அறிவியலை நாடி இலங்கை பௌதீகவியலாளர் பேராசிரியர் கிறிஸ்டி ஜெயரத்தினம் எலியேசேர்

இலங்கை பௌதீகவியலாளர் பேராசிரியர் கிறிஸ்டி ஜெயரத்தினம் எலியேசேர்

2023 Jun 12

கிறிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர்

பேராசிரியர் கிறிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர் இலங்கையின் தலைசிறந்த பௌதீகவியலாளரும், கணிதவியலாளரும், இயற்பியல் ஆர்வலரும், தலை சிறந்த கோற்பாட்டாளரும் ஆவார். யாழ்ப்பாணம் நாவற்குழியை பிறப்பிடமாக கொண்ட சி.ஜெ.ஈ கணிதம் மற்றும் விஞ்ஞானத்துறைகளோடு நின்று விடாது தமிழிலும் தேர்ச்சி மிக்கவராகவும் தமிழ் இலக்கியத்தின் மீதும் ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார்.
இன்றளவிலும் சி.ஜெ.ஈ நிறுவிய புரோத்தன்- இலத்திரன்களுக்கு இடையிலான ஆர்முடுகல் தேற்றம் எலிசியரின் தேற்றம் என்ற பெயரில் உலகளவில்   பௌதீகவியலில், நிறுவல்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

1918 இல் நாவற்குழியில் திரு.திருமதி.ஜகோப் எலியேசர் தம்பதிகளுக்கு மகனாக பிறந்த சி.ஜெ.ஈ தன் ஆரம்ப கல்வியை பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியில் பெற்றதுடன் கேம்பிரிட்ஜ் தேசிய பரீட்சையில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்று பின்னாட்களில் கொழும்பு புனித ஜோசப் கல்லூரியில் கல்வி பயின்றார். பின் கொழும்பு பல்கலைக்கழக கல்லூரியில் உயர்கல்வியை பெற்றதுடன் கணித பாடத்தில் முதற்தர சித்திகளுடன் பட்டப்படிப்பைப் முடித்தார். முதுகலை கல்விக்காக கலாநிதி போல் டிராக் இன் மேற்பார்வையின் கீழ் காந்த மின்னியல் சார்பில் தன் ஆய்வுகளை முன்வைத்து கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் முடித்தப் பின்னர் கொழும்பு பல்கலைக்கழக கல்லூரியில் விரிவுரையாளராக தன் பணியை தொடங்கினார். தொடர்ந்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராகவும் அறிவியல் பீடத்தின் அதிபதியாகவும் கடமையாற்றியதுடன் இடைப்பட்டக் காலத்தில் ஜெனீவா மற்றும் லியன்னா நகரங்களில் அணு சக்தி என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற ஐக்கிய நாடுகளின் பிரதிநிதியாக அழைக்கப்பட்டார். சிக்காகோ பல்கலைக்கழகத்தில் அணுகுண்டு தயாரிப்பில் பிரதானியாக இருந்த பேராசிரியர் ஜெ.ரொபர்ட் ஒப்பென்ஹைமர் உடன் இணைந்து கணிதவியலாளராக பணியாற்றினார்.
சிறிது காலம் முன்னோடி விஞ்ஞானத்திற்கான இலங்கை சங்கத்தின் தலைவராக இருந்ததுடன் யாழ் பல்கலைக்கழகத்தால் Dsc கௌரவப்பட்டம் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.பின்னர் மலாயா பல்கலைகழகத்திலும் ஆஸ்திரேலியா லா ட்ரொப் பல்கலைகழகத்திலும் கணிதவியல் பேராசிரியராக கடமையாற்றியதுடன் 1983 ஆம் ஆண்டில் பேராசிரியர் பணியிலிருந்து இளைப்பாறினார்.

சி.ஜெ.ஈ கோலாலம்பூரில் இடம்பெற்ற, முதல் உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் “சுழியம்” என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரையொன்றை வெளியிட்டார். மேலும் இளைப்பாறிய காலங்களில் அவுஸ்த்ரேலிய தமிழ் சமூகத்துடன் சேர்ந்து தமிழுக்காக உழைத்ததுடன் அவுஸ்த்ரேலிய விக்டோரியா மாநிலத்தின் இலங்கை தமிழ் சம்மேளனத்தின் தலைவராகவும் பணியாற்றினார். இலங்கையில் தமிழினப் படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்த முக்கியமானத் தலைவர்களில் இவரும் ஒருவராவார். பின்னாட்களில் அவுஸ்திரேலிய தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த தமிழ் சங்கங்களின் சம்மேளனம் அமைத்த போது அதன் தலைவராகவும் கடமையாற்றினார்.
1997 ஆம் ஆண்டு தமிழீழத்திற்கான உயரிய விருதான தமிழீழத் தலைவர் பிரபாகரன் அவர்களினால் மாமனிதர் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். பின் இவர் ஆஸ்திரேலிய மக்களுக்காக ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையில் ஆஸ்திரேலிய அரசினால் அவுஸ்திரேலியாவின் உயரிய விருதான ஓடர் ஒஃப் அவுஸ்த்ரேலியா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மேலும் பல்வேறு இயற்பியல், பௌதீகவியல்சார் ஆராய்ச்சிக்கட்டுரைகளை எழுதியதுடன், நவீன பௌதீகவியலுக்கான காந்த மின்னியல் கோற்பாடுகளை உள்ளடக்கிய நூலையும் வெளியிட்டார். தன் என்பத்து இரண்டாம் வயதில் 2001ஆம் ஆண்டு காலமான கிறிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர் அவர்களின் வாழ்க்கை வரலாறானது ‘A conquering scientist’ எனும் பெயரில் சி.ஜெ.ஈ வின் மனைவி ராணீ எலியெசர் அவர்களால் எழுதி வெளியிடப்பட்டுள்ளது

-பவித்ரா ராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php