கவிதைகள் உலகை நாடி சிறுவர் உரிமைகள்

சிறுவர் உரிமைகள்

2021 Aug 10

உலகின் வாழும் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்களே. இவர்கள் தமக்குள் எந்தவொரு பால் இன மத நிற வேறுபாடுகளுமின்றி அவர்களுக்கான  உரிமைகளை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டிருக்கின்றனர். உலகளாவிய ரீதியில் சிறுவர்கள் அனுபவிக்கும் சகல அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளையும் இலங்கையில் உள்ள சகல சிறுவர்களும் அனுபவிக்கக் கூடியவாறான உரிமைகளும் சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பாக பாலியல் வல்லுறவுகளிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை, சித்திரவதை குரூரமாக நடத்துதல் மற்றும் வன்முறையான தண்டனைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் உரிமை, சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்குமான உரிமை என்பன சர்வதேச ரீதியில் சிறுவர்களுக்குரிய உரிமைகளாகுமென அறியப்படுகிறது.

இன்றைய உலகம் எதிர்நோக்கும் மிக முக்கிய சமூகப் பிரச்சினைகளுள் ஒன்றாக சிறுவர் துஷ்பிரயோகம் விளங்குகின்றது. வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் போன்ற அனைத்து உலக நாடுகள் முழுவதிலும் காணப்படும் பிரச்சினையாக இருந்தாலும் கூட வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் அது ஒரு பாரிய பிரச்சினையாக அமைகின்றது .இன்று சமூகமொன்றின் பாரிய சமூகப் பிரச்சினையாகக் காணப்படும் சிறுவர் துஷ்பிரயோகம் இல்லாமல் செய்யப்படும் போது சிறுவர் உரிமையை பாதுகாக்க முடியும் என்பது திண்ணம்.

ஆயினும் உலகளாவிய அளவில் 1.7 பில்லியன் அளவிலான சிறுவர்கள் துஷ்பிரயோகங்களை எதிர்கொள்கின்றனர். 2012 முதல் 2020 வரையிலான காலப் பகுதியில் இலங்கையில் மட்டுமே 5891 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளது மட்டும் அல்லாமல் இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் 21.9 சதவீதத்தினால் அதிகரித்து வருவதாக யுனிசெப் நடத்திய அண்மைய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

அடிப்படையாக பெற்றோரின் பாதுகாப்பையும் அரவணைப்பையும் பெறுவதற்கு சிறுவர்களுக்கு உரிமை உள்ள அதேவேளை பெற்றோரிடமிருந்து தனிமைப்படுத்தப்படாதிருப்பதற்கான உரிமையும் சிறுவர்களுக்கு உண்டு. ஆனால் தத்தமது உரிமைகள் மீறப்படுவதனைக் கூட அறியப்படாதவர்களாகவே பெரும்பாலான சிறுவர்கள் இருக்கின்றமை கவலைக்குரியது. அத்தோடு சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல்,போதைக்கு அடிமையாக்கல், பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்றவற்றில் ஈடுபடுபவது அதிகபட்ச தண்டனைக்குரிய குற்றமாகும் . குடும்பமே சிறுவர்களுக்கான கவசம் என்றாகுகின்ற போதிலும் குடும்பத்தில் அன்பற்ற, ஆதரவற்ற, பாதுகாப்பற்ற நிலையில் வாழும் போது அச்சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகக்கூடிய அதிகமான சந்தர்ப்பங்கள் உருவாக்குகின்றன.

சிறுவர் துஷ்பிரயோகம் என்று நோக்குகின்ற போது நான்கு வகையில் அணுகக்கூடியவாறு அமைகின்றது. உடல் ரீதியான துஷ்பிரயோகம், உளவியல் ரீதியிலான துஷ்பிரயோகம், புறக்கணிப்பு ரீதியிலான துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகமாகும், இவை பெரும்பாலும் பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள், ஆசிரியர்கள் அல்லது நெருங்கிய உறவினர்களாலேயே அடிக்கடி நிகழ்கிறமை வருத்தத்திற்குரியது.ஒரு சிறுவனுக்குரிய உடை, உணவு, சுகாதாரம், பாதுகாப்பு, மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை தேவைகள் இல்லாதபோது அல்லது கிடைக்காதபோது அவன் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றானென்பதை அனைவரும் உணர்தல் அவசியம்.

இலங்கையைப் பொறுத்தவரையிலும் இளம் சிறுவர்கள் மீதான குடும்ப வன்முறைகளே அதிகரித்து காணப்படுகின்றன. இதற்கு சமூக கட்டமைப்புகள் மற்றும் அணுகுமுறைகளும் ஒரு பிரதான காரணமாக அமைகின்றது. குழந்தைகளை அடித்தல் உடல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொள்ளல் பிள்ளைகளை குடும்ப வேலைகளில் ஈடுபடுத்திக்கொள்ளல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், அவர்களுடைய விருப்பங்கள் புறக்கணிக்கப்படுதல் என்பனவாறாக நாற்பது வீதமான சிறுவர்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகுகின்ற அதேவேளை பல தகவல்கள் அறியப்படாதவாறாகவே உள்ளன. இவை மட்டும் அல்லாமல் பெரியவர்களுடைய கோபங்கள் விரக்திகளை குழந்தைகள் மீது காட்டும் வகையிலான செயற்பாடுகளை பெரியவர்கள் வெளிப்படுத்துதல் கண்டிக்கத்தக்கது. இவ்வாறான சூழலில் வளரும் குழந்தை தன்னுடைய அடுத்த தலைமுறைக்கும் அதையே பிரயோகிக்கும் போது குழந்தைகள் மீதான குடும்ப வன்முறை குடும்ப அளவில் அங்கீகரிக்கப்பட்ட பிறழ்வான சங்கிலித் தொடராக தொடர்கின்றது.

இலங்கையில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் காலத்திற்கு காலம் அதிகரிப்பதை காணக்கூடியவாறு உள்ளது. இவை பெரிதும் சிறுவர்களாலும் அறியப்படுவதில்லை. இதேவேளை குழந்தை தொழிலாளராக உரிமைகள் மறுக்கப்படும் குழந்தைகளில் சுமார் 10 ஆயிரம் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இவை தவிர அதிர்ச்சி தரும் விடயம் என்னவென்றால் “safe the children” அமைப்பின் கணிப்புப்படி குறிப்பாக 15 அல்லது 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் சுமார் 80%மானோர் அறியாமை காரணமாக தாமாக விரும்பியும் இவ்வாறான துஷ்பிரயோகங்களிற்கு உள்ளாவதே. பாலியல் ரீதியான தெளிவின்மை மற்றும் போதிய அறிவின்மையை குற்றவியலாளர்கள் பயன்படுத்திக்கொள்ளுதல் வருத்தத்திற்குரியது.

இவ்வாறான சிறுவர்களது அறியாமை அவர்களுடைய எதிர்காலத்தில் பெரிதும் தாக்கம் செலுத்துகின்றது. ஆக  இலங்கையின் பாடத்திட்டங்களில் பாலியல் கல்வி அவசியம் என பல அரசு மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களும் தத்தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இவை மட்டுமன்றி பெரிதும் சிறுவர்களது பாலியல் ரீதியான சுரண்டல்கள் அவர்களது நெருங்கிய உறவினர்களாலேயே இடம்பெறுவதால் பல சந்தர்ப்பங்களில் சிறுவர்களை பாதுகாக்கவும் அவர்களுக்கான நியாயங்களை பெறுவதில் பங்கேற்க வேண்டிய பெற்றோர் மற்றும் குடும்ப அங்கத்தவர்களே குற்றங்களை வெளிப்படுத்த பின்னிற்கின்றனர்.  இவ்வாறான நிலைக்கு இலங்கை சமுதாயக் கட்டமைப்பும் பிரதான காரணமாகவும் அமைகிறது. அதாவது பாதிப்புற்ற நபர் குழந்தையோ பெரியவரோ அவரையே குற்றவாளியாக அணுகப்படுதல் கவலைக்குரியது.

இவை தவிர இலங்கையில் 10 முதல் 14 வயதெல்லை வரையுள்ள ஏறத்தாழ 35 ஆயிரம் சிறுவர்கள் கடைகள், பண்ணைகள், மீன்பிடி மற்றும் கைத்தொழில் நிலையங்களில் வேலை செய்து வருவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. இக் கணக்கெடுப்பில் குடும்ப பரம்பரை தொழில்களில் ஈடுபடும் சிறுவர்களும் அடங்குவர்.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் நலிவுற்ற குடும்பங்களில்தான் அதிகம் இடம்பெறுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். அதாவது குடும்பத்தவரால், பெற்றோரால் கைவிடப்பட்ட பிள்ளைகள், குடும்ப பொருளாதார வருமான பிரச்சினைகளுக்காக வெளிநாடு செல்லும் பெற்றோரின் பிள்ளைகள், பெண்தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளே அதிகளவில் பாலியல், உடலியல். உளவியல் ரீதியான கொடுமைகள் மற்றும் சித்திரவதைகளுக்கு ஆளாகுகின்றனர் என்று சிறுவர் உரிமைகள் தொடர்பாக செயற்படும் பல்வேறான அமைப்புக்கள் சுட்டிக் காட்டுகின்றன.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிகள் என்று நோக்குகின்ற போது,சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுத்தலும் அவ்வாறான துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்ற பிள்ளைகளை பாதுகாத்தல் மற்றும் சிகிச்சையளித்தல் பற்றிய தேசிய கொள்கையொன்றை ஆக்குவதற்கு அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குதல். மட்டும் அல்லாமல்  அனைத்து விதமான சிறுவர் துஷ்பிரயோகங்களுடனும் தொடர்புடைய சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதை ஒழுங்குபடுத்துதல், மற்றும்  சிறுவர் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய அனைத்து புலன் விசாரணைகளையூம் குற்றவியல் வழக்குகள் சம்பந்தமான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தையூம் ஒழுங்குபடுத்துதல், விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்  உட்பட அனைத்து விதமான சிறுவர் துஷ்பிரயோகங்களையூம் வெளிக்கொணர்வதற்கும் தடுப்பதற்கும் வெளிநாட்டு அரசாங்கங்கங்களுடனும் சர்வதேச அமைப்புகளுடனும் இணைந்து பணியாற் றுதலும் தகவல்களை பரிமாறிக்கொள்ளுதலுமாக பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் இன்றுவரை சிறுவர் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் குறைவதாக தகவல் இல்லை.

இலங்கையில் 92% மானோர் கல்வியறிவு பெற்றவர்களாக குறிப்பிடப்படுகிற போதிலும் சிறுவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுதல் என்பது ஆரோக்கியமானதன்று. இதிலும் இன்றளவில் சிறுவர்கள் இணையவழி கற்றல் கற்பித்தலில் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்த விளைகையில் இணையவழி துஷ்பிரயோகளிற்கும் உள்ளாகுகின்றனர். இவை குறித்த போதிய விழிப்புணர்வு பெற்றோர்கள் அறிய்ப்படாத போதிலும் இன்றைய நிலவரப்படி அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்களிற்கு இவை வழிகோலும் அதேவேளை சிறுவர்கள் பிறழ்வான வழியில் திசைதிருப்பப்படவும் செய்கின்றனர்.

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் சிறுவர் துன்புறுத்தல்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளது என்று நோக்குகின்ற போது இலங்கை சட்டங்கள் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் வலுவானதாக இருக்கின்ற போதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறுபட்ட சிக்கல்கள் காணப்படுகின்றன. அத்தோடு சிறுவர் தொடர்பிலான வழக்குகள் தீர்வினை அணுகுவதற்கு 08 தொடக்கம் 10 வருடங்கள் வரை நீடிக்கப்படுகின்றன. இச் சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டவரும் குற்றஞ்சாட்டப்பட்டவரும் பல்வேறு வகையான உள மற்றும் உடல் ரீதியான இயலாமை மற்றும் மாற்றங்களிற்கு உட்படுன்றனர்.மற்றும் யாழ்ப்பாணம் பத்தரமுல்ல ஆகிய நீதிமன்றங்களில் சிறுவர் தொடர்பான வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் இங்கும் சிறுவர் குற்றச்செயல்களே பெரிதும் விசாரிக்கப்படுகின்றது.

சிறுவர்களுடைய செயற்பாடுகளில் அவர்களுடைய பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக இலங்கை பொலிஸ் நிலையங்களில் கூட தனித்துவமான பயிற்றுவிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குறிப்பாக சிறுவர்கள் பராமரிப்பு மற்றும் பெண்களுடைய விவகாரங்களுக்கான பிரத்தியேக பெண் பொலிஸ் அதிகாரிகளை நியமித்து இருக்கிறார்கள். இவ்வாறான ஏற்பாடுகள் வரவேற்கத்தக்கதே. அத்துடன் சிறுவர்கள் பற்றிய பிற அணுகுமுறையில் ஏனைய வளர்முக நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் செயற்பாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளமையை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் இலங்கையின் சட்டதிட்டங்கள் சிறப்பாக உள்ளது. ஆயினும் நாட்டின் பொருளாதார நிலைப்பாட்டின் காரணமாக அண்மித்த காலங்களில் சிறுவர்கள் தொடர்பிலான செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய ரீதியில் அணுகுகிற போது சிறுவர் உரிமைகளை பாதுகாக்கவென்று ஐக்கிய நாடுகள் சபை பல்வேறான வேலைத்திட்டங்களை உலகளவில் முன்னெடுத்து வருகின்றமை யாவரும் அறிந்ததே. அந்தவகையில் “Unicef, Save the children, Global Children, Children international” போன்ற சர்வதேச நிறுவனங்கள் சிறுவர்களது உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகின்றன. யுத்தங்கள், தீவிரவாத தாக்குதல்கள், அனர்த்தங்கள் போன்றவற்றால் பாதிக்கபட்ட சிறுவர்களுக்காக இந்த நிதியங்கள் அர்ப்பணிப்புடன் செயல்ப்பட்டு வருகின்றதோடு பல்வேறான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் சிறுவர் ஊக்குவிப்பு செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்றன.

உடல், உள, உணர்ச்சி மற்றும் புறக்கணிப்பு ரீதியிலான சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு சமூகங்களின் பொறுப்பற்ற தன்மை, மற்றும் நம்பிக்கைகள், கட்டமைப்புக்கள், குடும்ப பொருளாதார சிக்கல், பெற்றோரின் பராமரிப்பு போதாமை, சுகாதாரம் தொடர்பான இடர்பாடுகள், கல்வியில் தெளிவின்மை, போதைவஸ்து பிரச்சினை, கோபம் மற்றும் வெறுப்பு, தாழ்வு மனப்பான்மை சார்ந்த உளவியல் பிறழ்வுகள் மற்றும் யதார்த்தமற்ற எதிர்பார்ப்புக்கள், தவறான வழிகாட்டல் ஆகியவை மூலம் சிறுவர்களது முன்னேற்றத்தில் தடைகள் அதிகரிக்கின்றன. இதனைத் தடுப்பதற்கு மக்கள் விழிப்புணர்ச்சி பெறுவதுடன் இதனை தத்தமது பொறுப்புணர்வோடும் செயற்படுதல் வேண்டும். சிறுவர் உரிமைகள் தொடர்பான சட்ட முறைகள், அவற்றை கையாளும் நெறிகள் போன்றவற்றை சமுதாயத்தின் ஒவ்வொரு தனிநபரும் அறிந்திருத்தல் கட்டாயமாகும்.

சிறுவர்களில் வெற்றிகரமான ஆளுமை அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுதல் காலத்தின் தேவையாக உள்ளது. எதிர்கால உலகின் சவால்களை வெற்றிகொள்ளக்கூடிய நற்பண்பும், அறிவும் நிறைந்த பலம்மிக்க எதிர்கால தலைமுறையை கட்டியெழுப்ப சமூக அளவிலான நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளை முன்னெடுத்தல் நன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php