அனைத்தையும் நாடி  விளம்பரங்களில் பெண்கள்!

விளம்பரங்களில் பெண்கள்!

2022 Sep 7

முதல்நாள் பார்த்த மெகா சீரியல்களில் வரும் காட்சிகள் பற்றி அலுவலகங்களில் கலந்துரையாடிய காலம்போய் புதிய விளம்பரங்கள் குறித்து விதவிதமாக விவாதங்கள் அரங்கேறுகின்றன இன்று என்றால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு விளம்பரங்கள் நேர்த்தியாகவும் கவர்ச்சியாகவும் தயாரிக்கப்படுகின்றன என்பதென்னவோ மறுக்கவியலாத உண்மைதான். விளம்பர தயாரிப்பாளர்கள் புதுமையான உத்திகளைக் கையாள்வது இதற்கு முக்கிய காரணம்.

வித்தியாசமான கரு படப்பிடிப்பு உறவுகளை மையப்படுத்தி மனதைத்தொடும் விளம்பரங்கள் குழந்தைகளைக் கவரும் விளம்பரங்கள் என திணுசுதிணுசாய் புதுசுபுதுசாய் விளம்பரங்கள் உருவாக்கப்படுகின்றன.இன்றைய முன்னணி கதாநாயகன் நாயகிகளில் பலர் விளம்பரங்களில் முகம் காட்டிய பின்புதான் திரையுலகில் கொடிநாட்டுகின்றனர்.

இதற்கு  சிறந்த உதாரணம் பல ஆண்டுகளுக்கு முன்னமே வெளிவந்த ஐஸ்வர்யா ராயின் பெப்சி விளம்பரமே. (இதற்குப் பின்னாளில்தான் அவர் உலக அழகியாகி ஒரு நடிகையுமானார் என்பது நாம்  அறிந்தவொன்றே) மேலும் நடிகர் ஆர்யாவின் “emerald shirt” விளம்பரமும் குறிப்பிடத்தக்கது!

அது ஒரு ரகம் என்றால் விளம்பரங்களைப் பிரபலப்படுத்த பிரபலமான நபர்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் கதாநாயகன் நாயகிகளைத் தேடிப் பிடித்து நடிக்க வைப்பது இன்னொரு ரகம். இந்தப் பிரபலங்களின் தாக்கத்தால் நிறுவனத்தின் பொருள்களை நினைவில் வைக்கும் காலம்போய் பிரபலத்தைக் கொண்டு நிறுவனத்தை நினைவு கொள்ளும் காலம் வந்தாயிற்று என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்றைய வர்த்தகத்துறையின் முதுகெலும்பாக இருப்பது எது என்ற கேள்வி எழுமாயின்  பதில் ‘விளம்பரங்கள்’ என்றுதான் வரக்கூடும். அந்த அளவுக்கு விளம்பரங்களின் தந்திரங்களை வைத்தே பொருட்களின் விற்பனை நிர்ணயிக்கப்படுகிறது. ஊடகங்கள் வாயிலாக மக்களை எளிதில் சென்றடையும் நிலையில் இன்றைய விளம்பரங்கள் இருப்பதாலும்  கடுமையான வர்த்தகப்போட்டி நிகழ்வதாலும் இன்றைய விளம்பரங்கள் புதுப்புது வசீகர சிந்தனகைகளைக் கொண்டதாக புதுமைகளை நோக்கிய அதன் பயணத்தை தொடர்ந்துகொண்டேயிருக்கிறது எனலாம்

“விளம்பரம் செய்யாமல் பணத்தை சேமிப்பவன் கடிகாரத்தை நிறுத்திவிட்டு நேரத்தை சேமிக்கும் மூடனுக்கு ஒப்பாவான் ” எனும் ஆங்கில முதுமொழிக்கேற்ப இன்றைய வர்த்தக உலகம் விளம்பரங்களின் விரல்களைப் பிடித்துக்கொண்டே  ஒவ்வொரு நொடியையும் கடக்கவேண்டியிருக்கின்றது.   சற்று ஓய்வெடுத்தாலும்கூட  அந்த இடத்தினை அபகரிக்க ஏராளமான போட்டிப்பொருட்கள் சந்தையில் உலவிக்கொண்டிருப்பதால்  உலகின் முதன்மையான அத்தியாவசியமான பொருட்களுக்குகூட விடாது விளம்பரம் செய்யவேண்டியிருக்கிறது எனலாம்.

இவ்வகையில் இப்படியான புதுப்புது வசீகர சிந்தனையில் வெளிவரும் புதுமையான விளம்பரங்களின் வேகத்தில் நுகர்வோருக்கு எது உண்மையான விளம்பரம் , எது தவறான முடிவுகளுக்கு தம்மை இட்டுச் செல்கிறது எனக் கண்டுபிடிப்பது மிகப்பெரிய சவாலாகியுள்ளது.

ஒரு விளம்பரம் எந்த நோக்கதிற்க்காக செய்யப்படுகிறது ?”

ஒரு பொருளின் விற்பனைக்காகவும் அதை சந்தையில் பிரபலப்படுதுவதற்க்காகவும்  புதுப்புது தயாரிப்புகளை அறிமுகப் படுதுவதற்க்காகவும் ஒவ்வொரு விளம்பரமும் உருவாக்கப்படுகிறது எனப்பொதுவாகக் கொள்ளலாம். அந்தவகையில் இன்றைய நவீன உலகில் விளம்பரம் எனப்படுபவை காலத்தின் அவசியம் என்ற அடிப்படையில் வீட்டு உபயோகப் பொருட்கள்,  ஆடைகள், குழந்தைகளுக்கான பொருட்கள் வாகனங்கள் என்பவை தாண்டி மருத்துவப் பொருட்கள்வரை அத்தனையும் விற்கப்படவேண்டுமாயின் அவையனைத்தும் முதலில் பெண்களைக் கவரவேண்டும் என்ற உளவியல் ஒன்றிருக்கிறது போலும். இந்த உளவியல் அன்று தொட்டு இன்றுவரை எந்த அளவில் எப்படிக்கையாளப்பட்டுவருகிறது என்பது பற்றியே இந்தக் கட்டுரை.

 விளம்பரங்கள் இன்று வரம்பு மீறுவது  கவலை அளிப்பதாக உள்ளது. அதில் சில விளம்பரங்களில் பெண்கள் மோசமாக உருவகப்படுத்தப்படுகின்றனர்.வாசனைத் திரவியங்கள் ஆண் பெண்களின் உள்ளாடைகள் கார் பெயின்ட் என அனைத்து விளம்பரங்களிலும் பெண்களை அரைகுறை ஆடைகளில் காண்பிப்பது ஏன்? அதற்கு அவசியம் என்ன வந்தது?

என்பதுதான் லட்சோப லட்ச மக்களின் கேள்வி! குறிப்பிட்ட வாசனை திரவியத்தையோ அல்லது விளம்பரங்களில் காண்பிக்கப்படும் பொருளையோ, ஒரு ஆண் உபயோகிப்பதன் மூலம் அனைத்து இளம் பெண்களும் அவரது பின்னால் வருவதைப் போன்றும் அல்லது ஒரு ஆண் பெண்களை மயக்குவதற்காகவே குறிப்பிட்ட நிறுவனத்தின் பொருள்களை உபயோகிப்பது போலவும் காண்பிக்கப்படுகிறது. ஒரு ஆணை அவர் பயன்படுத்தும் வாசனை திரவியத்துக்காகவே பெண்கள் அவரை விரும்புவார்களா? அல்லது அவர் பின்னே செல்வார்களா? இங்கு பெண்களின் மதிப்பு எந்த அளவுக்கு தரம் தாழ்த்தப்படுகிறது?

“ஒவ்வொரு பெண்ணுக்கென்றும் ஒரு தனித்தன்மை  ஒரு யதார்த்தமான ஆளுமை இருக்கிறது. ஆனால் விளம்பரங்கள்  இந்த ஆளுமையை மாற்றியமைத்து அவர்களுடைய தன்னம்பிக்கையை குறைக்கும் தன்மை வாய்ந்தவை என்கிறார் விளம்பரங்களில் பெண்களின் நிலை பற்றிய ஆராய்ச்சியாளரான “jean kilbourne  ” என்ற பெண். அது எப்படி என்பதற்கு  சில உதாரணங்கள்  ஒரு mint-o fresh விளம்பரம் சிரிப்பே அறியாத ஒரு வயதான சிடுமூஞ்சிக்கு வாழ்க்கைப்பட்டு வாழ்க்கையே வெறுத்துபோய் இருப்பாள் ஓர் இளம்பெண்.

mint-o fresh ஒன்றை வாயில் போட்டுக்கொண்டு அந்தப்பக்கமாய் வரும் இளைஞனைப் பார்த்ததும் அவனோடு ஓடிப்போய் விடுவாள். அட! ஒரு mint-o freshகாக ஒருவனுடன் ஓடிப்போகும் அளவிலா இருக்கிறாள் இன்றைய பெண்? அடுத்து ஒரு ஷேவிங் க்ரீம் விளம்பரம். ஒரு அழகான இளம்பெண் ஒரு இளைஞனுடன் நடனமாடிக்கொண்டிருக்கிறாள் அவனது தாடை சரியாக சவரம் செய்யப்படாது சொர சொரப்பாக இருப்பதைக் கவனித்து முகம் வாடுகிறாள் உடனே அந்த தருணத்தில் சுத்தமாக ஷேவிங் செய்யப்பட்டு பளிச் என்று அந்த அறைக்குள் நுழையும் ஆடவனைக் கண்டு சொரசொரப்பான தாடை இளைஞனை தள்ளிவிட்டுவிட்டு இவனுடன் ஒட்டிக்கொள்கிறாள். அட ஒரு ஷேவிங் க்ரீமுக்காகவா இப்படி?

கிரிக்கெட் மைதானத்தில் தனக்கு முன் உள்ள இளைஞன் தனக்கு மைதானத்தை மறைக்கிறான் என்பதனால் அவன்மேல்  perfume அடித்துவிட அவனை பெண்கள் பட்டாளம் மொய்த்து தனியே அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். பின் இவன் மைதானத்தை நன்கு வேடிக்கை பார்க்கிறான்.  இதைவிட பெண்களை கொச்சைப்படுத்த முடியுமா?

 முகத்தில் பரு தோன்றிய காரணத்துக்காக வீட்டுக்குள்ளேயே கட்டிலுக்கு கீழ் முடங்கிக்கிடக்கிறாள் ஒரு டீன் ஏஜ் பெண். அவள் வெளியே சென்று  பருவந்த முகத்துடன் பிறரை சந்திக்கத் தயங்குகிறாளாம்! உடனே அவளுக்கு உதவுகிறது ஒரு க்ரீம் விளம்பரம்! முகத்தில் பரு வருவது ஓர் இயற்கை மாற்றம்  அந்த டீன் ஏஜ் வயதில் யதார்த்தமாக எடுத்துக்கொள்ளவேண்டிய அந்த நிகழ்வுடன்   எப்படி ஒரு பெண்ணின் தன்னம்பிக்கையை தொடர்பு படுத்திக்கொள்ள முடிகிறது இந்த விளம்பரதாரர்களால்.

அது மட்டுமா? அனைத்தும் க்ரீம் விளம்பரம்களுமே கருப்பாய் இருப்பது பாவம் என்பதுபோலவும்  அது ஒரு குறைபாடு என்பதுபோலவும்  கருப்பாக இருப்பவர்கள் தன்னம்பிக்கை அற்றுப்போவார்கள் என்பதாகவுமே காட்ட முனைவது ஏன்? நீ கருப்பாக இருக்கிறாய் அதனால் தன்னம்பிக்கை இல்லாது இருக்கிறாய்  மற்றவர்களால் ரசிக்கப்படமாட்டாய் எனவே நீ சிவப்பாவது கண்டிப்பாக நாட்டுக்கும் இந்த நாட்டு ஆண்களுக்கும் அவசியம் என்பதுபோல தினமும் நாம் கண்ணுறும் விளம்பரங்கள் எத்தனை எத்தனை?

ஓர் இளம்பெண் அவள் கருப்பாக இருக்கிறாள் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு வயதான அழகற்ற ஓர் நபருடன் அவள் திருமணம் அவளது விருப்பத்துக்கு மாறாக நிச்சயிக்கப்படுகிறது. அவளது முக வாட்டம் கண்ட அவளது பாட்டி ஆயூர்வேத மூலிகையடங்கியதாக காட்டப்படும் பெயாரன் லவுளியை அப்பெண்ணின் கைகளில் திணிக்க அதைப் பூசும் அவ்விளம்பெண் சில வாரங்களிலேயே சிவப்பழகு பெற்று  வேறு ஒரு அழகான இளைஞனின் காதல் பார்வையில் சிக்கி அவனையே திருமணம் செய்துகொள்வதாய் காட்டும்   ஒரு விளம்பரம் நம் இளைஞர்கள் மத்தியில் விதைக்க விரும்புவது எதை?

ஒரு நைட்டி விளம்பரம் இதில் நடிகையும் குடும்பத்தலைவியுமான தேவயாணி சொல்லுவார் “ஒரு குடும்பத்தலைவியாக என்னை உணர வைப்பது  (பொம்மீஸ் நைட்டி) நைட்டி தான் அட பாவமே  எதை எதையோடு தொடர்புபடுத்துவது என்ற விவஸ்தை இல்லையா ?

குடும்பதில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம் இதனால் இந்த மசாலாப் பொடியை உபயோகிக்கிறேன்  என்னுடைய கக்கூசு எனக்கு முக்கியம் அதனால் இந்த லிக்யூட்டைப் பயன்படுத்துகிறேன்  குடும்பத்தின் ஆரோக்கியம் என் கையில் அதனால் இந்த சோப்பைப் பயன்படுத்துகிறேன். என் குடும்பத்தினர் பளிச் என்று உடுத்தினால்தான் எனக்குப் பெருமை அதனால் இந்த சலவைத்தூள் போட்டுத் துவைக்கிறேன் என்னுடைய கணவரது இதயத்தை பாதுகாப்பது எனது கடமை அதனால் இந்த நல்லெண்ணையை ஊற்றி சமைக்கிறேன் என சமையல் எண்ணெய்  முதல் கக்கூசு கழுவும் பெனாயில் வரை தலைக்குத் தேய்க்கும் தேங்காய் என்னைமுதல்  கார் பெற்றோல்வரை பெண்தான் விளம்பர மாடல்!

ஒரு வாகன விளம்பரமெனில் அந்த வாகனத்தின் தரத்தை நிரூபிக்க  குட்டிக் கவுனோடு அந்த வாகனத்தில் சாய்ந்துகொண்டு ஒரு பெண் மோகப் பார்வை பார்க்கவேண்டும்! சோப்பு விளம்பரமெனில் பெண் குளிக்க வேண்டும்! அட ஓர் பெண்ணுக்கு எந்த வகையிலுமே பயன்பட முடியாத பொருளுக்குகூட அவளது உச்சகட்ட அழகு தேவைப்படுகிறது இல்லையா?   ஒரு பெண்ணின் உருவம் இருந்தால்தான் குறித்தவொரு பொருள் விற்பனையாகும் என்ற நிலை எப்படி உருவானது?

இப்படி நுகர்வோரின் விருப்பு வெறுப்புக்கான வியாபாரப் பொருளாக  போகப் பொருளாக பெண் காட்டப்படுவதன் உளவியல் என்ன? சமூகத்தின் பெரும்பாலான பெண்களைத்தான் இந்த விளம்பரங்கள் பிரதிபலிக்கின்றனவா என்றால் ஒருபோதும் இல்லை.   பெண்களின் யதார்த்த வடிவத்தில்  எங்களது  அன்றாட வாழ்வியலில் ஒரு சிறு  சதவீததையேனும் பிரதிபலிப்பதில்லை. மீண்டும் மீண்டும் ஒரு பெண் என்றால் அவள் அழகாக, சிவப்பாக, உயரமாக, ஒல்லியாக இருக்கவேண்டும் என்ற கருத்தினையே எல்லா விளம்பர்களும் வலியுறுத்துகின்றன இல்லையா?

அன்றாடம் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களை சற்றுக் கவனித்தால் புரியும் இந்த எல்லா விளம்பரங்களிலுமே மேற்குறித்த அழகு என்ற கற்பிதத்தினுள்  உள்ள பெண்களே மொடல்களாக இருப்பர். வாகனங்கள்  நகைகள் போன்ற மிகப்பெரிய விளம்பர்களை சற்றுவிடுத்து சலவைப் பவுடர்  ஹார்லிக்ஸ்  மசாலாப் பொடி விளம்பரங்களையே எடுத்துக்கொண்டாலும்கூட  இதில் காட்டப்படும் பெண்களும்கூட என்னதான் புடவை  சல்வார்  அணிந்து குடும்பப்பாங்காக காட்டப்பட்டாலும்  அவர்களும் யதார்த்தம் தாண்டியே இருப்பார்கள்.

இவ்விளம்பரங்களில் வரும் பெண்கள் பாத்ரூமை சுத்தம் செய்துகொண்டிருந்தாலும் சரி சமைத்துக் கொண்டிருந்தாலும் சரி  துணி துவைத்தாலும் சரி முழுமையாக மேக்கப் அணிந்து கசங்காத உடையுடன் பளிச் என்ற தோற்றத்துடன் இருப்பதென்பது  மறுபடியும் விளம்பரங்கள் அழகையும் கவர்ச்சியையும்  உயரமாக ஒல்லியாக அப்பழுக்கற்ற வெள்ளைத்  தோலுடன்தான்  தொடர்புபடுத்துகிறது இல்லையா?

இவ்வாறான எந்தவொரு விளம்பரங்களிலுமே கருத்த தடித்த  குட்டையான ஓர் பெண் பயன்படுதப்படுவதேயில்லை. ஆக விளம்பரதாரர்கள் தங்களது பொருட்களின் தரத்தைவிட ஒரு பெண்ணின் அழகை கவர்ச்சியை நம்பித்தான் தம் பொருட்களை மார்கெட் செய்கிறார்களா என்ன?  இப்படி அனுதினமும் தொலைக்காட்சியில் தோன்றும் அழகான மாடல்களைப் பார்க்கும் பெண்களுக்கு  தமது இயல்பான தோற்றத்தின்மீதும்  கவர்சியின்மீதும் அதிருப்தி ஏற்படுவது என்பது தவிர்க்கமுடியாதவொன்றாகிப் போககூடுமே?

குறித்தவோர் சோப்பினை பயன்படுத்தாது வேறு ஒரு சோப்பை  உபயோகித்துவிட்டால்  தனது மகளின் சருமம் கெட்டுப்போய் அவளுக்கு திருமணமே நடக்காது என்று பயப்படும் ஒரு தாய் fairness கிரீம் உபயோகித்து தன்னம்பிக்கை வந்தவுடன்  தான் இஷ்டப்பட்ட உத்தியோகத்தில் இணைகிறாள் ஓர் பெண்  தன் கனவினை நிறைவேற்றிக்கொள்ள குறித்த சத்துப்பானத்தை அருந்தி “சிக்” என்ற உடல்வாகுபெற்றபின்  இலட்சியத்தை அடைகிறாள்.

இன்னொருபெண் இப்படி எதற்கெடுத்தாலும் அழகு ..அழகு .. அழகு மட்டும்தானா பெண்? இதுதவிர ஓர் பெண்ணிடமிருந்து எதிர்பார்க்க வேறு எதுவுமே இல்லையா? ஒரு பெண் என்றால் இப்படிதான் இருக்கவேண்டும் என்ற மீடியா ஏற்படுத்திய ஓர் பிம்பதினுள் ஒவ்வொரு பெண்ணும் தன்னைப் பொருத்திக்கொள்ள முயல்கிறாள். விளைவு? இல்லாத அழகை செயற்கையாக வரவழைக்க முயன்று பணத்தைக் கரைப்பதுடன் உடல் உபாதையை வாங்கிக்கொண்டு தன்னம்பிக்கை இழக்கிறாள்.

 அம்மாவுடன் மிகப்பெரிய அங்காடிகளுக்குள்ளும்  சுப்பர் மார்கெட்டுகளுக்குள்ளும்   நுழையும் குழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் விளம்பர்க்ளைப் பற்றியும் சொல்லியேயாகவேண்டும். ஏனெனில் பெரியவர்களாலேயே இவற்றின் நன்மை தீமையினை சரியான முறையில் பிரித்தறிய இயலாதநிலையில்  குழந்தைகளின் நிலை? உணவு உண்ணாவிட்டாலும் பரவாயில்லை  தம் விளம்பரத்தில் காட்டப்படும் சத்துப் (?!) பானதினை அருந்தக்கொடுத்தால் போதும் அது குழந்தைக்கான சகல சக்தியையும் வழங்கிவிடும் என்று கூறும் விளம்பரம்  அதை கொடுக்காவிட்டால் அவள் ஒரு நல்ல தாய் அல்ல என்ற தொனியில் தம் விளம்பரக் காட்சியை காட்சிப்படுதியிருபதை  நீங்களே  அவதானித்திருக்கக்கூடுமே?

ஒருகால கட்டம்வரையில் விளம்பரங்கள் மூலம் மக்களிடையே செய்தியை கொண்டுசேர்ப்பதில் நல்ல கருத்துக்களையே முன்வைத்தார்களாம். அதன்மூலம் ஒரு நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் பொருட்களைப்பற்றிய விபரங்களை மக்களைக் கவர பல்வேறு யுத்திகளைக் கைக்கொண்டு விளம்பரமாக தயார்செய்து வெளியிட்டார்கள்.  ஆனால்  இன்றோ விளம்பரங்களின் பிரம்மாண்டமும்  கவர்ச்சியும் பலவேளைகளில் பொருட்களின் தரத்துக்கு அதிகமான பணத்தை கொடுக்கவேண்டிய சூழலை நுகர்வோருக்கு ஏற்ப்படுதுகிறதா?

நடிகர்களோ நடிகைகளோ  விளையாட்டு வீரர்களோ தங்கள் புகழைப் பயன்படுத்தி எந்தப் பொருள் அவர்களுக்கு அதிக வருமானத்தை ஈட்டிக் கொடுக்கிறதோ  அந்தப் பொருளுக்கு விளம்பரம் செய்ய முன்வருகிறார்கள். ஆனால்  இந்தப் பிரபலங்களின் சுயநலமான பிசினஸ் மைன்ட் புரியாத நுகர்வோர்  அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு தவறான தேர்வுகளை கைக்கொள்வதுடன் அதிக விலை என்ற ஒன்றுக்குள்ளும் வீழ்ந்துபோகின்ற்றனர். அதனால்தானோ என்னவோ தண்ணீரைக்கூட இன்று “பிராண்ட்” அடிப்படையில் அதிக விலைகொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம் !

விளம்பரங்கள் அவசியமானவைதான் ஆனால் அதைவிட ஒவ்வொரு தனிமநிதரினதும் தன்னம்பிக்கையும் சுய கௌரவமும்  அவர்களது ஆரோக்கியமும் முக்கியமானது.  மிகைப்படுத்தலே பெரும்பாலும் இன்றைய விளம்பரங்களின் நிலை. இவ்வாறான விளம்பரங்களுக்கான சரியான மேற்பார்வை இல்லாததும்  தெளிவான வரையறைகள் இல்லாததும் தவறான புரிதல்களை ஏற்படுத்தக்கூடிய விளம்பரங்கள் புற்றீசல்போல் உருவாக துணை நிற்கின்றன. இன்றைய டெலி ஷாப்பிங் மார்கெட்டிங் கூட இதற்க்கான நல்ல உதாரணமாக இருக்ககூடும். கோடிக்கணக்கான பணம் புரளும் துறை என்பதால், வர்த்தகர்களும், விளம்பரதுரை ஊழியர்களும் வரிசை கட்டி நிற்கின்றனர்.

இதில் என்றால் அதுதான் உண்மை!விளம்பரங்கள் தொடர்ந்தும்  பயன்பாட்டாளர்களை வாங்க வைக்கவும் இருப்பது நல்லதல்ல புதியதே நல்லது எனும் ஆசையை மனதில் தூண்டிவிடும் வகையிலும் அமைந்துவிடுவது யோசிக்கவேண்டிய விடயமல்லவா? மேலும் ஒரே தரத்தில் உருவாகும் இரண்டு பொருட்களைக்கூட விளம்பரக் கவர்ச்சி என்ற ஓர் விடயம் நுகர்வோரை வெவ்வேறு திசைக்கு இழுத்துச் செல்லும் அபாயமும் நிகழக்கூடும். அதுமட்டுமா? போதும் என்ற மனப்பான்மைக்குமே இந்த விளம்பரங்கள் வேட்டு வைப்பதுடன் மகிழ்ச்சி என்பது பொருட்களில் இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தினை அவை ஏற்படுதிவிடுவதும் உண்டு.

எனவே விளம்பரங்களின் நோக்கம் எதுவானாலும்  அது சமூக கட்டமைப்புக்கு பங்கம் விளைவிப்பதாக இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம். நேர்மை, கண்ணியம், சமூக பொறுப்பு, கலாசாரம், விழிப்புணர்வு போன்றவை விளம்பரங்களில் உள்ளடக்கப்படும் நாளில்தான் சமுதாயம் அர்த்தப்படக்கூடும். விளம்பரங்கள் பற்றிய விழிப்புணர்ச்சி நம் ஒவ்வொருவர் மனதிலும் உருவாகவேண்டும். விளம்பரங்களின் வீரியம் நம்முடைய யதார்த்த வாழ்வியலை பாதிக்காத வகையில் சரியான முறையில் உள்வாங்கிக் கொள்ளப்படவேண்டும் நுகர்வோராகிய நாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php