2023 Mar 4
2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி ஐங்கரன் கதிர்காமநாதன் தாயாரிப்பில் “Ceylon Pictures” யூடியூப் தளத்தில் ஜீவதர்சன் இயக்கத்தில் வெளியான குறும்படம் தான் ‘சாம் சூசைட் பண்ண போறான்’.
இந்த படத்திற்கு ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்து, பிரணவன் இசை அமைத்து, ரெ. துவாரகன் பாடல் வரிகள் எழுதி பு. பிரணவன் மற்றும் தீபிகா துவாரகன் ஆகியோரால் பாடப்பட்டது. நிவேதிகன், அஞ்சலி ஹர்ஷனி முக்கிய வேடத்தில் நடிக்க, பல துணை நடிகர்கள் நடித்துள்ளனர்.
யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த குறும்படம் ஆறு நாட்களில் 38,000 க்கு மேற்பட்ட பார்வையாளர்களை எட்டியதோடு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எப்படி 20 நிமிடம் போனதென்றே தெரியவில்லை அந்த அளவிற்கு அருமையான ஓர் படைப்பு. “இது ஓர் உலகத்தரம் வாய்ந்த உள்ளூர் உற்பத்தி என்றே கூறலாம்” இது போன்ற பல்வேறு பட்ட சிறந்த கருத்துக்களைப் பார்வையாளர்கள் பதிவு செய்து கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு எளிமையான கருத்து. அதை எடுத்து காதலும், நகைச்சுவையும், விறுவிறுப்பும் கலந்து மண்ணின் தன்மை மாறாமல் காட்சிப்படுத்தி இருப்பது படத்தின் ப்ளஸ் ஆகும். பட இயக்குனரும் இசையமைப்பாளரும் வேற லெவல் வேலைப்பாடு செய்துள்ளனர்.
எம் ஜீ ஆர் பாட்டோடு ஆரம்பித்த விதம், கதை, நடிப்பு, இசை, களம், கெமரா வேலைப்பாடு, பாடல் வரிகள், Bgm இப்படி எல்லாமே பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார்கள். அதுக்கு மேலாக நடித்து இருந்த எல்லாருடைய அர்ப்பணிப்பும் சிறப்பா அமைந்துள்ளது. சொல்ல வந்த விடயத்தை அருமையாக கதையில் சித்தரித்துள்ளார்கள், தேவை இல்லாமல் மிகையாக எதையும் காட்சிப் படுத்தப்படவில்லை.
யாரு சாமி அந்த கண்ணாடி கதாப்பாத்திரம்? கதைத் திருப்பத்தின் நாயகன் என்றே சொல்லலாம் இவரை. ஒழுங்கா காது கேட்காத இவரால் இவரது நண்பனின் காதல் கடைசியில் ஒன்று சேர்ந்து விட்டது. நடிகர்களின் நடிப்பு யதார்த்தமாக உள்ளது. குழுப்பணி பெரிதும் பாராட்டப்படுகிறது. குறிப்பாக தொழில்நுட்ப கலைஞர்களின் பங்கு மகத்தானது.
ட்ரோன் காட்சிகள் ஒளிப்பதிவுக்கு மேலும் அழகு சேர்த்துள்ளது. அருமையான நகைச்சுவைப்படம் என்பதையும்மீறி மக்களின் வாழ்வியலையும் கூட அழகாக சித்தரிப்பது மனதில் நின்று நிலைக்கிறது. அந்த ஊரின் மண்மணத்தை அப்படியே வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள். 20 நிமிடமும் காட்சிக்கு காட்சி யாழ்ப்பாணத்தின் அழகும் தமிழும் அழகாக வந்திருக்கிறது. படத்தில் மிக சாதரணமாக யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கில் பேசி நடித்திருப்பது ரசிக்கும் படியாக இருக்கிறது.
“உனைக் காணா உயிர் நோகுதே
உனைக் காண மனம் ஏங்குதே
உயிர் விட்டு போகும் போது மனம் செத்து தானே போச்சு
என விட்டு நீயும் போனால் உசிர் சுக்குநூறா ஆச்சு
எனை ஏன் தனியே தீயில் வைத்தாய்
இதயம் கொய்தே துயரம் தந்தாய்” என்ற பாடல் வரிகளும், பாடல் பாடியவர்களின் குரலும், மெய்சிலிர்க்க வைத்த இசையும் நிச்சயம் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.
ஒரு சில பேச்சு வழக்கு கெட்ட வார்த்தைகளை தவிர்த்து இருக்கலாம் மற்றும் நடிகையின் பேச்சுத் தமிழில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
இலங்கையில் இந்த அளவுக்கு அருமையான படைப்பை படமாக எடுத்ததே பெரிய விஷயம் இது தான் நடக்கப் போகுது என்று தெரிந்தாலும். அதை ஒரு பரபரப்பாக எடுத்து இருக்கிறார். 20 நிமிடமான இந்த படத்தை பெரிய திரையில் 2 மணி நேர படமாக மெருகேற்றி வர வாழ்த்துக்கள்! இந்திய சினிமா சாயல் இன்றி எங்களுடைய தனித்துவ திரைப்படமா இப்படம் வர வேண்டும்.
மனநிறைவான இந்தப் படைப்பில் பங்குபற்றிய அனைத்துக் கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். உங்கள் அனைவருக்கும் நல்ல எதிர்காலம் உண்டு. அடுத்து அடுத்து சிறந்த படைப்புக்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.
நீங்களும் இந்தப் குறும்படத்தை முழுதாக பார்த்துவிட்டு உங்களுடைய அனுபவத்தினை கமன்ட் பொக்ஸில் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள் அதே நேரம் படம் பிடித்திருந்தால் மற்றவர்களிடம் பகிருங்கள்.
Rating 10/10