மனிதர்களை நாடி பாலு மகேந்திரா – ஒரு காலப்பயணம் 

பாலு மகேந்திரா – ஒரு காலப்பயணம் 

2023 May 30

ஒளிப்பதிவு, திரைக்கதை மற்றும் இயக்கம் என மூன்று துறைகளிலும் விருது பெற்ற சிறப்புக்குரிய திரைப்பட வல்லுநர் பாலு மகேந்திரா. இந்திய சினிமா துறையில் திறமையான ஒருவராக அறியப்படும் இவர் ஒரு இலங்கையர். 1939ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி இலங்கையின் மட்டக்களப்பு அருகேயுள்ள அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்த இவரது இயற்பெயர் பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன். இவர் தனது பள்ளிப்படிப்பை மெதடிஸ்ட் மத்திய கல்லூரி மற்றும் செயின்ட் மைக்கேல்  தேசிய கல்லூரியில் பயின்றார். இவர் தனது வகுப்பாசிரியரால் திரைப்படங்களை நோக்கி ஈர்க்கப்பட்டமையால், செர்ஜி ஐசென்ஸ்டீன் இயக்கிய ‘Battleship Potemkin’ மற்றும் விட்டோரியோ டி சிகா இயக்கிய ‘Bicycle Thieves’ ஆகிய படங்களை பார்க்கும் சூழ்நிலை உருவானது. சத்யஜித்ரேய் இயக்கத்தில் வெளியான பதேர் பாஞ்சலி என்ற திரைப்படமும், டேவிட் லீனின் இயக்கத்தில் வெளியான ‘ப்ரிட்ஜ் ஒப் ரிவெர் க்வாய்’ திரைப்படத்தின் ஒரு பகுதி இலங்கையில் படமாக்கப்படும் போது அதனை இவர் பார்வையிட்டதும் பாலு மகேந்திராவினுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அவரை திரைப்படத்துறைக்குள் கால் பதிக்க தூண்டியது. 

சிறுவயதிலிருந்தே மகேந்திரா நுண்கலை மற்றும் இலக்கியத்தில் அதிகம் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவராக இருந்தார். பள்ளிப் படிப்பை முடித்தவுடன், அவர் லண்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன் பின் இலங்கை திரும்பிய அவர் கொழும்பில் நில அளவைத் துறையில் வரைவாளராக சிறிது காலம் பணிபுரிந்தார். அதே வேளை அவர் தியேன் அருவி என்ற தமிழ் இலக்கிய இதழைத் தொகுத்து வந்தார். கொழும்பில் ரேடியோ சிலோனில் அமெச்சூர் நாடகக் கலைஞராகப் பணிபுரிந்த அவர், சிங்கள நாடகக் குழுக்களுடன் தன் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டார். 

மகேந்திராவின் சினிமா மீதான ஆர்வம் அவரை இந்தியாவுக்குப் புறப்பட்டு 1966இல் புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிலையத்தில் சேர ஊக்குவித்தது. மற்ற துறைகளுக்கு இணைய முடியாமால் போக, அவர் ஒளிப்பதிவு துறையில் இணைந்தார். இந்த பயிற்சி நிலையத்தில் பிரெஞ்சு நியூ வேவ் இயக்கத்துடன் தொடர்புடைய பிரான்சுவா ட்ரூஃபாட் மற்றும் ஜீன்-லூக் கோடார்ட் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பை பெற்றதால், அவர் உலக சினிமாவை பற்றிய அறிய வாய்ப்பு உருவானது. 1969 இல் மகேந்திரா இங்கிருந்து தங்கப் பதக்கத்துடன் பட்டம் பெற்றார்

இவர் புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிலையத்திலிருந்து (FTII) வெளியான பின் இலங்கைத் தமிழ் சினிமாவுக்குள் நுழைவதற்காக எடுத்த ஆரம்ப கட்ட முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. புனேயில் பயின்றுவிட்டு இலங்கை திரும்பி சிங்களப் படங்களில் சந்தர்ப்பம் வேண்டி இவர் தனது “செங்கோட்டை” என்ற படத்தை கொழும்பு – சவோய் திரையரங்கில் சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு திரையிட்டும் காண்பித்திருக்கிறார். ‘நெல்லு’ படத்தின் இயக்குனரான ராமு காரியத்,  FTIIஇல் மகேந்திராவின் டிப்ளமோ படமான ‘எ வியூ ஃப்ரம் தி ஃபோர்ட்’ மூலம் ஈர்க்கப்பட்டார். அதன் பின்  ராமு காரியத் மகேந்திராவை ‘நெல்லு’ படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்துக் கொண்டார். நெல்லு படத்தின் படப்பிடிப்பு 1971ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டிருந்தாலும் அதன் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம் அதன் வெளியீட்டை மூன்று ஆண்டுகளுக்கு ஒத்திவைத்தது. 1974ஆம் ஆண்டில் வெளியான ‘நெல்லு’ திரைப்படமானது சிறந்த ஒளிப்பதிவாளருக்கான கேரள மாநில திரைப்பட விருதை பாலு மகேந்திராவுக்கு பெற்றுக் கொடுத்தது. 

‘கோகிலா’ – 1977

‘நெல்லு’ திரைப்படம் வெளியாவதற்கிடையில் இயக்குனரான ராமு காரியத் தனது ‘மாயா’ என்ற அடுத்த திரைப்படத்திற்கு பாலு மகேந்திராவை ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்துக் கொண்டார். என்ன தான் பாலு மகேந்திரா நெல்லு மற்றும் மாயா திரைப்படங்களில் முதல் தடவை ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருந்தாலும் அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி முதலில் வெளியான திரைப்படம், 1972ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட P. N. மேனனின் ‘பணிமுடக்கு’ என்ற திரைப்படம் தான். இவற்றை தொடர்ந்து சாஸ்திரம் ஜெயிச்சு மனுஷ்யன் தோட்டு (1973), கலியுகம் (1973) மற்றும் சட்டகரி (1974) போன்ற மலையாளப் படங்களில் பணியாற்றினார். நெல்லு திரைப்படம் மட்டுமன்றி பிரயாணம் மற்றும் சுவண்ணா சந்தியாக்கள் ஆகிய திரைப்படங்களும் பாலு மகேந்திராவுக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற மாநில விருதை பெற்று தந்தது. 1971ஆம் ஆண்டு தொடக்கம் 1976 வரையான காலங்களில் சுமார் 20 திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் 1977ஆம் ஆண்டில் முக்கோண காதல் கதையை மையமாக கொண்ட ‘கோகிலா’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தின் மூலம் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தனது முதல் தேசிய விருதை வென்றார்.

‘முள்ளும் மலரும்’ படப்பிடிப்பில் – 1978

‘மூடு பனி’ – 1980

அதன் பின் 1978ஆம் ஆண்டு ‘முள்ளும் மலரும்’ என்ற படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியதோடு திரைக்கதை, எடிட்டிங் மற்றும் இயக்கம் ஆகிய பகுதிகளிலும் பங்களித்தார். முள்ளும் மலரும்  திரைப்படத்தின் பின் 1979ஆம் ஆண்டு தமிழில் தனது இயக்கத்தில் ‘அழியாத கோலங்கள்’ என்ற திரைப்படத்தை படைத்தார். இத்திரைப்படமானது கிராமிய பின்னணியில் வளரும் மூன்று பருவ வயது சிறுவர்களின் பாலுணர்வு சிக்கல்களை பேசும் கதை. இதனை இவரது சிறுவயது அனுபவங்கள் சிலவற்றை வைத்து எழுதியதாகவும் கூறப்படுகிறது. இதன் கருப்பொருள் அக்காலகட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், இத்திரைப்படம் அபார வெற்றி அடைந்தது. 1980ஆம் ஆண்டில் இவர் இயக்கிய மூன்றாவது படமான ‘மூடு பனி’, 1960இல் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படமான ‘சைக்கோ’ திரைப்படத்தை அடிப்படையாக கொண்டது. இதுவே இளையராஜாவும் பாலு மகேந்திராவும் ஒன்றாக இணைந்து பணியாற்றிய முதல் படமாகும். இந்த படத்திலிருந்து இவரின் வழக்கமான இசையமைப்பாளராக இளையராஜா மாறிவிட்டார்.
1982ஆம் ஆண்டில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் நடிப்பில் படமாக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’ மக்கள் மனதை வென்று திரையரங்குகளில் 300 நாட்கள் ஓடி பெரும் வெற்றியடைந்தது. இன்றும் பலருக்கு பிடித்த திரைப்படமாக ‘மூன்றாம் பிறை’ அழியா புகழோடு இடம் பிடித்துள்ளது. அதே ஆண்டில், எரிச் செகலின்  Man, Woman and Child என்ற நாவலை முன்னோடியாக கொண்டு மலையாளத்தில் ‘ஓலங்கள்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இது விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. அந்த ஆண்டின் இறுதியில் ஒலங்கள் மற்றும் மூன்றாம் பிறை இயக்கியதற்காக மகேந்திரா இரண்டு பிலிம்பேர் அவார்டுகளை வென்றார். 1983ஆம் ஆண்டில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் ‘மூன்றாம் பிறை’ திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து சிறந்த கதைக்கான பிலிம்பேர் பரிந்துரையைப் பெற்றதோடு, ஹிந்தி பார்வையாளர்களிடம் நன்கு அறியப்பட்ட இயக்குனராக மாறினார் பாலு மகேந்திரா. 

‘மூன்றாம் பிறை’ – 1983

1980களின் நடுப்பகுதியில் பாலு மகேந்திரா மிக முக்கிய திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். அதில் முதல் படம் 1984ஆம் ஆண்டு வெளியான ‘நீங்கள் கேட்டவை’. இது ஒரு முழுமையான கமர்ஷியல் படமாக மாறியது. பின்னர் பாலு மகேந்திரா, தன்னால் கமர்ஷியல் படங்களைத் தயாரிக்க முடியும் என்பதை விமர்சகர்களுக்கு நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் படத்தைத் தயாரித்ததாகக் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு அவர் ரஜினிகாந்துடன் இணைந்து ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ திரைப்படத்தை உருவாக்கினார், இந்த திரைப்படம் தோல்வியடைந்தது. பின்னர் அவர் 1985ஆம் ஆண்டு வெளியான இவரின் மலையாளத் திரைப்படமான ‘யாத்ரா’வில் மம்முட்டியுடன் இணைந்து வன அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தத் திரைப்படம் 1977ஆம் ஆண்டு யோஜி யமடா இயக்கத்தில் வெளியான ஜப்பானிய திரைப்படமான ‘The Yellow Handkerchief’ தழுவலாகும். இந்தத் திரைப்படமானது திரையரங்குகளில் 200 நாட்களுக்கு மேல் ஓடி ₹1.9 மில்லியன் வசூலை குவித்தது. அந்த ஆண்டில் அதிக வசூல் செய்த மலையாளத் திரைப்படமாக சிறப்பு பெற்றது. இந்த நேரத்தில், அவர் 1986ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான ‘மலாயா மருதா’ இயக்குவதற்காக கிடைத்த வாய்ப்பை நிராகரித்தார். தீவிரமான படங்களை எடுக்கும் இயக்குனராக பெயர் பெற்றிருந்த மகேந்திரா, 1984ஆம் ஆண்டு ஹாலிவூட்டில் வெளியான அமெரிக்கத் திரைப்படமான ‘மிக்கி அண்ட் மௌட்’ திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு 1987ஆம் ஆண்டு வெளியான ‘ரெட்டை வால் குருவி’ என்ற நகைச்சுவை திரைப்படத்தின் மூலம் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை உருவாக்கப்பட்ட சிறந்த நகைச்சுவைப் படங்களில் ஒன்றாகக் இடம் பிடித்துள்ளது. இந்த திரைப்படம் அவரது எதிர்கால படங்களான மறுபடியும் (1993) மற்றும் சதி லீலாவதி (1995) போன்றவற்றிற்கு அடித்தளமாக அமைந்தது. பாலு மகேந்திரா தனது தாய், தந்தைக்கு அஞ்சலி செலுத்துவதாகவும், தான் படைத்தவற்றுள் மிகக் குறைவான தவறுகள் மற்றும் சமரசங்களுடன் எடுக்கப்பட்ட தனது இரண்டு சிறந்த படங்களென குறிப்பிடும் திரைப்படங்களாக 1988ஆம் ஆண்டு வெளியான ‘வீடு’ மற்றும் 1989இல் வெளியான ‘சந்தியா ராகம்’ காணப்படுகிறது. இதில் ‘வீடு’ திரைப்படமானது இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை வென்றது. ‘சந்தியா ராகம்’ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிறந்த குடும்ப நலத் திரைப்படம் என்கிற விருதை வென்றது. 

‘வீடு’ – 1988

1992ஆம் ஆண்டு ‘வண்ண வண்ண பூக்கள்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தத் திரைப்படம் 100 நாட்கள் ஓடியதோடு 39வது தேசிய திரைப்பட விருதுகளில் “சிறந்த பிராந்திய திரைப்படம்” என்ற விருதை வென்றது. மகேந்திரா தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு நெருக்கமானதாக உணர்ந்தமையால் மகேஷ் பட்டின் ‘ஆர்த்’ என்ற திரைபடத்தை 1993ஆம் ஆண்டு தமிழில் ‘மறுபடியும்’ என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டார். அதனை தொடர்ந்து 1995ஆம் ஆண்டு கமல்ஹாசனால் தயாரிக்கப்பட்ட ‘சதி லீலாவதி’ என்ற நகைச்சுவை திரைப்படத்தில் இயக்குனராக பணியாற்றினார். அடுத்த ஆண்டு அவர் தனது கன்னட படமான கோகிலாவின் ரீமேக்கான ‘அவுர் ஏக் பிரேம் கஹானி’ மூலம் பாலிவுட்டில் மீண்டும் கால் பதித்தார். அதன் பின் 1997ஆம் ஆண்டு வெளியான ‘ராமன் அப்துல்லா’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இது வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இரண்டு நண்பர்களுக்கு இடையிலான நட்பை பற்றிய கதையாகும். பல சிக்கல்களுக்கு பின் நிறைவு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி தோல்வியடைந்தது. 

இதன் பின் சினிமாவிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்ட பாலு மகேந்திரா, 2000களின் முற்பகுதியில் சன் டிவியில் வெளியான ‘கதை நேரம்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் பணியாற்றினார். இவரது ‘கதைநேரம்’ தமிழின் முக்கியமான பல படைப்பாளிகளின் ஆக்கங்களை சின்னத்திரை வழியாக காட்சிப்படுத்தி தமிழ் ரசிகர்களுக்குக் கொண்டுசென்றது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட ஐந்து வருட இடைவெளிக்கு பின் 2003இல் ‘ஜூலி கணபதி’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றியடைந்த போதும் வசூலில் தோல்வியடைந்தது. அதன் பின் 2005ஆம் ஆண்டு ‘அது ஒரு கனா காலம்’ என்ற திரைப்படத்தை உருவாக்கினார். அதில் தனுஷ், ப்ரியாமணி ஆகியோர் நடித்திருந்தனர்.

‘தலைமுறைகள்’ – 2013

2007இல் இவர் சென்னையில் “சினிமா பட்டறை” என்ற பெயரில் திரைப்படப் பள்ளியைத் தொடங்கினார். இந்த பள்ளியானது ஒளிப்பதிவு, இயக்கம் மற்றும் நடிப்பு போன்ற துறைகளில் அறிவையும் பயிற்சிகளையும் வழங்குகிறது. இன்று இது ‘பாலுமகேந்திரா சினிமா பட்டறை’ என்ற பெயரால் அறியப்படுகிறது.

‘தலைமுறைகள்’ படப்பிடிப்பில் – 2013

திரைப்படங்களிலிருந்து ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அவர் 2013ஆம் ஆண்டு ‘தலைமுறைகள்’ என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் தோன்றினார். அதுவரை காலமும் பிலிம் நெகட்டிவ் முறையில் தனது படைப்புகளை உருவாக்கிய பாலு மகேந்திரா, டிஜிட்டல் காமெரா ஒன்றில் படமாக்கிய முதல் முழுநீளத் திரைப்படம் தலைமுறைகள். இத்திரைப்படம் அவரது நடிப்பு திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது எனலாம். நடிப்பு மட்டுமின்றி, இப் படத்தின் திரைக்கதை, இயக்கம், எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு ஆகியவற்றிலும் பாலு மகேந்திரா பணியாற்றினார். இத்திரைப்படமானது ஒரு வயதான மனிதனுக்கும் அவரது பேரனுக்கும் இடையில் உள்ள உறவைப் பற்றிய படம். மகேந்திராவின் நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றதன் மூலம் படம் நேர்மறையான விமர்சனங்களை தன்வசமாக்கி கொண்டது. ஆனால் வணிக ரீதியாக இந்தப் படம் தோல்வியடைந்தது. இத்திரைப்படம் 61வது தேசிய திரைப்பட விருதுகளில் தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான ‘நர்கிஸ் தத்’ விருதை வென்றது.


– பவித்ரா ராஜ் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php