2022 Oct 6
ஒரு மனிதனுக்கு கல்வியைப் புகட்டி அவனின் அறிவுக்கண்ணை திறப்பவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் தெய்வத்திற்கு ஒப்பானவர்கள். இதனால் தான் ‘எழுத்தறிவித்தவன் இறைவன்’ என்று ஒளவையும் சொன்னார்.மாதா,பிதா,குரு,தெய்வம் என்று நாம் கற்ற கோட்பாடு கூட குருவிற்கு பின் தான் தெய்வம் என்ற உண்மையை எடுத்துரைக்கிறது.
தான் கற்றதை பிறருக்கு கற்பித்தல் என்றவொரு உயர்ந்த நோக்கத்தோடு சேவை செய்யும் ஆசிரியர் சேவை என்பது மகத்தானதொரு சேவை. கல்வியெனும் கருவியை இயக்க ஆசான் எனும் காரண கர்த்தா தேவை. இந்த சமூகத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் மருத்துவரோ,பொறியியலாளரோ விஞ்ஞானியோ,மேதையோ வக்கிலோ எவராக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் அவர்கள் அத்தனை பேரையும் உருவாக்குவது ஆசிரியர் எனும் அந்த கர்த்தா தானே.
ஒரு நல்ல ஆசான் ஒரு நல்ல மாணவனை மட்டுமல்ல நாட்டிற்கு ஒரு நல்ல பிரஜையை உருவாக்கி கொடுக்கிறார். பாமரனைக் கூட பண்டிதனாக்கும் திறமை ஆசிரியருக்குண்டு என்பதில் மாற்று கருத்து இல்லை.
புத்தகத்தில் இருந்து கற்றுக்கொள்வதை விட ஆசிரியரிடமிருந்து கற்றுக்கொள்வதே பலருக்கும் புரியும். இதைத்தான் ‘குருவின் அருளால் சீடன் நூல்களின்றியே அறிஞன் ஆகிறான்..’ எனும் சுவாமி விவேகானந்தரின் பொன்மொழியானது அழகாக எடுத்துரைக்கிறது.ஒவ்வொரு சிறுவனும் நாளைய இளைஞனாக ஒவ்வொரு இளைஞனும் நாட்டின் தலைவனாக ஆசிரியர் எனும் ஊன்றுகோல் அவசியம்.கல்வி எனும் உளிகொண்டு மாணவரெனும் கல்லை செதுக்கி எடுத்து சிற்பமாக்கும் சிற்பிகளே ஆசிரியர்கள். தாயின் கருவறையில் நம் வாழ்க்கை தொடங்கினாலும் ஆசிரியரின் வகுப்பறையிலேயே நம் வாழ்க்கை செதுக்கப்படுகின்றது. அங்கே தான் நாம் உருவாக்கப்படுகிறோம். தாய்க்கு தன் மகன் மட்டுமே பிள்ளையென்றால் ஆசிரியருக்கு வகுப்பறையிலுள்ள அனைத்து மாணவருமே தம் பிள்ளைகள் தான். ஒவ்வொரு மாணவனும் தன் நாளைத் தொடங்குவது பள்ளிப் படிப்பில் தான். ஆசிரியர் இல்லாதவிடத்து பள்ளிகளுக்கு இடமேது?. ஆக ஒரு மாணவன் பள்ளியில் பயில முதற் காரணம் ஆசான்கள் தான்.
ஒரு பிள்ளை சிறந்தவனாக பெற்றோரின் அன்பும் கண்டிப்பும் அவசியம். அதுபோலவே ஆசிரியர்களும். அவர்கள் தாயைப்போல அன்பு காட்டுவதுண்டு. தந்தையைப்போல கண்டிப்பதுமுண்டு. ‘முடியைப் பெற்றவன் அரியணையேறுவான். அடியைப் பெற்றவன் மேடையேறுவான் என்பது என் கருத்து.அதற்காகத்தான் ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிக்கின்றனர். அவர்கள் அறிவுரைகள் கூறுவதும, தட்டிக்கொடுப்பதும் தவறு செய்தால் எம்மை கண்டிப்பதும் நம் எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றுவதற்கேயாகும். மாணவர்களின் அறிவுப்பசியைத் தீர்க்க ஆசிரியர்கள் ஆற்றும்சேவை அளப்பரியது.
ஆசானை மதிக்கத் தெரிந்தவன் நல்லொழுக்கம் உடையவனாக போற்றப்படுகிறான். குருவை நிந்தனை செய்பவன் தான் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் தாழ்ந்தவன் ஆகிறான். ஒரு மாணவனின் திறமையை அவனால் கண்டறியமுடியாமல் போகுமிடத்து அம் மாணவனிற்கு கல்வி போதிக்கும் ஆசிரியரே அதனையறிந்துகொண்டு அவன் திறமையை வளர்க்க அவனை ஊக்கப்படுத்துகின்றார். அவனை மென்மேலும் உயர்ந்த இடத்தை அடையச் செய்கின்றார். அதுமட்டுமன்றி கல்வியையும் மாணவர்களுக்கு புரியும்படி எளிமையான முறையில் போதித்து மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்துகின்றார்.
தம் வாழ்நாளை மாணவர்கள் முன்னேற்றத்திற்காக செலவிடும் ஆசிரியர்தொழிலிற்கும் ஆசிரியர்களுக்கும் நாம் என்றும் தலைவணங்கவேண்டுமல்லவா? இதனை வலியுறுத்தியே ஆசிரியரியர்களின் அர்ப்பணிப்பை போற்றி அவர்களுக்கு நன்றிசெலுத்தும் முகமாக உலகெங்கும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு நாடுகளுக்கும் இத்தினமானது வேறுபடுகிறது என்றாலும் இலங்கையில் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதியான இன்று தான் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு சாமான்ய மனிதனையும் சாதனையாளருக்கும் அனைத்து ஆசிரியர பெருந்தகைகளுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.