2022 Sep 10
காலத்தால் அழிக்கமுடியாத The Queen “எனது முழு வாழ்க்கையும்
அது நீண்டகாலமாக இருந்தாலும் சரி குறுகிய காலமாக இருந்தாலும் சரி உங்கள் சேவைக்காக அர்ப்பணிக்கப்படும் என்பதை நான் உங்களுக்கு முன் அறிவிக்கிறேன்”. என்ற வார்த்தைகளோடு வாழ்ந்து காட்டிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இன்னுயிர் விடைபெற்றுச் சென்றது. உதிர்த்த வார்த்தைகளுக்கு உதாரணமாய் கிட்டதட்ட 70 வருடங்கள் பிரித்தானியாவின் அரியணையை அலங்கரித்த பெருமையை சூடிக்கொண்ட அவரின் இறப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகையே உள்ளங்கையில் வைத்து ஆட்சி செய்த
பிரித்தானியாவையே தன் சுண்டுவிரல் அசைவில் வைத்து ஆட்சி செய்தவர் தான் இரண்டாம் எலிசபெத் மகாராணியார். பிரித்தானியாவை நீண்டகாலம் ஆட்சி செய்த இரண்டாவது மகாராணி என்ற பெருமை இவரையேச் சாரும்.
எலிசபெத் மகாராணி கடந்து வந்த காலம்.
1926 ஏப்ரல் 21 ஆம் திகதி இங்கிலாந்தின் லண்டனில் மன்னர் ஆறாம் ஜோர்ஜ் இற்கும் அவரது மனைவி எலிசபெத் போவ்ஸ்-லியோனுக்கும் மகளாகப் பிறந்தார் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி. எலிசபெத் மகாராணி தனது 13 வயதிலேயே இளவரசர் பிலிப்பை சந்தித்தார். எலிசபெத் மகாராணியின் உறவினரான பிலிப் கிறீஸ் நாட்டின் இளவரசர். 7 வருடங்களாக கிறீஸ் இளவரசர் பிலிப்பை காதலித்த எலிசபெத் மகாராணி தன்னுடைய 21 வயதில் அவரை திருமணம் செய்துகொண்டார். காதல் திருமணம் கைகூடி இருவரும் இல்லற வாழ்க்கையில் திளைத்திருந்தனர். அவர்கள் மன்னர் சார்லஸ் இளவரசி ஏன் இளவரசர் என்ட்ரூ மற்றும் இளவரசர் எட்வர்ட் ஆகிய நான்கு குழுந்தைகளைப் பெற்றெடுத்தனர்.
1950 களின் முற்பகுதியில் எலிசபெத்தின் தந்தை மன்னர் ஆறாம் ஜோர்ஜ்ஜின் உடல்நிலை தீவிரமடைந்தது. சரியாக மகாராணிக்கு 25 வயதாகும் போது அவருடைய தந்தை அதாவது 1952 ஆம் ஆண்டு மன்னர் ஆறாம் ஜோர்ஜ் மறைந்தார். மன்னர் ஆறாம் ஜோர்ஜ் இற்கு ஆண்வாரிசுகள் இல்லையென்பதால் அவர் பெற்ற இரு பெண்குழந்தைகளில் மூத்தவர் எலிசபெத் மகாராணியாக அரியணையேறினார். 1953 ஜூன் 2 ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் எலிசபெத் மகாராணிக்கு முடிசூட்டு விழா நடைபெற்றது. இதுவே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட முதல் இராஜ விழாவாகும்.
மகாராணி எலிசபெத் அரியணையேறவே பல சுதந்திரநாடுகள் எழுச்சியுற்றன. இத்தருணத்தில் மகாராணியார் வகித்த பங்கு இன்றியமையாததொன்று. அவரது ஆட்சியின் போது அவர் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து தேசத்தலைவர்களின் வருகையில் பங்கேற்பார். அவருடைய முதல் வருடத்தில் தன் கணவர் பிலிப்புடன் சேர்ந்து ஏழு மாத இடைவிடாத சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். சரியாக பதின்மூன்று நாடுகளுக்கு விஜயம் செய்து அங்கிருப்பவர்களின் பெரும் ஆதரவைப் பெற்றார்.
பின்னர் மகாராணியார் எலிசபெத்தின் தலைமையில் 1958 ஆம் ஆண்டு ‘Empire Day’ஆனது ‘Commonwealth Day’ என மறுபெயரிடப்பட்டது. இது பிரித்தானியாவிற்கான புதிய பாதையையும் அதன் உலகளாவிய வரம்பையும் மறுவரையறை செய்தது.
1956 ஆம் ஆண்டில் சூயஸ் நெருக்கடி வெளிப்பட்டதன் பின்னர் பிரதம மந்திரி ஈடன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இனி அடுத்த பிரதம மந்திரியாக யாரை நியமிக்க வேண்டும் என்பது பற்றிய இறுதி முடிவெடுக்கும் உரிமை மகாராணி எலிசபெத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அமைச்சரவை மற்றும் கட்சியின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பிறகு ஹரோல்ட் மேக்மில்லன் பரிந்துரைக்கப்பட்டார். அதனால் தான் அன்று முதல் இன்று வரை ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரை நியமிக்கும் உரிமை எலிசபெத் மகாராணிக்கு இருந்து வந்தது.
1977 ஆம் ஆண்டு மகாராணி எலிசபெத் தனது வெள்ளி விழாவை கொண்டாடினார். இதற்கிடையில் 1980 களில் இளைய அரச வம்ச குடும்பம் உலகின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது குறிப்பாக இளவரசர் சார்லஸ் லேடி டயானா ஸ்பென்சரை திருமணம் செய்துகொண்டதோடு சாரா பெர்குசனுடனான இளவரசர் ஆண்ட்ரூவின் திருமணமும் நடந்தது. 1992 விண்ட்சர் கோட்டை எரிந்த சம்பவம் தனது மகன் ஆண்ட்ரூ மற்றும் மகள் ஏன் இன் திருமண வாழ்க்கைகள் விவாகரத்தில் முடிந்த சம்பவங்களால் மகாராணி மனமுடைந்துபோனார்.
மேலும் 1997 ஆகஸ்ட் அரச குடும்பம் அனுபவித்த மிக மோசமான சம்பவமாக பாப்பராசிகளால் பாரிஸில் நிகழ்ந்த இளவரசி டயானாவின் மரணமானது நெருக்கடி நிறைந்த முடியாட்சிக்கு முனைப்புள்ளியாக இருந்தது1999 இல் அவுஸ்திரேலியர்கள்
அரச தலைவராக மகாராணியை அமர்த்துவதற்கான வாக்கெடுப்பில் தலைவராக இரண்டாம் எலிசபெத் மகாராணி பங்கேற்றபோது டயானாவின் இறப்பு பற்றிய பொதுமக்கள் அனுபவிக்கும் துயரத்தின் தீவிர வெளிப்பாட்டையும் குடியரசுவாதம் பற்றிய ஆழமான கருத்துக்களையும் வழிநடத்த முடிந்தது.
2002 ஆம் ஆண்டில் லண்டனின் தெருக்களில் கோடிக்கணக்கான மக்களின் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் எலிசபெத் மகாராணியின் பொன்விழா நடைபெற்றது. இது இரண்டாம் எலிசபெத் மகாராணியின் புகழையும் முடியாட்சியின் வெற்றியையும் எடுத்துக்காட்டும் விதமாக அமைந்தது. 2012 ஆம் ஆண்டு அவர் தனது வைர விழாவை கொண்டாடினார். மகாராணி எலிசபெத்தின் ஆட்சிக்காலத்தில்
இங்கிலாந்து பல பரிணாமங்களைக் கண்டது. இவருடைய ஆட்சிகாலத்திலேயே இலங்கை பாகிஸ்தான் போன்ற நாடுகள் முடியாட்சியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டன.
மகாராணியின் செல்வாக்கு ஆரம்பகாலத்தின் ஐரோப்பிய புரட்சி பிரித்தானியர்
ஆட்சி பற்றி எல்லாம் நாம் படித்து அறிந்திருப்போம். பல நாடுகளை அடிமைப்படுத்தி ஆட்சி செய்து வந்த பிரித்தானியாவில் இன்னமும் இராஜவம்ச ஆட்சி தான் தழைத்தோங்கி ஆதிக்கம் செலுத்துகிறது. இங்கிலாந்தின் பிரதமருக்கு இருக்கும் அதிகாரம் ஆதிக்கம் கௌரவம் இவற்றையெல்லாம் விட அந்நாட்டின் மகாராணிக்கு இருக்கும் என்றே கூறவேண்டும்.
சுமார் 15 நாடுகள் மகாராணியின் ஆளுமையின் கீழ் உள்ளன. அந்த நாடுகளில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி புதிய அரசை அமைக்கவோ ஆட்சியில் இருக்கும் அரசைக் களைக்கவோ அதிகாரம் இருப்பது மகாராணிக்கு மட்டும் தான். அது மட்டுமன்றி அந்த நாடுகளில் வேண்டிய நிலப்பரப்பை தனதாக்கிக் கொள்ளும் உரிமையும் அவருக்கு தான் இருக்கிறது. ஆனால் தன்னுடைய அதிகாரங்களை அவர் ஒருபோதும் தவறாக பயன்படுத்தியதில்லை. 50 இற்கும் மேற்பட்ட நாடுகளைக் கொண்ட காமன்வெல்த் அமைப்பின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
தகுந்த இடத்தில் தகுந்தவாறு அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வார்.
இதற்காக ஒரு சம்பவத்தை முன்வைக்கலாம். ஒரு முறை சவுதி மன்னர் இங்கிலாந்து வந்தபோது அவரை தனது காரில் ஏற்றி தானே அதை ஓட்டிக் கொண்டு ஸ்கொட்லாந்து அரண்மனைக்கு விருந்துக்கு அழைத்துச் சென்றார். இதற்கு காரணம் ஒன்று உள்ளது. சவுதியில் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை வழங்கப்பட்டிருக்கவில்லை. அதை இடித்துரைக்கவே மகாராணி இவ்வாறு காரோட்டியாக செயற்பட்டார் என்று கூறப்படுகிறது.
ராஜா ராணி மட்டுமே வரி வசூலித்த காலம் போய் அரசாங்கத்திற்கு ராஜ குடும்பம் வரி செலுத்தும் முறையை மகாராணியே நடைமுறைப்படுத்தினார். அதுமட்டுமல்ல தனது மாளிகைக்கு உட்பட்ட பகுதியை தனி நாடாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்தபோதும் கூட அதை பொது வாக்கெடுப்பு மூலம் எதிர்கொண்டு சர்வதேச கவனத்தை ஈர்த்தார். வானளாவிய அதிகாரங்கள் இருந்தும் கூட அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சிக்கு தலை வணங்கி வாழ்ந்து வாழ்ந்து மக்களின் மனதை வென்றார். எல்லோரையும் ஜனநாயகப்படுத்தும் எலிசபெத் மகாராணியின் அணுகுமுறை ஜனநாயக நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றது.
மகாராணி தன்னுடைய ஆட்சிகாலத்தில் 14 பிரதமர்களோடு பயணித்திருக்கிறார். அப்போதைய ஆட்சிக்காலத்தில் இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் தொடர்ந்து அதன் பின்னர் சர் ஆண்டனி ஈடன் தொடங்கி போரிஸ் ஜான்சன் வரை 13 பிரதமர்களை அவர் நியமித்து அவர்களோடு பணியாற்றி உள்ளார். தற்போது இங்கிலாந்து பிரதமராக லிஸ் டிரசை மகாராணி எலிசபெத் தியமித்துள்ளார். அந்த வகையில் ராணி இரண்டாம் எலிசபெத் கண்ட இங்கிலாந்தின் 15வது பிரதமர் என்ற சிறப்பு லிஸ் டிரஸ் இற்கு உரித்தானது.
நாம் ஒரு நாட்டிலிருந்து வேறொரு நாட்டிற்கு பயணம் செய்யவேண்டுமென்றால் கடவுச்சீட்டு விசா தேவைப்படும். வல்லரசு நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும் கூட அவருக்கும் இதே விதிமுறைதான். ஆனால் யார் ஒருவருக்கு இது எதுவுமில்லாமல் தேசம் விட்டு தேசம் கண்டம் விட்டு கண்டம் நினைத்த நேரம் நினைத்தவாறு போகக்கூடிய அதிகாரம் இருக்கிறதோ அவர்தான் இங்கிலாந்தின் மகாராணி எலிசபெத். அதுமட்டுமன்றி இங்கிலாந்தில் அவர் கார் ஓட்ட ஓட்டுநர் உரிமம் பத்திரம் கூட தேவையில்லை. அதுமட்டுமல்ல அவருடைய வண்டிகளுக்கு இலக்கப்பலகை (Number Plate)கூட இல்லை.
ஒரு நாட்டின் இராணுவப்படை பலத்தை விட மகாராணி எலிசபெத்திற்கு இருக்கும் படை பலம் அதியுயர்வானது என்று கூறினால் பொருத்தமாக இருக்கும். அவருடைய கட்டளைகளுக்காகவும் முப்படைகளும் காத்திருக்கும் அளவிற்கு இராஜ கௌரவ செல்வாக்கு இந்த உலகத்தில் இங்கிலாந்து மகாராணிக்கு மட்டும்தான் இருக்கின்றது என்பது ஆச்சரியத்திற்குள்ளாக்குகிறது. தன்னுடைய இந்த செல்வாக்கைப் பயன்படுத்தி எந்த நாட்டின் மீதும் இவர் படையெடுத்ததில்லை.
எலிசபெத் மகாராணியின் தனித்தன்மையை அடையாளப்படுத்துவது அவருடைய உடை நாகரீகம் தான்.அவருடைய உடை வடிவமைப்பை காண்பதற்கே பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்களாம்.
மகாராணியின் இறுதித்தருணம்.
தன்னுடைய இளமை காலத்திலிருந்தே தந்தையின் இழப்பு மாமாவின் தற்கொலை உலகப்போர்கள் போன்ற சம்பவங்களால் மகாராணி எலிசபெத் மனமுடைந்தாலும் அவரால் ஒரு இயல்பான வாழ்க்கையை வாழமுடியவில்லை. இது அவரை பல இடங்களில் அசௌகரியப்படுத்தியுள்ளது. ஒரு சராசரி மனித வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட ஆடம்பரமான இராஜ வாழ்க்கையைத்தான் பிறந்ததிலிருந்து உயிர் பிறிந்த கவனம் வரை அவர் அனுபவித்திருக்கிறார். எலிசபெத் மகாராணியின் காதல் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வருடம் 2021 ஏப்ரல் 09 ஆம் திகதி இறந்த துயரில் வாடிப்போன மகாராணியும் இந்த வருடம் இறந்துபோனது பிரித்தானியாவிற்கு மீளா சோகத்தை கொடுத்திருக்கிறது.
உடல் நலக் குறைப்பாட்டால் கடந்த சில நாட்கள் மருத்துவ சிகிச்சையிலிருந்த மகாராணியார் ஸ்கொட்லாந்தில் பால்மோரல் அரண்மனையில் உயிரிழந்ததாக பங்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. இச் செய்தி இங்கிலாந்தை மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகையுமே ஸ்தம்பிக்கச்செய்துள்ளது. மகாராணி இறந்து
பன்னிரண்டு நாட்களும் பிரித்தானியாவில் துக்கம் அனுசரிக்கப்படும் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 12 நாட்களும் பிரித்தானியாவின் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். மகாராணியிறந்து மூன்றாவது நாளின் பின்னர் இரவு பகல் பாராது பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம்.
11 வது நாள் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் இராஜ மரியாதையோடு அவரின் இறுதி சடங்குகள் இடம்பெறும். அன்று நண்பகல் நாடுமுழுவதும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் வின்சன்ட் அரண்மணைக்கு இராஜ பாதுகாப்போடும் இராஜ மரியாதையோடும் அவரின் பூதவுடல் கொண்டுசெல்லப்படும். பின் சென் ஜோன்ஸ் தேவாலயத்தில் அர்ப்பணிப்பு ஆராதனை முன்னெடுக்கப்பட்டு வின்சன்ட் அரண்மனையில் மன்னர் ஆறாம் ஜோர்ஜின் நினைவரங்கில் (King George VI Memorial Chapel) நல்லடக்கம் செய்யப்படும்.
7 தசாப்தங்களாக பிரித்தானியாவின் அரச வம்ச ஆட்சியை நிலைநிறுத்தி தன்னுடைய 96 வயதில் இந்த உலகில் விடைபெற்றுச் சென்ற மகாராணி இரண்டாம் எலிசபெத்தை இத் தருணத்தில் நாமும் நினைவுகூறுவோமாக.!