அழகை நாடி வளையல்களும் மருத்துவமும்!

வளையல்களும் மருத்துவமும்!

2022 Oct 7

கையின் வளையல் காது குளிர கானம் பாட!

வளையல்கள் அணிவது என்பது பெண்களுக்கு பிடித்தமானவொன்று. தவழும் குழந்தை முதல் தள்ளாடும் பாட்டி வரை அனைவருமே அணியும் ஆபரணமாகத் திகழ்கிறது இந்த வளையல்கள். அதிலும் இளம் பெண்களுக்கு இன்றியமையாத அலங்கார ஆபரணமாகவும் வளையல்கள் திகழ்கின்றன. சின்ன பெண்கள் குமரிப் பெண்கள்,இளம் பெண்கள், திருமணமான பெண்கள் என அனைவரும் கொஞ்சம் ட்ரெடிசனலாக ஒரு சாரியோ, தாவனிப்பாவடையோ அல்லது ஒரு சல்வாரோ அணிந்தால் அதற்கு பொருத்தமான வளையல்கள் அணிவதை எப்போதும் மறக்க மாட்டார்கள்.

வளையல்கள் அணியும் இந்த வழக்கமானது பழங்காலத்திலிருந்து பண்பாடாய் பாரம்பரியமாய் பின்பற்றிவரும் ஒரு பழக்கமாயிற்று. ஆரிய நாகரிக காலந்தொட்டு எகிப்தியர்கள், கிரேக்கர்கள்  பழங்குடி மக்களும் தங்களுக்கேற்றாற் போல் வளையல்களை அணிந்துள்ளனர் என்பது ஒரு முக்கிய கருத்தாகும்.

பொதுவாக சுமங்கலி பெண்கள் ஒவ்வொருவரின் கையிலும் வளையல் பூட்டியிருக்க வேண்டுமென்பது நம் தாத்தா பாட்டி காலத்திலிருந்து செவிவழி கேட்டுவந்த ஒரு மரபாயிற்று. ஒரு இல்லாள் காப்பு பூட்டிய கையோடு பானை சோற்றை குடும்ப உறுப்பினர்களுக்கு பகிருவாள் என்றால் அந்த வீட்டில் அன்னத்திற்கு பஞ்சம் இருக்காது என்பர். ஆகவே வளையல்கள் அணிவது அன்று முதல் இன்று வரை நடைமுறையில் இருக்கும் கலாச்சாரம் என்பதை நாம் மறுக்கமுடியாது.

வளையல்கள் பல்வேறுபட்ட பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் வகைகள் ஏராளம். தங்க வளையல், வைர வளையல், பிளட்டின வளையல், மரகத வளையல், முத்து வளையல், பவள வலையல், நவரத்தின வளையல், வெள்ளி வளையல், அலுமினிய வளையல், பித்தளை வளையல்,அரக்கு வளையல், ரப்பர் வளையல், மர வளையல், கம்பி வளையல், கண்ணாடி வளையல்,கடாஸ்,கங்கனங்கள்,பட்டை வளையல், மெஷின் கட்டிங் வளையல்,கெட்டி வளையல்,சிமெரட்ரிகல் வடிவ வளையல் என இப்படி வளையல்களின் வகைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.நாம் அணியும் வளையல்களின் வகைகளைத் தாண்டி நமக்கே தெரியாமல் இருக்கும் வளையள்களின் வகைகள் இன்னும் ஏராயமாக இருக்கின்றன என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். இவற்றில் சிலவற்றை நாம் அறிந்திருக்கவும்கூடும்.அணிந்திருக்கவும் கூடும்.
அழகு,அலங்காரம், ஆபரணம் என்பதை தாண்டி வளையல்கள் அணிவதால் பெண்களுக்கு பல மருத்துவ குணநலன்கள் கிடைக்கின்றன என்பது அறிவியல் கூறும் உண்மை.

வளையல்களும் மருத்துவமும்.

வளையல்கள் அணிந்ததும் அவை நாடி நரம்போடு உரசும்போது உடலின் ரத்த ஓட்டமும் இதயத் துடிப்பும் சீராக நடைபெறும்.
வளையல்கள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ள எழும்பும் ஓசையானது மனதிற்குள்ளும் நம்மை சுற்றியும் எப்போதும் நேர்மறையான எண்ணங்களை உருவாக்கி மூளையை சுறுசுறுப்பாக செயற்பட வைக்கிறது.

(வளையல்களின் தயாரிக்கப்பட்ட பொருளை அடிப்படையாக கொண்டே வளையோசை அமைகின்றது. தூய உலோகங்களால் தயாரிக்கப்படும் வளையல்கள் ‘கல கல’ வென ஓசை எழுப்புவன. செயற்கை பொருள் வளையல்கள் வேறுவிதமான ஓசை எழுப்புவன. உதாரணமாக தங்க வளையல்கள் எழுப்பும் ஓசைக்கும் பிளாஸ்டிக் வளையல்கள் எழுப்பும் ஓசைக்கும் வித்தியாசமிருக்கிறது.இதனை பொருத்தே அதன் வளையோசை அமைகிறது.)

கைநிறைய வளையல்கள் அணிவதால் ரத்த அழுத்தம் ஏற்படாது. மேலும் மாதவிடாய் காலம் சீராக அமையும்.

செம்பு வளையல்கள் உடலின் கொழுப்பை குறைக்கவல்லன. பருமனானவர்களுக்கு இவ்வகை வளையல்கள் பொருத்தமானது.

கணமான வளையல்களை அணிவதால் கையிலிருக்கும் அழுத்தப்புள்ளிக்கு நன்மை தரும்.

தங்க வளையல்கள் அணிவதால் இயற்கையாகவே உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.

கண்ணாடி வளையல்கள் அணிந்துகொள்வது பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

கண்ணாடி வளையல்களும் கர்ப்பிணி பெண்களும்

கண்ணாடி வளையல்கள் அதிக ஓசை எழுப்புவன. பொதுவாக இதனை கர்ப்பிணிப் பெண்கள் வளைகாப்பின் போது அணிந்துகொள்வார்கள்.இதனால் வயிற்றில் சுமக்கும் குழந்தைகளின் காதுகளுக்கு இந்த கண்ணாடி வளையோசைகள் கடத்தப்படும். அந்த ஒலியை எப்போதும் குழந்தைகள் கேட்டுக்கொண்டிருப்பதால் அதன் புலன்கள் அசைந்த வண்ணமிருக்கும். கர்ப்பப்பைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை இந்த வளையல்கள் அதிகரிக்கும். குழந்தையின் மூளை சுறுசுறுப்புடன் இயங்கும். கண்ணாடி வளையலில் தேவி தத்துவம், சாத்வீக தன்மை மற்றும் சைதன்யம் போன்ற தன்மைகள் நிறைந்து காணப்படுகின்றன.

வளையல்களைப் பற்றி மேலும் சில..

வளையல்கள் பொதுவாக வட்ட வடிவிலேயே காணப்படும். இருப்பினும் தற்போது நீள்வட்ட வடிவம், சதுர வடிவம் மற்றும் ஸ்க்ரு போட்டு மூடும் உருளை வடிவமென பல்வேறு வடிவமைப்புகளில் வளையல்கள் சந்தையில் கிடைக்கின்றன. என்றபோதும் வட்ட வடிவ வளையல்கள் அணிவதே பராம்பரியமும். நம் கைக்கு அழகும் கூட.
பாரம்பரிய வளையல்கள் தற்கால நவீன ரசணைக்கேற்ப மினுமினுக்கும் கல் பொதிக்கப்பட்டு, கண்ணாடிச் சில்லுகள், மணிகள், ஜிமிக்கி, ஜிகினா போன்றவற்றை இணைத்து அலங்கரிக்கப்பட்டு சந்தையில் விற்கப்படுகின்றன. தற்காலங்களில் இரும்பு அல்லது ஸ்டீலில் செய்யப்பட்ட கடா வளையல்களையே பெரும்பாலானோர் விரும்பி அணிகின்றனர்.

அணியும் ஆடைக்கு ஏற்றவாறு ஒரே நிறத்தில் அதிக எண்ணிக்கையிலான வளையல்கள் அணிவதும் இப்போது வழக்கத்தில் உள்ளது. இவை பெரும்பாலும் பிளாஸ்டிக் வளையல்கள் தான். ஒற்றை நிறத்தில் இது போன்ற வளையல்களை கையில் அடுக்கடுக்கடுக்காக போட்டால் பார்ப்பதற்கு எடுப்பாக இருக்கும். பார்க்க அழகாகவும்,கண்களை கவரும் விதமாக இருந்தாலும் பிளாஸ்டிக் வளையல்கள் அணிவதால் பயனேதும் இல்லை.

வளையல்களுக்கு பிரசித்தமான நாடு இந்தியா. உலகிலேயே அதிகளவிலான வளையல்கள் உற்பத்தியாகும் இடம் இந்தியாவின் உத்திர பிரதசத்திலுள்ள மொராதாபாத் நகரம் தான்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php