அறிவியலை நாடி உலகெங்கும் ஒலிக்கும் வானொலியின் தினம் இன்று..!

உலகெங்கும் ஒலிக்கும் வானொலியின் தினம் இன்று..!

2022 Feb 13

பண்டைய காலத்தில் தகவல் தொடர்பாடல் என்பது தீயை மூட்டுதல்,கூக்குரலிடுதல், பறவைகள் வாயிலாக கடிதங்களை அனுப்பிவைத்தல் என்றெல்லாம் பல முறைகளில் இடம்பெற்றது. தொழினுட்பத்தின் அசுர வேகத்தின் காரணமாக தகவல் பரிமாற்றமென்பது பத்திரிகை,வானொலி, தொலைக்காட்சி, வலைத்தளங்கள் என படிப்படியாக வேறொரு பரிணாம வளர்ச்சியை நோக்கி பயணம் செய்துகொண்டிருக்கின்றது. அப்படியிருக்க ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை செவிகளுக்கு விருந்துகொடுத்து செய்திகளை எடுத்துக்கூற மற்றும் தகவல்களைப் பரிமாற்ற உருவாக்கப்பட்ட செவிப்புல சாதனம் தான் வானொலி.

நம் தாத்தா பாட்டி காலத்தில் தொலைக்காட்சியில்லையென்றாலும் வீட்டுக்கொரு வானொலி இருந்திருக்கும். அதிலும் ஊரில் வானொலிப்பெட்டியை எவர் வைத்திருந்தாலும் அவர்கள் பணக்காரர்கள் என்று கூறும் அளவிற்கு வானொலியின் மதிப்பு அந்தகாலத்திலேயே இருந்துவந்துள்ளது. படித்த பண்டிதனாக இருக்கட்டும் படிக்காத பாமரருக்கு கூட ஒலி மூலம் செய்திகளை கூறி அவர்களுக்கும் தகவல்களை பரிமாற்றுகிறது. அதுமட்டுமன்றி முந்தைய காலங்களில் இயற்கை பேரழிவுகளோ அல்லது போர் அறிவிப்புகளோ எந்தவொரு சம்பவமாக இருந்தாலும் மிகவும் விரைவில் ஒலி மூலம் மக்களுக்கு அறியத்தருவது வானொலிதான். அப்படி இன்றளவும் விரைந்து ஒரு தகவலினையளிக்கும் சாதனமே வானொலி என்பதில் ஐயமில்லை.ஆகவே வானொலி தொடர்பாடலுக்கு கிடைத்த மகத்தான ஒன்று என்றே கூறவேண்டும்.

இதை உணர்ந்துகொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ 2011 ஆம் ஆண்டில் பெப்ரவரி 13 ஆம் திகதியை உலக வானொலி தினமாக பிரகடனப்படுத்தியது. இதற்கு அடுத்து ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் 2012 ஆம் ஆண்டு சர்வதேச தினமாக அன்றைய தினம் அங்கீகரிக்கப்பட்டது. வானொலி ஒளிபரப்பாளர்களிடையே சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், தகவல்களை அணுகுவதற்கும், சுதந்திரமான பேச்சுக்கு ஆதரவளிப்பதற்கும் இந்த வானொலி தினம் நினைவுகூறப்படுகிறது.

குக்லீல்மோ மார்க்கோணியால் 1895 ஆம் ஆண்டு வானொலி கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் இது கம்பியிலா தந்தி என்று அழைக்கப்பட்டதோடு மோர்ஸ் குறியீட்டை பரிமாற்றம் செய்ய வானொலி அலைகள் பயன்படுத்தப்பட்டது. வானொலிகள் மக்களின் வாழ்வோடு பின்ணிப்பிணைந்துவிட்டதென்றே கூறவேண்டும். வேலைக்குச் செல்லும் வழியிலும், வீடுகளிலும், அலுவலகங்களிலும் எந்தவொரு நிலைமைகளிலும் வானொலிகள் தகவல் பரிமாற்றும் அறிவுக்கான ஊன்றுகோலாகவும் அமைகிறது. மனித உரிமைகளினைப் பாதுகாப்பதற்கான சக்தியாக விளங்குவதோடு பேசப்படாத பிரச்சினைகளையும் எடுத்துக்கூறி மக்களின் குரலாக சமூகத்தில் ஒலித்துக்கொண்டிருக்கும் வானொலிகள் உண்மையிலேயே சக்திவாய்ந்த ஊடகங்கள் தான். நேயர்களது கருத்துக்களுக்கு செவிசாய்த்து அவர்களுக்கான கருத்துபரிமாற்ற தளமாக இவை அமைகின்றன.

ஐக்கிய நாடுகளின் ஆய்வின்படி உலகம் முழுவதிலும் சுமார் 44000 வானொலி நிலையங்கள் இயங்குவதாகவும், வளர்ந்துவரும் நாடுகளில் சுமார் 75 சதவீதமானளவு வீடுகளில் வானொலி அணுகல் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இலங்கையில் 1921 ஆம் ஆண்டு எட்வர்ட் ஹபர் (நுனறயசன ர்யிநச) என்பவரினால் ‘இலங்கை வானொலி சேவை’ ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 1922 ஆம் ஆண்டு ‘இலங்கை வானொலி’ என்ற நாமத்தோடு வானொலிச் சேவை விஸ்தரிக்கப்பட்டது. இதுவே ஆசியாவின் முதல் வானொலி நிலையமாகத் திகழ்கிறது. இதற்கடுத்து 1925 ஆம் ஆண்டு ‘கொழும்பு வானொலி’ என்று அதிகாரப்பூர்வமாக்கப்பட்டு 1949 களில் மீண்டும் இலங்கை வானொலியாக அரச திணைக்களத்தின் கீழ் இயங்கியதைத் தொடர்ந்து 1972 ஆம் ஆண்டு ‘இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்’ என்று பெயர் மாற்றம் பெற்று தற்போது இலங்கை அரசாங்கத்தின் ஊடக தகவல் அமைச்சின் கீழ் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு தரமான வானொலி சேவை என்பது சிறந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதாகும். பொழுதுபோக்கு அம்சங்களையும் தாண்டி சாதாரண சமூகத்தில் மற்றும் தங்களது பிரதேசத்தில் இடம்பெறும் முக்கிய பிரச்சனைகளினையும் மக்கள் துயர்களையும் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பினை உருவாக்கும் வகையில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்படவேண்டும்.

சமூகவலைத்தளங்களின் பாவணை அதிகரிப்பினால் அந்த காலத்தில் பயன்பட்ட சில அரியவகை கண்டுபிடிப்புகளை மனிதன் மறந்தவண்ணமிருக்கிறான். வானொலிகளின் ஒலியலைகளிளும் நிகழ்ச்சிகளில் கேட்கும் குரல்களிலும் உணரப்படும் ஈர்ப்பை அனுபவிக்காது சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். இதனால் வனொலியை கேட்கும் இளைஞர் சமுதாயம் குன்றிய வண்ணமேயுள்ளது. ஆகையால் மனித வாழ்வின் முக்கிய அங்கமாக இருந்த வானொலியின் முக்கியத்துவத்தை அனைவரும் உணரவேண்டும். இன்றைய தினம் உலக வானொலி தினம் ‘என்பதை நண்பர்களோடும், அனைவரோடும் பகிர்ந்துகொள்ளுங்கள். இந்த நாளில் வானொலியில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை கேட்டு மகிழுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php