மனிதர்களை நாடி அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன்
 | Alfred Jeyaratnam Wilson

அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன்
 | Alfred Jeyaratnam Wilson

2023 May 31

நாடியின் மனிதர்களை நாடி பகுதியில் தொடர்ச்சியாக பல பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை பற்றிய பதிவுகளை வெளியிட்டு வருவதை காணலாம். அந்தவகையில் இந்த பதிவில் இலங்கையின் மிக முக்கியமான அரசியல் எழுத்தாளரான அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன்
 பற்றி தெரிந்து கொள்வோம்..!அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் அவர்கள் புகழ் பெற்ற இலங்கை தமிழ் கல்வியாளர், வரலாற்றாசிரியர் மற்றும் எழுத்தாளர். இவர் 1928ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 04ஆம் திகதி கே.ஆர்.வில்சன் என்பவருக்கு மகனாக பிறந்தார். இவர் தனது பாடசாலை கல்வியை கொழும்பு றோயல் கல்லூரியில் பயின்றார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைப் பட்டத்தையும் இலண்டன் பொருளியல் மற்றும் அரசறிவியல் பள்ளியில் தனது முனைவர் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். 

இவர் ஆரம்பத்தில் சில காலம் சிலோன் டெய்லி நியூஸ் பத்திரிகையின் தலையங்க எழுத்தாளராக பணி புரிந்தார். 1952ஆம் ஆண்டு பேராதனையிலுள்ள இலங்கை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் அரசறிவியல் விரிவுரையாளராக தனது பணியை தொடங்கினார். அத்தோடு அரசியல் விஞ்ஞானத்தின் ஸ்தாபகப் பேராசிரியராக 1969 முதல் 1972 வரை இருந்தார். இவர் இங்கு 1952இலிருந்து 1972வரை இருபது வருட காலமாக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

அதன் பின் பிரன்சுவிக் பல்கலைக்கழகத்தின் (UNB) ஃப்ரெடெரிக்டன் வளாகத்தில் அரசறிவியல் விரிவுரையாளாராக இணைந்து 1994 வரை பணிபுரிந்தார். 

இவர் 1955ஆம் ஆண்டு லண்டன் பொருளியல் மற்றும் அரசறிவியல் பள்ளியில் லெவர்ஹுல்ம் ஆராய்ச்சி அறிஞராகவும், 1964ஆம் ஆண்டிலிருந்து 1965ஆம் ஆண்டு வரை லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் அரசியல் ஆராய்ச்சியாளராகவும், 1970ஆம் ஆண்டிலிருந்து 1971ஆம் ஆண்டு வரை மெக்கில் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி கூட்டாளராகவும், 1971ஆம் ஆண்டிலிருந்து 1972ஆம் ஆண்டு வரை மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் சைமன் சீனியர் ஃபெலோவாகவும், 1977ஆம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மூத்த ஆராய்ச்சியாளர் மற்றும் செயின்ட் ஆண்டனி கல்லூரி, ஆக்ஸ்போர்டில் மூத்த துணை உறுப்பினராகவும் இருந்தார். 1978ஆம் ஆண்டு தொடக்கம் 1983ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் அரசியலமைப்பு ஆலோசகராக இருந்தார். அமெரிக்க அரசத் திணைக்கள தெற்காசியாவின் வெளியுறவுத்துறை ஆலோசகராகவும் இருந்தார்.

A J வில்சன் அவர்களின் சில நூல்கள்..

வில்சன் அவர்கள் கனேடிய சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் (CIDA), கனடிய அகதிகள் ஆலோசனை வாரியம், பன்முக கலாச்சார அமைச்சகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள குடியேற்ற நீதிமன்றங்களிலும் பணியாற்றினார். தி ரவுண்ட் டேபிள், தி ஜர்னல் ஆஃப் காமன்வெல்த் அண்ட் காம்பரிட்டிவ் பாலிடிக்ஸ், தி சிலோன் ஜர்னல் ஆஃப் ஹிஸ்டரிகல் அண்ட் சோஷியல் ஸ்டடீஸ், ஏசியன் சர்வே மற்றும் தி பார்லிமெண்டேரியன் ஆகியவற்றின் ஆசிரியர் குழுவிலும் இவர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இவர் Politics in Sri Lanka, Electoral Politics in an Emergent State, The Gaullist System in Asia, The States of South Asia, The Break-up of Sri Lanka, S. J. V. Chelvanayakam and the Crisis of Sri Lankan Tamil Nationalism, A Political Biography, Sri Lankan Tamil Nationalism, The Post-Colonial States of South Asia ஆகிய எட்டு புத்தகங்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரை பிரசுரங்களையும் எழுதியுள்ளார்.

A J வில்சன் அவர்கள் தந்தை செல்வா அவர்களின் மூன்றாம் நினைவு உரையை கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் ஆற்றிய போது..

அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் மகளான சுசிலி என்பவரைத் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு மல்லிகா, மைதிலி எனும் இரண்டு மகள்களும் குமணன் என்ற மகனும் பிறந்தனர். 

அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் அவர்கள் தனது 71வயதில், 2000ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி அன்று டொராண்டோவிலுள்ள அவருடைய வீட்டில் தூக்கத்தில் இருந்த போது இதய செயலிழப்பால் உயிரிழந்தார்.

– பவித்ரா ராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php