நொக் அவுட்டில் வெளியேறுவது இலங்கையா? பங்களாதேஷ் ஆ?
ஆசியக் கிண்ணம் என்பது ஒரு பன்னாட்டு துடுப்பாட்ட சுற்றுப் போட்டி. ஆசிய நாடுகளிலேயே நல்லெண்ணத்தை வளர்ப்பதற்காக 1983ஆம் ஆண்டில் ஆசிய கிரிக்கெட் சபை உருவாக்கப்பட்டது. முதலாவது ஆசியக் கிண்ணம் 1984 ஆம் ஆண்டு ஷார்ஜாவில் இடம்பெற்றது. ஆசியக் கிண்ணப் போட்டிகள் அனைத்தும் ஒரு நாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அந்தஸ்து கொண்ட பன்னாட்டு துடுப்பாட்ட குழுவினரால் வழங்கப்பட்டது. இதுவரையில் (2018) வரை நடைபெற்ற ஆசிய கிண்ணத்தில் இந்தியா 7 தடவைகளும், இலங்கை 5 தடவைகளும், பாகிஸ்தான் இரண்டு தடவைகளும் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இந்தியா இரண்டு தடவைகள் ஆசிய கிண்ணத் தொடரில் பங்கேற்கவில்லை. ஏனெனில் 1986 இல் இலங்கை இனப்பிரச்சினையினாலும் , 1993 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசுடன் இருந்த அரசியல் பிரச்சினையை காரணம் காட்டியும் ஆகும். அதே போல் 1990ஆம் ஆண்டு நான்காவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது இதில் பாகிஸ்தான் அரசியல் காரணங்களுக்காக விலகிக் கொண்டது. கடந்த 2004ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற எட்டாவது ஆசிய கிண்ண தொடரில் முதன்முறையாக ஹொங்கொங் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகள் இணைந்தன. 2004 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை சாம்பியன் ஆனது.
ஆரம்பத்தில் இருந்து 50 ஓவர்களாக நடைபெற்று வந்த ஆசிய கிண்ண தொடரானது 2016 ஆம் ஆண்டில் இருந்து 20 ஓவர்கள் போட்டிகளாக மாற்றம் கண்டது. எனினும் இடையில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற 14வது ஆசியக் கிண்ணத் தொடர் 50 ஓவர்கள் ஆகவே நடைபெற்றது. (2019) நடைபெறவிருந்த ஐசிசி உலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சி தொடராக இது அமையவே இவ்வாறு மாற்றப்பட்டது.
12வது ஆசிய கிண்ணத்திலே ஆப்கானிஸ்தான் அணி ஆசிய கிண்ண தொடரில் கால் பதித்தது. 1984 தொடக்கம் 2018 வரை 14 ஆசிய கிண்ண தொடர்கள் நடைபெற்றுள்ள நிலையில் 15ஆவது ஆசிய கிண்ணம் இலங்கையில் நடைபெற உத்தேசிக்கப்பட்டது.எனினும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேற்கொள்கிறது. கடந்த சனிக்கிழமை (27) ஆரம்பிக்கப்பட்ட ஆசிய தொடர் எதிர்வரும் செப்டம்பர் 11 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. 2020ஆம் ஆண்டு நடைபெறவிருந்த ஆசிய கிண்ண தொடரே இவ்வாறு இந்த வருடம் நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆசிய கிண்ண தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங் கொங் அணியும் இந்த முறை இணைந்துள்ளது.
இதுவரையில்..
கடந்த 27ஆம் திகதி டுபாயில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. இது 15ஆவது ஆசிய கிண்ணத்தின் முதலாவது போட்டியாக நடைபெற்றது. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதின இப் போட்டி டுபாய் மைதானத்தில் நடைபெற்றது. 147 என்ற வெற்றி இலக்கை இந்தியாவுக்கு பாகிஸ்தான் நிர்ணயித்த போதும் போராடியே இந்தியா வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியாக பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.இப் போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 இற்கு தெரிவாகியது. தொடரின் நான்காவது போட்டியாக இந்தியா மற்றும் ஹொங் கொங் அணிகள் மோதின இப் போட்டி டுபாய் மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் இந்தியா அணி 40 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. தொடரின் 5 ஆவது போட்டியாக இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறவுள்ளது. டுபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப் போட்டி இரண்டு அணிகளுக்கும் மிக முக்கிய போட்டியாகும். ஏற்கனவே இரண்டு அணிகளும் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்த நிலையில் சூப்பர் 4 சுற்றுக்கு குழு B இல் இரண்டாவது தெரிவாகும் அணி யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியாக இது அமைந்துள்ளது.
கடந்த காலங்களில் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மைதானத்தில் தர்க்கம் புரிந்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. இது இவ்வாறிருக்க இலங்கை கிரிக்கெட் அணியில் உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் இல்லை என தான் நம்புவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் காலேத் மஹ்மூத் தெரிவித்துள்ளார் .
ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிடும்போது பங்களாதேஷ் அணியில் உலகத் தரமிக்க பந்துவீச்சாளர்கள் இரண்டு பேர் மாத்திரமே இருக்கிறார்கள் என இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக கூறிய கருத்துக்கு பயிற்சியாளர் மஹ்மூத் இலங்கை அணியில் உலகத் தரம்மிக்க பந்து வீச்சாளர்கள் எவருமில்லை என பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது,
தசுன் சானக்க ஏன் இப்படியான ஒரு விடயத்தை கூறினார் என்பது எனக்கு தெரியாது, பங்களாதேஷில் ஷகிப் மற்றும் முஸ்தபிசுரை தாண்டி வேறு பந்துவீச்சாளர்கள் இல்லை என அவர் தெரிவி்த்தார். உண்மையை கூறினால் இலங்கையில் தான் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லை என மஹ்மூத் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் நொக்கவுட் குழு நிலை போட்டி இன்று (01) நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுகின்ற அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் சேர்ந்து குழு B இல் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். எனவே இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அப்ரா அன்சார்
வெண்மை அதிகாரத்தின் நிறமாகவும் கறுப்பு அடிமைகளின் நிறமாகவும் கருதப்படும் பின்னணி என்ன?
“செகப்பா இருக்கவன் பொய் சொல்லமாட்டான்” என்கிற கவுண்டமணி நகைச்சுவைக்கேற்ப நம்மை அறியாமலேயே வெண்மை என்கிற வார்த்தை தூய்மையின் அடையாளமாகவும் கறுப்பு என்பது திருட்டுத் தனத்தின் அடையாளமாகவும் மாறியிருக்கின்றதெனலாம்.
மக்களை ஏமாற்றி பணம் பறித்தால் அது கறுப்புப்பணம் சினிமா வில்லன்கள் கறுப்பாகத்தான் இருக்கவேண்டும் என்பது பல திரைப்படங்களில் எழுதப்படாத விதி. நன்கு சிவந்த, மெல்லிய “உயரமான அழகான மணமகள் தேவை” என்ற வாசகத்துடனேயே இன்று அநேகமான மணப்பெண் தேவை விளம்பரங்கள் உலவிக்கொண்டிருக்கின்றன.
“எனக்கு நல்ல கலரான பொண்ணாப் பாருங்க” பெண் தேடும் படலம் ஆரம்பித்துவிட்டால் பல மாப்பிள்ளைகளின் பிரதான கோரிக்கையும் இதுதான். ஆளுமை, கல்வி குடும்பப் பிண்ணனி, உத்தியோகம் என்று வாழ்க்கைக்கு அவசியமான எத்தனையோ அம்சங்கள் இருக்க சிவப்பு நிறத்தில் மட்டும் ஏனிந்த மோகம் ?!
காலங்காலமாக உழைக்கும் வர்க்கம் என்பதனாலும் தற்ப வெப்ப சூழலினாலும் நம் தமிழர்களின் நிறம் சராசரியாக கறுப்பு நிறமே. சிலர் மாநிறத்தில் இருந்தாலும் பெரும்பாண்மை கருப்புநிறமே. உண்மை இவ்வாறிருக்க வயிட்னிங் க்ரீம் முதல் பேசியல்வரை முகத்தை வெண்மையாக்கும் முயற்சிக்காக நாம் செலவழிக்கும் தொகை இன்று பன்மடங்கு எனலாம் .
சில நிமிடங்களுக்கு ஒருமுறை தொலைக்காட்சியில் காட்டப்படும் வெண் தோல் விளம்பரங்களால் கருப்பான பெண் மீதும் ஆண் மீதும் மறைமுக வன்முறைகள் தொடுக்கப்படுகின்றன என்றால் அது மிகையில்லை. ஓர் சமூகத்தினது நிறத்திற்கு எதிரான நிறவெறியை நுகர்வோராகிய நாமும் ஊடகங்களும் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதே மறுக்கவியலா உண்மை.
அழகு என்பது வரையறைக்கு உற்படுத்த முடியாதது என்பதனை உலகமயமாதல் இன்று தலைகீழாக்கியுள்ளது. மனிதனுக்கு மனிதன் அவனது வேறுபட்ட வாழ்க்கைச் சூழலை ஒட்டியும் பலவிதமான காரணத்தினாலும் அழகு பற்றி வெவ்வேறு விதமான பார்வையினை அவன் கொண்டிருந்தான். ஆனால் சந்தைத்தளம் இதை இன்று புரட்டிப்போட்டிருக்கின்றது .
அழகு என்பதற்கு உலக அழகுராணிப் போட்டிகள் வழங்கும் தகுதிகளாக சிவந்த மேனி, மெல்லிய இடை, கூர் மூக்கு, 5.6 அடிகளுக்கு மேற்ப்பட்ட உயரம் போன்றவையே அழகின் வரையறையாகிப்போனது. அண்மைய காலங்களில் சில கறுப்பின அழகிகளின் தேர்வுக்கான மறைமுக காரணி பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புக்களை ஆபிரிக்க மற்றும் ஆசிய கண்டங்களில் சந்தைப்படுத்தும் நோக்கம் என்பது யாவரும் அறிந்ததே அண்மைய தமிழ்த் திரைப்பட கதாநாயகிகள் எல்லோருமே சிவந்தவர்கள் அநேகமாக தமிழ்நாட்டைத் தாண்டிய அண்டை மாநிலத்தவர்கள்.
தமிழ்ப்பெண்களின் நிறம் தகுதி குறைவானவொன்றாக நினைக்கப்ப்படும்போது தமிழே அறிந்திராதவர்கள் எல்லோரும் தங்கள் நிறத்தினாலேயே கதாநாயகி ஆகிக்கொண்டிருக்கிறார்கள். மேலும், ”செவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான், வெள்ளையா இருக்கவன் வெகுளி போன்ற பஞ்ச் வசனங்கள்மூலம் ஒருவகையான பாசிச மனப்பாங்கு மக்கள் மனதில் உருவாக இந்த சினிமாவும் அடிகோலுகின்றது.
சமுதாயத்தில் இயல்பாகவே உடல் தோற்றத்திற்கு மிகுந்த மதிப்பளிக்கப்படுகின்றது. ஓர் குழந்தை பிறந்தவுடனேயே ஆணா? பெண்ணா? என்று கேட்ட மறுநிமிடமே குழந்தை கறுப்பா? சிவப்பா? என்ற அடுத்த கேள்வி எழுவதுதான் யதார்த்தம் . ஒருவர் கருப்பாகவோ, வெளுப்பாகவோ, அல்லது மாநிறமாகவோ இருப்பது மனித சருமம் பெற்ற இயற்கை.
ஐரோப்பியர் வெளுப்பாகவும், ஆபிரிக்கர் கறுப்பாகவும், ஆசியர்கள் மாநிறம் கொண்டவர்களாகவும் இருப்பதே இயல்பு . ஆனாலும் நாம் ஏன் சிவந்தவர்களை இப்படி பிரம்மித்துப் பார்க்கிறோம்? சிவப்பழகுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அதை அடைவதற்கு இத்தனைப் பிரயத்தனப்படுகிறோம்? நம் நிறத்தையே நமக்குப் பிடிக்காமல் போனது எப்படி?

அமாவாசையில் பொறந்தவனே, கறுப்பி, கருவாச்சி என்றெல்லாம் கேலியும் கிண்டலும் செய்யும் அளவிற்கு எங்கள் நிறம் தாழ்ந்து போனதெப்படி? இந்த மனோலீலையின் சமூக வரலாற்றுக் காரணிகள்தான் என்ன? நம் கடவுள்களாகிய சிவன் முதல் கிருஷ்ணர்வரை கருப்பானவர்களாகவே புராணங்கள் சித்தரிக்கின்றன மகாபாரத நாயகி திரௌபதிகூட கருமை நிறத்தவளே.
இன்றுவரை அழகுக்கு உதாரணமாக கூறப்படும் கிளியோபாட்ரா கறுப்புப் பெண்ணே! அப்போதெல்லாம் குறையாகத் தெரிந்திராத இந்த நிறம் இப்போது மட்டும் எப்படி இரண்டாம்பட்சமானது ?
தமிழர்களை தமிழர்களே ஆண்டபோது நம் கடவுள்கள் முதல் அரசர்கள்வரை எல்லோருமே கறுப்பாக இருந்ததனால் கறுப்பு நிறம் மதிப்பான நிலையில் இருந்தது. அதன் பின் ஆரியர்கள்வருகையோடு தாழ்வு நிலைக்குத் தள்ளப்பட்டு தொடர்ந்துவந்த முகம்மதியர்கள் அவர்கள் பின்வந்த ஐரோப்பிய காலணித்துவம் என்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வெள்ளைத்தோல் மனிதர்களின் ஆளுகை மேலோங்கியது.
இவ்வாறு ஆட்சி அதிகாரமும், ஆன்மிக அதிகாரமும், (பிராமணர்கள், பாதிரியார்கள், இஸ்லாமிய ஞானிகள் ) சிவந்த நிறமுடையவர்களின் கையிலேயே இருந்தது. எனவே சிவந்த நிறம் என்பது அதிகாரத்தின் நிறமாக உயர்ந்த ஆன்மீகத்தின் நிறமாக மேட்டுக்குடியின் நிறமாக அழகு நிறைந்ததாக காட்டப்பட்டது.
கறுப்பு நிறமுடையவர்கள் அழகற்றவர்களாகவும், அவலட்சணமானவர்களாகவும் அதிகாரத்திற்க்குத் தகுதியற்ற அடிமைகளாகவும், இழிவின் சின்னமாகவும் கருத்தப்பட்டனர். கறுப்பர்கள் தாங்களே தங்களைப்பற்றி மட்டமாக நினைத்துக்கொள்ள ஆரம்பிக்க வெண்மையின்மீது அவர்களுக்கு ஓர் பயம் ஏற்பட்டது என்றால் மிகையில்லை. வெண்மையாக இருப்பவன் நேர்மையானவன், புத்திசாலி அழகானவன் என்கிற எண்ணத்தினை வெண்மையாக இருப்பவர்கள் தீர்மானிக்க அதனை கறுப்பர்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள் .
இவ்வாறே பெருவாரியான மக்கள் கூட்டத்தின் மரபுவழி அழகுணர்ச்சி மனிதத் தோலின் நிறத்தைப் பொறுத்து திசை மாற்றம் பெற்றது எனலாம். சருமத்தின் அழகை உண்மையிலேயே நிறம் தீர்மாணிக்கிறதா? முகம் மற்றும் மேனி நிறத்தை வெளுப்பாக்குவதாக கூறிக்கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் கோடிக் கணக்கில் லாபம் கொழிப்பது சிவந்த தேகத்தில் நம்போன்றவர்களுக்கு இருக்கும் அக்கறையினையே எடுத்துக்காட்டுகின்றது.
இந்தத் தாழ்வு மனப்பான்மை நம்மிடம்இருக்கும்வரையில் எதை எப்படி வேண்டுமானாலும் விளம்பரப்படுத்தி பணம் சம்பாதிக்க முடியும் என்ற வியாபார தந்திரத்தை தொடர்ந்தும் பயன்படுத்திக்கொண்டேதான் இருக்கப்போகிறார்கள்.
எழுத்து – ப்ரியா ராமநாதன்
நம்ம நாட்டு சினிமா – ” Bend in the Coffin”
நம்நாட்டு சினிமாவை உலகளவிற்கு கொண்டுசெல்லும் திரைப்படமிது!
உலக சினிமா தளத்திற்கு உள்நாட்டு சினிமாவை கொண்டு சென்று சர்வதேச ரீதியில் திரைப்படத்துறையில் நம் நாட்டின் பெயரை பதிவு செய்ய எடுக்கப்பட்டதே’Bend in the Coffin’ திரைப்படமாகும். இத் திரைப்படமானது அரசியலை எள்ளி நகையாடும் ஒரு நையாண்டி தன்மையுடன் கூடிய ஒரு நகைச்சுவையான திரைப்படமாகும்.
படத்தின் தலைப்பிற்கு ஒத்தாற் போல ஒரு இறுதி ஊர்வலம் அல்லது இறுதி சடங்கை மையமாகக்கொண்ட கருப்பொருளை கொண்டு இத் திரைப்படம் அமைகின்றது. ஒரு தந்தையின் மரணம் மற்றும் அவரது இரண்டு மகன்கள் அதை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார்கள்? அதன் பின் அவர்கள் எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்ற விருவிருப்பான கதைக்களத்தோடு இத் திரைப்படக்கதை நகர்கின்றது.
இத்திரைப்படத்தை பிரபல நாடக ஆசிரியரும் சிறந்த திரைப்பட இயக்குனருமான இளங்கோ ராம் அவர்கள் இயக்கியுள்ளதோடு ஹிரண்யா பெரேரா அவர்கள் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் கௌசல்யா பெர்னாண்டோ, பிரியந்த சிறிகுமார, துசித லக்நாத், சாந்தனி செனவிரத்ன, தில்ஹானி ஏகநாயக்க, சமிலா பீரிஸ், சுலோச்சனா வீரசிங்க, ரஞ்சித் பனாகொட, அலோக காயத்திரி மற்றும் சமன் கோரலகே ஆகியோர் இத்திரைப்படத்தில் பல முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

இளங்கோ ராமின் இயக்கும் இத் திரைப்படத்திற்கு உதவியாளராக திரு.நிரோஷன் எதிரிமான்னே பணியாற்றுகிறார். அத்தோடு ஆடைகள் தயாரிப்பு மற்றும் வடிவமைப்புக்களை திரு. அஜந்தா அழககோன் அவர்களும் தயாரிப்பு முகாமையாளராக மஞ்சுளா பெரேரா அவர்களும் படத்தொகுப்பாளராக ஆதன் சிவானந்தர் அவர்களும் பணியாற்றுகிறார்கள். மேலும் இத்திரைப்படத்தின் ஒப்பணைக்கலைஞராக ராஜித திக்கின்ன அவர்களும் பணியாற்றுகிறார்.
இலங்கைத் திரையுலகை சர்வதேச ரீதியாக கொண்டுசெல்லவேண்டும் என்ற முற்போக்கான சிந்தனையுடன் எடுக்கப்படும் ”Bend in the Coffin’ திரைப்படத்தின் முஹுரத் விழா கடந்த மேமாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்றது. இத் திரைப்பட இயக்குனர் இளங்கோ ராம் மற்றும் தயாரிப்பாளர் ஹிரண்யா பெரேரா உட்பட இத்திரைப்படத்தை சார்ந்த கலைஞர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என அனைவரும் கலந்து இவ் விழாவை சிறப்பித்தனர்.
இதன் போது இயக்குனர் இளங்கோ ராம் அவர்கள் இத் திரைப்படத்தைப் பற்றியும் இலங்கை திரையுலகம் பற்றியும் தம்முடைய கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இத் திரைப்படம் குறித்து அவர் கூறுகையில் ‘படத்தின் தலைப்பின் பொருத்தபாட்டிற்கு ஏற்ப எனது படத்தின் கதைக்களம் ஒரு இறுதிச் சடங்கை மையமாககொண்டமைந்தமையை படத்தில் நீங்கள் எதிர்பார்க்கலாம் என்பதை பற்றிய மேலோட்டமானதொரு பார்வையை இளங்கோ பகிர்ந்தார்.
திரைக்கதை ஒரு தந்தையின் மரணம் மற்றும் அவரது இரண்டு மகன்கள் அதை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதை மையப்படுத்தி அமைகிறது என்று இளங்கோ அவர்கள் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்’ இந்தியாவில் உள்ள பெரிய திரைப்பட நிறுவனங்களும் இந்தப் படத்தை இலங்கைக்கு பதிலாக இந்தியாவிலேயே தயாரிக்க விரும்பிய நிலையில் இதனை நிறைவேற்றவேண்டுமென்ற இந்தத் திட்டம் குறித்து இந்தியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், அசல் படத்தை இலங்கைப் படமாகவேத் தயாரித்து அதன் பின்னர் பிற நாடுகளில் ரீமேக் செய்ய வேண்டும் என்று நாங்கள் திடமாக முடிவு செய்தோம். இம் முடிவும் நாமெடுக்கும் இந்த முயற்சியும் நிச்சயமாக இலங்கை சினிமா திரையுலகிற்கு ஒரு படிகல்லாக அமையும் என்பதில் ஐயமில்லை. மேலும் இந்திய மற்றும் பிற நாட்டுத் திரைப்படங்களை நம் நாட்டில் ரீமேக் செய்து அல்லது டப்பிங் செய்து வெளியிடும் வழக்கத்தை மாற்றவும் இது ஒரு சிறுமுயற்சியாக அமையும் என்பது என்னுடைய கருத்து’ என்று அவர் கூறினார்.
இளங்கோ ராமின் இத் திரைப்படம் கொரியாவின் பூசன் இல் உள்ள Asian Content and Film Market மற்றும் பல சர்வதேச விழாக்களிலும் வெளியிடப்பட்டுள்ளமை . இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.இந்த படம் அரசியல் நையாண்டியான கதைக்களமாக இருந்தாலும், இளங்கோ தனது திரைப்படங்கள் மூலம் செய்திகளை வெளியிடுவதில் நம்பிக்கை இல்லையென்கிறார். ‘ஒரு நல்ல படத்திற்கு உண்மையில் ஒரு செய்தி தேவையில்லை’ என்று அவர் தன்னுடைய எண்ணத்தை பதிவு செய்தார்.
ஒரு நல்ல படம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி என்றும் சமூகத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதையே ஒரு திரைப்படம் சித்தரிக்கிறது என்றும் அவர் விளக்கினார். மேலும் எனது இந்த திரைப்படத்திற்கு ‘இது ஒரு டார்க் காமெடி’ என்று முத்திரை குத்தப்பட்டாலும் கூட எனது திரைப்படங்களைப் பார்க்கும்போது செய்தியை நீங்களே குறிப்பிட வேண்டும்’ என்று அவர் மேலும் கூறினார்.
இந்த படத்தை விட சற்று சீரியஸான ஒரு உள்ளடக்கத்தையுடைய மற்றொரு படத்தில் இயக்குனர் இளங்கோ அவர்கள் மிக நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறார். இருப்பினும் ‘Bend in the Coffin” நகைச்சுவை கலந்த படத்திற்கான உத்வேகம் அவரைத் தூண்டியதால் இத் திரைப்படத்திற்காக இலகுவான திட்டமாக பணியாற்றத் தொடங்கி நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அந்த குறிப்பிட்ட படத்தின் முடிவிலிருந்து விலகினார் என்றும் அவர் தெரிவித்தார்.
‘நீங்கள் ஒரு செய்தியை பரிமாற்ற முயற்சிக்கிறீர்களா என்று என்னிடம் நீங்கள் கேட்டால் இதற்கு என்னுடைய பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். அதே நேரத்தில் எந்தவொரு படமும் சில அரசியல் செய்திகளை வெளிப்படுத்த வேண்டும் என்று நான் நம்புகிறேன். என்னுடைய படத்திலும் அதுதொடர்பில் நிறைய விடயங்கள் அடங்கியிருக்கும்’ என்றார் இயக்குனர் இளங்கோ.
மேலும் இது பற்றி அவர் கூறுகையில் ‘பெரும்பாலான இலங்கைத் திரைப்படங்கள், இந்தியத் திரைப்படங்களால் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய யசவ hழரளந் அல்லது உழஅஅநசஉயைட கடைஅள ஆகவே காணப்படுகின்றன. ஆனால் இத்திரைப்படம் யசவ hழரளந் மற்றும் உழஅஅநசஉயைட கடைஅள ஆகிய இரண்டிற்குமிடையே ஆரோக்கியமான சமநிலையை ஏற்படுத்தும் திரைப்படங்களில் ஒன்றாகவும் திகழும்.இதன் காரணமாக, இது மக்கள் கூட்டத்தை கவர்ந்திழுக்கும் ஒரு திரைப்படமாகயிருக்கும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்’ என்று நம்பிக்கையோடு கூறினார்.
‘வெளிவரவிருக்கும் ‘Bend in the Coffin’ திரைப்படத்தைப் பற்றி பேசும்போது ‘இந்தப் படம் மக்களுக்கானது. உண்மையில் இந்த படத்தை சர்வதேச தளத்திற்காக உருவாக்கி ‘உலக சமூகத்துக்கானவொரு படம்’ என்ற முத்திரையை பதிவுசெய்து உள்நாட்டு சினிமாவை உலகளவில் கொண்டு செல்லமுடியும் என்பது என்னுடைய மற்றும் எமது இயக்குனர் இளங்கோ ராம் அவர்களுடைய நம்பிக்கையும் கூட. என்று ‘Bend in the Coffin’ திரைப்படத் தயாரிப்பாளர் ஹிரண்யா பெரேரா அவர்கள் கருத்துதெரிவித்தார்.
‘எமது இந்த படம் ஸ்கிரிப்ட் கட்டத்தில் (script level)மட்டுமே இருந்தபோதே பல ஐரோப்பிய தயாரிப்பாளர்கள் ஒன்று கூடும் இணை தயாரிப்பு நிறுவனமான இந்தியா கோவாவில் உள்ள பிலிம் பசாருக்கும் (Film Bazaar) விண்ணப்பித்திருந்தார்கள்.
அவர்கள் விண்ணப்பித்த அந்த ஆண்டில் ஆயிரம் விண்ணப்பதாரர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 படத்திட்டங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது என்று அவர் கூறினார்.அந்த ஆண்டில் எங்களுடைய படத்திட்டம் மட்டுமே இலங்கைத் திட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. உலகம் முழுவதிலுமிருந்து தயாரிப்பாளர்கள், இணை தயாரிப்பாளர்கள் மற்றும் நிதியாளர்களுக்கு படத்தை வழங்கினர்.
நாங்கள் இந்தியாவில் படத்தை எடுத்து இந்தியில் உருவாக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இங்கே பல பெரிய இந்திய தயாரிப்பு நிறுவனங்கள் எமது குழுவுடன் கைகோர்க்கத் தயாராக இருந்தன. அந்த வாய்ப்பைபற்றி நாங்கள் சற்று சிந்திக்கத்தொடங்கினோம் ஆனாலும் இத் திரைப்படத்தை இலங்கைக்காக உருவாக்கியதால், இது ஒரு இலங்கைத் படத் திட்டமாக இருக்க வேண்டும் என்பதையே நாம் விரும்புகிறோம்.
நம் நாட்டில் எப்போதும் இந்திய அல்லது கொரிய படங்களையே ரீமேக் செய்கிறோம் என்பதையும், அதைத் தவிர்க்க விரும்புகிறோம் என்றும் நாம் எமது கருத்தை அங்கே முன்வைத்தோம். ஆகையால் இந்த வாய்ப்பை பெற்றுக்கொள்ள தயங்கிய நாங்கள் இயக்குனர் இளங்கோவின் பரம்பரைச் சொத்தாக கருதப்படும் தாய்மொழி தமிழிலேயே படத்தைத் தயாரிக்க சமரசமாக முன்வந்தோம்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே படத்தின் தயாரிப்பைத் தொடங்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் நம் நாடு எதிர்கொள்ளும் தற்போதைய நெருக்கடி காரணமாக படப்பிடிப்பு பிற்போடப்பட்டது’ என்றும் அவர் தெரிவித்தார்.
என்றார் ஹிரண்யா.
ஹிரண்யா அவர்கள் கூறியதற்கமைய அவர்களின் திட்டம் வெற்றியடைய வேண்டுமானால் மற்ற ஆசிய நாடுகளில் ரீமேக் செய்யப்படும் இலங்கைத் திரையுலகில் முதல் படமாக இத் திரைப்படம் அமையும் என்று அர்த்தமாகிறது. இது நம் நாட்டிற்கு ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று அவர் நினைக்கிறார். இதுகுறித்து இளங்கோ கூறுகையில் இப்படத்தை இந்தியாவில் தமிழ் அல்லது மலையாளத்தில் ரீமேக் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும், அதனால் ஏற்கனவே இதற்கான படிக்கட்டுகள் போடப்பட்டுவிட்டதாகவும் தெரிய வருகிறது.
இந்த திரைப்படம் அடுத்த சில மாதங்களில் பாணந்துறையில் படமாக்கப்பட உள்ளது. இதன் 80 சதவீத படப்பிடிப்பானது பழைய ‘வலவுவா’ (காலனித்துவ வில்லாவில்) இல் படமாக்கப்பட உள்ளது. ‘வலவுவா இலங்கைக்கு மிகவும் தனித்துவமானதொரு இடமாக கருதப்படுகிறது. மேலும் இலங்கையின் பாரம்பரிய கட்டிடக்கலைகளைக் கொண்டு அமையப்பெற்றது.
நமது படத்தை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்லமுடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நம் நாட்டின் கட்டிடக்கலை மற்றும் கட்டமைப்பு எவ்வளவு வளமானது என்பதை உலகளவில் பார்வையாளர்கள் புரிந்துகொள்வார்கள் என்பது தயாரிப்பாளர் ஹிரண்யாவின் கருத்தாகும்.
ஹிரண்யா மேலும் கூறுகையில், ‘இதற்கு கூடுதல் ஒத்துழைப்பை வழங்கி இதற்கு உதவியாக இருந்த படக்குழுவினருக்கும், நடிகர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் உண்மையான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் காரணம் அவர்கள் இந்தக் கதையை நம் நாட்டில் எடுக்கவேண்டுமென்ற ஆர்வத்தை எங்களுக்குள் தூண்டினர்.
நம் நாட்டிலேயே இயக்கி தயாரிக்கப்பட்ட படமாக இதனை வெளியிட வேண்டும் என்பதற்கு அவர்கள் பெரும் ஆதரவை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். படக்குழுவில் உள்ள அனைவரும் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். மேலும் அனைத்து விடயங்களையும் புரிந்துகொண்டு இணக்கமாக இருக்கிறார்கள். நடிகர்களுக்கு மத்தியில் நட்புறவும் புரிதலும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, படம் சந்தேகத்திற்கு இடமின்றி நினைத்ததை விட நன்றாகவே வெளிவரும் என்பதை நாம் நம்புகிறோம்’ என்றார்.
ஒரு தயாரிப்பாளராக எங்கள் திரையுலகம் உலகளாவிய தளத்திற்கு கொண்டு செல்லப்படும் என்ற நம்பிக்கையை பற்றி தயாரிப்பாளர் ஹிரண்யா கூறியபோது ‘ஆம்,’ என்று ஆர்வத்தோடு பதில் கூற ஆரம்பித்தார். உள்நாட்டு திரைப்படங்கள் இலங்கையின் கலாச்சாரம் மற்றும் மக்களைப் பற்றி பேசுகின்றன. மேலும் உலகளாவிய ரீதியில் கொண்டுசெல்லக்கூடிய பல கதைகள் எங்களிடம் உள்ளன என்று விளக்கினார்.
உலகளவில் எடுத்துச்செல்லுமளவிற்கு அதிக சாத்தியமுள்ள திரைப்படம் இது. அதனால்தான் படத்தை ரீமேக் செய்ய விரும்பும் பிற நாடுகளில் இருந்து பல ஆர்வமுள்ள தரப்பினர் உள்ளனர். என்று அவர்கள் கூறினார்.
அத்தோடு சர்வதேச பார்வையாளர்களை சென்றடைந்த மற்ற உள்நாட்டு திரைப்படங்களும் உள்ளன என்பதை அவர் ஒப்புக்கொண்டாலும் ‘Bend in the Coffin’திரைப்படம் நம் நாட்டு திரையுலகை உலகளவில் கொண்டு செல்வதற்கான முக்கிய கட்டமாக இருக்கும் என்கிறார் ஹிரண்யா.
கொரியாவின் parasite மற்றும் Squid Game போன்ற திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் வெளியான பிறகு தென் கொரியாவின் திரைப்படத் துறை எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ‘இவை வெளியிடப்பட்டதன் பின்னர் கொரிய திரைப்படத் துறையில் கவனம் செலுத்தப்பட்டு பின்னர் அது ஆசிய திரைப்படத் துறையில் விரிவடைந்தது.தென் கொரியா எங்களைப் போன்ற சிறிய நாடுகளுக்கும் இதற்காக வழி வகுத்தது.’ என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் பல திறமையான திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரைக்கதை எழுத்தாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான தளம் கிடைக்காததால், இந்தப் படத்தின் வெளியீட்டின் மூலம், உலகளவில் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் தளத்தை அவர்களுக்கு அமைத்துக்கொடுக்கிறோம் என்பதும் தயாரிப்பாளர் ஹிரண்யாவின் கருத்து.
இது பற்றி மேலும் தெரிவிக்க இயக்குனர் இளங்கோ அவர்கள் தன்னிடம் இன்னும் சில திட்டங்கள் உள்ளன.இருப்பினும் அவற்றையெல்லாம் தள்ளி போட்டுவிட்டு, தனது முழு படைப்பாற்றலையும் Bend in the Coffin’ திரைப்படத்திற்காக செலவிடுகிறார் என்றும் அது முடிந்ததும், அவர் ஒளிப்பதிவாளராக ஒரு திரைப்படத்தில் பணியாற்றுவதற்காக இந்தியாவுக்கு செல்லவிருக்கிறார் என்றும் பகிர்ந்துக்கொண்டார்.
படக்குழு பற்றி..
திரைக்கதை எழுத்தாளர் இயக்குனர் மற்றும் DOP – இளங்கோ ராம்
நிர்வாக தயாரிப்பாளர் – ஹிரண்யா பெரேரா
தயாரிப்பாளர்கள்: ஹிரண்ய பெரேரா, நவநீத நாச்சிமுத்து, பொன் உமாபதி
உதவி இயக்குனர் – நிரோஷன் எதிரிமான்னே
தயாரிப்பு வடிவமைப்பாளர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்- அஜந்தா அழககோன்
தயாரிப்பு முகாமையாளர் – மஞ்சுளா பெரேரா
எடிட்டர் – ஆதன் சிவானந்தர்
ஒப்பனை – ராஜிதா திக்கின்னா
நடிகர்கள் – கௌசல்யா பெர்னாண்டோ, பிரியந்த சிறிகுமார, துசித லக்னத், சாந்தனி செனவிரத்ன, தில்ஹானி ஏகநாயக்க, சமிலா பீரிஸ், சுலோச்சனா வீரசிங்க, ரஞ்சித் பனாகொட, அலோகா காயத்ரி, சமன் கோரலகே
சமூக ஊடகங்களால் பெண்களுக்கு ஆபத்தா!
பெண்களே உஷார்
சமூக வலைத்தளங்களின் வருகையின் பின்னர் பெண்ணானவள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் தாக்கமடையும் நிலை மலிவடைந்துள்ளது. உலகளாவிய ரீதியலில் பெரும்பாலான பெண்கள் இத்தகைய நெருக்கடியான நிலைமையை எதிர்கொள்கிறார்கள்.
சமூகவலைத்தளங்களில் பெண்கள் தமது அன்றாட வாழ்க்கையில் பல்வேறு வகையான சவால்களை எதிர்நோக்கும் நிலைமை காணப்படுகின்றது. ஆணும் பெண்ணும் சமம் என்னும் கருத்துநிலை காணப்பட்டாலும் உண்மையில் தாம் பெண்ணாக பிறந்த காரணத்தினால் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற நிலைமை காணப்படுகின்றது.

முன்னைய காலங்களில் குறிப்பாகஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு பெண் என்பவள் சமையல் செய்பவளாகவும் குழந்தை வளர்ப்பவளாகவும் சமூகத்தின் கண்ணோட்டம் மேலோங்கியிருந்தது. அத்தனை தடைகளைகளையும் தகர்த்தெறிந்து ஆணுக்கு பெண் எந்த வகையிலும் சளைத்தவள் இல்லை என்று சாதித்து காட்டிய இன்றைய காலத்திலும் பெண்கள் தமக்கான உரிமைகளை தக்கவைத்து கொள்வதில் போராடுகின்றனர்.

விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சியில் விளைவாக உருவாகிய தொலைபேசி சமூகவலைத்தளங்களை இலகுவில் நுகர்வதற்கு வித்திட்டது. பால்நிலை வயது வேறுபாடின்றி எல்லோராலும் நுகரக்கூடிய நிலைமை இருப்பினும் ஒப்பீட்டு ரீதியில் பெண்களிற்கான சுதந்திரம் முழுமையாக கிடைக்கின்றதா என்பது கேள்விக்குறியே!
சமூகவலைத்தளங்களில் பெண்கள் தமக்கான வாழ்கைத்துணையினை தெரிவு செய்யும் நிலைமை தற்காலத்தில் நிலவி வருகின்றது. முகநூல் மோகம் தற்போது இளையோரிடத்தே ரெண்டிங்காக பரவி வருகிறது. தமக்கு அறிமுகமே இல்லாத நபர்களை நம்பி காதல் என்னும் வலையில் விழுந்து தமது பெற்றோரையும் இழந்து வாழ்க்கையில் ஏமாற்றமடைந்து இறுதியில் தற்கொலைக்குச் செல்கின்றனர்.

ரேட்டிங் என்னும் பாழாப்போன வெளிநாட்டு கலாசார ஊடுருவலால் பெரும்பாலான பெண்கள் தமது மானத்தை இழந்து நிர்க்கதியாகிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளால் அப்பாவிப்பெண்களின் வாழ்க்கை சீரழிந்து மனஉழைச்சல் ஏற்படவும் வழிசமைக்கிறது .
உண்மைக்கும் போலிக்குமான வேறுபாட்டை விளங்கி கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர் என்பது வேதனையே. காதல் என்னும் பெயரில் தமது இச்சைகளை அடைந்து கொள்ள பெண்களின் புகைப்படங்களை வைத்து மிரட்டுவது கூட இன்று மலிந்து கிடக்கிறது.
எங்கெல்லாம் பெண் இச்சைக்கு இணங்கா விடுகிறாளோ அங்கெல்லாம் அவளின் அந்தரங்கம் அம்பலமாக்கப் படுகிறது. காட்டுமிராண்டித்தனமான பழிவாங்குதலால்; அவமானம் தாங்க முடியாமல் எத்தனையோ பெண்கள் தற்கொலை கூட செய்துள்ளார்கள் என்றால் நாம் இருப்பது மனித பூமியிலா என்கின்ற எண்ணமும் இழையோடத்தான் செய்கின்றது.

பெண்எனும் அடிப்படையில் ஊடகத்தில் பணிபுரியும் பிரமுகர்கள் பாடகர்கள் அரசியல் ஆளுமைகள் எனப் பலரும் இதற்கு விதிவிலக்கல்ல. சமூகவலைத்தளங்களில் பெண்கள் ஆபத்துக்களை தான் பெரிதும் எதிர்நோக்குகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையே.தமது விருப்பத்திற்கு புகைப்படங்களை பதிவிட முடியாத நிலைமையே பெரிதும் காணப்படுகின்றது
காம வெறிகொண்ட காடையர்கள் பெண்களின் புகைப்படங்களை மோபிஃங் செய்து பலரின் வாழ்வினையே கேள்விக் குறியாக்கியுள்ளனர். சிலர் இதற்கு இலக்காகி தற்கொலை புரிந்திருப்பினும் பலர் இதுவும் கடந்து போகுமென வீறுநடை போடத்தான் செய்கிறார்கள்.
முகப்புத்தகப்பாவனை பெண்கள் தமக்கு ஓரளவு பாதுகாப்பான முறையில் பயன்படுத்த அது தொடர்பான சரியான அறிவு பெண்களிற்கு அவசியம் இருக்க வேண்டும். தனது திறைமைக்கான தளமாகவே பார்க்க வேண்டுமே தவிர முகம் தெரியாத நபர்களிடம் தேவையற்ற உரையாடல்களை முற்றாக தவிர்த்துக் கொள்வது கட்டாயமானது. தமது புகைப்படங்கள் காணொளிகளை மற்றவர்கள் திருடுவதை தவிர்த்து லொக்கினை போட்டு வைத்துக் கொள்ளலாம்.

சமூகவலைத்தளங்களை நுகரும் பெண்கள் அவதானமாக இருக்க வேண்டும்.தமது தனிப்பட்ட விடயங்கள் புகைப்படங்களை பதிவிடும் போது அவற்றினை தெளிவாக கையாளும் அறிவு கட்டாயம் இருக்க வேண்டும். ‘வெளுத்தது எல்லாம் பால் இல்லை’ என்பதை முதலில் உணரவேண்டும்தம்மை சுற்றியிருப்பவர்கள் எல்லோருமே நல்லவர்களல்ல கயவர்கள் வாழும் பூமியிது
ஒரு லைக்கிற்கு ஆசைப்பட்டு எதிர்கால வாழ்க்கையை தொலைக்காமல் விழிப்பாக இருக்க வேண்டும். சமூகவலைத்தளங்களில் சாதாரண பெண்களில் இருந்து அரசியலில் பிரமுகர்களைக் கூட பெண் எனும் அடிப்படையில் அவர்களின் நடத்தைகளை விமர்சித்து பொய்யை கூட நம்ப வைத்து உண்மையாக்கும் நிலையே உலகிலுள்ளது.
இதையும் எதிர்கொண்டு விதிவிலக்காக சில பெண்கள் தமது கருத்துக்ளை வெளியிடுகின்றனர்.இருப்பினும் அனேகமான பெண்கள் பின்வாங்கும் நிலைமையே அதிகம் காணப்படுகின்றது.ஆண்களை எதிர்த்து சமூகவலைத்தளங்களில் போராட முடியாது பெண்கள் முடங்கிக்கிடக்கின்றனர். பெண்களை வசைபாடுவது பகிடிகள் தவறான சித்தரிப்புகள் செய்வதற்கு சமூகவலைத்தளங்களில் பஞ்சமேயில்லை.
பெண்வர்க்கத்தை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் இவர்களின் எண்ணம் அருவருப்பானது. ஆசை காட்டி பெண்களின் ஒட்டுமொத்த வாழ்வினையும் சின்னாபின்னமாக்கும் ஆயுதமாக தற்போது சமூகவலைத்தளங்களை தாராளமாக பயன்படுத்தி தாம் நினைத்ததை இலகுவில் அடைந்து விடுகின்றனர்.
பெண்களின் உணர்வுகளில் மனரீதியான தாக்கங்களை ஏற்படுத்துகின்றனர் என்பது யாரும் மறுக்கமுடியாது. பெண்கள் பற்றிய கொச்சையான சொற்களை பயன்படுத்தி குளிர்காய்ந்து அதை இன்பமாக கொள்ளும் அருவருப்பான மனநிலையுடன் ஆண்கள் இருக்கின்றனர்.

உலகம் மிகவும் சுருங்கிவிட்டது விரல் நுனியில் தொலைபேசி ஊடாக சகல வசதிகளையும் பெற்றுக்கொள்ளும் நிலைமை காணப்படுகின்றது. தற்காலத்தில் பள்ளி செல்லும் மாணவன் தொடக்கம் பல்லுப்போன கிழவன் வரை சமூகவலைத்தளங்களின் பாவனை தவிர்க்க முடியாத ஒன்றாக வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்துள்ளது.
என்பது யாராலும் மறுக்கமுடியாது. ஆசைக்கு வயதில்லையே.தமது ஆசைகளை சமூகவலைத்தளங்களில் நிறைவேற்ற பெண்களை பகடைக்காயாக பயன்படுத்துகிறார்கள். சமூகவலைத்தளங்களில் இத்தகைய பிற்போக்கான எண்ணத்துடன் பெண்களை மிரட்டி அச்சுறுத்தி பணம்பறித்து அவர்களின் அந்தரங்க விடயங்கள் கவர்ச்சியை வெளியிடும் ஆண்களின் செயல்கள் வெட்கப்பட வேண்டியவையே!
பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்ராகிராம் ,ரிக்ரொக்கில் எந்தநேரமும் active வாக இருக்கும் பெண்களே இதற்கு இலக்கு வைக்கப்படுகிறார்கள். தமது திறமைகளை வெளிப்படுத்தி தமக்கான ஒரு அடையாளத்தை தக்கவைத்துக் கொள்ள அடித்தளமாக சமூக வலைத்தளங்களில் தங்கியுள்ள பெண்களிற்கு அவர்களின் தனிப்பட்ட புகைப்படங்களை hacking செய்து அவர்களிற்கு முட்டுக்கட்டை போட்டு அவர்களின் நடத்தைகளை பகிரங்கமாக கேவலப்படுத்தும் நிலைமை கண்டிக்கத்தக்கது.
இவ்வாறான நிலைமை மாற்றமடைய வேண்டும் இவர்களிற்கு தண்டனை வழங்க சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். பொழுதுபோக்கு என்னும் பெயரில் மனச்சாட்சியற்ற இழிவான செயல்களை செய்யும் இத்தகையோர் சமூகத்தில் வாழத் தகுதியற்றவர்கள். பெண்களிற்கான பாதுகாப்பு என்பது பறிக்கப்படுவதோடு அவர்களின் உரிமைகளும் ஒட்டுமொத்தமாகத் தடுக்கப்படுகின்றது.
யாரைத்தான் நம்புவது? கூடவே இருந்து குழிபறிக்கும் குள்ளநரிக்கூட்டத்தில் சுதந்திரமாக நடமாடுவது என்பதே சவாலானது. தடைகளை தகர்த்தெறிந்து அவமானங்களை தாண்டிதான் ஒவ்வொரு பெண்ணும் வாழவேண்டிய நிலைமை. பெண்உரிமை என்பது வெறும் பேச்சளவில் மட்டும் தானா! பெண்கள் ஆண்களால் சீண்டப்படுவதற்கு முடிவே இல்லையா! யுகங்கள் கடந்தும் இது தொடரத்தான் போகிறதா.
பெண்ணவள் தன் பாதுகாப்பை அவளாக உறுதிப்படுத்தாவரை இதுவொரு முடிவற்ற தொடர்கதைதான்!!!!!!
இஞ்சியின் மருத்துவ குணம்!
இஞ்சியில் இத்தனை மருத்துவ குணங்களா?
இஞ்சியின் சுவையை ஏற்படுத்துவதற்கு இந்திய, சீன உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்குப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது. இது ஒரு மருத்துவ குணமுடைய மூலிகையாகவும் திகழ்கின்றது.
இஞ்சுதல் என்றால் நீரை அல்லது தண்ணீரை உள்ளிழுத்தல் மற்றும் உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயரை பெற்றது.
உலர்ந்த இஞ்சியே ‘சுக்கு’ எனவும் சில பகுதிகளில் வேர்க் கொம்பு என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களையும், குணங்களையும் கொண்டுள்ளது. ‘சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை’ என்று இதன் மேன்மையை பெறுமதி சேர்க்கலாம். சுக்குக் கசாயம் மிக நல்ல வலி நீக்கும் மருந்தாகும். இது ஓராண்டுப் பயிராகவும் காணப்படுகின்றது.
இந்த இஞ்சியின் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? தினமும் அதிகாலையில் எழுந்தவுடன் ஒரு சிறிய இஞ்சித்துண்டு அல்லது அதன் சாற்றை பிழிந்து குடிப்பதனால் சர்க்கரை வியாதி குறைவதோடு பசி உணர்வு இல்லாதவர்களுக்கும் கூட பசி உணர்வை சீக்கிரத்தில் உண்டு பண்ணும். இஞ்சியில் நாம் அறிந்திராத எத்தனையோ அற்புத குணங்கள் இருக்கின்றன அவற்றை பற்றி நாம் அறிந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றனவும் அடங்கியிருக்கின்றன. நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடனும், சீராக்கவும் உதவுகின்றது. இவற்றில் அடங்கியுள்ள வைட்டமின் சி மற்றும் ஏ தங்களின் கூந்தலுக்கும் இயற்கையான பொலிவைத் தருவதோடு, பொடுகையையும் முற்றாக நீக்கி, முடி வளர்ச்சியைத் தூண்டும் தன்மையைக் கொண்டிருக்கிறது.
ஆயுள் நீடிப்பதையும் இஞ்சியின் மூலம் எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். அதாவது, இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காயச் சாறு இந்த மூன்றையும் ஒரே வேளையில் அரைத்து சாப்பிடுவதாலும் எம்மால் வாழக்கூடிய வாழ்நாட்களை அதிகப்படுத்திக் கொள்ள முடியும். அரைக் கரண்டி வீதம் அவற்றை தினமும் சாப்பிடுவதால் தங்களின் அயுள் நீடிப்பதோடு இரைப்பும், இருமலும் குணமாகும்.
வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குவதற்கு இஞ்சி சாற்றை பாலில் கரைத்துக் குடிப்பதாலும் தங்களது வயிறு சம்மந்தப்பட்ட வலிகளும், நோய்களும் குணமடைகின்றது. மேலும், மலச்சிக்கல், மார்பு வலி, களைப்பு என்பன நீங்குவதற்கும் இஞ்சி சாற்றை அல்லது இஞ்சியை துவையல் செய்து அல்லது பச்சடி செய்து சாப்பிடுவதன் மூலம் தமது நோய்களை குணமாக்கி உடலுக்கு மிருதுவான தன்மையையும் ஏற்படுத்திக் கொள்ள முடிகின்றது. இவற்றினால் உடம்பு இளைக்க கூடிய சாத்தியங்களும் உண்டு.
தலைவலி அல்லது தலை சம்பந்தப்பட்ட வலிகள் உள்ளவர்களுக்கு இஞ்சியை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து சிறிது தண்ணீர் இட்டு நெற்றியில் வைத்து தடவினால் நல்ல பிரதிபலன் கிட்டும்.
நெஞ்சுப் பகுதியில் தேங்கியுள்ள சளி நீக்குவதற்கும் நல்ல நிவாரணமும் இஞ்சியின் மூலம் கிடைக்கின்றது. சிறிது இஞ்சியை நீரில் இடித்துப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வருவதாலும் நெஞ்சுப்பகுதியில் இருக்கும் சளி போன்றவற்றை அகற்றுகின்றது.
இஞ்சியில் எமக்குத் தெரியாத எத்தனையோ ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் காணப்படுகின்றது. புற்றுநோய் போன்ற வியாதிகளை தடுக்கக் கூடிய அளவுக்கு இஞ்சியில் ஆற்றல் உள்ளது. இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் செரிமனான பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கின்றது.
இஞ்சி தம் உணவுகளில் பயன்படுத்தக்கூடிய ஒரு மசாலா பொருட்களாகவும் காணப்படுகின்றது. இஞ்சி எத்தனையோ சுவையில் தமது நாக்கை புரள வைக்கின்றது. சமையலுக்குப் பயன்படுத்தக் கூடிய இஞ்சியின் அளவு குறைவாக இருப்பது நன்று. ஏனென்றால் அவற்றை அதிகமாக பயன்படுத்தினால் பக்க விளைவுகளை நாம் எதிர்பார்க்காத விதத்தில் ஏற்படக்கூடும். இதனாலேயே ஒவ்வொருவரும் சமைக்கின்ற போது இஞ்சியின் அளவை சிறிதாகவே பயன்படுத்துகின்றனர். இதில் இவ்வாறான மருத்துவ குணங்கள் இருப்பதால் இவற்றை மாத்திரை அளவில் கூட பயன்படுத்தி வருகின்றனர்.
இஞ்சியானது தமது உடலில் காணப்படும் அரிப்பு மற்றும் அழற்சி தன்மைகளை போக்கின்றது. மேலும், தம் உடம்பை மிருதுவான தன்மையில் வைத்துக் கொள்ளவும், நோய் வியாதிகளை போக்கக் கூடிய ஒன்றாகவும் இஞ்சியின் மருத்துவ குணம் காணப்படுகின்றது. இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கும் ஒரு ஆக்ஸிஜனேற்றயாகும். இஞ்சி புற்றுநோயை குறைக்கும் ஆற்றலை கொண்டது.
பல்வலிகள் இருக்கும் போது இஞ்சித் துண்டை சிறிய துண்டுகளாக வெட்டி அதன் துண்டுகளை எடுத்து மசாஜ் செய்வதன் மூலமும் அந்த நிவாரணத்தை போக்கிக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாது நீரில் இஞ்சியை தட்டிப் போட்டு நன்கு கொதிக்க வைப்பதன் மூலமும் அந்த நீரினால் வாயைக் கொப்பளிப்பதன் மூலம் பல்வலியை போக்கிக் கொள்ளலாம்.
இஞ்சியில் உள்ள ‘ஜிஞ்சரால்’ எனப்படும் பொருள் தசை மற்றும் மூட்டு வலிகளுக்கு நல்ல பலனை வழங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. உடற்பயிற்சியின் போது ஏற்படும் மூட்டுவலி, சுளுக்குப் பிடிப்பு மற்றும் தசைவலி போன்றவற்றைக் குறைக்க இஞ்சி உதவுகிறது. மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு உண்டாகும் வலியை குறைக்கவும் இஞ்சி உதவுகிறது. மேலும், இஞ்சி சாறானது மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்வதோடு, அது மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் தன்மையையும் கொண்டுள்ளது.
இஞ்சியானது வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படுவதை தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் காலையில் எழுந்தவுடன் ஏற்படுகின்ற சோர்வினையும் நிவர்த்தி செய்கின்றது. இஞ்சியானது ஒரு நிவாரண பொருளாகவே இருக்கின்றது. இது யாருக்கு எத்தனை பேருக்கு தெரியும் என்பது கேள்விக்குறியான ஓர் விடயமே.
வயிற்றில் சிறு குடல் பாதிப்பு மற்றும் அல்சர் போன்ற நோய் உள்ளவர்கள் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
இஞ்சிக்கு உஷ்ணப்படுத்தும் குணம் உண்டு என்றாலும் கபம், வாதம், சிலேத்துமம் போக்க உதவுகின்றது. நோய்களால் பாதிக்கப்பட்டு, அதற்கு மருந்துகளை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது இஞ்சி தேநீரைக் குடிக்கக் கூடாது. ஏனெனில் அது மருந்துகளுடன் வினைபுரிந்து பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றது.
இஞ்சி கல்லீரலை சுத்தப்படுத்துவதோடு, ஞாபகசக்தியை குணப்படுத்தும் ஆற்றலும் இஞ்சியில் அதிகமாக காணப்படுகின்றது. உடலில் சேரும் கிருமிகளை அழிக்கக் கூடிய ஆற்றல் தன்மையும் இஞ்சிக்கு உண்டு.
இவ்வாறான ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் இஞ்சியின் சுவையை அறிந்தவர்கள் அதன் மருத்துவ குணங்களையும் அறியாமல் விடுவது என்பது பெரியதொரு இழப்பாகும். ஆகவே, அவற்றின் குணத்தையும், சுவையையும் அறிந்து அளந்து பயன்படுத்துவோம்.
எம்.எஸ்.எம். மும்தாஸ்
புதிய அரசியலமைப்பில் மொழி உரிமைகள் உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியம்.
இலங்கையினுடைய அரசியலமைப்பு வரலாறு என்பது 1833 ஆம் ஆண்டு கோல்புரூக் கமரன் சீர்திருத்தத்துடன் அரம்பமாகின்றது. குறித்த அரசியலமைப்பில் ஆங்கிலம் அரச கரும மொழியாக பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் அரச கரும மொழியாக ஆங்கிலம் இருக்கும் நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் மேலோங்கியது. டொனமூர் சீர்திருத்தத்தின் ஊடாக சிங்களம் மற்றும் தமிழ் அரசகரும மொழியாக பயன்படுத்த முடியும் என்று சொல்லப்பட்டபோதும் அது பாரிய அளவில் நடைமுறையில் இருக்கவில்லை.
1948 இல் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் சிங்கள மொழி மற்றும் பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோஷங்கள் மேலோங்கின. எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி தனியான அரசியல் பாதை ஒன்றில் பயணிக்கும்போது சுதேச வாதம் என்ற ஒரு தனிப்பட்ட கொள்கையை அவர் முன்னெடுத்து வந்தார். அதன் அடிப்படையில் சிங்களத்தை மட்டும் அரசகரும மொழியாகக்கொண்ட ஒரு நாட்டினை தான் உருவாக்கவுள்ளதாக தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சி பீடமேறிய அவர் 1956 இல் தனிச்சிங்களச் சட்டம் என்றவொரு சட்டத்தை கொண்டு வந்தார்.
இதில் இருந்துதான் இலங்கையினுடைய இனப்பிரச்சினை ஆரம்பித்தது. இலங்கையினுடைய இனப்பிரச்சினைகளுக்கான காரணம் எது என்று தேடும்போது அதன் ஆணி வேராக மொழி தொடர்பான பிரச்சினைதான் இருக்கிறது. இலங்கையினுடைய சிறுபான்மையினராக உள்ள தமிழர்களின் மொழி உரிமைகள் இதன் மூலம் மறுக்கப்பட்டது. அப்போது அரச சேவைகளில் சிங்களமே பயன்பாட்டில் இருந்தது. அரசியலமைப்பு ரீதியாகவும் இந்தச்சட்டம் வலுப்பெற்றதின் விளைவினால் தமிழ் மொழிக்கான சமவுரிமைப் போராட்டம் வலுப்பெறத் தொடங்கியது.
ஆயுதப் போராட்டங்கள் மற்றும் ஆயுதங்களற்ற அரசியல் போராட்டங்கள் என்பவற்றின் விளைவாக யாப்பின் பதிமூன்றாவது சீர்திருத்தத்தின் பதினெட்டாவது சரத்தில் சிங்களம் அரச கரும மொழியாக இருக்கும் என்றும் அதற்கு அடுத்த வரியில் தமிழும் அரச கரும மொழியாக இருக்கும் என்றும் பிரகடனம் செய்யப்பட்டது.
இலங்கையில் தற்போது ஏதோ ஒரு வகையில் சிங்களம் மற்றும் தமிழ் என்ற இரண்டு மொழிகளும் அரச கரும மொழிகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. என்றாலும் தமது தாய்மொழியினை நிர்வாக ரீதியாக பயன்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்களும் முரண்பாடுகளும் குடிமக்களுக்கு இருக்கின்றன.
மொழி தொடர்பாக உள்ள உரிமைகளை வழங்குவதில் குழப்பமான திட்டமிடல்களே இருக்கின்றன. எந்தவொரு பிரஜைக்கும் தனது தாய்மொழியில் சேவையினைப் பெறுவதற்கு உரிமை இருக்கின்றது. என்றாலும் வடக்கு கிழக்கில் தமிழ் மொழியில் மாத்திரமே ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதேபோன்று வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் சிங்கள மொழியில் மாத்திரமே ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. என்றாலும் ஜனாதிபதி விரும்புகின்ற பிரதேச செயலகங்களை மாத்திரம் இரட்டை மொழி ஆவணப்பதிவு செய்யும் அலுவலகங்களாக மாற்ற முடியும்.
ஒரு குடிமகனின் உரிமை என்பது குறிப்பிட்ட ஒரு பிரதேசத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட நிலைமைக்கும் அரசியலமைப்பில் குடிமக்களுக்கு என்று உள்ள சலுகைகளுக்கும் முரண்பாடுகள் இருக்கின்றன. இதற்கு தீர்வாக இலங்கையில் உள்ள எல்லா அரசாங்க அலுவலகங்களிலும் இரட்டை மொழிப்பயன்பாடு இருக்க வேண்டும் என்பது உறுதி செய்யப்பட வேண்டும். இதில் நிர்வாக ரீதியான சிக்கல்கள் இருக்கின்றதுதான். ஆனால் ஒரு குடிமகனின் உரிமையை மீறுவதற்கு அது ஏற்ற காரணம் கிடையாது.
அரசாங்க அலுவலகங்களில் இரு மொழிப்பயன்பாடு இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. இதனை ஒரு இரவில் செய்து முடிக்க முடியாது என்பது நிதர்சனம். என்றாலும் இப்படி ஒரு விடயத்தை செய்வதற்கு ‘அரசியல் விருப்பம்’ இருக்கின்றதா என்பது மிகப்பெரிய கேள்வி. அரசாங்க நிறுவனங்களில் இரண்டு மொழிகளும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை கட்டளை ஒன்றாக பிறப்பித்து அவ்வாறு குடிமக்களின் மொழி உரிமை பாதிக்கப்படும்போது அதை மனித உரிமை மீறலாக கணக்கெடுப்பது என்பது இதற்கு தீர்வாக அமையும்.
இலங்கை அரசியலமைப்பில் உள்ள பல்வேறு விடயங்கள் நடைமுறையில் இல்லை. இலங்கை நீதிமன்றங்களில் வழங்கப்படும் சேவைகளை எந்தவொரு குடிமகனும் தான் விரும்பிய மொழியில் பெறுவதற்கான உரிமை அரசியலமைப்பில் உள்ளது. என்றாலும் நீதிமன்றங்களில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு உள்ள குறைபாட்டின் விளைவாக குறித்த விடயம் நடைமுறையில் இல்லை.
அரசாங்க அலுவலகங்கள் அனைத்திலும் இரண்டு மொழிகளையும் பயன்படுத்தும் நிலைமை இலங்கையில் உருவாக வேண்டும். அதாவது அனைவரும் இரண்டு மொழிகளையும் கற்பது சிறந்த தீர்வாக அமையும். இரண்டு மொழிகளை ஒருவர் கற்பது என்பது பெரியதொரு விடயம் கிடையாது. ஏனைய நாடுகளில் இவ்வாறு பலர் பல மொழிகளை கற்கிறார்கள். சிங்களப் பாடசாலைகளில் தமிழ் அசிரியர்கள் இல்லை அல்லது தமிழ் பாடசாலைகளில் சிங்கள ஆசிரியர்கள் இல்லை என்பது பெரிய குறைபாடாக வலம் வருகின்றது. இதற்கு அராசாங்கம் தீர்வினை மேற்கொள்ள வேண்டும்.
பாடசாலைகளில் சமயத்தினை அரசாங்கம் கட்டாயப்படுத்திதான் கற்பிக்கிறது. அப்படியிருக்கும்போது இரு மொழிக்கல்வி அல்லது மும்மொழிக்கல்வியினை வழங்குவது பெரியதொரு விடயமாக அரசாங்கத்திற்கு இருக்கப்போவதில்லை. என்றாலும் அதை ஒரு முக்கியமான விடயமாக அரசாங்கம் கருதாதன் விளைவாக அதற்கான நிதி ஒதுக்கீடுகளை செய்யாமல் இருக்கிறது. சட்டங்கள் அல்லது ஆணைக்குழுக்கள் அமைப்பதை விட அரசியல் விருப்பத்துடன் நாடு முழுவதும் இரு மொழிக்கல்வியை அறிமுகம் செய்தால் குறைந்தது பத்து வருடங்களில் இந்த நடைமுறைகளை மாற்றத்துக்கு கொண்டு வர முடியும்.
அஹ்ஸன் அப்தர்





























