கவிதைகள் உலகை நாடி பெருந்தோட்ட தொழிலாளர்களும் தொடரும் போராட்டங்களும்.

பெருந்தோட்ட தொழிலாளர்களும் தொடரும் போராட்டங்களும்.

2021 Sep 18

உலகின் எந்தவொரு மனிதனும் தன்னுடைய தேவைகளுக்காக மட்டும் அல்லாமல் தன்னைச் சார்ந்தோரது தேவைகளுக்காகவும் தன்னுடைய உழைப்பினை செலவிடுவதற்கு நிர்பந்திக்கப்படுகின்றான். ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் பொறுப்புக்கள் எனும் சுமை பொதுவானதே எனினும் ஒருசிலருக்கு மட்டும் இவை விதிவிலக்கு என்பதோடு பெரும்பாலான மனிதர்கள் ஏதோவொரு வகையிலான உழைத்தலிலேயே வாழ்நாளை செலவிடுகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்களுக்கான ஊதியம் மற்றும் தொழிலாளர் உரிமைகள் உறுதிசெய்யப்படுதல் மிகவும் இன்றியமையாதது.

இலங்கையை எடுத்துக்கொண்டால் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் தொழிலாளர் சார்ந்த பிரச்சனைகள் பரவலாக இருக்கின்ற போதிலும் பெருந்தோட்ட தொழிலாளிகளுடைய பிரச்சினைகள் எத்தனையோ ஆண்டுகளாக பேசப்படுகின்ற போதிலும் இன்றுவரை முறையான தீர்வுகள் கிடைக்கப்பெறாமலேயே உள்ளன.  பிரித்தானியர்களின் தேவைக்காக இந்தியாவில் இருந்து கூலித் தொழிலாளர்களாக இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மலையக மக்கள் இன்று இலங்கையில் இருநூற்றாண்டு வரலாற்றுக்கு உரித்துடையவர்களாக காணப்படுகின்றனர். மலையக மக்களின் அடிப்படை பொருளாதரம் என்பது பெருந்தோட்டத்துறை பொருளாதாரமாகும். மலையக மக்களே பெருந்தோட்ட பொருளாதாரத்தை உருவாக்கியவர்கள் என்றும் நோக்க இயலும். மலையக மக்கள் வரலாற்று ரீதியாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஒரே தடவையில் வர்க்க ஒடுக்குமுறை, இன ஒடுக்குமுறை என்பவற்றை புறரீதியாக எதிர் நோக்குகின்றனர். மலையகத்  தமிழர்கள் எனும் அடையாளம் அவர்கள் இந்தியர் என்ற  அந்நிய உணர்வை அவர்களிடத்தும் ஏனைய இலங்கை வாழும் மக்களிடத்திலும் ஏற்படுத்துவதாக இருக்கின்ற நிலை இன்னமும் தொடர்கின்றமை கவலைக்குரியதாகும்.

மலையகம் என்றவுடன் பச்சைப்பசேலெனக் காட்சி தரும் மலைகளும் தேயிலைச் செடிகளமே நம் நினைவிற்கு வரும். ஆயினும் அங்கு எத்தனையாயிரம் தொழிலாளர்களின் இரத்தமும், வேர்வையும் பொதிந்துபோய்க் கிடக்கின்றன என்பதை எவரும் அறிவதில்லை. எமது நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாகவும், முதுகெலும்பாகவும் பார்க்கப்படும் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளாகியும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதென்பது வெறும் கனவாகவே காணப்படுகிறது. அவ்வாறானதொரு துர்பாக்கிய நிலை இன்றுவரை தொடர்ந்துகொண்டுள்ளது.  இவர்களது கடின உழைப்புக்கு வழங்கும் ஊதியம் இவர்களது உணவுக்கே போதாத நிலையில், பொருளாதார ரீதியில் மிகவும் பின்னடைவில் உள்ளவர்களாக, தமது உரிமைகளை கேட்டும் பெறும் அல்லது தமது உரிமைகளே என்ன என்று தெரியாத நிலையில் அதிகமானோர் வாழ்கின்றனர். மலையக மக்களின் பிரச்சினைக்கான தீர்வு உடனடியாக கிடைக்காவிடினும் சர்வதேச மயப்படுத்தலின் ஊடாக உலக நாடுகளின் நிர்ப்பந்தத்தினை ஏற்படுத்தி இதனை செய்து கொள்ள முடியும். பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சர்வதேசத்தின் ஆதரவு, அழுத்தம் என்பன மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.

இவ்வாறாக இலங்கையில் பெருந்தோட்ட தொழிலாளிகள் எனும் பதத்தினுள் மலையக மக்களே பெரிதும் உள்ளடக்கப்படுகின்றனர். ஆக மலையக மக்களின் பிரச்சனைகளை உற்றுநோக்கினால் வீடு மற்றும் காணி உள்ளிட்ட பல அடிப்படை பிரச்சனைகள் முதலிய பல்வேறான பிரச்சினைகளை வரிசைப்படுத்த முடியும். முதலில் வரலாற்றளவில் பெருந்தோட்ட மக்கள் அல்லது மலையக மக்கள் என்பதனால் நாம் விளங்கிக்கொள்வது யாது என அணுகுகின்ற போது, 1820 – 1840 காலப்பகுதியில் இந்தியாவின் தென்மாநிலத்தில் வரட்சி, காலநிலை, நோய்த்தொற்றுகள், தொழில்பாதிப்புக்கள், சமூக கட்டமைப்பு மற்றும் அடக்குமுறைகள் முதலான பெருமளவிலான பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் ஏற்பட்ட போது, இச்சூழலை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஆங்கிலேயர்கள், அங்குவாழ்ந்த அப்பாவி மக்களை கூலித்தொழிலாளர்களாக இலங்கைக்கு அழைத்துவந்தனர். மிலேச்சத்தனமான முதலாளித்துவமும் கம்பனிகளின் ஏகாதிபத்தியமும் இவர்களுடைய உழைப்பினை சுடண்டுவதுடன் மட்டும் அல்லாமல் அவர்களுடைய அடிப்படை தேவைகளையும் கூட கேள்விக்குள்ளாக்குகின்றன.

இவ்வாறு இங்கு குடியேறிய மக்கள் தேயிலை, இறப்பர் முதலிய பெருந்தோட்ட செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1998 ஆம் ஆண்டு தொடக்கம் கூட்டு ஒப்பந்த முறைமையே தீர்மானித்துவருகிறது. அதன்படி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முதலாளிமார் சம்மேளனம் மற்றும் மூன்று தொழிற்சங்கங்களும் இணைந்து கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடுவது வழமையாக இருக்கின்றது. இவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் அவர்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட போதுமானதாக இருக்கின்றதா என வினவினால் நிச்சயமாக இல்லை. இலங்கையின் பொருளாதாரத்தில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பது பெருந்தோட்ட செய்கையாக இருக்கின்ற போதிலும் அத்தொழிலில் ஈடுபடும் மக்கள் காலம் காலமாக அல்லலுறுவதாகவும் பல்வகைப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதாகவுமே அமைகின்றது.

தொடர்ச்சியாக பேசுபொருளாகிவரும் இச்சம்பளப் பிரச்சனையை கூட்டு ஒப்பந்த முறைக்கு முன் மற்றும் பின் என்று பிரித்து ஆழமாகப் பார்த்தால் கூட்டு ஒப்பந்த முறை உருவாக்கப்பட முன்னரும், கூட்டு ஒப்பந்த முறை உருவாக்கப்பட்ட பின்னரும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காத நிலையில் சிறியளவிலான சம்பள அதிகரிப்பை கூட தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தே பெற்றுக்கொண்டனர் என்பதை புரிந்துகொள்ள முடியும். இம் மக்களின் பிரச்சினைகள் அநேகமாக உள்ளன.  இந்நிலையில் இப் பிரச்சினைகள் சர்வதேசமயப்படுத்தப்படவில்லை என்றும் தேசியப் பிரச்சினைகள் எனும் வரையறைக்குள் உள்வாங்கப்படவில்லை எனும் கருத்துக்கள் பலவும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் மலையக மக்களின் பிரச்சினைகள் பலவும் தொடர்ந்தும் தீர்க்­கப்படாத நிலையிலேயே காணப்படுவதாகவும் அறியப்படுகிறது. எனினும் மலையக மக்களின் பிரச்சினைகள் சர்வதேசத்துக்கு போகவில்லை. எனினும் சர்வதேச மயப்படுத்த வேண்டிய அவசியம் காணப்படுகின்றது. மலையக மக்களின் பிரச்சினைகள் இன்று உள்நாட்டில் அடிக்கடி வலியுறுத்தப்படுகின்றன.

மலையக தொழில்முறைமை கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படை என்றபடியினால், அதன் பிரகாரம், 300 நாட்கள் வருடத்திற்கு வேலை வழங்கப்பட வேண்டும். சம்பள நிர்ணய சபையினால், சம்பளத்தை மாத்திரமே நிர்ணயிக்க முடியும் என்பதுடன், வேலை நாட்களை அவர்களினால் நிர்ணயிக்க முடியாது. இவ்வாறான நிலையில், தற்போது வேலை நாட்களை தீர்மானிப்பதில் பிரச்சினை எழுந்துள்ளதாக அறிய முடிகின்றது. மலையக மக்களது சம்பள பிரச்சினை தொடர்பில் ஆராய்கின்ற போது சம்பள உயர்வு தொடர்பில்  தொடர்சியாக ஏமாற்றத்திற்கு உள்ளாகிவரும் தோட்டத் தொழிலாளர்கள் விலைவாசி உயர்வை சமாளிக்கமுடியாது மிகுந்த நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். அரசின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில், 2013 ஆம் ஆண்டில் 4 பேரைக்கொண்ட குடும்பம் ஒன்றுக்கு மாதாந்தம் தமது தேவைகளை பூர்த்தி செய்ய 47,600 ரூபாய் தேவைப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் சொற்பமான வரையறையற்ற 620 ரூபாய் அவர்களுக்கு பெரும்சவாலே. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தமானது புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் 2015 ஆம் ஆண்டிற்கான ஒப்பந்தத்தின் போது தினக்கூலி 1000 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும் எனும் தொனி உரக்க ஒலித்தது.

ஆயினும், மலையக மக்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கைச்சாத்திடப்பட வேண்டிய புதிய கூட்டு ஒப்பந்தம் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டது. அத்துடன் இத்தொழிலாளர்களது கோரிக்கைகளுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் புறக்கணிப்புக்களும் இருக்கவே செய்தன. இந்நிலையில் 2016 செப்டம்பர் 27 ஆம் திகதி முதல் 1000 ரூபாய் சம்பள உயர்வு கோரி தொழிலாளர்கள் 23 நாட்கள் போராட்டங்களை முன்னெடுத்த அழுத்தத்தை தொடர்ந்து 2016 ஒக்டோபர் 18 ஆம் திகதி வெறுமனே 110 ரூபாய் அதிகரிப்புடன், 730 ரூபாய் தினக்கூலியாக அறிவிக்கப்பட்டு புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது. ஆயினும் அனேகமான தோட்டப் பகுதிகளில் குறித்த 730 ரூபாய் சம்பளமானது அனைத்து தொழிலாளர்களுக்கும் கிடைப்பதில்லை. பெரும்பாலும் அடிப்படைச் சம்பளமான 500 ரூபாயும் அதற்கு மேலதிகமான கொடுப்பனவும் மாத்திரமே தொழிலாளர்களுக்கு கிடைக்கிறது என்பது நிதர்சனம். அதேபோல், நாள் ஒன்றிற்கு பதினெட்டு கிலோ கிராம் தேயிலைக் கொழுந்து பறித்தால் மட்டுமே முழுமையான சம்பளம் வழங்கப்படும். அத்துடன் 18 கிலோ தேயிலைக் கொழுந்து பறிக்கப்படாத சந்தர்ப்பத்தில் மேலதிக கொடுப்பனவான 140 ரூபாய் தரப்படுவதில்லை என்று தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆயினும் இவர்களுடைய போராட்டங்களும் கோரிக்கைகளும் தொடர்ச்சியாக ஒலித்துக்கொண்டே இருந்தன. கூட்டு ஒப்பந்தத்தின் படி, 1000 ரூபா சம்பளத்தை வழங்க கம்பனிகள் நிராகரித்து வந்த சந்தர்ப்பத்தில், பிரச்னைக்கான தீர்வை பெற்றுக்கொள்வதற்காக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் தொழில் அமைச்சின் ஊடாக, சம்பள நிர்ணய சபையை நாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவை தவிர தேயிலைக் கொழுந்து பறிக்கும்போது பல பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது. குளவிக்கொட்டுக்கும், அட்டைக்கடிக்கும் இலக்காகும் தொழிலாளர்கள் வைத்தியசாலை செல்ல வேண்டிய தேவைகள் அதிகம் காணப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சம்பள இழப்பேற்படுகிறது. அத்துடன் அடிக்கடி ஏற்படும் தொற்று/ தொற்றா நோய்கள் மிகவும் குறைவான வதிவிட வசதிகள், போக்குவரத்து இடர்கள் என்பவற்றோடு, விலைவாசி அதிகரிப்பின் காரணமாக குடும்பம் ஒன்றின் ஒருநேர உணவிற்கு மாத்திரம் குறைந்தது 400 ரூபாய் வரையில் செலவாகும் நிலையில் குறித்த 730 ரூபாயானது போதுமானதாக அமைந்துவிட வாய்ப்பில்லை.

இதனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பள பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க பல்வேறு தரப்பினர், பல்வேறு வகையிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். நூவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவ, சாமிமலை, நோர்வூட், நானு ஓயா, டிக்கோய போன்ற பிரதேசங்களின் பல்வேறு தோட்டங்களை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் பரவலாக  எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தொழிலாளர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட 1000 ரூபா சம்பளக் கோரிக்கையை ஏனைய கட்சிகளும், தொழிலாளர்களும் ஏற்றுக்கொண்டமையினால் குறித்த கோரிக்கை வலுப்பெற்றிருந்தது. இந்த நிலையில், சம்பள நிர்ணய சபையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட தீர்மானங்களுக்கு கம்பனிகள் தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், வாக்கெடுப்பின் மூலம் மலையக மக்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை வழங்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன.

சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்தை எதிர்த்து, சுமார் 180திற்கும் அதிகமான எதிர்ப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையிலும் கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதி தோட்டத்தொழிலாளர்களுடை ஒரு நாள் கூலி 1000.00ஆக உயர்த்தப்பட்டது. இவ்வாறாக தொடர்ச்சியான ஆறு வருட போராட்டங்களின் பின்னரே அவர்கள் இத்தகைய தீர்வினை பெற முடிந்தது. இவ்வாறாக குறைந்த பட்ச நாளாந்த சம்பளமாக 900 ரூபாவும், வரவு செலவுத்திட்ட சலுகைக் கொடுப்பனவாக 100 ரூபாவுமாக நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாகவுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அன்மையக் காலங்களில் மலையகத் தமிழர்களும் கல்விக்கு முன்னுரிமை கொடுத்தும் மற்றும் பல்வேறு வணிகங்களில் தம்மை ஈடுபடுத்தி வருவதனாலும் முன்னேற்றமான சூழல் உருவாகி வருகின்றது. அடிப்படை ஊதியப்பிரச்சனை காலம்காலமாக தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. நாட்டின் விலைவாசி அதிகரிப்பு மற்றும் சமூக தேவைகளுக்கேற்ப காலத்திற்கும் வேதம் தொடர்பில் அரசிற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தோட்டத்தொழிலாளர்கள் தத்தமது முன்னேற்றத்திற்கு கல்வியின் மூலம் சமுதாய கட்டமைப்பினை உயர்த்துவதற்கு முயற்சிகள் எடுத்தல் நன்று. இலங்கையின் பொருளாதாரத்தின் மிக முக்கியமான அம்சமாக பெருந்தோட்ட செய்கைகள் காணப்படுகின்ற போது தொழிலாளர் நலன் குறித்த அரசின் கண்ணோட்டமும் மாற்றமடைய வேண்டும். இனி வரும் தலைமுறைகள் சம்பளத்திற்கோ அல்லது தத்தமது பிற உரிமைகளுக்கோ பல ஆண்டுகள் காத்திருத்தல் எனும் அவல நிலை அடியோடு மறைய கல்வியே பிரதான சக்தி என்பதை உணர்தலோடு அரசியல் கட்சிகளும் பெருந்தோட்ட கம்பெனிகளும் தத்தமது அணுகுமுறைகளை மக்கள் சார்பாக வகுத்துக்கொள்ளுதல் நன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php