Macro-கதைகள் ஹண்டர் மரியதாஸ்

ஹண்டர் மரியதாஸ்

2021 Oct 1

தன் பெயருக்கு முன்னால்  “ஹண்டர்” என்று அவர் சொன்ன போது நானும் ஏதோ மான், மறையை வேட்டையாடும் உள்ளூர் வேட்டைக்காரன் என்று தான் நினைத்தேன். ஆனால் அவர் ஒரு புதையல் வேட்டைக்காரன். அதுவும் விலை மதிப்பில்லாத பொக்கிஷங்களை தேடியலையும் புதையல் வேட்டையன்.

எங்கள் சந்திப்பு ஒரு விபத்து. அந்த சந்திப்பு நடந்து இருபது வருடங்கள் ஆன நிலையில் இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக தான் இருக்கிறது. சமயங்களில் அவர் கதையை என் குழந்தைகளுக்கு படுக்கை நேர கதையாக சொல்லுவேன். அவர்களும் கண்ணிமைக்காமல் கேட்டு ரசிப்பார்கள்.

நான் அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். விடுமுறையின் போது நண்பர்கள் எல்லோரும் ஒரு  காட்டுப் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தோம். அப்போது நான் மட்டும் வழி தவறி எங்கேயோ கண்காணாத இடத்துக்கு வந்து விட்டேன். எப்படி திரும்பி போவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்தேன்.

அந்த காட்டு வழிக்குள் வெகு நேரம் நடந்தேன். காட்டின் மத்திக்கு வந்ததை போல உணர்ந்தேன். எங்கு திரும்பினாலும் மரங்கள் மட்டும் தான் தெரிகிறது. பசி வயிற்றை கவ்வியது. தலை கிறு கிறு என்றது. கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழந்து கொண்டே வந்தேன். அப்போது தான் அவரை பார்த்தேன்.

நல்ல உயரமும், ஆஜானுபாகுவான உடல் தோற்றத்துடனும் கம்பீரமாக நின்றார். எப்படியும் நாற்பது வயது இருக்கலாம். வெள்ளை தாடியும் கருப்பு முடியும் அதை ஊர்ஜிதப் படுத்தியது. அவரை கண்டவுடன் அவர் தான் எனக்கு உதவ முடியும் என்று தோன்றியது.

அழாத குறையாக என் நிலையை எடுத்து சொன்னேன். அதற்கு அவர் இந்த காட்டை விட்டு நான் வெளியேற வேண்டும் என்றால் சுமார்  அரை நாளாவது நடக்க  வேண்டும் என்றார். அதுவும் வழிகாட்டி, வரைபடம் இருந்தால் தான் சாத்தியம் என்றான். நான் நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்று பாவமாக கேட்டேன். அதற்கு அவர் நான் தேடி வந்ததை நெருங்கிவிட்டேன் எப்படியும் இரண்டு, மூன்று நாட்களில் அடைந்து விடுவேன் என்றார்.

அவர் எதை அப்படி சொல்கிறார் என்று ஆரம்பத்தில் எனக்கு தெரியவில்லை. இப்படியே இன்னும் கொஞ்ச தூரம் சென்றால் ஒரு சிறிய மலை வாழ் மக்களின் குடியிருப்பு வரும் அவர்களிடம் உதவி கேட்டால் உன்னை ஊருக்கே கொண்டு சென்றுவிடுவார்கள் என்றார். இப்போதைக்கு வேறு வழி தெரியவில்லை. அவருடனேயே நடந்தேன்.

தான் கடந்த மாதம் தான் அந்த மலை வாழ் மக்களை சென்று பார்த்துவிட்டு வந்ததாகவும், உதவி என்று வந்தால் அவர்கள் கண்டிப்பாக செய்வார்கள். ஆனால் ஏதாவது பித்தலாட்டம் செய்கிறோம் என்று அறிந்தால் தலையை கீரி விடுவார்கள் என்றார். வழி நெடுக அந்த மக்களை பற்றி கூறிக் கொண்டு வந்தார். அவர்கள் நரமாமிசம் தின்னும் ஆதிக்குடிகள் இப்போது கொஞ்சம் வளர்ச்சியடைந்து அதை எல்லாம் நிறுத்திக் கொண்டார்கள். ஆனால் முந்தைய மூர்க்கத்தனம் அவர்களிடம் இருக்கத்தான் செய்கிறது என்றார்.  வெளி உலகத்தின் இருந்து தள்ளியே வாழ்கிறார்கள் என்றார்.

என்னுடைய மனதில் அவர் ஆரம்பத்தில் எதையோ தேடிக்கொண்டு இருப்பதாக சொன்னாரே அது என்ன என்று கேட்க தோன்றியது. ஒரு வழியாக நானும் அதை கேட்டேன். அது ஒரு புதையல் அதை அடைய தான் இந்த பயணம் என்றார். எனக்கு இந்த முழு பயணமும் அவருடன் இருக்க தோன்றியது. கிடைக்கும் பங்கில் என்னுடைய பங்கு எடுத்துக் கொண்டு நல்ல வாழ்க்கை வாழ மனம் துடித்தது.

ஒரு வேலை என்னுடைய உதவி அவருக்கு தேவை போல. அது தான் என்னிடம் இவ்வளவு ரகசியமான விஷயங்கள் எல்லாம் சொல்கிறார் என்று நினைத்தேன். மெல்ல கேள்விகளால் அவரை துளைத்தேன். அவரும் என்னுடைய எல்லா கேள்விகளும் சளைக்காமலும்  மறைக்காமலும் பதிலளித்தார்.

அறியப்பட்டதாக, கட்டுக்கதைகள் இருக்கும் புதையல்களை தேடி செல்வது தான் என்னுடைய வேலை, அதற்காக தான் என்னுடைய வாழ்க்கையை நான் செலவிட்டு வருகிறேன் என்று அவர் சொல்ல அவரது சொத்து மதிப்பு என்னவாக இருக்கும் என்று என்னுடைய  எண்ணம் போனது.

அதையும் கேட்டபோது தான் எனக்கு அந்த ஆச்சரியமான பதில் கிடைத்தது. நான் தேடி எடுத்ததை விற்று பணம் பார்ப்பவன் அல்ல அவற்றை என் தேடலின் பரிசாக என்னுடை வைத்து அழகு பார்ப்பவன் என்றார்.

கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும் அவரது இந்த விசித்திரமான இயல்பு என்னை அசர வைத்தது. வாழ்க்கையை வாழ தேவையான பணத்தை என்னால் தேடிக்கொள்ள முடியும். இந்த புதையல் வேட்டை என்பது என்னுடைய லட்சியம். இதில் தான் என் காலம் கழிகிறது. என்னை பிறருக்கு தெரியாது. தெரிந்தால் பிரச்சனை தான் வரும். இப்போது உனக்கு தெரியும் ஆனால் இன்று  போல நீ என்னை வேறு ஒரு நாள் பார்க்க மாட்டாய். என்னை பற்றி வெளியே சொன்னாலும் யாரும் உன்னை நம்புவார்களா என்பது சிரமம் என்று சிரித்தார்.

வியப்பாகவும் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஒரு நாள் அந்த மனிதனோடு நான் பயணித்தது எனக்கு வேறு விதமான வாழ்க்கையை காட்டியது. சரியாக மறுநாள் பிற்பகல் வேளை நாங்கள் அந்த மலை வாழ் மக்களின் குடியிருப்பு அடைந்தோம். அந்த இடத்தில் காட்டிக் கொடுத்துவிட்டு என்னிடம் இருந்து அவர் விடைப்பெற்றார். இதுவரை அவரும் என்னோடு அங்கே வரப்போகிறார் என்று எண்ணி இருந்தேன். ஆனால் அவர் என்னை மட்டும் தனியாக செல்லும் படி சொன்னார். நான் ஏன் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் என்னை மேலும் வியப்பில் ஆழ்த்தியது. அந்த மலை வாழ் மக்கள் சாபமாக நினைத்து வருடா வருடம் பலியிட்டு வரும் ஒரு விலைமதிப்பற்ற இரத்தினக்கல்லை தான் நான் இன்று இரவு யாருக்கும் தெரியாமல் அவர்களை தாண்டி சென்று அதை எடுத்துக் கொண்டு வரப் போவதாக சொன்னார். அவர் கண்களில் தெரிந்த நம்பிக்கை என்னை மிரள வைத்தது.

நான் பேசியவற்றை நீ அவர்களிடம் சொல்ல நோர்ந்தால் உன்னையும் சேர்த்து பிடித்துக் கொள்வார்கள். ஆகவே அமைதியாக உன்னுடைய தேவை முடித்துக்கொண்டு மூச்சு காட்டாமல் கிளம்பி விடு என செல்லமாக மிரட்டினார்.

அது தான் நான் அவரை கடைசியாக பார்த்தது. அதற்கு பிறகு நான் அந்த மலை வாழ் மக்களிடம் சென்று உதவி கேட்க, ஒரு வழிகாட்டியை என்னோடு அனுப்பி, என்னை பத்திரமாக அருகில் இருந்த நகரத்து கொண்டு வந்து சேர்த்தார்கள்.

ஹண்டர் மரியனேசனை அதற்கு பிறகு நான் காணவில்லை. அவர் இருப்பிடம் எங்கே? அன்று இரவு என்ன நடந்தது? அவர் இருக்கிறாரா இல்லையா? பொக்கிஷத்தை அடைந்தாரா இல்லையா? இப்படி எதுவும் எனக்கு தெரியாது.

எங்களுடைய அந்த ஒரு நாள் பயணத்தில் நான் பேர் ஆர்வத்தில் அவரிடம் நிறைய கேள்விகளை கேட்டேன். அதில் ஒரு கேள்விக்கு அவர் சொன்ன பதில் என்னை மிரள வைக்கிறது. இப்படி சேகரித்த பொக்கிஷங்களை உங்கள் கடைசி காலத்தில் என்ன செய்வீர்கள் என்று நான் கேட்டதற்கு என் மிச்ச வாழ்க்கையை எடுத்தவைகளை எடுத்த இடத்திலேயே வைக்க செலவிடுவேன் என்றார்.

ஹண்டர் மரியனேசன் இப்போது உயிருடன் இருந்தால் அதை செய்து முடித்திருக்க வேண்டும் அல்லது செய்துக்கொண்டு இருக்க கூடும் என்று நினைக்கிறேன்.

 

எழுத்து – மஹின் சுப்பிரமணியம்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php