2021 Aug 11
இலங்கையில் மட்டுமல்லாது ஆசிய நாடுகளிலும் கூட பெருந்தொற்று வெகுவாகப் பரவியிருக்கும் சூழ்நிலையில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இந்த துஷ்பிரயோகங்களை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களுக்காக பெரும்பாலும் பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்களும் பெண்களுக்கான நிறுவனங்களும்தான் போராடி வருகின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பல தசாப்த காலமாக சிறுவர்களுக்கு எதிராக ஏராளமான பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த வருடத்தில் ஆறு மாத காலப்பகுதியில் தேசிய சிறுவர் அதிகார சபைக்கு 4000 இற்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பதிவிடப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றாக கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்ட அல்லது கொல்லப்பட்டுள்ளார் என சந்தேகிக்கப்படும் 16 வயதுச் சிறுமி ஹிஷாலினியின் விவகாரமும் அடங்குகின்றது. இவர் உயிரிழந்த நாளிலிருந்து அவருடைய வைத்திய அறிக்கை வெளிவரும் வரை எந்த ஒரு அரசியல்வாதியும்; நீதி கேட்பதற்காக வீதிக்கு இறங்கியிருக்கவில்லை. இதுவரை காலமும் வன்முறைக்கு, உரிமை மீறல்களுக்கு உள்ளான பெண்களுக்கு, சிறுமிகளுக்கு ஆதரவாக நீதிக்காக குரல்கொடுக்காத மதவாதமும் பிரதேசவாதமும் கொண்ட அரசியல்வாதிகள் வைத்திய அறிக்கையில் சிறுமி ஹிஷாலினி பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டதன் பின்னர் வீதியில் இறங்கிப்போராடி வருவதோடு ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவித்து வருகின்றார்கள்.
ஆனாலும்; ஆணாதிக்க சிந்தைனைகளைக் கொண்ட அரசியல்வாதிகளுக்கும் மதவாதம் மற்றும் இனவாதம் பேசுபவர்களும் இவ்வாறான பாலியல் துஷ்பிரயோகங்கள் அனைத்தும் செய்திகளாகவும் தகவலாகவுமே இருந்துள்ளதை எங்களால் கடந்த காலங்களில் அவதானிக்க முடிந்தது. ஹிஷாலினிக்காக குரல் எழுப்பும் இவர்கள் அவருக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு எந்த முயற்சியையும் எடுத்திருக்கவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் மீதுள்ள கோபத்தையும் முஸ்லிம் சமூகத்தின் மீதுள்ள தங்களது காழ்ப்புணர்வினையுமே வெளிக்காட்டி வருகின்றார்கள். பொதுவெளியில் தங்களது வன்முறையான கருத்துக்களை பதிவேற்றுவதன் ஊடாக சமூகத்தில் வன்முறைகளைத் தோற்றுவித்து இலங்கையில் மதவாதம் எனும் நெருப்பை மூட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் புதிய ஜனநாயக மக்கள் முன்னனிக் கட்சியின் தலைவருமான நடராஜா ரவிகுமாரைக் அடிக்கோடிட்டு குறிப்பிட வேண்டும்.
நடராஜா ரவிகுமார் அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கோருவதாகக் கூறிகொண்டு இலங்கையில் 90 வீதமான முஸ்லிம் பெண்கள் அபாயாவையும் புர்காவையும் அணிந்துகொண்டு; விபசாரத்தில் (பாலியல் தொழிலில்) ஈடுபடுகிறார்கள் என்றும் போதைப் பொருட்களைக் கடத்துகிறார்கள் என்றும் பாரளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதினின் மனைவி, சகோதரிகள் மற்றும் அவருடைய குடும்பத்தில் உள்ள அனைத்துப் பெண்களும்; விபசாரத் தொழிலில் (பாலியல் தொழிலில்) ஈடுபடுபவர்கள் என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறான சொற்பிரயோகமானது பாலியல் வன்முறைகளைப் செய்கின்ற குற்றவாளிகளைச் சுட்டிக்காட்டுவதற்கும் பிழை செய்பவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கவும் பாலியல் வல்லுறவினைச் செய்துவிட்டு சத்தம் இல்லாமல் இருக்கும் ஆண்களைக் காப்பாற்றுவதற்கும் எத்தனிக்கும் ஒரு செயலாகும் (எய்தவன் இருக்க அம்பை நோகுவது போன்ற செயல்). அல்லது ஒரு பெண்ணுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என நினைத்துக் கொண்டு 90 வீதமான பெண்களை அவமானப்படுத்தும் குறித்த இனவாதப் வெறுப்புப் பேச்சினை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
அத்துடன் முஸ்லிம் பெண்களை உடல் சார்ந்தும் உடை சார்ந்தும் இழிவாக சமூக ஊடகங்களில் இவ்வாறு விமர்சிப்பதை முஸ்லிம் மதத்தலைவர்கள், அவர்கள் சார்ந்த அமைப்புகள் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் போன்றோர் கேள்விக்குட்படுத்தாமல் மௌனம் காப்பது ஏன்? சிறுமி ஹிஷாலினியின் இறப்பை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பெண்களை எந்தளவுக்கு இழிவு படுத்துகின்றார்கள் என்பதை சில சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும் சில ஆணாதிக்க சிந்தனை கொண்ட ஆண்களும் சமூகத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். மேலும் சிறுமியை துஸ்பிரயோகம் அல்லது பாலியல் துஸ்பிரயோகம் செய்த அந்த ஆணைப் பற்றியும் அந்தப்பிள்ளை வாழ்ந்த வறுமையான சூழலின் நிலைமை பற்றியும் கவனத்தில் கொள்ளாமல் சிறுமி ஹிஷாலினி மற்றும் அவரது தாய் உட்பட ஏனைய பெண்களையும்; பொது வெளியில் மிகவும்; அருவருக்கத்தக்க வகையில் விமர்சனம் செய்து வருகின்றார்கள்.
பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்காக நீதி கேட்டு ஆண்களும் அரசியல்வாதிகளும் வீதிக்கு இறங்கும்போது பெண்ணிலைவாதிகளாகிய நாங்கள் பொதுவாக இரண்டு முக்கியமான விடயங்களை அவதானித்திருக்கிறோம். முதலாவது எங்களுடைய சமூகங்களில் பெண்கள் அல்லது சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்கு நீதி கோராமல் மறைத்து விடுவதாகும். இரண்டாவது சிங்களவர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் அல்லது தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் என்று வரும்போது மாத்திரம் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளைத் தூக்கிப்பிடிக்கிறார்கள். இதில் இனவாதமே அவர்களது தெரிவாகவும் நோக்கமாகவும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.
மேலும், மதம் என்பது ஒவ்வொருவரும் பாரம்பரியமாகவும் உணர்வுபூர்வமாகவும் பின்பற்றி வரும் உரிமை என்பதை நாம் யாவரும் அறிவோம். அவ்வாறான இஸ்லாம் மதத்தையும் முஹம்மது நபி அவர்களையும் இழிவாகக் கொச்சை படுத்தி உலக முஸ்லீம்கள் அனைவருமே உணர்வு ரீதியாக வேதனைப்படும் அளவுக்கு ஒருவர் எழுதிய பதிவை காரைதீவு பிரதேசபை தவிசாளரான கிருஸ்ணப்பிள்ளை ஜெயசிறில் அவர்கள் ஏனையவர்களுக்கும் பகிர்ந்தும் விருப்பு செய்தும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை பழிவாங்குவதாக நினைத்து ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பழிவாங்குவதாக நடந்து கொள்வது ஒட்டுமொத்தமான இனவாத அரசியல் ஆகும்.
தொடர்ச்சியாக பெரும்பான்மை அரசியல்வாதிகள் சிறுபான்மை சமூகத்தினரை பிரித்தாளும் நியதியை இந்த செயற்பாடு உணர்த்துகிறது. இந்த இனவாத செயற்பாட்டின் பின்னணியில் இருப்பவர்கள் அத தெரன மற்றும் ஹிரு போன்ற ஊடகங்கள் என்பதுடன் சமூக ஊடகங்களில் உள்ள இவ்வாறான குழப்பங்களை ஏற்படுத்தவென உருவாக்கப்பட்ட விசைப்பலகை வீரர்களும்தான் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். நாங்கள் எங்களது கால்கள் தேயும் அளவுக்கு பெண்களையும் பிள்ளைகளையும் ஒவ்வொரு நீதிமன்றமாக கொண்டு செல்லும் போது இவர்கள் எங்கே இருந்தார்கள்? சிறுமி ஹிஷாலினியின் நீதிக்கான போராட்டத்திற்கு ஏன் இந்த குறிப்பிட்ட ஆண்கள் தலைமை தாங்க வேண்டும்?
குறிப்பாக எப்போதும் பெண்களை பகடைக்காய்களாக வைத்துக்கொண்டு தங்களது அரசியல் காய் நகர்த்தல்களை செய்யும் ஒருசில அரசியல்வாதிகள் மற்றும் அரசியலில் ஈடுபடுபவர்கள் தங்களது வீட்டில் உள்ள பெண்களையும் பிள்ளைகளையும் சற்றுத் திரும்பிப் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனைய பெண்கள் மீது கற்களை எறிந்து காயம் ஏற்படுத்துவதற்கு முன் உங்களுடைய வீடுகளிலும் பெண்கள், சிறுவர்கள் இருக்கின்றார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தங்களது ஆணாதிக்க அரசியலைத் தக்கவைத்துக் கொள்வதற்காக பெண்களைப் பாவித்துக் கொண்டிருந்த அரசியல்வாதிகள் இப்போது சிறுமிகளைப் பாவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இப்படியான கீழ்த்தரமான எண்ணங்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்பவர்களை நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன் பெண்களாகிய நாங்கள் இனிவரும் காலங்களில் யாருக்கு வாக்களிக்கப் போகின்றோம் என்பது குறித்து சிந்தித்து முடிவெடுப்பது முக்கியமாகும். ஏனென்றால் பெண்களையும் சிறுவர்களையும் தொடர்ச்சியாக அவமதிப்பதும் தங்களது இருப்புக்களைத் தக்க வைப்பதற்காக அவர்களை பாவித்துவிட்டு தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிய பின்னர,; இவர்களுக்கான நீதி தூக்கி வீசப்படுவதும் வழமையான விடமாக இருக்கின்றது. இந்த ஆணாதிக்க அரசியல் எமக்கொரு பாடம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. எனவே நாட்டின் பெரும்பாண்மையினராக வாழும் பெண்கள் இனியேனும் அரசியல் சார்ந்து தங்களது கண்களைத் திறக்க வேண்டும். பெண்கள் செயற்பாடுகளில் ஈடுபடும்போது எமது சமூகத்தின் அரசியலையும் கட்டாயம் கருத்திற்கொள்ள வேண்டும்.
எனவே தமிழ், முஸ்லிம் பெண்களாகிய நாம் அனைவரும் பின்வரும் கோரிக்கைகளை பகிரங்கமாக முன்வைக்கின்றோம்.
1. பாதிக்கப்பட்ட ஹிஷாலினிக்கு நீதி வேண்டும்.
2. அதற்கான சட்ட நடவடிக்கைகளும் துரிதப்படுத்த வேண்டும்.
3. இனவாதம், மத வாதம் என்பவற்றுடன் பெண்களையும் சிறுமிகளையும் இழிவுபடுத்தும் ஊடகங்களை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதகதியில் அமுல் படுத்த வேண்டும்.
4. இவ்வாறு இனவாதமாக மற்றும் பால்நிலைக் கூருணுர்வு இல்லாமல் கருத்து தெரிவிக்கும் நபர்களுக்கு எதிராக அனைவரும் இணைந்து குரல் கொடுப்பதுடன் சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு (வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்; பெண்ணுரிமை சார்ந்து செயற்படும் 09 பெண்கள் அமைப்புகளின் கூட்டமைப்பு)