Macro-கதைகள் மாயம் செய்யும் “மைக்”

மாயம் செய்யும் “மைக்”

2021 Sep 17

மைக் மோகனுக்கு அந்த பெயர் வந்ததற்கான காரணம் எனக்கு ஓரளவு தெரியும். அது பொருத்தமான பெயர் தான், ஆனால் என்னை கேட்டால் இந்த மனோகர் பயலுக்கு தான் அந்த  அடை மொழி வரவேண்டும் என்று கூறுவேன்.

மனோகரை போல மனிதர்களை உலகம் அறியாது. அல்லது அறியாத வரை நல்லது. எனக்கு தெரிந்து நான் படும் பாடு போதாதா? மனோகரின் சிறுவயது முதல் அவர் கேட்டு ரசித்த விசித்திரமான கற்பனை கதைகளை உண்மையாக்கி பார்க்கவேண்டும் என்ற கிறுக்குத்தனம் தான் நடந்த இத்தனை குளறுபடிக்கும் காரணம்.

அடிப்படையில் மனோகர் ஒரு விஞ்ஞானி. அவர் எப்படிப்பட்ட விஞ்ஞானி என்பதில் தான் சிக்கல் இருக்கிறது. விஞ்ஞானத்தையும், மாயாஜாலத்தையும் கலந்து புதுவகை கண்டுபிடிப்புக்களை நிகழ்த்த முடியும் என்பது தான் அவரது நம்பிக்கை. நிரூபித்தும் காட்டிவிட்டார். இதற்காக அவருடைய வாழ்க்கையில் பாதி காலத்தை செலவிட்டு இருக்கிறார்.

முதலில் அவருக்கும் எனக்குமான தொடர்பை சொல்லிவிடுகிறேன். அது தான் முறையாக இருக்கும். மனோகர் தான் என்னுடைய தந்தை. என் பெயர் கதிர். என்னதான் அந்த மனிதர் என்னுடைய தந்தையாக இருந்தாலும் அவர் செய்யும் காரியங்களால் நான் படும் அவஸ்தை தான் என்னை இந்த அளவு விரக்தியடைய வைத்துள்ளது.

இந்த கிறுக்குத்தனம் எல்லாம் என்னுடைய பாட்டா, பூட்டா மூலம் வந்தது. ஆமாம் எங்கள் பரம்பரையை சேர்ந்தவர்கள் அந்த காலத்தில் மாயாஜாலங்களிலும், பில்லி சூனியங்களிலும் கைதேர்ந்தவர்கள். நாங்கள் பரம்பரையாக இதை செய்து வருகிறோம். ஆனால் இதை எல்லாம் வெளியில் காட்டிக்கொள்வது இல்லை. எல்லோரையும் போல சாதாரணமாக தான் திரிவோம். எங்கள் பரம்பரை சட்டத்தின் படி நாங்கள் இப்படிப்பட்டவர்கள் என்பது எங்களை அல்லாத வெளி நபர்களுக்கு தெரியக்கூடாது. எங்களுக்கு என்று ஒரு ரகசிய கல்விமுறை, சட்டமுறை எல்லாம் இருக்கிறது. அதை மிக தீவிரமாக ஆராய்ந்து கற்ற என்னுடைய தந்தை, அதாவது மனோகர் அதை நவீன விஞ்ஞானத்துடன் கலந்து புதிய வகை ஒன்றை கண்டு பிடித்துவிட்டார். அப்படி  அவர் கண்டு பிடித்தவற்றை சரிப்பார்த்துவிட்டு அவரே அழித்துவிடுவது அவரது வழக்கம். ஏனென்றால் அவை சமூகத்துக்கு சந்தேகமின்றி ஆபத்தானவை. ஏன் எனக்கே அவ்வப்போது அவற்றில் எதையாவாது ஒன்றை உருவி பணம் பார்க்கலாம் என்ற எண்ணம் வராமல் இல்லை. அப்படி செய்தால் நான் பரம்பரையின் சாபத்துக்கு ஆளாவேன். என் உடம்பில் உள்ள இரத்தம் உறைந்து கொடூரமான முறையில் எனக்கு மரணம் நிகழும் என்பது ஐதீகம். எதற்கு வம்பு இந்த இன்ஜினியர் தொழிலே எனக்கு ஒரு சாபம் போல தான் உள்ளது. எனக்கும் எதோ இரண்டு மூன்று மாய மந்திரங்கள் தெரியும். ஆனால் அப்பா போல நான் பாண்டித்தியம் பெற்றவன் கிடையாது.

கூடுவிட்டு கூடு பாய்வது, மனிதனின் ரகசியங்களை எடுக்கும் எக்ரே-மிஷின், விதைத்ததுமே மரமாகும் விதை, எதிர்காலம் காட்டும் மாயக்கண்ணாடி, பார்ப்பவர் கண்களில் இருந்து நம்மை மறைக்கும் அதிசய பொடி  இப்படி அவர் கண்டு பிடித்து அழித்ததை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் இப்போது அவர்  கண்டுபிடித்திருப்பது ஒரு வித்தியாசமான பொருள். அது ஒரு “மைக்”. ஆனால் அது எல்லாவற்றுக்கும் மேலாக இருக்கிறது.

அப்படி இதன் அதிசயிக்க வைக்கும் ஆக்கத்திறன் என்ன என்று கேட்டால்; அந்த மைக்கை தொட்டு பேசும் ஒருவரால் உண்மையை தவிர வேறு ஒன்றும் பேச முடியாது. ஆமாம் அது யாராக இருந்தாலும் சரி அவர் அந்த மைக்கை பிடித்து பேச ஆரம்பிக்கையில் அவரது அடிமனதில் இருக்க கூடிய உண்மை மட்டுமே வெளிப்படும். சத்தியமாக எந்த காரணத்தால் தூண்டப்பட்டு இப்படி ஒரு கண்டுபிடிப்பை அவர் நிகழ்த்தினார் என்று தெரியவில்லை. நான் சொல்லும் இந்த மைக்கின் இயல்பு கேட்பதற்கு வேண்டுமானால் உங்களுக்கு சாதாரணமாக தெரியலாம். ஆனால் அதன் விளைவு சர்வ நாசமானது.

அப்பா எதை கண்டு பிடித்தாலும் அதை என்னை வைத்து தான் சோதிப்பார். அவரின் பரிசோதனை எலி நான் தான். அன்றும் அந்த மைக்கை கொண்டு வந்து என்னிடம் தான் கொடுத்தார். அதை கண்டுபிடிக்க சுமார் ஆறுமாதங்கள் வரை தேவைப்பட்டதாக பெருமிதம் பொங்க சொன்னார். ஆனால் அதன் வில்லங்கம் என்ன என்று என்னிடம் சொல்லில்லை. என் அறைக்கு வந்து அதை என் கையில் கொடுத்து அதைப்பிடித்தபடி அவரைப்பற்றி ஏதாவது பேச சொன்னார். ஆரம்பத்தில் அது மின்சாரம் இல்லாமல் இயங்கும் மைக் போல என்று தான் நான் நினைத்தேன். அவர் கேட்டது போலவே அவரை பற்றி பேச ஆரம்பித்தேன். அவரது திறமைகளையும் அவரது சாதனைகளையும் எனக்கு அவர் மேல் இருக்கும் மரியாதையையும் பற்றி சொல்லிக்கொண்டு இருந்தேன். ஆனால் மெல்ல மெல்ல என்னை அறியாமல் அப்பா பற்றிய என்னுடைய ஆழ்மன எண்ணங்கள் வார்த்தைகளாக வெளிவந்தது.

அப்பா அவரது காலம் முழுவதும் வீட்டை கவனிக்காது ஆராய்ச்சி கூடத்திலேயே நேரம் கழித்ததைப் பற்றியும், சிறுவயது முதல் என்னுடனும், தங்கையுடனும் அவர் அன்பாக நேரம் செலவளித்தது இல்லை என்றும், அம்மாவையும் அவர் பெரிதாக கவனித்தது இல்லை  என்றும் சொன்னேன். ஏதாவது கண்டு பிடிப்பை ஆராய வேண்டும் என்றால் மட்டும் தான் என் அறைக்கே அவர் வருவார் என்று என்னுடைய ஆழ்மன குமுறல்களை அடுக்கிக்கொண்டே போனேன். என்னையும் அறியாமல் அத்தனையும் பேசிமுடிய அந்த மைக்கை கீழே வைத்தேன். அப்பா தலைகுனிந்திருந்தார். எப்போதும் அவரது கண்டுபிடிப்புகள் வெற்றி பெற்றால் ஆனந்தக்கூத்தாடுவார். இன்று ஒன்றும் பேசாமல் அறையைவிட்டு சென்றுவிட்டார். நானும் அவரிடம் எதுவும் கேட்கவில்லை.

எங்களின் இந்த விஷப்பரீட்சை எதையும் என் தங்கை ஷைலா அறிந்திருக்கவில்லை. அன்று அவள் தோழி சுஸ்மிதாவின் ”வெடிங் ரிசப்ஷன்”. ஒரு வாரமாகவே வீட்டில் இந்த கல்யாண கதை தான். ஏதோ அவளுக்கே கல்யாணம் என்பது போல அலட்டிக்கொண்டாள். ஷைலாவின் நண்பர் குழுவில் இது தான் முதல் கல்யாணமாம். பத்தாத குறைக்கு அவளது தோழிகள் வேறு. மருதாணி சடங்கில் இருந்து கல்யாணம் வரை,  தோடு முதல் காலணி வரை என்ன என்ன அணிய வேண்டும் என்று எங்கள் வீட்டில் தான் கடையை விரித்தார்கள்.  இரவு பகலாக உழைத்தார்கள். வீட்டில் சீனியும் பாலும் அவர்களுக்கு டீ போடுவதிலேயே முடிந்துபோனது. அவர்கள் வந்தாலே வீட்டைவிட்டு நைசாக நழுவி விடுவேன்.

அன்று அப்பா கண்டு பிடித்த ”மைக்” என் அறையில் தான் இருந்தது. வழக்கமாக அழித்துவிடு என்று சொல்லிவிட்டுப் போவார். அன்று அந்த மைக் செய்த விளைவினால் அப்படியே சென்றுவிட்டார். அவர் சென்றபின் நானும் ஒரு அவசர வேலையாக வெளியே சென்றுவிட்டேன். ஆரம்பத்தில் இருந்தே இந்த கல்யாண விஷயத்தில் ஷைலா என்னிடம் கேட்டு வந்த  உதவிகள் எதையும் நான் பொருட்படுத்தவே இல்லை. அவள் தோழி சுஸ்மிதாவை எனக்கு பிடிக்காது என்பதும் அதற்கு காரணம். அன்றும்  ஏதோ ஒரு உதவி தேடி  என் அறைக்கு ஷைலா வர அவள் கண்களில் அந்த மைக் சிக்கியது. பார்க்க ஒரு தினுசாக இருந்த அந்த மைக்கை எதற்கும் தேவைப்படும் என்று கொண்டு சென்றுவிட்டாள். இத்தனைக்கும் ஹாலுக்கு மைக் மற்றும் ஸ்பீக்கர் செட்டப் வரும் என்பது அவளுக்கு தெரியும். என் தங்கை பொதுவாக நூற்றிப்பத்து புள்ளிக்கு படிப்பவள்.

மாலையில் நான் வீடு  திரும்ப, மைக் அங்கு இல்லை. அவளும் இல்லை. எனக்கு பகீர் என்றது. மைக் வெளியில் சென்றவிடயம் மட்டும் அவர் அறிந்தால் நான் செத்தேன். நல்லவேளையாக அப்பா வீட்டில் இருக்கவில்லை. அம்மாவிடம் கேட்டதற்கு அவர் எங்கோ வெளியில் போய் இருப்பதாக சொன்னார்கள். விஷயம் தெரிந்ததும் வண்டியை கிளப்பியபடி ஒரே பாய்ச்சலாக ரிஷப்ஷன் ஹாலுக்கு வந்து சேர்ந்தேன்.

அதற்குள் அத்தனையும் கைமிஞ்சி சென்றுவிட்டது. இவ்வளவு பெரிய விபரீதம் நடக்கும் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. நான் மண்டபத்துக்கு நுழையும் போது கிட்டதட்ட மண்டபம் வெறிச்சோடி இருந்தது. ஆங்காங்கே ஒரு சில கும்பல் தென்பட்டது. அவர்களும் புறப்பட தயாராகி இருந்தார்கள். அந்த இடமே சூன்யமாக காட்சியளித்தது.

சுமார் முப்பது நிமிடங்களுக்கு முன் அங்கு நடந்தது என்னவென்றால்…….,

ரிசப்ஷன் முடிந்து எல்லோரும் ஆட்டம், பாட்டம் என்று சுற்றிக்கொண்டு இருக்க அந்த திருமண ஜோடியின் நண்பர்கள் மணமகன் மணமகளை வாழ்த்தி உரையாற்ற ஆயத்தமானார்கள். அப்போது மணமகள் பக்கம் இருந்த நண்பன் ஒருவன் என் அப்பாவின் கண்டுபிடிப்பை கையில் எடுத்திருக்கிறான். நன்றாக தான் ஆரம்பித்து இருக்கிறான். ஆனால் பேச்சு  மெல்ல மெல்ல மாறியது.
”மைக்”  தன் சில்மிஷத்தை தொடங்கியது. அந்த உற்ற நண்பனை உணர்ச்சிவசப்பட வைத்த மைக் அவன் ஆழ்மனதை அவிழ்த்துவிட்டது. அவனுக்கும் மணமகள் சுஸ்மித்தாவிற்கும் சில மாதங்களின் முன் வரை இருந்த தொடர்பை ஒன்றுவிடாமல் விபரித்தான். சென்ற வருடம் அவன் அவளுடன் நுவரெலியா சென்றது வரை எல்லாவற்றையும் கூறி பேச்சாற்றியிருக்கிறான். அது தான் இந்த அசம்பாவிதத்துக்கு காரணம். இது எல்லாம் மாப்பிள்ளைக்கு தெரியும். ஆனால் இருவீட்டாருக்கு எப்படி தெரியும்? மாப்பிள்ளை வீட்டார் ஒரு பக்கமும் பெண் வீட்டார் ஒரு பக்கமும் வெளியேறியது தான் மிச்சம். தலையில் கை வைத்தவாறு என் தங்கை கதை  சொன்னதை  கேட்கும் போது அந்த மாப்பிள்ளை மீது கொஞ்சம் பாவமாக தான் இருந்தது.

சரி ஆனது ஆச்சு. அந்த மைக்கால் என்ன செய்ய முடியும் என்பதை அறிய இந்த சின்ன உதாரணமே போதும். நாம் வந்த வேலையை கவனிப்போம் என மைக்கை தேட ஆரம்பித்தேன். அப்போது தான் அது ஏற்கனவே ஸ்பீக்கர் செட்டப் கொண்டு வந்தவர்களின் மைக்கோடு சென்றுவிட்டது என்பது தெரிந்தது. இது என்னடா மைக்குக்கு  வந்த சோதனை என அலசி ஆராய்ந்து அந்த மைக் செட் சொந்தக்காரரின் மொபைல் இலக்கத்தை வாங்கி பேசினேன். அந்த மைக் அன்று இரவு நடக்க போகும் ஆளுங்கட்சியின் கூட்டத்திற்கு சென்றிருப்பதாக சென்னார். குறைந்தது இரண்டாயிரம் பேராவது கூடும் மிகப்பெரிய நிகழ்ச்சி அது. போனை கட் செய்தேன். நடக்க போகும் விளைவுகள் என் கண் முன்னே வெளிச்சமிட்டது. ஒரு நிமிடம் தாமதிக்காது வண்டியை ”சர்ர்ர்” என்று கிளப்பிக்கொண்டு அந்த இடத்தை நோக்கி சீறிப்பாய்ந்தேன்.

எழுத்து – மஹின் சுப்பிரமணியம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php