உலகை நாடி தற்கால சிறுவர்கள் இழந்தவை என்னென்ன?

தற்கால சிறுவர்கள் இழந்தவை என்னென்ன?

2021 Oct 1

“குழல் இனிது யாழ் இனிது என்பர்
குழந்தைகளின் மழலை மொழி கேளாதார்…”

மழலைப்பருவம் மனதோடு உறையும் என்பர். ஒவ்வொரு தனிமனித வாழ்விலும் அவர்கள் மகிழ்ந்திருந்த கணங்களை கேட்டால் அது மழலைப்பருவமே என்பர். சிறுவர்கள் என்போர் மனித சமூகத்தின் மிக முக்கிய பகுதியினராகக் கருதப்படுகின்றனர். மனச்சுமைகளோ எண்ணக்குறைகளோ அல்லாத தூய்மையான பருவம். மழலைகள் சிறுவர்கள் என்றெண்ணும் போதே நம்முடைய சிந்தனைகள் எல்லாம் கடந்தகால நினைவலைகளை நோக்கி பயணிக்கின்றதல்லவா. ஆம் இத்தகைய பெறுமதிமிக்க சிறுவயது பராயம் இன்றைய சிறுவர்களுக்கு எவ்வாறுள்ளது என்று அணுகுவோமானால் முன்னைய காலத்து சிறாரது வாழ்க்கை நெறிமுறைகள் மற்றும் அனுபவங்களில் இருந்து முற்று முழுதும் வேறுபட்டதாகவே தற்கால சிறார்ப்பருவங்கள் நகர்கின்றன. அவ்வகையில் மூன்று வயது முதல் 16 வயது வரையான காலப்பகுதியை சிறார் பருவம் என்று குறிப்பிட இயலும்.

எமது முந்தைய தலைமுறை பேணி வந்த ஒழுக்க விழுமியங்கள் தற்போது எட்டாக்கனியாகி கொண்டிருப்பது ஒரு கசப்பான உண்மையாகும். ஆம் இன்றைய சிறுவர்களது கூடிவாழ்தல் மற்றும் ஆக்கபூர்வமான சிந்தைகளுக்கு மட்டுப்படுத்தும் விதமாகவே இன்றைய சமூக நடத்தைகள் மாற்றமடைந்து உள்ளது. காரணம் மிக துரிதமாக அதிகரித்து வரும் நவீனத்துவங்களும் தொழில்நுட்ப பார்வைகளுமே. இதன் பீடிப்பு மக்களது மனநிலைகள் மற்றும் வாழ்க்கை முறைகளையும் பாரியளவில் வியாபித்து மற்றது என கூறினால் ஆச்சரியம் ஏதுமில்லை. பெற்றோர்கள் தத்தமது பிள்ளைகள் கல்வி, விளையாட்டு, விஞ்ஞானம் என அனைத்திலும் மேலோங்க வேண்டும் என எதிர்பார்ப்பது ஆரோக்கியமானதே ஆயினும் இவற்றிற்கான அவர்கள் பிள்ளைகள் மீது பிரயோகிக்கும் பிரயத்தனங்களே பிறழ்வான விளைவுகளுக்கு வழிகோலுகின்றன. வெறுமனே பரீட்சை பெறுபேறுகளை மட்டுமே மையப்படுத்தி சிறுவர்களை முழுநேர கற்றல் கற்பித்தலில் ஈடுபட நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறுவர்கள் அவர்களுடைய மழலைப்பிராயத்தை தொலைப்பவர்களாகவும் மகிழ்ந்திருக்க வேண்டிய காலங்களை இழப்பவர்களுமாகவே உள்ளனர்.

தற்காலகட்டத்திலும் பார்க்க கடந்த காலங்களில் சிறுவர்கள் சுந்திரமானவர்களாக சித்தரிக்கப்படுகின்றது. அத்துடன் கிராமிய விளையாட்டுகளில் திழைத்தவர்களாகவும் கலாச்சாரம் பண்பாடுகளில் முழுமையான ஈடுபாடு கொண்டவர்களாகவும் ஒழுக்க நெறிகளை பின்பற்றுபவர்களாகவும் இருந்தமையை காண முடிகிறது. காரணங்களை நோக்கினால் அக்காலகட்டத்தில் மக்களிடையேயான இடைத்தொடர்பானது நேரடித்தொடர்பாகவே காணப்பட்டது. இந் நிலையில் பொழுதுபோக்காக இருப்பினும் கலை கலாச்சாரமாக இருப்பினும் சம்பிரதாயங்களாக இருப்பினும் அனைத்தும் சுற்றத்துடன் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டது. இந் நிலையில் மக்களிடையேயான இடைத்தொடர்புகள் மிகவும் வலுப்பெற்றதாக காணப்பட்டது.

இன்னும் ஆழமாக நோக்கினால் நாம் தொழில்நுட்ப உலகில் இருக்கின்றோம். இந் நிலையில் சிறுவர்கள் தொழில்நுட்ப சாதனங்களை கையாளுதல் மறுக்கப்பட முடியாததொன்றாக உள்ளது. இந் நிலையில் சிறுவர்கள் தமது வயதிற்கு தகாத பலவற்றை இள வயதிலேயே அறிய நேரிடுதல் அவர்களுடைய சிறுவர் பராயத்தை இழக்கச் செய்கிறது. இவை மட்டும் அல்லாமல் மைதானங்களில் நேரங்களை செலவிட வேண்டியவர்கள் கணித்திரையில் மூழ்கிக் கிடக்கின்றனர். தற்காலத்தில் எங்குபார்த்தாலும் இலத்திரனியல் ஊடகங்கள். தொலைக்காட்சி கணனி வீடியோ விளையாட்டு  டெப்  கையடக்க தொலைபேசி என பலவகையில் இலத்திரனியல் சாதகங்கள் நமது சிறுவர்களை ஆட்கொண்டுள்ளன. இவற்றில் சராசரியாக 7 மணித்தியாளங்களை நாள் ஒன்றிற்கு சிறுவர்கள் செலவிடுவதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் சிறுவர்களுக்கு கல்வி முன்னிலைப்படுத்தப்பட்டாலும் பாடசாலை தவிர்ந்த மேலதிக கல்வி குறிப்பிடப்படுமளவிற்கு கட்டாயமானதாக இருக்கவில்லை. மாறாக பள்ளி தவிர்ந்த ஏனைய பொழுதுகளில் சிறுவர்கள் தத்தமது குடும்பத்தினருடனும் சகவயது குழுக்களுடனும் நேரத்தை செலவிட்டனர். குடும்பங்களுடன் நேரத்தை செலவிடக்கிடைக்கும் சந்தர்ப்பங்களில் குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான உறவு வலுப்பெற்றதுடன் பரம்பரைகளுக்கிடையிலான புரிதலும் முனனிலைப்படும் வாய்ப்புக்கள் கிடைத்தன. பெரும்பாலான குடும்பங்கள் கூட்டுக் குடும்பங்கள் என்றபடியினால் பொதுச்சமூக வெளிக்கு தேவையான ஒற்றுமை, புரிதல், விட்டுக்கொடுப்பு, சகோதரத்துவம், உடைமை பேணல், நபர்களுக்கிடையிலான தொடர்பாடல், பெரியோரை கனம் பண்ணுதல் முதலான நெறிகளினை குடும்பங்களிலிருந்தே அனுபவ வாயிலாக பெற்றுக்கொண்டனர்.

இவை தவிர அக்காலத்து சிறுவர்கள் மிகவும் சுதந்திரமானவர்கள் என் குறிப்பிடுவதற்கு இன்னுமொரு பிரதான காரணமாக விளையாட்டுக்களை குறிப்பிட முடியும். அதாவது கிராமிய விளையாட்டுகளான கிளித்தட்டு, கிட்டிப்பொல், கெந்தி, ஆடும் வீடும், பம்பரம், கண்ணாமூச்சி, பட்டம் விடுதல், மண் விளையாட்டுக்கள் முதலான ஒன்றுகூடல் விளையாட்டுக்களையே அதிகளவில் விளையாடினர். ஆனால் இத்தகைய விளையாட்டுகளை வெறுமனே செவிவழியாகவும் படங்கள் மூலமாகவும் மட்டுமே இன்று அறியக்கூடியதாக உள்ளது. இன்றைய காலகட்டத்திலும் சிறுவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர் என்ற போதிலும் அது எவ்வளவு தூரம் அனைத்து சிறுவர்களையும் சென்றடைகிறது என்பது கேள்விக்குறியே. அது மட்டும் அல்லாமல் இன்று ஏராளமான சிறுவர்கள் வெறுமனே திரை/மென் விளையாட்டுகளிற்கே (வீடியோ கேம்ஸ்) அடிமையாகியுள்ளனர். தரமான பொழுதுபோக்கு ஊடகங்களில் சிறுவர்களும் கட்டிளம் பருவத்தினரும் ஈடுபடுவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவு நாள் ஒன்றிற்கு ஒன்று முதல் இரண்டு மணித்தியாலங்களே ஆனாலும் இன்றைய சிறுவர்கள் நாள் முழுவதையும் இலத்திரனியல் சாதனங்களூடே கழிக்க விரும்புகிறார்கள்.

இன்றைய சிறுவர்கள் பாரியளவில் நாட்டம் செலுத்தும் வீடியோ கேம்கள் என்ற நிலைப்பாட்டை அணுகும் போது சிறுவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். சமூக மயமாக்கல் குறைவதோடு குடும்பத்தில் இருந்தும் தனிமைப்பட்டவர்களாகவே உள்ளனர். அத்துடன் சிறுவர்களது ஆக்கபூர்வ சிந்தனைகள் மழுங்கடிக்கப்படுவதுடன் புத்தாக்க முயற்சிகளும் அறிந்தோ அறியாமலோ மறுக்கப்படுகின்றன. பல மணி நேரத்தை வீடியோ கேம்களிலேயே நிறைய சிறுவர்கள் செலவிடுகிறார்கள். இதனால் அவர்களுடைய மனநலம் பாதிப்படைவதற்கான வாய்ப்புக்களும் அதிகரிக்கின்றன. அத்துடன் பிரமை உலகிலேயே சிறுவர்கள் உழல்கின்றதோடு வளர்கால மன இறுக்கத்திற்கும் உள்ளாகுகின்றனர். ஒரு இளைஞன் பிறழ்வான நடத்தை சார் கோலங்களை வெளிப்படுத்துகிறான் எனில் அவனுடைய மழலைப் பருவம் ஆரோக்கியமானதாக அமைந்திருக்கவில்லை என்பது பொதுவான பரவலான அணுகுதல். ஆக ஒவ்வொரு பெற்றோரும் தத்தமது சிறாரது மழலைப்பருவம் ஏன் இன்றியமையாதது என்றும் அம் மழலைப் பருவம் ஆரோக்கியமானதாக அமைய தவறும் பட்சத்தில் சிறாரது எதிர்காலம் பாதிப்புறும் என்பதை அறிந்திருத்தல் அவசியம்.

பெரும்பாலான வீடியோ கேம்களில் எவ்வித விழுமிய பண்புகளும் போதிக்கப்படுவதில்லை. மாறாக துன்புறுத்தல், சண்டைக்காட்சிகள், ஆயுதப்பிரயோகங்கள் போன்றவற்றையே வெளிக்காட்டுவதுடன், வெற்றி பெறுதல் மட்டுமே மகிழ்ச்சியை தரக்கூடியது எனும் மனப்பான்மையை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் தோல்விகளை ஏற்றுக்கொள்ளாத பண்பினராக சிறுவர்கள் வளர்கின்றனர். இவை மட்டும் அல்லாமல் சுயநல மனப்பான்மை, போட்டித்தன்மை, பொறாமை, விட்டுக்கொடுப்பின்மை போன்ற பிறழ்வான வெளிப்பாடுகளையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. கடந்த காலங்களுடன் ஒப்பிட்டு அணுகும் போது சிறுவர்கள் தமது பொழுதுபோக்கிற்காக வீடியோ விளையாட்டுக்களை நாடுவதனால் ஆரோக்கியமான பல பல அம்சங்களை இழக்கின்றனர்.

இவை ஒருபுறம் இருக்க தற்காலத்தில் அதிகரித்து வரும் தொலைக்காட்சி மோகமும் சிறுவர்களை வெகுவாக பாதிக்கின்றது. அதிக அளவில் தொலைக்காட்சிகளில் நேரத்தை செலவிடும் பதின்ம வயது சிறுவர்களின் அறிவுத்திறன் மங்கும் என்று அதிர்ச்சி ஆய்வுத்தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அணுகினால் சிறுவர்கள் பெரிதும் நாட்டம் செலுத்துவதாக கார்டூன் நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன. இவ்வாறான கார்டூன் நிகழ்ச்சிகளில் பல நல்விழுமியங்கள் கடத்தப்படுகின்ற போதிலும் அண்மையில் பரவலான வெறுமனே பொழுது போக்கிற்காக அர்த்தங்கள் ஏதுமற்ற வேடிக்கை கருத்துக்களே மையப்படுத்தப்படுகின்றன. இதனால் சிறுவர்கள் மாயைகள் மற்றும் வித்தைகளை வெகுவாக நம்புகையில் ஜதார்த்தங்கள் தாண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அத்துடன் பிற முக்கியமான செயல்களுள் தம்மை ஈடுபடுத்திக் கொள்பவை தவிர்ந்து முழுநேரமும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொலைபேசி விளையாட்டுக்களில் தம்மை தொலைக்கின்றனர். இவை தொடர்பில் விரிவாக அணுகுகின்ற போது பெற்றோர்களும் பிள்ளைகள் தமது நேரங்களை இவ்வாறான செயல்களில் கழிக்க அனுமதிப்பது வருத்தத்திற்குரியது.  ஆக சிறுவர்களுடன் இணைந்து தொலைக்காட்சியை பார்ப்பதும் பயனளிப்பதாக அமையும். இதன்போது ஊடக வழிகாட்டல் ஒன்றை பெற்றோர்கள் வழங்க முடியும். விசேடமாக விளம்பரங்களின் உண்மைத்தன்மை தொடர்பாக அறிவூட்ட முடியும்.

தற்காலத்தில் சிறுவர்களுடைய வாசிப்பு பழக்கம் மற்றும் இயற்கையோடு ஒன்றித்து வாழ்தல் போன்றனவும் அருகிக்கொண்டே போகின்றது. இவற்றை சிறுவர்கள் நாடுவதற்கான வெளிகளும் குறைவடைகின்றமையே பிரதான காரணமாக உள்ளது. பாடநூல்கள் அனைத்தும் இலத்திரனியல் மயமாக்கப்பட்ட பின்பு கற்றல் கற்பித்தலில் ஆரம்பித்து அனைத்து துறைசார் அணுகுமுறைகளும் இலத்திரனியல் ஆக்கப்பட்ட நிலையில் புத்தக வாசிப்பென்பது கேள்விக்குறியே. அக்காலகட்டத்தில் இயற்கையோடு ஒன்றித்து சூழலை நேசித்த சிறுவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வம் காட்டினர் ஆனால் இன்றோ சுற்றுச்சூழலை அவதானிக்கவும் அதனுடன் உலாவவுமே சிறுவர்களுக்கு நேரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

விழுமியம் என்பது தனிநபர்; சமூகம்; வாழ்க்கை என்பவற்றை வளப்படுத்தி அதனை அர்த்தமுள்ளதாக மாற்றும் குணநல பண்பாகும். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் தனிமனித விழுமியங்களான அன்பு, தைரியம், ஒழுக்கம், அகிம்சை, அறம் செய்தல், சமாதானம், நேர்மை என இன்னும் பல மனித விழுமியங்கள் இருத்தல் அவசியமாகும். ஒரு குழந்தை பிறந்ததும் அக் குழந்தைக்கு விழுமியத்தை போதிப்பது அக் குழந்தையின் பெற்றோர் சுற்றுப்புறச்சூழல் இயற்கை நிகழ்வுகளுமாகும். முன்னைய காலகட்டங்களில் குடும்பம் மட்டும் அன்றி மத நிறுவனங்கள், சமூக நிகழ்வுகள், மன்றங்கள் என பரவலான சமூக நிறுவனங்கள் சிறுவர்களது வளர்ச்சியில் இன்றியமையாததான விழுமிய பண்புகளுக்கு இடமளித்து. ஆனால் இன்றைய நவீன உலகில் அனைத்து விடயங்களும் தொழிட்பத்தின் அதீத வளர்ச்சியினால் உள்ளம் கைக்குள் சுருங்கி விட்ட படியினால் சிறுவர்களுடைய சமூகவியல் சார்ந்த வெளிப்பாடுகளும் மிகவும் குறுகியதாகவே காணப்படுகின்றன.

அத்துடன் பரவலாக அணுகுகின்ற போது இன்றையை சிறுவர்களுக்கான வெளிகள் உலகத்தொடர்புகள் பரவலாக கிடைக்கின்ற போதிலும் அவர்களுடைய சமூகமயமாக்கலானது முன்னரை விட பின்தங்கியே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் விழுமிய பண்புகளிலும் இன்றைய சிறுவர்கள் பின்னிலையிலேயே காணப்படுகின்றன. குடும்பங்கள் தனித்துக் காணப்படும் சூழ்நிலையில் வேலைப்பழு, பொருளாதார சுமை, நாட்டின் அதிவேக நவீனத்துவ வளர்ச்சி போன்ற பலவற்றை காரணங்களாக குறிப்பிடினும்  பெற்றோர்கள் தத்தமது பிள்ளைகளது முழுச்செயற்பாட்டிலும் அக்கறை கொள்ள வேண்டியது அவசியம்.  பிள்ளைகள் எவ்வாறு வளர்க்கின்றனர், குறிப்பிட்ட வயதில் அவ்வயதிற்கு தேவையான அனைத்து அம்சங்களும் கிடைக்கின்றனவா என்பதை உறுதிசெய்தல் வேண்டும்.

புத்தகங்கள் பத்திரிகைகள் அச்சிடப்பட்ட மட்டை விளையாட்டுகளினால் இலத்திரனியல் சாதனங்களுக்கான நேரத்தை படிப்படியாக குறைத்து பிரதீடு செய்ய முடிவதுடன் சிறுவர்கள் இலத்திரனியல் மோகத்திற்கு அடிமையாவதையும் தவிர்க்க இயலும். அதிகப்படியான இலத்திரணியல் சாதணங்களின் பாவனையினால், அவதானம் செலுத்துவதில் பிரச்சினைகள் பாடசாலை கற்றல் பிரச்சினைகள் நித்திரை செய்தல் மற்றும் உணவருந்துதல் பிரச்சினைகள் உடல் பருமனடைதல் என்பன ஏற்படுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இளம் சிறுவர்கள் தமது காலத்தை வெளி விளையாட்டுக்களிலும் வாசிப்பதிலும் ஏனைய பொழுது போக்குகளிலும் தமது கற்பனை விளையாட்டுக்களிலும் ஈடுபடுவதற்கு ஊக்குவிக்கப்பட்டல் வேண்டும். சிசுக்களும் 2 வயதிற்கு குறைவான குழந்தைகளும் எந்தவையயான இலத்திரனியல் ஊடகங்களில் இருந்தும் தவிர்க்கப்படல் வேண்டும். இந்த வயது மட்டத்தினரிடையில் மூளை வளர்ச்சி மிக வேகமாக இடம்பெறுதனால் அவர்கள் திரையில் இருந்து அல்லாது சூழலில் இருந்தே நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இன்றைய சிறுவர்கள் தனிமை விரும்பிகளாகவே அறியப்படுகின்றனர். இதற்கு இவர்கள் சமூகமயமாக்கலுக்கு உட்படும் வாய்ப்புக்கள் நவீனத்துவம் காரணமாக மறுக்கப்படலும் குறிப்பிடத்தக்க காரணமாக உள்ளதென்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்துடன் கடந்த காலத்தவரது மழலைப்பருவ மகிழ்ந்திருத்தல்களை எல்லாம் இன்றைய குழந்தைகளுக்கு எட்டாக்கனியாக அல்லாமல் கிடைக்கச்செய்வதற்கு முயல்தலும் இன்றியமையாதது.  ஆக சிறுவர் பராயத்தின் செயல்களும் சிந்தனை வடிவங்களுமே நாட்டிற்கு நல்ல ஆரோக்கியமான பிரஜையை தரவல்லது. சிறுவர்கள் சிறுவர்களாக வளர வேண்டும் என்பதே அடிப்படையானது என்பதை அனைவரும் உணர்தலோடு கல்வி நிர்வாகங்களும் குடும்பங்களும் ஒவ்வொரு சிறாரது கல்வி விளையாட்டு பொழுதுபோக்கு உட்பட அனைத்து நகர்தலிலும் முழுமையான பங்கினை அளித்தல் அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here