மனிதர்களை நாடி சரித்திர நாவல்களின் நாயகன் சாண்டில்யன்!

சரித்திர நாவல்களின் நாயகன் சாண்டில்யன்!

2023 Mar 31

‘‘ஒரு படத்துக்கு மக்கள் மத்தியில் ஐந்து ஆண்டுகள் மட்டுமே மவுசு இருக்கும். ஆனால், நான் எழுதும் புத்தகங்களுக்கு 500 ஆண்டுகள் மவுசு இருக்கும். அதனால்தான் நான் எழுத்துத் துறையைத் தேர்ந்தெடுத்தேன்’

– சாண்டில்யன்-

‘சாண்டில்யனுடைய ‘கடல் புறா’ நாவலைப் படித்தபிறகுதான், நான் நீண்ட கடல் பயணம் செய்ய விரும்பினேன்’

-விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்- (ஆனந்த விகடன்)

இந்த டிஜிட்டல் யுகத்திலும் அன்றுதொட்டு இன்றுவரையில் எத்தனையோ எழுத்தாளர்கள் சரித்திர நாவல்களை எழுதிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால் ஒருவர் இறந்தபிறகும் அவரது சரித்திர நாவல்களுக்கு ஓர் தனித்துவமான அங்கீகாரம் இருக்கிறது என்றால் அது சாண்டில்யனுக்கு மட்டும்தான். எத்தனை முறை மறுபதிப்பு செய்யப்பட்டாலும் அவருடைய நாவல்களுக்கு என்று தனிப்பட்ட வாசகர்கள் உண்டு. அவற்றை வெளியிடும் பதிப்பகத்தாருக்கும் ஒருபோதும் விற்பனை குறைவதில்லை.

கல்கியின் பொன்னியின் செல்வன் என்கிற மிகப்பிரபலமான ஜனரஞ்சகமான புதினத்திற்கு மத்தியில் கடல் புறா (மூன்று பாகங்கள் ), மலைவாசல் , யவன ராணி (இரண்டு பாகங்கள்), ஜல தீபம் (3 பாகங்கள்), ராஜ முத்திரை (2 பாகங்கள்) போன்ற மிகப் பிரபலமான சரித்திர நாவல்களையும் விஜய மகாதேவி (3 பாகங்கள்)பல்லவ திலகம், விலை ராணி,மன்னன் மகள்,ராஜ திலகம், கன்னி மாடம்,சேரன் செல்வி,கவர்ந்த கண்கள், ஜீவ பூமி, மஞ்சள் ஆறு,மூங்கில் கோட்டை,சித்தரஞ்சனி,மோகினி வனம், இந்திர குமாரி, இளைய ராணி, நீள்விழி, நாக தீபம், வசந்த காலம்,பாண்டியன் பவனி, நாகதேவி,நீல வல்லி,ராஜ யோகம்,மோகனச் சிலை,மலை அரசி,கடல் ராணி, ஜலமோகினி,மங்கலதேவி,அவனி சுந்தரி,உதய பானு,ராஜ்யஸ்ரீ,ராஜ பேரிகை, நிலமங்கை, சந்திரமதி,ராணா ஹமீர், அலை அரசி, கடல் வேந்தன், பாலைவனத்துப் புஷ்பம்,சாந்நதீபம்,மண்மலர்,மாதவியின் மனம்,பல்லவ பீடம்,நீலரதி என இவர் எழுதிய வரலாற்றுப் புதினங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவரது மேற்கூறிய தொடர்களில் பெண்கள் பற்றிய வருணைகள் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தன. சிலர் இதை ஆபாச எழுத்து எனவும் கூறினார்கள். அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் ‘சாண்டில்யன்’ எழுதிக் குவித்துக் கொண்டேயிருந்தார்அதிகமான நூல்களை எழுதிய இந்திய எழுத்தாளர்களில் ஒருவர் என்கிற பெருமையும் சாண்டில்யருக்கு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. சாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக (புதிய டவுன்லோட் லிங்கில் ) - நூற்றோட்டம் - கருத்துக்களம்

சாண்டில்யன் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் ‘குமுதம்’ வார இதழின் விற்பனையில் தேக்கம் ஏற்படும்போதெல்லாம் இவரது ஏதேனும் தொடர்களை அறிவித்து, அதன் விற்பனையை அதிகரிக்கச் செய்வார்களாம். அப்படிப்பட்ட சாண்டில்யரின் வாழ்க்கை வரலாற்றினை சற்றுப்பார்ப்போமாயின், இவர் தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறையை சேர்ந்த திருஇந்தளூர் எனும் இடத்தில 1910ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி, டி.ஆர்.சடகோபன் ஐயங்காருக்கும், பூங்கோதைவல்லி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர்.

சாண்டில்யனின் இயற்பெயர் எஸ்.பாஷ்யம் என்பது அநேகர் அறியாதவொன்றுதான் போலும் . கல்லூரியில் ‘இன்டர்மீடியட்’ படிப்பினை முடித்த அவருக்கிருந்த தேசிய இயக்க ஈடுபாடு காரணமாக காங்கிரஸ் இயக்கத்தில் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டிருந்தார். வெ.சாமிநாதசர்மா, கல்கி போன்றோருடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக ஆனந்தவிகடன், நவசக்தி போன்ற புதினங்களில் சிறுகதைகளை எழுத ஆரம்பித்தார். அதுவரை காலமும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்துகொண்டிருந்த நீதிமன்ற வழக்குகளை நல்ல தமிழில் சுதேசமித்திரனில் எழுதியதால், சாண்டில்யன் திறமை பலராலும் பேசப்பட்டதுடன், 1937இல் மகாத்மா காந்தியைச் சந்தித்துப் பேட்டி கண்டு எழுதும் அளவிற்கு அவருக்கு வாய்ப்புக்கள் உருவாகின.

சாண்டில்யனின் மதிப்புணர்ந்த நிர்வாகம், அவரை உதவி ஆசிரியராகப் பதவி உயர்வு அளித்தது. எனினும் பின்னாளில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக, மீண்டும் நிருபர் பதவி தரப்பட்டது. இதனால் கோபமடைந்த சாண்டில்யன், அந்தப் பதவியிலிருந்து விலகி ‘ஹிந்துஸ்தான்’ வார இதழில் சேர்ந்தார்.
சினிமா மற்றும் நாடகம் பார்ப்பதில் மிகுந்த ஈடுபாடுடைய சாண்டில்யருக்கு ‘ஹிந்துஸ்தானி’ல் பணியாற்றியபோதுதான் திரைப்படத்துறையின் தொடர்பு கிட்டியது.

சுவர்க்க சீமா (1945), என் வீடு (1953) ஆகிய இரு திரைப்படங்களுக்கு திரைக்கதைகளை எழுத உதவியதுடன், பிற்காலத்தில் தனது திரைப்படத்துறை அனுபவங்களை சினிமா வளர்ந்த கதை (1985) என்ற புத்தகமாக வெளியிட்டார். பெர்த் ஆஃப் நியூஸ்பேப்பர் என்ற ஆவணப்படம் ஒன்றினையும் தயாரித்து வெளியிட்டுள்ளார் .பின்னாளில் குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தபோதும் அவரால் அதில் அவர் வெற்றி பெறவியளவில்லை என்றே கூறவேண்டும்.

சரித்திரக்கதை சக்ரவர்த்தி சாண்டில்யன், ‘சீனத்துச் சிங்காரி’ என்ற தொடரை ‘குமுதம்’ வார இதழில் எழுதத் தொடங்கியபோது திடீரென நோய்வாய்ப்பட்டார். மரணப்படுக்கையிலும் அந்தக் கதையை எழுதிக்கொண்டிருந்தவர் கதையின் முடிவினை எழுதாமலேயே அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனளிக்காமல், 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி இறையடி எய்தினார். 2009ல் தமிழக அரசு சாண்டில்யன் உட்பட்ட 28 எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கவும் அவர்களின் வாரிசுகளுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கவும் முன்வந்து சம்பந்தப்பட்ட வாரிசுகளிடம் ஒப்புதல் கேட்ட போது, சாண்டில்யனின் வாரிசுகள் அவரது நூல்களை நாட்டுடைமையாக்குவதற்கு மறுத்து விட்டனர் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php