மனிதர்களை நாடி குழந்தை இன்மை எனும் அவஸ்தை!

குழந்தை இன்மை எனும் அவஸ்தை!

2023 Feb 3

என்ன வீட்டில் ஏதாவது நல்ல செய்து உண்டா? 

திருமணமான சில மாதங்களிலிருந்தே பல ஜோடிகளைத் துரத்த ஆரம்பிக்கும் கேள்வி இது! இப்போதைக்கு குழந்தை வேண்டாமென கவலையின்றி அந்த ஜோடி இருந்தாலும்கூட “அவர்கள் சந்தோசமாக இல்லை” என்றே மொழி பெயர்த்துக்கொள்ளும் இந்த சமூகம். சிறுவயதுமுதல் பெண்கள் கேட்கும் ஒப்பீடுகள் எல்லாமுமே ஒன்றுமேயில்லை என்றாகிவிடும் ஒரு ஒப்பீடு உண்டென்றால் அது குழந்தையின்மை அல்லது குழந்தைபிறப்பு தள்ளிப்போகிறது எனும்போது உருவாக்குகின்ற ஒப்பீடுதான்.

அதனால் ஏற்படும் pressure/social pressure என்பது வார்த்தைகளால் சொல்லிமாளாதது என்பது அனுபவிப்போர்க்கு மட்டுமே புரியக்கூடியது. திருமணமாகி மூன்று தொடக்கம் ஆறு மாதங்கள்வரை பொறுத்திருக்கும் பெற்றோர் உற்றார் உறவினர்கள் என எல்லோருமே சுமார் ஒருவருடம் கழிந்ததும் “நல்ல செய்தி சொல்லவில்லை ” என்றால் மெதுவாக ஆரம்பிப்பார்கள். நம் பெற்றோர்களே ” எப்போ நல்ல செய்தி சொல்லப்போகிறாய் ? பார் உன் தோழியை உனக்கு பிறகு திருமணமாகி இப்போது முழுகாம இருக்கிறாளாம் ” என ஆரம்பிப்பதுண்டு.

அப்போதுதான் ஆரம்பிக்கும் ஒருவித டென்க்ஷன்! இதுபோன்ற கேள்விகளெல்லாம் முதலில் பெண்களை குறிவைத்தே எய்யப்படும். யாரும் ஆண்களை இப்படிக்கு கேற்பது அரிது. “நமக்கு ஏதோ பிரச்சினையோ அதனால்தான் கரு உருவாவதில்லையோ” என மெதுவாக ஒரு பயம் பெண்களிடம் எட்டிப்பார்க்க ஆரம்பிக்கும் இதுவே முதல் குழந்தையின்மை சமூக அழுத்தம் . பின்னர் இன்னும் ஆறு மாதங்கள் முயற்சித்தும் ஒன்றும் நடக்கவில்லையெனில் உடனே “கோவிலுக்கு நேர்த்தி வையுங்கள்” என ஆரம்பிப்பார்கள் சொந்தங்கள்.

போதாக்குறைக்கு இவையெல்லாம் சக்திவாய்ந்த தெய்வங்கள் கோவில்கள் என தம்பங்கிற்கு நேர்த்திக்கடன் வைக்க பல கோவில்களையும் தெய்வங்களையும் சேர்த்தே சிபாரிசு செய்வார்கள். இன்னும் பிரஷர் அதிகமாகும். இரண்டு வருடங்கள் கழிந்துவிட்டது இன்னும் குழந்தையில்லை என்றால் அடுத்து ட்ரீட்மெண்ட் என ஆரம்பிப்பார்கள்.

“ட்ரீட்மெண்ட் ” ஆம் இதுபோன்ற ஓர் ட்ரெஸ் பெண்களுக்கு வேறெதுவுமில்லை. IUI  IVF என்று எடுக்கும் ஒவ்வொன்றும் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையையும் தாண்டி, இதிலாவது பலன் கிடைக்குமா? இல்லை இதிலும் தோல்விதானா என்ற உளைச்சல் மனதளவிலும் உடலளவிலும் அவ்வளவு ஸ்ட்ரெஸ் கொடுக்கக்கூடியதாம்.

இன்றைய காலகட்டத்தில் ஒருவர் விடயத்தில் மற்றொருவர் அவ்வளவாய்த் தலையிடுவதில்லை இதனடிப்படையில் திருமண வாழ்க்கை என்பது அவரவர் தனிப்பட்ட விடையம் என்றபோதிலும் ஒரு குழந்தைகூட இல்லாத திருமணவாழ்க்கையினை வெற்றிகரமான வாழ்க்கையாக நம் சமூகம் அங்கீகரித்துக்கொள்கிறதா? குழந்தையில்லாத பெண்கள் மங்கள நிகழ்வில் கலந்துகொள்வது தடையாக இருந்த காலம் மெல்ல மாறியிருக்கிறது என்றாலும் இன்றும்கூட அவர்களை நாசுக்காக தவிர்க்கும் அல்லது அவர்களுக்கு பின்னால் பேசும் புறம்பேச்சுக்கள் முற்றாக ஒழிந்துவிடவில்லை என்பதுதான் யதார்த்தம். உடலில் எந்தக்குறைபாடும் இல்லாதபோதிலும் இதுபோன்ற ஸ்ட்ரெஸ்களே பல நேரங்களில் குறித்த பெண்களுக்கு எதிரியாக அமைந்துவிடும்.

குழந்தை வேண்டும் என்ற இந்த ஆர்வத்தினை பதற்றத்தினை மருத்துவத்துறையில் உள்ள சிலர் காசாக்கிப்பார்க்கும் சம்பவங்கள் இன்று பல மடங்காக அதிகரித்துவருகிறது என்றால் மிகையில்லை. தம்பதியரின் குறையை மிக அழகாகவும் புத்திசாலித்தனமாகவும், வியாபாரமாக்கிக்கொண்டிருக்கிறார்கள் இன்றைய பல மருத்துவ வியாபாரிகள் . நீங்கள் கேபிள் டிவி பாவனையாளர்களா? அப்படியாயின் ஒருநாளையில் எத்தனை அலைவரிசைகளில் எத்தனை தடவைகள் இந்த குழந்தையின்மை பற்றியும் அதற்க்கான சிகிச்சைகள் பற்றியும் கருத்தரிப்பு மையங்களை சிகிச்சை நிலையங்களை நடத்திவரும் மருத்துவர்கள் தங்களை பற்றியும் தங்கள் மருத்துவமனைகள் பற்றியும் கூச்சமேயின்றி விளம்பரப்படுத்திக்கொள்கிறார்கள் என்பதனை அவதானித்ததுண்டா?

இந்திய அலைவரிசைகளில்தான் இதுபோன்ற விளம்பரங்கள் அதிகம். எந்த அலைவரிசையை திருப்பினாலும் யாராவது ஒரு கைராசிக்கார (?!) டொக்டர் வந்து பேசிக்கொண்டிருப்பார். இதில் நாம் நூதனமாக அவதானிக்க வேண்டிய ஓன்று என்னவென்றால் இப்போதெல்லாம் மக்களுக்கு விழிப்புணர்வூட்டவேண்டிய மருத்துவம் குறித்த நிகழ்ச்சிகளெல்லாம் அநேகமாக மருந்துகள் பற்றியும் நோயின் தன்மை பற்றியும் கூறுவதைவிட குறிப்பிட்ட ஒரு மருத்துவர் பற்றிய புகழார (விளம்பர) நிகழ்ச்சியாகவே அமைந்திருக்கும்.

பேட்டி எடுப்பவர் பல நிமிடங்கள் மாறி மாறி மருத்துவரின் கைராசி பற்றியும் திறமைகள் பற்றியும் புகழ் பாடிக்கொண்டிருப்பார். தொலைக்காட்சிகளில் மட்டுமன்றி பத்திரிகைகள், வார இதழ்கள் எல்லாவற்றிலும் இதுபோன்ற விளம்பரங்கள் தொடர்வதைக்காணலாம்! கருப்பை சுத்திகரிப்பு ஆரம்பித்து விந்து உயிர் அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க மருந்து மாத்திரை சினைமுட்டைக்கரு என பல வழிகளில் தம்பதியர் பல லட்சங்களை செலவழிக்கவேண்டியுள்ளது.

மருத்துவத்தின் பிரகாரம் இவையாவும் அவசியமான குறைபாடுடையவர்கள் மேற்கொள்ளவேண்டிய சிகிச்சை முறைகள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ,இந்த சிகிச்சைகளுக்கான கட்டணங்களும் அவர்கள் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளுக்கும் அதிக விலைகொடுத்தாகவேண்டும். இவ்வகையான மருந்து மாத்திரைகளுக்கான உற்பத்தி செலவுக்கும் அதன் விற்பனை விலைக்கும் இடையேயான இடைவெளி மலைக்கும் மடுவுக்கும் உள்ள இடைவெளி . அந்த அளவுக்கு லாபம் பார்க்க விளைகின்றன மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்.

இன்றெல்லாம் ஆண்மைக்குறைவு குழந்தையின்மைக்கான சிகிச்சை என்ற பெயரில் போலி மருத்துவர் பலர் இருப்பதால் , சிகிச்சை பெற்றுக்கொள்ளப்போகும் மருத்துவமனை தரமானதா? சிகிச்சையளிக்கப்போகிறவர் தகுதி பெற்ற மருத்துவரான என்பதை மிக மிக அவதானமாக பரிசீலனை செய்துகொள்ளவது அவசியமானது.

சரி அப்படியே தரமான ஓர் மருத்துவமனையை சென்றடைந்துவிட்டாலும் ஒரே நாளில் பிரச்சினையை தீர்க்க மருத்துவர் ஒன்றும் கடவுளோ மேஜிக் மேனோ அல்ல என்பதையும் தம்பதியர் புரிந்துகொள்ள வேண்டும். கணவன் மனைவி இருவர்க்கும் என்ன பிரச்சினை என்பதை தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு சிகிச்சைகளை தொடர்வதற்கு மருத்துவருக்கும் கொஞ்சம் அவகாசம் தேவை . மருத்துவர்மீது மொத்த அழுத்தத்தையும் திணித்துவிட்டு, இந்த சோதனை அடுத்து இன்னொருவரிடத்தில் மற்றொரு சோதனை, மற்றுமொரு மருத்துவமனை என ஓடிக்கொண்டே இருப்பதாலோ, பதற்றப்படுவதாலோ நாம் எதிர்பார்க்கின்ற பலன் கிடைக்கப்போவதில்லை. குழந்தை என்பது மிகவும் சந்தோசமான நம் வாழ்க்கையையே அர்த்தப்படுத்தப்போகும் அழகான விஷயம். அந்த நல்ல விசயதிற்காக கொஞ்சம் காத்திருந்தால் தவறில்லை அல்லவா?

எது எவ்வாறாயினும் , குழந்தைப் பேறு என்பது ஒரு பெண் கடந்து வரும் குறுகிய காலக்கட்டம் மட்டுமே. இயற்கை அந்த வாய்ப்பை அவளுக்கு தந்திருக்கிறது. வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே அது. அதுவே அவளுடைய முழுமையான வாழ்க்கையல்ல. அது சாத்தியப்படாததற்காக அவள் கூச்சப்படவோ எவ்வித அவதூறுகளுக்கும் மனம் புழுங்கவோ அவசியமேயில்லை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php