அனைத்தையும் நாடி  மக்களின் பிரச்சினைகளும் அரசியல் கோமாளிகளும்!

மக்களின் பிரச்சினைகளும் அரசியல் கோமாளிகளும்!

2022 Sep 19

உலக முழுவதையும் வாட்டி வதைத்த கொவிட்தொற்று நோயினால் அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட வல்லரசு நாடுகளும் வளர்ந்து வரும் நாடுகளும் ஒருவகையில் அந்த நெருக்கடியில் மீண்டெழுந்தன. இலங்கை போன்ற சிறிய நாடுகள் இன்னும் மீள முடியாத நெருக்கடிக்குள் சிக்குண்டு தவிக்கின்றன.

அரச தலைவர்களின் தவறான முடிவுகள் எடுக்க வேண்டிய முடிவுகளை உரிய நேரத்தில் எடுக்காதமையில் இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. இதனால் சாதாரண மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையைக் கூட வாழ முடியாத துர்ப்பாக்கிய நிலையில் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆட்சியில் இருந்த அரசியல் தலைவர்களால் தங்களுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என்பதால் ஆட்சியாளர்களையும் மாற்றியுள்ளனர். தற்போது ஆட்சியிலுள்ள புதிய ஜனாதிபதியின் கீழ் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைத்து. மக்கள் தங்களுடைய வாழ்க்கையை வாழ முடியும் என பாரிய எதிர்பார்ப்பில் இன்றும் காத்திருக்கின்றனர்.

மக்களால் ஆட்சியாளர்கள் தெரிவு செய்யப்பட்டாலும் குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் அந்த மக்களுக்காக ஆட்சியாளர்கள் எதனையும் செய்வதே கிடையாது. மாறாக தங்களுடைய அரசியல் இலாபத்தையும் அதிகாரத்தை பாதுகாப்பதற்குமான செயற்பாடுகளை மாத்திரமே முன்னெடுப்பார்கள். இது சாதாரண நிலைமைகளில் மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாத போதும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு தங்களால் வாழவே முடியாத நிலையில் இருக்கும் போது தங்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தங்களுக்கு ஏதேனும் ஒரு தீர்வை வழங்குவார்கள் என்பது மக்களின் சாதாரண எதிர்பார்ப்பாகவே உள்ளன.பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கு அனைத்து கட்சிகளும் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டும் என மதத் தலைவர்கள் துறைசார் நிபுணர்கள் என ஒட்டுமொத்த நாடுமே கோரிக்கைவிடுத்தன விடுக்கின்றன. மக்களின் வாக்கை மாத்திரம் எதிர்பார்க்கும் அரசியல்வாதிகள் மக்களின் கோரிக்கைகயை கவனத்தில் கொள்ளாது நெருக்கடியையும் சூழ்நிலையையும் பயன்படுத்தி எவ்வாறு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்வது என்ற குறுகிய அரசியல் நோக்கத்துடனே செயற்படுகின்றனர்.

பொருளாதார நெருக்கடியை பயன்படுத்திக்கொள்ளும் அரசியல்வாதிகள் அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு தீர்வை வழங்குவதற்கு அப்பால் தனித் தனி குழுவாக பிரிந்து ஆட்சியை அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்வதற்காக புதிய கட்சிகளை உருவாக்கி தங்களுடைய அரசியல் பயணத்தை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழும் மக்களுக்கு எவ்வாறான தீர்வுகளை வழங்குவது என்பதை ஆராய்வதை விடுத்து யாரை எல்லாம் பிரித்தெடுத்து புதிய கட்சிகளை ஆரம்பித்து அடுத்தத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பதற்கான வெல்லோட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மூன்று புதிய அரசியல் கூட்டணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக ஆளுந்தரப்பிலிருந்து பிரிந்துச் சென்றவர்களே இவ்வாறு மூன்று புதிய அரசியல் கூட்டணிகளை ஸ்தாபித்துள்ளனர். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையில் மேலவை இலங்கை கூட்டணி டளஸ் அழகப்பெரும தலைமையில் சுதந்திர மக்கள் கூட்டணி மற்றும் குமார் வெல்கம தலைமையில் நவ லங்கா சுதந்திர கட்சி என மூன்று கட்சிகளை ஸ்தாபித்துள்ளனர். இவர்கள் இந்த புதிய கட்சிகளை எதற்காக உருவாக்கினார்கள் என்பது இதுவரை மக்களுக்கு புரியவே இல்லை.

பொருளாதார நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு புதிய கட்சிகள் உருவாக்குவதனால் என்ன பயன் கிடைக்கும், கட்சிகள் உருவாக்குவதினால் மக்களின் பட்டினிச் சாவு குறையுமா? பொருட்களின் விலைகளை குறைக்க முடியுமா? அந்நிய செலாவணியை ஈட்ட முடியுமா? தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள எரிபொருட்களை பெற்றுக்கொள்ள முடியுமா? என்பதே மக்களின் தற்போதைய கேள்வியாகவுள்ளன.

மக்களை பட்டினியால் கொலை செய்துவிட்டு தங்களுக்கு தேவையான அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் மிக கீழ்த்தரமான அரசியலையே இலங்கை அரசியல்வாதிகள் முன்னெடுத்துவருகின்றனர். நாட்டை மீட்க மக்கள் என்னதான் போராட்டங்கள் நடத்தினாலும் அரசியல்வாதிகள் மாறாதவரை இந்த நாட்டை யாராலும் காப்பற்றவே முடியாது என்பதை ஒவ்வொரு முறையும் எங்களுடைய அரசியல் கோமாளிகள் நிரூபித்துக்கொண்டிருக்கின்றனர்.
உலக முழுவதும் இலங்கையின் நிலைமையை உண்ணிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கும் போது மக்களையும் நாட்டையும் காப்பாற்றுவதை விடுத்து தங்களுடைய எதிர்கால அரசியல் அதிகாரத்தை எவ்வாறு தக்கவைத்துக்கொள்வது என்பதிலையே இலங்கை அரசியல்வாதிகள் மும்முரமாக இருக்கின்றனர்.

நாட்டில் போக்கு பற்றாக்குறை, வறுமை, பட்டினிச்சாவு என மக்கள் ஒவ்வொரு பிரச்சினைகளாக அனுபவித்துக்கொண்டிருக்கும் போது, புதிய கட்சிகளை உருவாக்குவதால் நாட்டுக்கு என்ன பிரயோசனம் இருக்கின்றது. என்னதான் நாங்கள் தவறிழைத்தாலும் மக்கள் எங்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவார்கள் என்ற அதீத நம்பிக்கையிலேயே அரசியல்வாதிகள் இவ்வாறு அரசியல் கோமாளிகளாக இருக்கின்றனர்.

சர்வக்கட்சிக்கு அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்து இதுவரை எந்தவொரு கட்சியும் அதற்கு இணங்கவில்லை. மாறாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்வதற்காக மாத்திரமே அனைத்து அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்துவருகின்றன. அரசாங்கத்துடன் இணைந்தால் புதிய அமைச்சுகள் வேண்டும் அல்லது உயர் பதவிகள் வேண்டும் என நிபந்தனைகளுடனே பல அரசியல்வாதிகள் அரசாங்கத்தில் இணைவதற்கு காத்திருக்கின்றனர்.இதற்காக பலரை இணைத்துக்கொண்டு புதிய அரசியல் கட்சிகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை பார்க்கும் போது இவர்கள் அரசியலுக்கு பொருத்தமானவரா என்றே கேள்வி எழுப்ப தோன்றுகிறது. நெருக்கடியின் போது தங்களுடைய சுயலாபங்களை ஓரங்கட்டிவிட்டு  மக்களுக்காக ஒன்றிணையும் அரசியல்வாதிகளை இலங்கையில் எப்போதும் காணகிடைத்ததே கிடையாது. இனியும் காண கிடைக்குமா என்பதும் சந்தேகமானது. மக்கள் எவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர் என்பதை மறந்துவிட்டு நெருக்கடியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் அரசியல்வாதிகளால் தங்களை தெரிவு செய்த மக்களின் வழிகளையும் அவர்களின் துன்பத்தையும் ஒருபோதும் அறிந்துகொள்ளவே முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php