களத்தில் ‘யகா மாஸ்க்’ என்று கூறினால் அனைவருக்கும் தெரியும். இது இலங்கையர்களின் பழங்கால திருவிழாக்கள் மற்றும் கலாசார நடனங்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட முகமூடியாகும். பேய் முகமூடிகளின் தாயகம் இலங்கை என்று பழங்கால வரலாறு கூறுகிறது. அதற்கான காரணம் அக்காலத்திலேயே இது பாரம்பரிய முகமூடி வடிவமைப்பாகவும் இலங்கையில் நடன சடங்குகளின் கலாசாரத்தின் முக்கிய ஒரு பகுதியாகவும் காணப்பட்டமைக்கான இலக்கிய சான்றுகள் உள்ளன. இந்தப் பேய் முகமூடியின் வரலாற்று பின்ணனியில் ஒரு கதை உள்ளது.

புராணங்களில் கூறப்படும் அரசன் சங்கபாலனும் அவரது மனைவி, மகாராணி அயுபாலாவும் இந்தியாவில் தம்பதியினராக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் ஆட்சி செய்த சங்கபால ராஜ்ஜியத்திற்கு எதிராக அயல் நாடு போர் தொடுத்தது. அந்த வேளையில் ராணி அயுபாலா கர்ப்பமாக இருந்தபோது தானொரு ‘முகமூடி நடனம்’ ஒன்றை பார்க்க வேண்டுமென்ற விசித்திரமான ஆசையை தனக்குள்ளே வளர்த்துக் கொண்டார். ஆனால் அவர்களுடைய முழு ராஜ்யத்திலுள்ள யாருக்குமே இந்த முகமூடி நடனம் பற்றி எதுவும் தெரியாது. இப்படியிருக்க ராணியின் ஆசையை உணர்ந்த சக்ரா எனும் கடவுள் சில முகமூடிகளையும் பாடல் வரிகளையும் கண்டுபிடித்து ஒரு தோட்டத்தில் வைத்தார். அதன் பிறகு இந்த முகமூடிகளை அணிந்து அந்த பாடலை பாடி முகமூடி நடனம் மக்களால் ஆடப்பட்டது. அந்த முகமூடி நடனத்தை ரசித்த பிறகு மகாராணி அயுபாலாவின் ஆசை நிறைவுற்றதாக கதையொன்றுமுள்ளது.

இந்த முகமூடிகள் பார்ப்பதற்கு தீயசக்தியின் உருவமொன்றை பிரதிபலித்தாலும் அதன் உண்மையான கருத்து தீமையைத் தடுக்கும் நோக்கம் கொண்டவையே என்பதாகும். அதாவது அக்காலத்தில் பேய்களால் (யக்காக்கள்) நோய்கள் ஏற்பட்டதாகவும் அந்த நோய்களை இந்த முகமூடி அணிந்து ஆடும் பிசாசு நடனம் எனப்படும் சடங்குகளால் குணப்படுத்தினர் என்றும் பழங்கதைகள் உரைக்கின்றன. இந்த சடங்கில்தான் பல்வேறு வகையான முகமூடிகள் தோற்றம் பெற்றன. இந்தப் பேய் முகமூடிகள் பலவிதமான தோற்றங்களைக் கொண்டிருப்பதால் ஒவ்வொரு தனித்துவமான பெயரைத் தாங்கியே பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்தச் சடங்குகளில் பயன்படுத்தப்பட்ட நோய்களைக் குறிக்கும் முகமூடிகள் ‘சன்னி மாஸ்க்’ என்று அழைக்கப்படுகின்றன. நோய் போன்றவற்றை குணப்படுத்த பெரஹெராக்கள் (மத ஊர்வலம்) சடங்குகளில் பயன்படுத்தப்படும் இந்த முகமூடி ‘ கர யக்கா’ என்று அழைக்கப்படுகிறது. அத்தோடு தலை ஆடை மற்றும் காதுகளுக்கு பாம்புகளுடன் கூடிய முகமூடி ‘ நாக ரக்ஷா’ அல்லது நாகப் பேய் என்று அழைக்கப்படுகிறது. பறவையின் அம்சங்களைக் கொண்ட முகமூடி ‘கருட ரக்ஷா’ , மயிலின் முகமூடி ‘மயூர ரக்ஷா’ (மயில் அரக்கன்) , தீப்பிழம்புகள் கொண்ட முகமூடி ‘கினி ரக்ஷா’ (தீ ஜுவாலையின் அரக்கன்), மரணத்தை குறிக்கும் முகமூடி ‘மரு ரக்ஷா’ , மற்றும் ‘ரத்னகூட ரக்ஷா’, ‘த்வி நாக ரக்ஷா’, ‘மல் குருலு ரக்ஷா’ என்றெல்லாம் அழைக்கப்படுகின்றன.

பொதுவாக இந்தப் பேய் முகமூடிகள் துடிப்பான வண்ணங்களில் தாமரை மலர்கள் வடிவில் வட்டமான காதுகள் மற்றும் இரண்டு தந்தங்கள், பெரிய குண்டான கண்கள், நீண்ட நாக்குகள் மற்றும் வெவ்வேறு வடிவான தலை அமைப்புகளோடு வேறுபட்ட பேய்களை சித்தரிக்கும் விதமாக உருவாக்கப்படுகின்றன. சிங்களத்தில் ‘கதுரு’ என்று அழைக்கப்படும் காஞ்சுரை(ஸ்ட்ரைக்னோஸ் நக்ஸ்-வோமிகா ) மரத்தினால் உருவாக்கப்படுகிறது. இவை முழுவதுமாக கையால் செதுக்கப்பட்டு வர்ணப்பூச்சு செய்யப்பட்டு சந்தைகளுக்கு விற்கப்படுகின்றன. மக்கள் இதை அதிகளவு வாங்கி வீடுகளின் வாசற்கதவின் மேலே பொருத்தி வைக்கின்றனர். இதற்கு காரணம் இந்த முகமூடிகளை வீட்டில் வைத்திருப்பது மற்றவர்கள் நம்மேல் வைக்கும் தீய கண் (கண்திருஷ்டி) மற்றும் கூறும் தீய வார்த்தைகளிலிருந்து பாதுகாக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.

இந்தப் பேய் முகமூடிகளுக்கு பிறப்பிடம் இலங்கை என்று நாம் முன்னரே கூறியது போல இலங்கையிலும் இந்த பேய் முகமூடிகளை மிகவும் விஷேடமாக தாயரிக்கும் பிரசித்திப் பெற்ற இடம் அம்பலாங்கொடையாகும். பல ஆண்டுகளாகவே அங்கு வாழும் மக்கள் சிக்கலான, வினோதமான மற்றும் வண்ணமயமான முகமூடிகளைத் தயாரிக்கும் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் பங்குகொண்டுள்ள பேய் முகமூடிகள் ஆகும். அம்பலாங்கொடையின் பாரம்பரிய முகமூடி செதுக்குபவர்கள் முகமூடி நடனம் மற்றும் பழமையான நாட்டுப்புற பாடல்கள் என இரண்டிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பதோடு பரம்பரை பரம்பரையாக மனப்பாடம் செய்துள்ள சடங்கு கவிதைகளையும் அவர்கள் வாசிப்பார்கள். அம்பலாங்கொடையைத் தவிர காலி போன்ற நாட்டின் பல முக்கிய பிரதேசங்களிலும் கைத்தொழிலொன்றாக பேய் முகமூடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

உலகெங்கிலும் உள்ள வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் கூட இறுதிச் சடங்குகள் மற்றும் கருவுறுதல் சடங்குகளில் முகமூடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. என்றாலும் பழங்காலத்திலேயே இந்த பேய் மூகமுடிகள் இலங்கையில் பயன்படுத்தப்பட்டு படிப்படியாக போட்டிகளிலும் கலாசார மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகளிலும் தவிர்க்க முடியாத பொருளாக மாறியுள்ளது. ஆகையால் இது இலங்கையை அடையளாப்படுத்தும் தனித்துவம் நிறைந்த மற்றும் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது என்பது முற்றிலும் உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php