நாடி Review கடமை குறுந்திரைப்படம் – Nadi Review

கடமை குறுந்திரைப்படம் – Nadi Review

2023 Mar 18

2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 07ஆம் திகதி Arsath Sanan தயாரிப்பில் MUTUR FILM ACADEMY youtube தளத்தில் வெளியான குறுந் திரைப்படம் தான் ‘கடமை’. இக்குறுந் திரைப்படமானது Rasly Akthaf இனால் இயக்கப்பட்டுள்ளது. இதற்க்கான cinematography Ahsan இனால் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இக்குறுந் திரைப்படத்திற்க்கான எடிட்டிங் வேலைகள் Jesa இனால் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு நடுத்தர வயதினையுடைய ஆணின் இருமல் சத்தத்தினை தொடர்ந்து “என்னப்பா? என்னாச்சு? கொஞ்சம் தண்ணிய குடிங்கப்பா!” என்ற வசனத்தோடு இக்குறுந் திரைப்படத்தின் ஒலி ஆரம்பமாகிறது. அதனை தொடர்ந்து களிமண்ணும் தகரமும் கொண்டு கட்டப்பட்ட தனி வீடு ஒன்று சைக்கிளையும் ஆட்டு குட்டியையும் துணையாக இறுக்க கட்டிக் கொண்டு இருளில் தனியாக நின்றுக் கொண்டிருந்தது. அந்த வீட்டினுள் எம்மை அழைத்து சென்று இருமலுக்கு சொந்தக்காரரையும் அவரது மகனையும் அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர்.

தகப்பனின் சுகயீனத்தை பார்த்துக் கொண்டே சிந்தனையில் ஆழ்ந்த சிறுவனின் கண்களுக்கு தந்தையின் உபகரணங்கள் தென்படுகின்றன. அந்த உபகரணங்களோடு அந்த காட்சியை cut செய்து “டேய் இஞ்ச வா இஞ்ச வா உனக்கு எப்ப பாத்தாலும் phone தானா?” என்ற வசனத்தோடு தொடர்ந்து இன்னொரு சிறுவன் அமர்ந்திருந்து அழும் shot உடன் வேறொரு வசதியான வீட்டின் காட்சி ஆரம்பமாகிறது. அழுதுக் கொண்டிருந்த சிறுவன் திடீரென தனது பையினுள் சில சட்டைகளை நிரப்பிக் கொண்டு வீட்டாருக்கு தெரியாமல் சுவர் ஏறி குதித்து வீட்டை விட்டு ஓடுகிறான். அந்த ஓட்டத்தோடு இரவு கழிந்து காலை புலர்ந்தது. இரவெல்லாம் தந்தையின் இருமலால் தூக்கம் தொலைத்து படிப்பின் மீதான கவனத்தை தொலைத்த சிறுவன், தனது பைக்குள் தந்தையின் உபகரணங்களை நிரப்பிக் கொண்டு வீட்டின் மூலையில் தனது சிறகுகளை கழற்றி வைத்து விட்டு வேலைக்கு புறப்பட்டான் இல்லை காலமும் வறுமையும் அவனை வேலைக்கு வழியனுப்பி வைத்தது.

வீட்டை விட்டு ஓடி வந்து பஸ் தரிப்பிடத்தில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் தூக்கத்திலிருந்து விழித்து தனது பையை தேடி அலைந்துக் கொண்டிருந்தான். அந்த தேடலினால் இந்த இரு சிறுவர்களும் சந்தித்துக் கொண்ட விதம், அதன் பின் நடந்த உரையாடல், தடம் மாறி சென்ற இருவரின் பாதையும் சீரானதா? இல்லை சீர்குலைந்து பரிதாபத்துக்கு உள்ளானதா? இதுவே இக்குறுந் திரைப்படத்தின் மீதி கதை. உண்மையில் இருவரின் பாதை முடிந்த விதமும் என் விழிகளில் தானாகவே நீர் பொங்க காரணமாகிவிட்டன.

பென்சிலும் பேனையும் பிடித்து கனவு பாதைகள் வரைய வேண்டிய வயதில், வறுமையை விரட்ட பணம் தேடி அலையும் நிலை எவ்வளவு கொடுமையானது. தெருக்களில் சிறார்களை கையேந்த விடுவதும், மக்களின் பரிதாபத்தை சம்பாதிக்க பச்சிளம் மழலைகளை கைகளில் தாங்கியபடி யாசிப்பதும், வகுப்பறையில் இருக்க வேண்டிய வயதினையுடைய சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதும் நாம் அன்றாடம் பார்த்து கடக்கும் சாதாரண காட்சிகளாக மாறிக் கொண்டு வருகின்றன. இவ்வாறன காட்சிகளின் பின் எவரும் காது கொடுத்து கேட்காத கண்ணீர் கதைகள் உண்டு என்பதை இந்த குறுந் திரைப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

9 நிமிடம் 33 வினாடிகள் நீளம் கொண்ட இந்தக் குறுந்திரைப்படத்தில் கடைசி கிளைமாக்ஸில் இசைக்கப்பட்டிருந்த இசை உணர்வுகளை அணைத்து மேலும் உணர்ச்சிவசப்படுத்துவதாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த குறுந் திரைப்படத்தில் எடிட்டிங் சில இடங்களில் மிஸ் ஆகுவது போன்று இருந்தது. அதாவது ஆடியோ வீடியோவை விட்டு சில சில இடங்களில் முன் பின் என விலகி நகர்ந்துக் கொண்டிருந்தது. ஆங்காங்கே சில குற்றங்கள் இருந்தாலும் நம் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய குறுந் திரைப்படங்களில் இதுவும் ஒன்று. நல்ல சமூக கருத்துக்களை மேலும் படமாக மாற்றி முன் செல்ல இக்குறுந் திரைப்பட குழுவினருக்கு nadi.lk சார்பாக வாழ்த்துக்கள்!

 

Rating 08/10

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php