2021 Sep 16
ஆயுர்வேதம் என்பது இயற்கையுடன் சார்ந்த ஒரு விஞ்ஞான முறையாகும். அத்தோடு உலகின் மிகப் பழமை வாய்ந்த ஒரு மருத்துவ கலை ஆகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை இச்சிகிச்சை முறை கொண்டிருக்கின்றது. இம்மருத்துவ முறை உடல், உள, மனநிலையை சமநிலையாக பேணுகின்றது. இம்மருத்துவ முறை, இறைவனே மனிதனுக்கு பரிமாறிய மருத்துவ முறை எனவும் பலரால் நம்பப்படுகிறது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலைப் பலப்படுத்தி, உணவை முறையான வகையில் சமிபாடடையச் செய்து, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஓர் ஆயுர்வேத முறையே பஞ்சகர்ம மருத்துவ முறையாகும். ‘பஞ்ச’ என்பது ஐந்தைக் குறிக்கப் பயன்படுகிறது, ‘கர்ம’ என்பது கருமங்களை குறிக்கின்றது. ஐந்து கருமங்களை பின்பற்றி உடலில் உள்ள அனைத்து கழிவுகளையும் வெளியேற்றும் ஓர் பாரம்பரிய மருத்துவ முறையே ”பஞ்சகர்ம மருத்துவ முறை” எனப்படுகிறது. சாதாரணமாக வாதம், பித்தம், கபம் இவற்றின் சமநிலையில் ஏற்படும் மாற்றத்தினாலேயே உடல் ஆரோக்கியத்தில் பங்கம் ஏற்படுகிறது. அந்த வகையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறையே பஞ்சகரும மருத்துவ முறையாகும். இம்மருத்துவ முறை தலையிலிருந்து உள்ளங்கால் வரையான கழிவுகளை வெளியேற்றும் சிகிச்சை முறைகளாகும். இதில் சுமார் ஐவகை மருத்துவ சிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றது. கீழ்வருமாறு:
1. விரேச்சனம்(வயிற்றை சுத்தப்படுத்தல்)
வயிற்றிலிருக்கும் உஷ்ணம், பித்தம் அதிகரிக்கும் போது இச்சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கழுத்திற்கு கீழே தொப்புளுக்கும் மேலே உள்ள இடைப்பட்ட பகுதியின் அசுத்த அடைப்புகள் நீக்கப்படும். இதற்கு எண்ணெய், லேகியம், கசாயங்கள் போன்றவை ஒவ்வொருவரின் உடல் நிலைக்கு ஏற்ப தெரிவுசெய்து வழங்கப்பட்டு, கழிவுகள் பேதியின் மூலம் வெளியேற்றப்படும்.
2. வமனம் (வாந்தி எடுக்கச் செய்தல்)
இது அனைவருக்கும் பரிட்சயமான ஒரு சிகிச்சை அணுகு முறையாகும். சருமம் தொடர்பான வியாதிகள், மலட்டுத்தன்மை, மனநோய் போன்ற வியாதிகளுக்கு இச்சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது.
அதிகளவான கபத்தை விருத்தி செய்வதற்கு அதிகளவு உளுந்தாலான உணவுகள், சிகிச்சைக்கு முதல்நாள் வழங்கப்படும். அடுத்த நாள் காலை உணவு சமிபாடு அடைந்த பின்னர், அதிகளவான பால் வழங்கப்படும். அதன்பின்னர் வாந்தியை தூண்டக்கூடிய சில கசாயங்கள் வழங்கப்படும். பின்னர் நோயாளியின் உடம்பில் இருந்து அதிகளவான கபம் வெளியேறும் வரை வாந்தி எடுக்கச் செய்து சிகிச்சை அளிக்கப்படும்.
3. நஷ்யம் (மூலிகை மருந்தை மூக்கு வழியாக அனுப்புதல்)
பொதுவாக ஓர் ஊக்கமூட்டும் சிகிச்சையாக நஷ்யம் சிகிச்சை காணப்படுகிறது. மூலிகைச்சாறு, முகத்தில் எண்ணெய் தடவி (steaming) மூக்கே சற்று உயர்த்தி வைத்து ஒவ்வொருவருடைய உடல்வாகைக்கு ஏற்ப மூலிகைச்சாறு, எண்ணெய் போன்றவற்றை மூக்கில் இட்டு கபத்தை எச்சில் வழியே வெளியேறும் அல்லது தொண்டை வழியே உள்ளே செல்ல இச்சிகிச்சை முறையில் அனுமதிக்கப்படும். தலையில் காணப்படும் கபம், முகவாதம் போன்ற வாதம் சார்ந்த பிரச்சினைகளை சுமுகமாக இச்சிகிச்சை மூலம் தீர்க்க முடியும்.
4. கஷாய வஸ்தி (மூலிகையால் உருவாக்கப்பட்ட கஷாயத்தை மலத்துவாரம் வழியாக குடலுக்குள் செலுத்துதல்)
வஸ்தி என்றால் குடல் என பொருள்படும். உடம்பில் வாதம் அதிகமாக காணப்படும் சந்தர்ப்பங்களில் இச்சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகின்றது. நரம்பு சார்ந்த நோய்கள், என்பு சார்ந்த நோய்கள் மற்றும் எந்த மருந்துக்கும் அடங்காத வியாதிகள் கஷாய வஸ்தியின் மூலம் சுகமாகப்படுகிறது.
5. இரத்த மோக்ஷனம் (அசுத்த ரத்தத்தை உடலில் இருந்து வெளியேற்றுதல்)
உடனடி நிவாரணம் அளிக்கும் முறையாக இச்சிகிச்சை முறை காணப்படுகின்றது. இரத்தக் குழாய்களில் இருக்கும் அசுத்தங்களை அப்புறப்படுத்தும் முறையே இரத்த மோக்ஷன சிகிச்சை முறையாகும். இதற்கு அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. கண் சம்பந்தப்பட்ட நோய்கள், நாள அடைப்புகள், சரும வியாதிகள் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இதற்கென நச்சு அற்ற நீர் வாழ் அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப தேவையான இடத்தில் அட்டைகளை வைத்து ரத்தத்தை உறிஞ்சி எடுக்க செய்வர். 1 முதல் 1 1/2 மணித்தியாலங்களின் பின்னர் அந்த அட்டைகள் இரத்தம் உறிஞ்சிய இடத்தில் தேனும் மஞ்சள் சூரணமும் வைத்து இரத்தப் போக்கை நிறுத்துவர்.
பஞ்சகர்மா சிகிச்சை முறையானது சத்திரசிகிச்சை போன்ற ஒரு சிகிச்சை முறையாகும். இது உடலுக்கு வெளியே மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் இதில் மருந்து பாவனைகள் வெகு குறைவு. உடலுக்கு பொருத்தமற்ற ஏதேனும் விஷயம் உள்ளேறி விட்டால், அதனை தானே வெளியேற்ற உடல் முயற்சிக்கும். வயிற்றுப்போக்கு, வாந்தியும் குமட்டலும் ஏற்படும் இதுவே பஞ்சகர்மா சிகிச்சை முறையிலும் பயன்படுத்தப்படுகின்றது. இதுமட்டுமன்றி பஞ்சகர்மா சிகிச்சை முறையை மேற்கொள்ள முன்னர் நோயாளிகளை தயார்படுத்துவது அவசியமானதாகும்.
சிகிச்சைக்கு முன்னர் எண்ணை தேய்த்து மசாஜ் செய்யப்படும். தலை, முகம், மூட்டுகள் என்பவற்றிற்கு என்னை பூசப்படும். இவ்வாறு செய்யப்படுவதால் உடலில் தேங்கியிருக்கும் அசுத்தங்கள் கரைந்து இலகு பெறத் தொடங்குகிறது. இந்த அசுத்தங்கள் பிரதான நாளங்களுக்குள் சென்று அங்கிருக்கும் அடைப்புகளை வெளியேற்றும். இவ்வாறே பஞ்சகர்மா சிகிச்சை முறை மேற்கொள்ளப்படுகிறது.