2022 Mar 31
Rackshan Leon இனால் தயாரிக்கப்பட்டு Sobanasivan velraj இனால் இயக்கப்பட்ட விருது பெற்ற குறும்படம் தான் ‘பற’. இக்குறும்படத்தில் Akshayan senthuran, Abinayan senthuran மற்றும் Raam Thamizh ஆகியோர் நடித்துள்ளனர். பல விருதுகளுக்காக இத்திரைப்படம் தெரிவாகியுள்ளமை குறிப்பிடதக்க ஓர் விடயமாகும்.
ஆரம்பத்தில் இத்திரைப்படத்தை பார்க்கும் போது நிஜமாகவே எதுவுமே புரியாத புதிர் ஒன்றுக்குள் மாட்டிக் கொண்ட உணர்வு ஏற்பட்டது. விமர்சனம் எழுதும் போது “எதுவுமே புரியவில்லை” என்றா எழுத முடியும்? அதனால் மீண்டும் இரண்டு மூன்று தடவைகள் பார்க்க தொடங்கினேன். அப்போது ஆரம்பத்தில் காட்டப்படும் கறுப்பு வெள்ளை காட்சி கனவு மற்றைய காட்சி நினைவு என்பதை தாண்டி எதுவும் புரியவில்லை. பத்தாவது தடவை பார்த்து முடித்த பின் இனி மீண்டும் மீண்டும் பார்ப்பது பயன் தராது என்ற முடிவுக்கு வந்து என்னுடைய அரை நாளினை இக்குறும்படம் பற்றிய சிந்தனையில் கழித்தேன்.
ஒரு வேளை நான் இயக்குனராக இருந்திருந்தால் என் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்ற கோணத்தில் சிந்திக்க தொடங்கினேன். அப்போது என் மனதில் ஓர் சிறுவன் தனது பட்டத்தினை பறக்க வைக்க முயற்சிக்கின்றான். அதனை அவனது அண்ணன் வேலை வாங்கும் எண்ணத்தின் பொருட்டு தடுக்கிறான். இடை இடையில் ஒரு அசரிரி கேட்கிறது (வகுப்பாசிரியரின் குரல்) இறுதியில் பட்டம் (சிறுவனின் கனவு) பறக்க வேண்டும் என்ற முயற்சி நடந்ததா? இல்லையா? என்பது தான் கதை. இது தான் என் சிந்தனைக்கு எட்டியது. சரி இந்த கணிப்பு சரியானதா என்பதனை இயக்குனரிடமே கேட்டு விடுவோம் என முகப்புத்தகத்தின் வாயிலாக தொடர்பு கொண்டேன். அப்போது அவர் உரையாடிய விதம் மிகவும் பணிவும் அன்பும் கலந்ததாக இருந்தமையால் என்னுடைய சந்தேகங்கள் அனைத்தும் கேட்டு தெரிந்து கொள்ள கூடியதாக இருந்தது.
என் கணிப்பிற்கும் இயக்குனரின் கணிப்பிற்கும் சிறு வித்தியாசம் தான். ஆரம்ப காட்சியினை நான் கனவென முடிவு செய்திருந்தேன் ஆனால் அது சிறுவனின் நிஜ வாழ்வின் சம்பவமே கனவாக தோன்றியுள்ளது என்றார். உண்மையில் இயக்குனர் கூறும் வரை எனக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பரவாயில்லை அதுவும் ஒரு வகை யுக்தி தான் இல்லையென்றால் அந்த குறும்படத்தினை பத்து தடவைகள் பார்த்து என் மூளையை கசக்க வேண்டியிருந்திருக்காது.
ஒவ்வொரு இயக்குனர்கள் ஒவ்வொரு விடயத்தை தனது ஆயுதமாக கொண்டு பார்வையாளர்கள் மனதில் சில நாட்கள் தங்கிவிடுவார்கள். இவர் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தி நம் கைகளில் கதையின் கருவினை விட்டு விடுவதை ஆயுதமாக பயன்படுத்தியுள்ளார்.
படத்தில் ஒலிப்பதிவு மற்றும் ஔிப்பதிவு என்பவற்றை பாராட்டியே ஆக வேண்டும் ஏனெனில் கனவு என்ற நிலையினை நேர்த்தியாக காட்சியாக்கியுள்ளனர். அந்த அசரிரி தான் என் மனதில் ஆழப்பதிந்த காட்சி.
இக்குறும்படத்தில் குறையென கூறும் படி ஏதும் இருக்கவில்லை ஆனால் கதையின் கருவினை பார்த்தவுடன் விளங்கிக் கொள்ளும் படி எடுத்திருந்தால் படம் மேலும் சிறப்பானதாக இருந்திருக்கும் ஏனென்றால் நம்மில் அனைவருக்கும் மூளையை கசக்கி சிந்திக்கவும் இயக்குனரை தொடர்பு கொண்டு பேசவும் நேரம் இருக்காது அல்லவா!
நாடி Verdict – 60/100
Video Link – https://youtu.be/f3MQuVg3_TQ