2023 Mar 8
சிங்கப் பெண்ணே என்றும் அக்கினிச் சிறகே எழுந்து வா என்றும் சமூக வலைத்தளங்களிலும் நமது வானொலிகளிலும் இன்றெல்லாம் மகளிர் தினம் என்கிற ஓன்று வார்த்தை ஜாலங்களால் சாலாக்கம் காட்டுவதாய் மாறிப்போயுள்ளதோ என்று எண்ணும் அளவிற்கு கடுப்பேற்றுகின்றது என்பதே யதார்த்தம். பெண்கள் தங்களின் உரிமைக்கான போராட்டத்தை உருவாக்கிய நாள், மொத்த உலக நாடுகளும் திரும்பி பார்த்த மாபெரும் புரட்சிக்கு வித்திட்ட நாள், முதலாளிகளின் அடக்குமுறையை, தொழிலாளி வர்க்கம் உடைத்தெறிந்த நாள்தான் இந்த உலக மகளிர்தினம்.
150 ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் காலவரையற்ற நிலையில் பெண்களுக்கு ஓய்வே இல்லாமல் பணியாற்ற வேண்டிய நிலை இருந்ததையும் இதனால் 20 வயதான மேரி என்ற இளம் பெண் தொழிலாளி இறந்து போன சம்பவத்தின் பின்னணியில் நடைபெற்ற போராட்டங்களும், பொதுக்கூட்டங்களும் ஒரு மாபெரும் புரட்சிக்கு வழிவகுத்தது. உண்மையில் மார்ச்-8 என்பது வெறும் உலக மகளிர் தினமல்ல அதனை சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் என்றே நாம் போற்ற வேண்டும்.
காரணம் 18 ஆம் நூற்றாண்டில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் நுற்றுக்கணக்கான பஞ்சாலை தையல் ஆடைத் தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் உழைத்து வந்தனர். 12 முதல் 14 மணிநேரம் வரை உழைத்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம். ஒரு நிமிடம் தாமதித்தால்கூட பெண்கள் வேலையை இழக்கும் சூழலினால் குழந்தைகளுக்கு பாலூட்டும் உரிமைகள்கூட அன்று இருக்கவில்லை. இத்தகைய முதலாளியத்தின் சுரண்டலுக்கு முடிவு கட்டும் நோக்கத்தில் பெண்கள் வேலையை புறக்கணித்து வீதிக்கு வந்தனர். பெண்களுக்கு வாக்குரிமை, எட்டுமணி நேர வேலை, சம ஊதியம், பால் கொடுக்கும் உரிமை, குழந்தைகள் காப்பகம், வேலைக்கேற்ற ஓய்வு ஆகிய கோரிக்கைகள் ஐரோப்பிய, அமெரிக்க தொழிலாளர்கள் மத்தியில் வெடித்தெழுந்தன.
அதேசமயம், முதல் உலக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், லட்சக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் யுத்தத்திற்கு எதிராக அணிதிரண்டனர். “யுத்தம் வேண்டாம், ரொட்டியும், அமைதியும் வேண்டும்“ என வீதிதோறும் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.இறுதியில் 1912ல் நியூயார்க் நகர வீதிகளில் 20,000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் ஊர்வலமாகச் சென்றபோது , அமெரிக்க அரசின் கடுமையான தாக்குதல்களுக்கு ஆளாகி காயமுற்று பலர் கைது செய்யப்பட்டனர். போராட்டம் உச்சத்தை எட்டியபோதும் தொழிலாளர்கள் பின்வாங்காமல் தங்களது கோரிக்கையை முன்னெடுத்ததன் விளைவால் , பிரட்டிஷ் கவுன்சில் கோரிக்கையை ஏற்று எட்டுமணி நேரத்தை வேலை நேரமாக சட்டமாக்கியது.
இப்போராட்டத்தை வழிநடத்திய ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சின் தலைமைத் தோழர் கிளாரா ஜெட்கின் மார்ச்-8 என்பதை உழைக்கும் பெண்கள் தினமாகக் கொண்டாட வேண்டும் என்பதை கோரினார். ஆனால், அந்த தீர்மானம் நிறைவேறாமல் போனது. இதற்கிடையில், 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா எனும் கம்யூனிஸ்ட் பெண் கலந்து கொண்டார். அவர்தான் உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது . உண்மையில் இதுவோர் கொண்டாட்ட நாள் அல்ல பலரின் தியாகங்களை, நமது உரிமைகளில் வெற்றிபெற்றதை நினைவூட்டும் நாள் நாம் நமது உரிமைக்காக போராடுவதை உணர்த்தும் நாள்
பணியிடம், பொது வெளி, குடும்பம் என்ற மூன்று தளங்களிலும் உழைப்புச் சுரண்டலுக்கும் , சமத்துவமின்மைக்கும் எதிராகப் போராட உழைக்கும் இந்த பெண்களுக்கேயுரிய நாளில் ஒவ்வொரு பெண்ணுமே உறுதியோடு ஒவ்வொரு ஆண்டும் சிறு முன்னேற்றத்தையாவது அடைய வேட்கை கொள்ள வேண்டும் என்பதே உண்மையான மகளிர் தினத்திற்கான அர்த்தம் ஆகும் .