2022 Sep 10
கோஹினூர் வைரத்தினை இதுவரை யாரும் விற்றதுமில்லை விலைக்கு வாங்கியதுமில்லை. அந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்ட நாள்முதல் ஒருவரிடமிருந்து மற்றவரால் அபகரிக்கப்பட்டு கைமாறிக்கொண்டேயிருக்கின்றது. கில்ஜிக்கள் மொகலாயர்கள் பாரசீகர்கள், சீக்கியர்கள் என கைகள்மாறி இங்கிலாந்து ராஜ குடும்பத்துக்கு சொந்தமானது எவ்வாறு? கோஹினூர் என்றால் பெர்சிய மொழியில் மலையின் ஒளி என பொருள். இந்த ஒளியில் சர்வநாசமான ராஜாக்களின் வரலாறும் அந்தவைரம் பயணித்த கதையும் மிகவும் பயங்கரமானவை.
13ஆம் நூற்றாண்டில் ஆந்திராவின் கொல்லூர் பகுதியில் அழியும் தருவாயில் இருந்த கிருஷ்ணா நதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்த வைரத்தின் ஆரம்பகால பெயர் கோல்கொண்டா (Golconda) என்பதே. அப்போது ஆந்திராவை சாகித்யர்கள் காகத்தியர்கள் ஆண்டுவந்தனர். கோஹினூரை கண்டெடுத்த சாமானியர் யாரேனும் சன்மானத்திற்காக மன்னனிடம்
கொடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. 186கரட் எடை கொண்ட கோஹினூர் பற்றி மக்களிடையே வதந்திகள் பரவத்தொடங்கின. இந்த வைரத்தை சொந்தமாக்கிக்கொண்டவர்கள் உலகத்தையே சொந்தமாக்கிக்கொள்ளலாம். ஆனால் அதன் அனைத்து துரதிஸ்டத்தையும் சேர்த்தே அனுபவிக்கவேண்டிவரும் என்கிற புரளியினால் சபிக்கப்பட்ட வைரமாக பார்க்கப்பட்டது கோஹினூர்.
இதனால் அதிர்ந்த காகத்திய மன்னன் அந்த வைரத்தை அம்மன் கோவிலுக்கு தானமாக வழங்கினான். அப்போதுதான் கில்ஜிக்களில் மிக வலிமை பொருந்திய மன்னனாக கருதப்பட்ட அலாவுதீன் கில்ஜியின் தென்னிந்திய படையெடுப்பு நிகழ்ந்தது. அலாவுதீனுக்காக அவனது படைத்தளபதி மாலிக்கபூரால் கொள்ளையடிக்கப்பட்டு டெல்லி கொண்டு செல்லப்பட்ட சில மாதங்களிலேயே நோய்வாய்ப்பட்டு அலாவுதீன் இறந்துவிட அடுத்த இருநூறுவருடங்களும் டெல்லியை ஆண்ட சுல்தான்களின் கைமாறி 15ஆம் நூற்றாண்டில் மொகலாய பேரரசர்
பாபரிடம் வந்துசேர்ந்தது. பாபரைத் தொடர்ந்து பல முகலாய பேரரசர்களின் கைகள் மாறி இப்ராகிம் லோடியிடமிருந்து போர் ஒன்றின்பின் சாளுக்கிய மன்னன் விக்ரமஜித்திடம் வைரம் தஞ்சமடைந்தது. பின் பாரசீக மன்னன் நாதிஷா இவர்தான் கோல்கொண்டா எனும் அந்த வைரத்தின் பெயரை கோஹினூர் என மாற்றியவர் மூலம் விக்ரமஜித் கொல்லப்பட்டு வைரம் ஈராக் கொண்டுசெல்லப்படும் வழியில் நாதிஷாவின் படையில் இருந்த ஆப்கானிஸ்தான் வீரர்களால் நாதிஷா படுகொலை செய்யப்பட கோஹினூர் வைரம் ஆப்கான் தளபதி முகம்மது ஷாவினால் ஆப்கானிஸ்தான் கொண்டுசெல்லப்பட்டது.
அங்கேயும் அந்த வைரத்தின் இருப்பு நீடிக்கவில்லை. முகம் முழுவதும் விஷக்கட்டிகள் தோன்றி அகோரமான முகமாக தன்னுடைய முகம் மாறியதைக்கண்டு ஓர் இரும்புக்கவசம் மூலம் வாழ்நாள் முழுவதும் தன் முகத்தை மறைத்துக்கொண்டு வாழும் நிலைக்கு முகம்மதுஷா தள்ளப்பட்டார். பின் 1813ல் பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங் மூலம் மீண்டும் இந்தியாவுக்குள் வைரம் கொண்டுவரப்பட்டாலும் ரஞ்சித் சிங்கின் அகாலமரணத்தையடுத்து ஏற்பட்ட வாரிசு அரசியல் போட்டியில் அவரது மூன்று மகன்களும் ஒருவர்பின் ஒருவராக கொல்லப்பட்டனர்.
இந்த குழப்ப நிலையை பயன்படுத்திக்கொண்டபிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினர் பஞ்சாபை தம் ஆளுகையின்கீழ் கொண்டுவந்ததுடன் இனி கோஹீனூர் பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கே சொந்தமானது என அதை விக்ட்டோரியா ராணியிடம் கொண்டுசேர்த்தனர். (வைரத்தை கொண்டுசெல்லும் கடல்வழிப்பயணத்தில் ஏராளமான பிரிட்டிஷ் படையினர் வாந்தி,மயக்கம், மலேரியா போன்ற பல நோய்களுக்கு ஆளாகி இறந்துபோனதாகவும் சொல்லப்படுகின்றது).
அதன்பின் பிரிட்டிஷ் மகாராணியின் மகுடத்தில் பதிக்கப்பட்ட அந்த வைரம் வழிவழியாக பின்வந்த பல ராணிகளின் தலையை அலங்கரித்து 2002 ஆம் ஆண்டுக்குப்பின் அரச குடும்பத்திற்கு சொந்தமான அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டது.
1947ஆம் ஆண்டுக்குப்பின் இந்தியாவால் மீண்டும் கோஹினூரை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் இங்கிலாந்து அரசின் மணிமகுடத்தில் பதிக்கப்பட்டுவிட்ட வைரத்தை பெயர்த்தெடுத்துக் கொடுக்கச் சொல்வது நடக்காத காரியம். இந்தியா மட்டுமல்ல பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளும் கோஹினூரை சொந்தம் கொண்டிக்கொண்டிருப்பதோடு அதுதொடர்பாக தொடுக்கப்பட்ட பல வழக்குகளும் இன்னும் நிலுவையில்தான் இருந்துகொண்டிருக்கின்றன.