அறிவியலை நாடி துர்நாற்றம் வீசுவது கழிவுகளிலா ? சமூகத்திலா ?

துர்நாற்றம் வீசுவது கழிவுகளிலா ? சமூகத்திலா ?

2022 Sep 10

நாகரீகமானவோர் சமூகத்திலேயே  வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்ற எண்ணத்தினை நாம் கொண்டிருந்தாலும்  அதனை அசைத்துப்பார்க்கும் எத்தனையோ விஷயங்கள் நம்மத்தியில் இன்னுமே உண்டு! அவ்வாறான விடையமொன்றுதான் கடந்தவாரம் இணையத்தில் பரவியிருந்த ஓர் துப்புரவுத் தொழிலாளியின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் காணொளி! தாம் செய்யும் தொழிலை மேற்கோள்காட்டி எங்கெல்லாம் தம்மை தாழ்த்துகிறார்கள்  எப்படியெல்லாம் மனிதத் தன்மையே இல்லாமல் நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர் அக்காணொளியில் சுட்டிக்காட்டியிருந்தமையே இக்கட்டுரை எழுதப்படுவதன் பிரதான நோக்கம்.
குப்பை வண்டி!

ஆம்  தெருவில் ஓரம்கட்டி குப்பைகளை அள்ளும்வரையில்  காத்திருக்கும் வண்டிகளை ஓட்டிவரும் அத்தனைபேரும்  அந்த குப்பைவண்டியினை நடந்தும் கடந்தும் செல்லும் அத்தனைபேரும் தம் மூக்கைப்பிடித்து அருவருத்தபடியேதான் செல்வதுண்டு ! ஒரு நிமிடம் யோசித்துப்பாருங்கள்  தாம் செய்யும் ஒரு தொழிலை சுற்றியுள்ள அனைவரும் மூக்கைப்பிடித்து அருவறுத்து பார்க்கும்போது அந்த தொழிலாளர்களின் மனநிலை எவ்வளவு நொந்துபோகக்கூடும்? தன்னைத்தானே தாழ்வாக அவமானமாக எண்ணக்கூடும் அல்லவா?

ஆம்!அது குப்பைதான்  நாற்றம்தான் அசிங்கம்தான்! ஆனால் அது அவனின் அசிங்கள் அல்ல. நமது அசிங்கம்  நமது நாற்றம்  நமது குப்பை! குப்பைகளையும் கண்ட கழிவுகளையும் உரிய முறையிலன்றி கண்ட கண்ட இடத்தில கொட்டிச் செல்லும் நமது அறிவீனம். நமது நாற்றத்தைப்போக்க அவன் நாரவேண்டும். நம்மை சுத்தமாக்கிக்கொள்ள அவன் அழுக்காகவேண்டும். நாம் அழகாக ஆரோக்யமாக இருக்க அவன் அசிங்கமாக ஆரோக்கியம் கெட்டவனாக மாறவேண்டும். ஆனால் நாம் அவனை நம் மூக்கைப்பிடித்துக்கொண்டு அருவருப்பாக பார்ப்போம்!
அதுதானே உண்மை ? இதன்பின்னிருக்கும் ஆழமான சாதியக்கூறுகளும் வறுமையும் பல  வலிகள்  நிறைந்தவை என்பதை எப்போதாவது நாம் சிந்தித்திருப்போமா? அசுத்தப்படுத்தும் நாங்கள் சுத்தமானவர்கள்  சுத்தப்படுத்தும் அவர்கள் அசுத்தமானவர்கள் என்கிற பொதுப்புத்தியில் சாதி, நிறம், தொழில், வர்க்கம் என அத்தனையும் அடங்கியிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? அப்படி அவர்களை நாம் கேவலமாக பார்ப்போமாயின்  இன்றிலிருந்து நாமே நம் குப்பைகளை அகற்றி  கழிவுகளையெல்லாம் கழிவிவிட தயாராக இருப்போமா? ஒரே ஒருநாள் அவன் அவனது வேலைக்கு லீவு போட்டால் அன்று அவன் மிக சுத்தமானவனாகத்தான் இருப்பான். ஆனால் நாம்தான் நாறிப்போவோம்!

மனித வாழ்வின் அசுத்தம்தான் உலகத்திலேயே மிகப்பெரிய நதியாக இருக்கவேண்டும் அது அனைத்து நகரங்களிலும் சலனமில்லாது ஓடிக்கொண்டிருக்கிறது. அதனைக்கடந்து செல்கையில் நமக்கு ஏற்படும்  அருவருப்பு அதில் இறங்கி நிற்கும் மனிதர்கள்மீதும் படிந்துவிடுகின்றதென்பதே நிதர்சனம். ஆனால் அந்த அசுத்த நதியில் கலந்திருப்பது நமது மிச்சங்கள்தான் என்பதை அடியோடு மறந்து முகம் சுளித்துக் கடந்துவிடுகின்றோம். தாவரங்கள் கழிவுகளை வெளியிடுவதில்லை. சுத்தத்தின் அடையாளமாய் உயர்ந்த பிறவியாக கடைசிவரை இருந்துவிட்டு போய்விடுகின்றன.

பறவைகளும் விலங்குகளும் தம் கழிவுகளை இயற்கையோடு மறுசுழற்சி செய்துவிடுகின்றன. அறிவிலும் பிறப்பிலும் சிறந்தவன் என சொல்லிக்கொள்ளும் மனிதன் மட்டும் இவ்விடயத்தில்  செயலற்று நிற்கின்றான். மனித கழிவுகள்  மருத்துவமனைக் கழிவுகள்,  தொழிற்சாலைக் கழிவுகள்  என பலவகை அசுத்த மிச்சங்கள் ஒன்றாகக்கலந்து கருமைநிற நதியாக நகரங்களின் வழியே ஓடி இறுதியில் கடலில் சங்கமித்துவிடுகின்றன.

இதனால் இயற்கைக்கு   ஏற்படும்  பாதக விளைவுகளும் துர்வாடையும் மனிதப்பிறவியை ஓர் பாவப்பட்ட பிறவியாக சாட்சிபடுத்திவிடுகின்றன. சாக்கடை நீர் காலில் பட்டுவிடக்கூடாதே என்பதற்காக பார்த்துப்பார்த்து ஒதுங்கி நடக்கும் நாமும் மனிதர்கள்தான்  பல்லாயிரக்கணக்கான மக்களின் கழிவுகளை சுமந்துகொண்டு தேங்கி நிற்கும் சாக்கடையை எவ்வித சலனமும் இன்றி உள்ளே இறங்கி தொழில் தர்மத்தினை காக்க துன்பங்களை அனுபவிக்கும் அவர்களும் மனிதர்கள்தான்! ஆனால்  அவர்களுக்கு “மனிதன் ” என்ற அடையாளத்தைக்கூட கொடுக்கமறுக்கிறது இந்த சமூகம். மொத்தத்தில் இந்த சமூகம் தன தூய்மையை காப்பாற்றிக்கொள்ள சாதியை  வறுமையை பயன்படுத்தி ஒரு பெரும் மக்கள்கூட்டத்தினையே அடிமைப்படுத்தி இவ்வுலகின்  விளிம்பிற்க்கே  தள்ளிவிட்டிருக்கிறது என்றால் அதுதான் உண்மை.
பணியின் விளைவு பிணி !

மலம் மற்றும் கழிவகற்றும் பணியாளர்கள் தங்களது வாழ்விடங்கள் சார்ந்தும்  பணி சார்ந்தும் டெங்கு, வயிற்றுப்போக்கு, சுவாசக்கோளாறு, சத்துக்குறைபாடு என ரக ரகமான  நோய்களுக்கும்  பஞ்சமேயின்றி ஆளாகின்றனர்.  குழந்தைப் பருவத்திலேயே பல சிசுக்களின் இறப்பிற்கு இவர்களின் வாழ்விடங்கள் காரணம் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றபோதிலும் சொல்லிவைத்தாற்போல்  எல்லா தேசங்களிலும் எல்லா அரசுகளும் பெரும்பாலும் குப்பை மேடுகளில்தான் சேரிகளை அமைக்க அனுமதியளிக்கின்றதோ? நகரத்தின் கழிவுகளை நாளெல்லாம் சுமப்பவர்களுக்கு அதன்மீதே குடியிருக்க நேருவதை கண்டுகொள்ளாத அரசுகளை என்னவென்பது?

செத்துப்போன எலிகள்  பூனைகள் போன்ற பிராணிகளின் தசைகள் மக்கிச் சிதைந்து அரைகுறையாய் மிதந்துகொண்டிருக்கும் பாதாளச் சாக்கடையில் நகர மக்களின் மலமும் சிறுநீரும் மற்றும்பல அசுத்தங்களை கரைந்துகூடியிருக்கும் அசுத்த நீரில் தலை நனைய காது மூக்கு துவாரங்களில் நீர் நுழைய அவரகளது உடல்   மற்றும் உளவியலில் ஏற்படும் தாக்கங்கள் எழுத்தில் வடிக்கக்கூடியவைதானா? இணையத்தில் வாசித்தவோர் தகவலின்படி ஒரு கிராம் மனிதக்கழிவில் ஏறக்குறைய 10 கோடி வைரஸ்கள்  10 லட்சம் வகையிலான பற்றீரியாக்கள் ஆயிரம்  ஒட்டுண்ணி  முட்டைகள் இருக்கின்றனவாம்.
சளி, இருமல், மூளைக்காய்ச்சல்  வயிற்றுக்கோளாறுகள், சிறுநீரக செயலிழப்பு, ரத்தசோகை போன்றவற்றை ஏற்படுத்தும் “E coli”  வயிற்றுபோக்குகாரணமான “Bacillus” போன்ற ஏராளமான பற்றீரியாக்கள்  shigellosis, salmonella  போன்ற தோள் நோய்களை உருவாக்கும் பூஞ்சைகளும் உள்ள கழிவுநீரில் இறங்கவேண்டியிருக்கும் மனிதர்களின் உடல்நிலை என்னவாகக்கூடும்?

நம்மைச் சுற்றியுள்ள மாந்தர்களின் பலர் இத்தகைய இழிவுகளுடன் வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கும் சம காலத்தில் சுய மரியாதையுடன் கூடிய நிறைவான வாழ்வு நம் சமூகத்துக்கு சாத்தியம்தானா? நாம் ஆரோக்யமான ஓர் சூழ்நிலையில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோமா? இதற்கும் நமக்கும் தொடர்பில்லை எனக்கூறி இனியும் நாம் ஒதுங்கி வாழ்தலென்பது தகுமா?
இனி குப்பை வண்டிகளை கடந்து செல்லும் சில நொடிகளில்  குப்பைகளை  அள்ளி வண்டிகளில் நிரப்பிக்கொண்டிருப்பவர்களையோ அல்லது சாக்கடைகளை சுத்தம் செய்துகொண்டிருப்பவர்களையோ நாம் கட்டியணைத்துக் கொண்டாட வேண்டாம்  கை கொடுத்துப்பாராட்ட வேண்டாம். ஆனால்  மூக்கைப் பொத்தாமல் முகத்தை சுழித்து அஷ்டகோணலாக்காமல் செல்லுவோமே அதுபோதும்! நாற்றம் அடித்தால் அந்த சில நொடிகள் மூச்சு விடாமல் அடக்கிக்கொண்டாவது கடந்து செல்வோமாக  நிச்சயம் செத்துவிடமாட்டோம் பல மனித மனங்களைவிட அவன் உடலோ அல்லது அந்த குப்பைகளோ  ஒன்றும் அவ்வளவாய் நாற்றமடித்துவிடாது.

இந்த பிரச்சினைகளுக்கான தீர்வு நம்முடைய மனமாற்றம் மட்டுமல்ல நிச்சயம் இவர்களுக்கான மாற்றுத் தொழில்கள் அறிமுகப்படுத்தப்படவேண்டும். சாதியக் கண்ணோட்டம் முற்றுமுழுதாக இல்லாதொழிக்கப்படவேண்டும்  கழிவகற்றல்களுக்கு முற்றுமுழுதாக இயந்திரங்களை மாத்திரமே பயன்படுத்தும் நிலை வரவேண்டும். பொதுவாகவே உழைப்பு என்பது போற்றப்படும் பொது விதிக்கு மாறாக உழைப்பு இழிவு படுத்தப்படுவது இங்கு மட்டுமே. குறிப்பிட்ட மக்கள் குழு மட்டுமே கட்டாயமாக ஈடுபடுத்தப்படும் இத்தொழிலை ஒழிப்பதென்பது வெறுமனே இழிவு ஒழித்தல் மட்டுமன்று மாறாக சாதி ஒழிப்பும் இணைந்ததே!  இது சாத்தியமாவது எப்போது ???

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php