மனிதர்களை நாடி இலங்கையில் பிச்சைக்காரர்களின் உலகம்.

இலங்கையில் பிச்சைக்காரர்களின் உலகம்.

2021 Aug 2

சிவாஜி திரைப்படத்தில் அமெரிக்காவில் இருந்து வரும் ரஜினி தனது ஊரினை பார்த்து வியந்து எல்லாம் மாறிவிட்டது, எனினும் இந்த நாட்டைவிட்டு பிச்சை கேட்கும் பரிதாப நிலை இன்னும் போகவில்லை என்று கூறுவார். அதுபோல இன்றைய காலகட்டத்தில் பிச்சைக்காரர்களின் உலகம் அதாவது அவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள் என்ற கேள்வியை சற்று ஆராய எண்ணினோம்.

ஆம். “யாசகம் கேட்பவன் குதிரை மீது ஏறி வந்து கேட்டாலும், அவனுக்குக் கொடுங்கள்” என்பதும், “மேற்கை (அதாவது கொடுக்கும் கை),                         கீழ்க்கையை (வாங்கும் கையை)விடச் சிறந்தது” என்பதெல்லாம் வேதங்களின் உபதேசம்.

இப்போதெல்லாம், நமது நாட்டில் குடிகொண்டுள்ள பிச்சைக்காரர்கள் பின்பற்றும் Strategy நம்மை சற்று சிந்தித்துப் பார்க்க வைக்கின்றது. நல்ல உடல் வலிமையுடன் இருக்கும் எத்தனையோ பேர் நம் வீடுகளுக்கு வந்து பிச்சை கேட்பதைக் காணும்போது, ‘இது  ஒரு business ‘ என்று எண்ணத் தோன்றுகிறது.

முன்னைய காலங்களில் பிச்சைக்காரர்கள் தனித்தனியாக வருவார்கள். ஆனால், இப்போது மூன்று நான்கு பேர் ஒன்றாக இணைந்து வருகிறார்கள். அவர்கள் உறவினர்கள் தான் என்ற எண்ணம் நமக்குத் தோன்றும். ஆனால் அது உண்மைக்கு புறம்பானது. எங்கிருந்தெல்லாமோ வந்து, இங்குவந்து இணைந்து தொழில் புரிபவர்கள் என்று தான் கூற வேண்டும் . அதேவேளையில் மூவர் அல்லது நான்கு பேர் ஒரே நேரத்தில் , எதிர் வீடு, அடுத்த வீடு, அதற்கு எதிர்த்த நமது பக்கத்து வீடு ஆகியவற்றின் கதவைத் தட்டுகின்றார்கள். அத்தனை வீட்டிலிருந்தும் பணம் வரும்போது, “நாங்கள் மூனு பேர் அல்லது நாலு பேர்” என்கிறார்கள். நாலு பேர் சேர்ந்து வசூலித்த பணத்தை வாங்கிக்கொண்டு, அவர்களுக்குள் பிரித்துக் கொள்கிறார்கள்.

இன்னும் சில பிச்சைக்காரர்கள், நமக்குக் கடன் கொடுத்த கடன்காரர்கள் போல் நம் வீட்டுக் கதவை உடைக்கிறார்கள்! யாரோ எவரோ என்று அவசரமாக வந்து கதவைத் திறந்து பார்த்தால், நிற்பவர் பிச்சைக்காரர்! வீட்டுக்காரரின் முகத்தில் கோபம் தான் கொப்பளிக்கிறது; எனினும் பிச்சைக்காரர் பல்லை இளிக்கிறார்கள். இத்தைகய நேரத்தில் நமது mind voiceஇல் பல வார்த்தைகள் ஓடிக்கொண்டிருக்கும். மேலும் ஏன் பிச்சைக்காரர்களுக்கு இத்தகைய கர்வம் காணப்படுகின்றது என்ற கேள்வி நெடுங்காலமாக எனது மனதில் உலாவிக் கொண்டே இருந்தது. இதனை பற்றி ஆராயும்போது இந்தியாவில் அசாம் மாநிலத்தில் பிச்சைக்காரர் ஒருவருக்கு வருமான வரி செலுத்த தவறியதற்காக அவரது சொத்தினை மதிப்பீடு செய்து 75 இலட்சம் இந்திய ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த தகவலை கேட்டதிலிருந்து எனது செவி நரம்புகள் கூட என்னை ஏளனமாக பார்க்கின்றது.

சில வேலைகளில் பொது விழிகளில் நாம் அவதானித்து இருப்போம் ஒரே பிச்சைக்காரர் பேருந்து நிலையத்திலும் மத தளங்களிலும் சிறுவர் பூங்காக்களிலும் கடை வீதிகளிலும், குறிப்பிட்ட ஒரே நபரே இருப்பார் இத்தகைய விடயத்தை அவதானிக்கும்போது இது வறுமையின் பிடியின் காரணமாக அவர் கையேந்த வில்லை மாறாக இந்த பிச்சை எடுப்பதை தொழிலுக்காக கடுமையாக உழைக்கிறார் என்ற பிழையான எண்ணமே மனதில் தோன்றுகின்றது

நாம் செய்த தர்மம் என்பது ஏதேனும் ஒரு இக்கட்டான நிலைமையில் நமக்கு கை கொடுக்கும். எனினும் மேற்கூறிய சில மனிதர்களின் செயலின் காரணமாக உண்மையாகவே கஷ்டப்படக் கூடிய மனிதர்களுக்குக் கூட உதவி செய்ய இக்காலத்தில் மனம் இடம் கொடுப்பதில்லை. கொழும்பு நகர்களில் பிச்சைக்கார தொழிலை இல்லாதொழிப்பதற்காக வீதி சமிக்ஞைகளில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் இந்த பதிவினை வாசித்துக் கொண்டிருக்கும் போது கூட வீதிகளில் உங்களிடம் யாரேனும் ஒருவர் கையேந்தி கொண்டிருக்கலாம்.

சில பிச்சைக்காரர்களுக்கு நிரம்ப தைரியம்; கதவு திறந்திருந்தால், உரிமையோடு வீட்டுக்குள்ளேயே வந்துவிடுகின்றார்கள்! அவர்கள் தம் உரிமையை நிலைநாட்டுகின்றார்களாம்! ஒரு ரூபாய் கொடுத்தால், நம்மை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். அவர்களின் மனதிற்குள் நம்மை மகா கஞ்சன் என்றவாறு திட்டிக்கொண்டே செல்கின்றார்கள். இன்றைய காலத்தில் 20 ரூபாய் காசு கூட பிச்சைக்காரர்களுக்கு அதி குறைந்த பணமாக கருதிக் கொள்கிறார்கள்.

முக்கியமாக இந்த பிச்சை கொடுக்கும் சந்தர்ப்பங்களில் நம் மனதை கலங்க வைக்கும் தருணமாக அமைவது கைக்குழந்தைகளை கையில் ஏந்தியவாறு அவர்கள் பிச்சை எடுப்பது. அந்த மழலை என்ன தவறு செய்தது? அந்த கண்களில் காணும் கவலையும் பசியும் சேர்ந்த பிம்பச் சாரல் எம் இதயத்தை கிழித்து அவர்களுக்கு உதவ முன்வர வைக்கின்றது. நிச்சயமாக அந்தக் குழந்தை அவர்களுடையதாக இருக்க வாய்ப்பே இல்லை. ஒரு தாய் ஒருபொழுதும் தன் குழந்தைக்கு முன் அவமானப்படுவதை விரும்பமாட்டார். மாறாக அந்த குழந்தை மாபியா குழுக்களால் கடத்தப்பட்டு இருக்கலாம். மேலும் இதனை தொழிலாக செய்யக்கூடிய வஞ்சகக்காரர்கள் இருக்கின்றார்கள் என்றால் அது கவலைக்குரிய விடயமே. ஆம் குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கும் குழந்தைகளை கடத்தி, அவர்களது உடல் உறுப்புகளை ஊனமாக்கி, நகர்புறங்களில் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டுள்ளனர். மேலும் கைக்குழந்தைகளை நாள் வாடகைக்கு பெற்று குழந்தைகளுக்கான போலி வாடகை தாயையும் உருவாக்கி பிச்சை எடுக்க வைத்து அந்தப் பணத்தில் வாழ்கின்ற மனிதர்கள் பிணந்தின்னி கழுகுகள் என்று கூறவேண்டும். அதேவேளையில் தமது குடும்பத்தின் வறுமைக்காக தமது பிள்ளைகளை பிச்சை எடுக்க வாடகை குழந்தைகளாக அனுப்பும் குடும்பங்களையும் பிழை என்றே கூறவேண்டும். மேலும் பிச்சை எடுப்பதற்கான நவீன முறையாக சில நபர்கள் பணப்பையை தொலைத்து விட்டதாகவும், தான் ஊருக்கு செல்ல வேண்டும், அதற்கு உதவுமாறும் கூறி பணம் வசூலிக்கின்ற சம்பவங்கள் கொழும்பு நகர்புறங்களில் அதிகளவில் நிலவி வருகிறது. நிச்சயமாக இந்த குறிப்பிட்ட நபர்கள் பல மாதங்களாக ஊருக்கு செல்லாமலேயே பணம் வசூலித்துக் கொண்டு இருக்கின்றனர். இந்தக் கொரோனா காலப்பகுதியில் பல இடங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றது. இதற்கு முக்கிய காரணமாக பிச்சை எடுக்க வரும் நபர்களும் காரணமாக அமைகின்றனர். எவ்வாறு எனின் திருட்டு கோஷ்டிக்கு துப்பு சொல்லும் உளவாளிகளாக சில பிச்சைக்காரர்கள் சேவை புரிந்து வருகின்றனர். இவர்கள் பிச்சை எடுப்பது போன்று சில வீடுகளுக்கு சென்று நோட்டம் விட்டு அந்த தகவல்களை அந்த திருட்டு கும்பலுக்கு குறிப்பிட்ட தொகைக்கு கூறுகின்றனர். இதன் காரணமாக பல திருட்டு சம்பவங்கள் கொழும்பு புறநகர்களில் அதிகரித்து வருகின்றது. இந்த காலப்பகுதியில் முக்கியமாக வெள்ளவத்தை கரையோரங்கள், குறிப்பாக காதலர்கள் ஒன்றுகூடும் தளமாக காணப்படுகின்றது. காதலர்களோ தமது நேரத்தை தனது மனதிற்கு பிடித்தவருடன் செலவிடுவதற்கு ஒன்று கூடுகிறார்கள். எனினும் அவ்விடங்களில் சில நபர்கள் பிச்சைக்காரர்கள் என்ற பெயரில் அவர்களைத் தொந்தரவு செய்து பணம் பறிக்கிறார்கள். ஆம் அந்த காதலர்கள் காசு கொடுக்கும் வரை அந்தப் பிச்சைக்கார நபர்கள் அவ்விடத்தை விட்டு நகர மாட்டார்கள். இத்தகைய செயலின் காரணமாக இந்த யாசகம் கேட்பது என்பது வழிப்பறி என்ற விடயமாக மாறுகின்றது. ஆம் யார் தான் உண்மையான பிச்சைக்காரர்கள் என்பதை அறிந்து கொள்வது எப்படி தெரிந்து கொள்வது என்ற கேள்விக்கு விடை தெரியாது என்றே கூறவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் தள்ளாடும் வயதில் ஒரு வேளை உணவிற்காக கையேந்தும் முதியவர்களை பாவப்பட்டவர்கள். அவர்களை ஒரு போதும் பிச்சைக்காரர்கள் என்ற பெயரில் உள்ளடக்க கூடாது. நிச்சயமாக அவர்கள் இயலாதவர்கள். அத்தகைய இயலாத முதியவர்கள் நம்மிடம் கையேந்தும் போது ஒரு கனம் கூட யோசிக்காமல் உதவி செய்வதே சிறந்த பண்பாகும்.

இந்தப் பிச்சைக்காரர்கள் எவ்வாறு உருவாகின்றார்கள் என்று சற்று சிந்தித்துப் பார்த்தால் தன்னால் ஒன்றுமே முடியாது என்ற கட்டத்தில்தான் அவர்கள் தங்களது இயலாமையை சுட்டிக்காட்டி கையேந்திகிறார்கள். எனினும் பிச்சை எடுப்பதையே தொழிலாக எண்ணி, அதனை செய்ய முயற்சிப்பவர்களை நிச்சயமாக அவர்களை தண்டிக்கத்தான் வேண்டும். உலகிலேயே பிச்சைக்காரர்கள் இல்லாத நாடு ஒன்றை இனங்காண முடியுமா என்ற கேள்விக்கு விடையே இல்லை. ஒரே வித்தியாசம் தான் இலங்கையில் உள்நாட்டு மொழிகளில் பாட்டு பாடி பிச்சை கேட்பவர்களும் இருக்கிறார்கள், வெளிநாட்டில் ஆங்கில மொழியில் பாடல் பாடி பிச்சை கேட்கிறார்கள்.
என்றாவது ஒருநாள் நம்நாடு பிச்சைக்காரர்கள் இல்லாத ஒரு நாடாக மாறுமா என்ற கேள்விக்கு விடையானது கேள்விக்குறியே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php