2023 Jul 28
வானொலியை கண்டு பிடித்தவர் யார் என்றால் நாம் சட்டென்று சொல்லிவிடுவோம் “வில்லியம் மார்க்கோனி “ என்று ..மின்சாரத்தை கண்டுபிடித்த பெருமை யாருடையது என்றால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடுவோம் தாமஸ் ஆல்வா எடிசன் என்று ..
ஆனால் , நம்முடைய இந்த பதில்கள் முற்றிலும் உண்மையானது அல்ல என்றும் இந்த கண்டுபிடிப்புக்களின் பின்னணியில் மட்டுமன்றி இந்த நவீன உலகின் பல கண்டுபிடிப்புக்களுக்குமான நாயகனாக இருந்தவர் , மற்றும் நூறு வருடங்களுக்கு முன்னமே வயர்லஸ் தொழில்நுற்பம் பற்றி கருத்து தெரிவித்தவர்தான் வரலாறுகளில் இருட்டடிப்பு செய்யப்பட்ட விஞ்ஞானி நிக்கோலோ டெஸ்லா ! இன்றைய உலகில் நாம் பயன்படுத்தும் 80% மின்சாரத்தால் இயங்கும் பொருள்களுக்கு அடித்தளமிட்டவர் என இன்று நாம் அவரை கொண்டாடினாலும்கூட அவர் வாழ்ந்த காலத்தில் அவர் அவ்வளவாக கண்டுகொள்ளப்படவில்லை என்பதே உண்மை.
1856 ஜூலை 10 ஆம் திகதி குரோஷியாவின் ஸ்மில்ஜன் எனும் இடத்தில பிறந்த டெஸ்லா சிறுவயதிலிருந்தே “Eidetic memory “ எனும் சிறப்புத்திறன் கொண்டவர் ( எப்போதோ ஒரு தடவை பார்த்த விடயங்களை துல்லியமாக நினைவில் கொண்டுவந்து விளக்கும் திறன் ) படிப்பில் மிகப்பெரிய திறமைசாலியாக இருந்த டெஸ்லா , மோசமான சில சகவாசத்தினால் சூதாட்டத்தில் ஈடுபாடுகொண்டு ஒருகட்டத்தில் படிப்பையே இடையில் நிறுத்திவிட்டு தொலைபேசி நிறுவனமொன்றில் எலக்ட்ரீஷியனாக பணியாற்ற ஆரம்பித்தார் . பின்னர் 1884 ஆம் வருடம் நியூயார்க் நகரத்தில் செயல்பட்டு வரும் “எடிசன் மெஷின் ஒர்க்ஸ் “இல் எடிசனிடம் வேலைக்கு அமர்ந்தார் . அங்கேயிருந்து ஆரம்பித்தது டெஸ்லாவிற்கு சனி என்றாலும் மிகையில்லை . எடிசன் நேரடி மின்னோட்டத்தின் [DC/ direct current] கண்டுபிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது டெஸ்லா மாற்று மின்னோட்டத்தின் (AC) மூலம் குறைந்த செலவில் , கூடிய விரைவில் மின்சாரத்தினை வழங்க முடியும் என நிரூபிக்க முயன்றார் . இது எடிசனுக்கு மிகுந்த கோபத்தினை ஏற்படுத்தியதெனலாம் . ஏனெனில் , டெஸ்லா கூறுவதில் உண்மை இருப்பதை உணர்ந்துகொண்டாலும் அதனை ஒப்புக்கொள்ள எடிசன் முன்வராமைக்கு முக்கிய காரணம் எடிசன் காப்புரிமை வாங்கிவைத்திருந்த அத்தனை கண்டுபிடிப்புக்களுக்குமான வடிவமைப்பானது DC மின்சாரத்தினை அடிப்படையாக கொண்டது . (எடிசனுடைய இந்த DC கரண்ட் சிஸ்டம் மூலம் நீண்ட தூரத்திற்கு மின்சாரத்தை கடத்த முடியாது . அதனால் ஒவ்வொரு குறிப்பிட்ட தூரத்திலும் ஒரு பவர் பிளான்ட்டினை உருவாக்கி அங்கிருந்து மின்சாரத்தினை உற்பத்தி செய்ய வேண்டும் . இது செலவு அதிகம் பிடிக்கும் விடயமாக இருந்தது .) தன்னுடைய சுய லாபத்திற்காக எப்படியாவது டெஸ்லாவின் கண்டுபிடிப்பினை மக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடாது என முடிவெடுத்த எடிசன் AC கரெண்ட் பாதுகாப்பற்றது எனும் பொய் வதந்தியினை நாடு முழுவதும் பரப்பிவிட்டதுடன் , வதந்திக்கு ஆதாரமாக நாய், பூனை போன்ற மிருகங்களை கடத்திவந்து அவற்றின்மீது மின்சாரத்தை பாய்ச்சிக் கொன்றுவிட்டு டெஸ்லாவின் AC கரண்டின் மீது பழியை தூக்கிபோட்டுக்கொண்டிருந்தார் . ஆனாலும் எடிசனின் சகுனித்தனங்களையெல்லாம் முறியடித்து , இந்த உலகத்தின் எதிர்காலமே AC கரண்டில்தான் தங்கியிருக்கிறது என்பதனை நிரூபித்தார் டெஸ்லா . இதனடிப்படையில் உலகின் முதலாவது பவர் பிளான்ட் அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சியில் டெஸ்லாவின் AC கரண்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது . டெஸ்லாவின் AC Current (Alternating current) எனும் கண்டுபிடிப்பே இன்றும் நாம் பயன்படுத்திவருகின்றோம் என்பதும் குறிப்பிடத்தக்கது
“எக்ஸ் ரே” தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களில் வல்லவராக இருந்தார் டெஸ்லா. டெஸ்லாவின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று [tesla coil]. இதன் மூலமாக அதிக மின் அழுத்தம் கொண்ட மின்சாரத்தை உருவாக்க முடியும் எனவும் இதனைக்கொண்டு ரேடியோ அலைகளை குறிப்பிட்ட அதிர்வெண்ணில் அனுப்பவும் பெறவும் முடியும் என கண்டுபிடித்த டெஸ்லா முதன் முதலாக ரேடியோ சிக்னலை அனுப்புவதற்கு தயாரானபோது ( 1895 இல்) அவரது ஆய்வகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல ஆண்டுகால உழைப்பும் சாதனங்களும் வீணாய் போனது. அதன் பிறகு டெஸ்லா ரேடியோவிற்கு காப்புரிமை பெற விண்ணப்பிக்கவில்லை . என்றாலும் கூட அவர் ரேடியோவினை கண்டுபிடிப்பதில் தொடர்ந்தும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் . அதேசமயம் இத்தாலியை சேர்ந்த மார்க்கோனி என்பவரும் இங்கிலாந்தில் ரேடியோ கண்டுபிடிப்பில் ஈடுபட்டு வந்ததுடன் , அமெரிக்காவில் ரேடியோவிற்கான காப்புரிமையை பெற விண்ணப்பித்து இருந்தார். எனினும் அவருடைய கருவி டெஸ்லாவின் கருவியோடு ஒத்துப்போவது போல இருந்தபடியால் அதற்கு காப்புரிமை கொடுக்கப்படவில்லை. ஆனால் டெஸ்லாமீது கடும் கோபத்திலும் பொறாமையினாலும் தகித்துக்கொண்டிருந்த எடிசன் தன்னுடைய நிதி பலத்தினை பயன்படுத்தி மார்கோனிக்கு ஆதரவளிக்க ஆரம்பித்தார் . திடீரென அமெரிக்க காப்புரிமை நிறுவனம் மார்கோனிக்கு ரேடியோவிற்கான காப்புரிமையை வழங்கியது. 1909 ஆம் ஆண்டு மார்க்கோனிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது . இதன் பின்னணியில் செயல்பட்டவர் எடிசன் என்பது பலருக்கும் தெரிந்திருந்தது . அப்போதும் டெஸ்லா இது எதையுமே கண்டுகொள்ளாமல் தனது கண்டுபிடிப்புக்களில் முழு மூச்சுடன் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் . எனினும் தன்னுடைய கண்டுபிடிப்புக்களை பணத்திற்காக விற்கும் ஒரு வியாபாரியாக டெஸ்லா இருக்கவில்லை என்பதால் அவரது கண்டுபிடிப்புக்களுக்கான ஸ்பொன்சர் தேவை என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சினையானது டெஸ்லாவிற்கு . வயர்லஸ் தொடர்பாடல் எனும் கண்டுபிடிப்பிற்காக டெஸ்லாவிற்கு நிதியுதவி செய்வதாக கூறியிருந்த ஜே. பி மோர்கன் என்பவர் மார்க்கோனி வானொலியை கண்டுபிடித்துவிட்டதால் இனி வயர்லஸ் கண்டுபிடிப்பானது தேவையில்லாத ஓன்று என கூறி நிதியுதவியினை மறுத்தமையானது டெஸ்லாவை மிகப்பெரிய சோகத்திற்கு உள்ளாக்கியது . தான் பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்த ஒன்றே தனது கனவுத் திட்டமான வயர்லஸ் கண்டுபிடிப்பிற்கு எதிராக மாறியதை எண்ணி , மார்க்கோனி மீதும் , எடிசன் மீதும் 1915 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார் டெஸ்லா . சோகம் என்னவென்றால் இந்த வழக்கின் தீர்ப்பானது 1943 ஆம் ஆண்டு டெஸ்லா அநாதரவாக இறந்துபோன ஆறு மாதங்களுக்கு பின்னரே அமெரிக்க உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டது . தீர்ப்பின்பிரகாரம் வானொலி கண்டுபிடிப்புக்கான அனைத்து காப்புரிமையும் மார்கோனியிடமிருந்து டெஸ்லாவிற்கு வழங்கப்பட்டது . ( இது தெரியாமல் இன்னுமே நம்முடைய இலங்கையில் உள்ள வானொலிகள் “வானொலியை கண்டுபிடித்தது மார்க்கோனி மார்க்கோனி” என ஜிங்கிள்ஸ் ஒலிபரப்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே காலக் கொடுமை )
மக்களின் நலனுக்காக தன்னுடைய அறிவையும் உழைப்பையும் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த டெஸ்லா , எடிசன் போன்ற பணத்தாசை பிடித்த துரோகிகளால் முதுகில் குத்தப்பட்டு அந்திமகாலத்தில் ஜனவரி 07,1943 அன்று நியூயார்க்கர் எனும் ஹோட்டல் அறையில் இறந்துபோனார் . அறிவியல் உலகம் டெஸ்லாவின் பங்களிப்பினை மனதில்கொண்டு அவருக்கு பெருமை சேர்க்கும்விதமாக Magnetic Flux Density-ஐ அளப்பதற்கான அளவையாக டெஸ்லாவின் பெயரை பயன்படுத்திக்கொண்டனர் . மேலும், எலான் மஸ்க் டெஸ்லாவை கௌரவப்படுத்தும் விதமாகவே அவரது நிறுவனத்திற்கு டெஸ்லா எனும் பெயரை சூட்டிக்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
எழுத்து : பிரியா ராமநாதன்