2023 Mar 28
ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டால் அவள் வாழத் தகுதியற்றவள். ஓன்று அவளாகவே முன்வந்து தற்கொலை செய்துகொள்வாள், அல்லது வில்லன்களால் கொலை செய்யப்படுவாள்! இதுதான் காலம்தோறும் நாம் பார்த்துவந்த தமிழ் சினிமாக்கள் நமக்கு காட்சிப்படுத்திய விதம். இல்லையென்றால் இதுபோன்ற குற்றங்களை எமோஷனலாக அணுகி குற்றவாளியை பழிவாங்குவது அல்லது கொலை செய்வது போன்ற கருத்துகளையும் நம் சினிமாக்கள் வலியுறுத்த தவறியதில்லை.
ஆனால் இந்த வழக்கமான பார்முலாவை விடுத்து கடந்த வருடம் “சோனி லிவ் ஓடிடி” தளத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் கெய்சர் ஆனந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் “அனல் மேலே பனித்துளி “!
தன்னுடைய உடலை தனக்கெதிரான ஆயுதமாக பயன்படுத்தும் கொடூரர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் பெண்ணின் சீற்றமே இந்த ‘அனல் மேலே பனித்துளி’ என்றால் மிகையில்லை.
கதையின்படி, சென்னையில் விளையாட்டு உபகரணங்கள் விற்கும் கடை ஒன்றில் மேலாளராக இருக்கும் கதாநாயகியான ஆண்ட்ரியா தன்னுடன் வேலைப் பார்க்கும் பெண் ஒருவரின் திருமணத்திற்காக கொடைக்கானல் செல்கிறார். திருமணத்திற்குப்பின் கொடைக்கானல் இயற்கையை ஓர் மாலை நேரத்தில் சுற்றிப்பார்த்துக்கொண்டிருக்கும் ஆண்ட்ரியா, அங்கே மூன்று நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்.
ஏற்கெனவே ஆண்ட்ரியாவை பழிவாங்கக் காத்திருக்கும் சில ஆண்கள்தான் குற்றவாளிகள் என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்குகிறது காவல்துறை. ஆனால், அந்த காவல்துறையினை சேர்ந்த மூன்று பேரால்தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறாள் என்பது அவளுக்கு தெரிய வருகிறது.
எங்கே உண்மை தெரிந்த ஆண்ட்ரியா தம்மை காட்டிக்கொடுத்துவிடுவாளோ என அஞ்சிய அந்த அதிகாரிகள் காவல் நிலையத்தில் வைத்தே மீண்டும் அவளை நிர்வாணப்படுத்தி புகைப்படங்களை எடுத்து தம்மைப்பற்றி வெளியில் சொன்னால் இந்த புகைப்படங்களை இணையத்தில் விட்டுவிடும் அதன்பின்னர் உன் மானம் மரியாதை என்னாவது என மிரட்டுகின்றனர்.
மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகும் ஆண்ட்ரியா குற்றவாளிகளுக்குச் சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுத்தாரா என்பதே படத்தின் கதை. இந்த திரைப்படத்தில் என்னை மிகவும் ஈர்த்த ஓர் காட்சியமைப்பு என்னவென்றால், ஆண்ட்ரியா தான் ஒரு சிறுமியாக விளையாடிக்கொண்டிருக்கும்போது, பள்ளி செல்லும்போது அதன்பின்னர் கல்லூரி வேலை என அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி செல்லும்போதெல்லாம் அவள் அம்மாவால் அல்லது யாரேனும் ஒரு குடும்ப அங்கத்தவரினால் “கவனம் நீ ஒரு பெண் உன்னை நீ பாதுகாத்துக்கொள்ளவேண்டும் (அதாவது உன் உடலை நீ பாதுகாத்துக்கொள்ளவேண்டும் எனும் தொனியில் ) திரும்பத் திரும்ப ஒருவிதமான அச்சம் கலந்த ரீதியில் அறிவுறுத்துவதும் பின்னாளில் தான் வல்லுறவுக்குள்ளானபின் அவள் அந்த அறிவுறுத்தல்களை பற்றி சிந்திக்கும்போது ஏன் ஒரு பெண்ணினது உடல் மீது இத்தனை அச்சுறுத்தல்கள் எதற்காக அவள் மட்டும் தன்னை பாதுகாத்துக்கொள்ள திரும்பத் திரும்ப அறிவுறுத்தப்படுகின்றாள்?
பெண் உடலை பாதுகாக்க குடும்பங்கள் எடுக்கும் முயற்சியில் எத்தனை வீதம் தங்கள் ஆண் குழந்தைகளிடம் பெண் உடள்மீதான வன்முறை தவிர்க்கப்படவேண்டும் என்றோ அல்லது அவள் சக மனுஷியாக மதிக்கப்பட வேண்டும் என்றோ கூறப்படுவதில்லை? என்கிற ரீதியில் அவளது மனவோட்டம்தனை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் முக்கியமானது.
ஆடைக் கட்டுப்பாடு குறித்த கேள்வியும், பெண்ணுடலை அவர்களுக்கு எதிரான ஆயுதமாக்கும் போக்கு குறித்தும் பாலியல் ரீதியில் பாதிக்கப்படும் பெண்கள் சந்திக்கும் மன உளைச்சல்கள், உளச்சிக்கல்கள் போன்ற விடயங்களை இந்த படம் பேசுகிறது.
மேலும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும்போது பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக மாற்றும் இந்த சமூக உளவியலை கேள்வி கேற்கும் இத்திரைப்படமானது, தவறு செய்தவன் தான் குற்றவாளி, எந்த வகையில் பாதிக்கப்பட்டவள் தவறானவள்? என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் முன்வைத்திருப்பதென்பது சிறப்பான பார்வை.
அதுமட்டுமன்றி பாலியல் வன்கொடுமைக்குள்ளான ஓர் பெண் கட்டாயம் அதை மூடி மறைத்துவிடாமல் அதனை வெளிக்கொணர்ந்து சட்டத்தின்முன் குற்றவாளிகளை நிறுத்துவதென்பது அதுபோன்ற குற்றங்களை அடுத்து செய்ய நினைப்பவர்களை நிச்சயம் தடுக்கும் என்பதால் இது காலத்தின் அவசியம் என்பதையும் அப்படி ஓர் பெண் முன்வரும்போது அவளுக்கு அவளது குடும்பம் பக்கபலமாக இருக்கவேண்டும் என்பதையும் இத்திரைப்படம் சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது.
‘‘உசுரு பெருசா, மானம் பெருசான்னா, மானம்தான் பெருசு. ஆனா, அந்த மானம் எதுல இருக்கு, என் உடம்புலயா? நான் வாழற வாழ்க்கையிலதானே?’’ என ஆண்ட்ரியா பேசும் வசனங்கள் நம் சமூகத்தின் பார்வையானது மாறவேண்டிய காலகட்டத்திற்கு வந்தாயிற்று என்பதையே உணர்த்துகின்றது போலும் …