2021 Sep 16
உலகை ஆட்சியை செய்யும் இரு பெரும் கொள்கையே தாராண்மைவாதம் (முதலாளித்துவம்) மற்றும் சமதர்ம (பொதுவுடமை, சோசலிசம்) கொள்கைகளாகும். முதலாளித்துவம் என்பது, உற்பத்திச் சாதனங்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனிப்பட்டவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஓர் பொருளியல் முறைமையாகும். இக்கொள்கை ஐரோப்பாவில் 18ம் நூற்றாண்டிலேயே அறிமுகமாகியது. ஜோன் லொக், டேவிட் ரிக்கார்டோ, அடம் ஸ்மித், போன்ற பழம்பெரும் தாராண்மை வாதிகள் இதனை அறிமுகப்படுத்துவதில் முன் நின்றனர். அத்துடன் இம்முறையில், முதலீடு, விநியோகம், வருமானம், உற்பத்தி, பொருள்களின் விலை குறித்தல், சேவைகள் என்பன சந்தைப் பொருளாதாரத்தினால் தீர்மானிக்கப்படுகின்றன. இதில், மூலதனப் பொருட்கள், கூலி, நிலம் மற்றும் பணம் ஆகியவற்றில் வணிகத்தில் ஈடுபடுவதற்கான தனிப்பட்டவர்களினதும், சட்ட அடிப்படையில் நபர்களாகச் செயற்படும் தனிப்பட்டவர்களைக் கொண்ட குழுக்களினதும், உரிமைகளுடன் தொடர்புபடுகின்றன.
- விவசாய முதலாளித்துவம்
- வியாபாரத்துவம்
- தொழில்துறை முதலாளித்துவம்
- நவீன முதலாளித்துவம்
இவையே முதலாளித்துவ பிரதான வகைகளாகும். ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஜேர்மன், இங்கிலாந்து, தென் கொரியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் தற்காலத்திலும் முதலாளித்துவக் கொள்கையை பின்பற்றப்பட்டு வருகிறது.
சமதர்ம கொள்கை என்பது வர்க்கமற்ற சமுதாயத்தை அமைப்பதை நோக்காகக் கொண்ட ஓர் பொருளாதார முறையாகும். இக்கொள்கை பெரும்பாலும் முதலாளித்துவ வாதிகளின் குறைபாடுகளை தீர்ப்பதற்காக உலகில் முன்வைக்கப்பட்ட ஓர் கொள்கையாகும். முதலுக்கு மேல் வரும் வருமானத்தை சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இக் கொள்கையின் பிரதான நோக்கமாகும். அத்தோடு ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு ஒழிய வேண்டும். ஜேர்மனியை சேர்ந்த கார்ள் மாக்சினால் (1818-1883) இக்கொள்கை வித்திடப்பட்டது. சோவியத் யூனியனின் தோல்வியோடு இக்கொள்கை பெரிதும் தன் தன்னளவில் இழப்பை எதிர் எதிர்கொண்டது. ஆயினும் தற்காலத்திலும் சீனா, கியூபா, வியட்நாம் போன்ற நாடுகளில் இன்றும் பொதுவுடமைக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது.
பல்லின, பன்மொழி, பல் கலாசாரத்தை பின்பற்றும் மக்களைக் கொண்டது இலங்கை நாடாகும். இலங்கை சிறு தீவாக இருப்பினும் முதலாளித்துவம் மற்றும் சமதர்ம கொள்கைகள் ஆகிய இரண்டுமே சம அளவில் ஆட்சியில் பின்பற்றப்படுகிறது. இதனாலேயே 1972ஆம் ஆண்டின் குடியரசு யாப்பின் படி இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசியல் சக்தியை தீர்மானிக்கும் 1946 ஆம் ஆண்டு டி. எஸ். சேனாநாயக்கவின் தலைமையின் கீழ் ஓர் தளர்ச்சியான கூட்டாக உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி, பிரித்தானியாவில் வளர்ச்சி அடைந்த, ஜனநாயகமே இலங்கை அரசியலுக்கு பொருத்தமானது என்றும், பிரித்தானியாவை சேர்ந்த அரசியல் ஸ்தாபனங்கள் இலங்கைக்கு உகந்தது எனவும் வாதிட்டார். இதனால் அவர்கள் தாராண்மை கொள்கைவாதிகளாகவே வரலாற்றில் இடம்பெற்று வருகின்றனர். இதனால் இவர்களது ஆட்சியில் தாராண்மை ஜனநாயகக் கொள்கைகளே பெரும்பாலும் பிரதிபலிக்கப்படுகிறது.
இலங்கையின் ஆட்சியை தீர்மானிக்கும் அடுத்து பெரும் கட்சியே இலங்கை சுதந்திர கட்சியாகும். இக்கட்சி 1951 ஆம் ஆண்டு எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவினால் அறிமுகம் செய்யப்பட்டது. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க அவர்கள், இந்திய பிரதமர் ஜவஹர் லால் நேருவுடன் மிக நெருங்கிய தொடர்புகளை பேணி வந்துள்ளார். அணிசேரா கொள்கையை இலங்கையில் பின்பற்றுமாறு பிரித்தானியாவுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி இலங்கையில் முகாமிட்டிருந்த இங்கிலாந்து கடற்படை இங்கிருந்து அகற்றினார். அத்தோடு கம்யூனிச நாடுகளுடன் இராஜதந்திர தொடர்புகளை பேணியும் வந்துள்ளார். இதனால் கட்சியின் பிரதான கொள்கையாக சோசலிசக் கொள்கை காணப்படுகின்றது.
இவ்வாறாக இலங்கையின் ஆட்சியை தீர்மானிக்கும் இவ்விரு கட்சிகளும் இவ்விரு கொள்கைகளில் இருப்பதனால் ஆட்சி மாற்றங்களின் போது, இக்கட்சியின் கொள்கையே நாட்டின் ஆட்சியில் பிரதிபலிக்கக்கூடிய தன்மையை நாம் அவதானிக்கலாம். அத்தோடு இக்காலகட்டத்தில் தொழில்நுட்பம், உதவி, அரசியல், பொருளாதாரம், போன்ற பல காரணங்களினால் இவர்களது கொள்கைகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு காலத்திற்கேற்ற வகையில் கொள்கைகள் பின்பற்றப்படுகின்றது.