நாடி Review “கலையாத கனவே” – பாடல் – நாடி Review

“கலையாத கனவே” – பாடல் – நாடி Review

2022 Mar 25

நம்ம நாட்டு இளைஞர்கள் நிறைய பேர் ஊடக துறையில் அவர்களால் முடிந்த முயற்சிகளை எடுத்துக் கொண்டுள்ளனர். அவ்வாறான ஓர் முயற்சியின் பிரதி பலன் தான் இரண்டு வாரங்களுக்கு முன் வெளியான, Ranushiya Jeyaselan இனால் தயாரிக்கப்பட்ட Mad Saaami இனால் இசையமைக்கப்பட்டு Aravind Samy இனால் பாடப்பட்ட கலையாத கனவே என்ற பாடல். இந்தப் பாடலுக்கான காணொளியினை Arul selvam ஔிப்பதிவு செய்துள்ளார். இதில் Jerad Evan, Nipanjini shanmugavel, Rajeevan மற்றும் sheza ஆகியோர் நடித்துள்ளனர்.

பாடலின் ஆரம்பத்தில் இரு காதலர்களுக்கு இடையிலான உரையாடல் காட்டப்படுகிறது. இந்த காட்சியில் ஹீரோ மற்றும் ஹீரோயினின் நடிப்பு போதுமானதாக இருந்தாலும் அவர்கள் பேசும் வசனங்கள் மற்றும் அதை பேசுகின்ற பாங்கு என்பவை செயற்கையான காட்சி என்பதனை தெளிவுபடுத்துகிறது. மனதினை தொடும் அளவிற்கு அந்த காட்சி இயற்கையானதாக இருக்கவில்லை.

இருவரும் பிரிந்த பின் கதாநாயகனுள் ஏற்படும் வெறுமை மற்றும் தனிமையினை அழகாக ஔிப்பதிவு செய்துள்ளனர். அதே சமயம் காதல் பிரிவிற்கு பின் ஒரு பெண்ணுள் உருவாகும் தவிப்பையும் துயரையும் அழகாக காட்சியாக்கியுள்ளனர். குளியலறை கண்ணாடியில் ஹீரோயினின் முகம் தெரிவது போலும் அதற்கு பின்னர் பக்கத்தில் உள்ள ஹேன்ட் வாஷினை ஹீரோ தள்ளி விடுவது போலும் காட்சியாக்கியமைக்கு பதிலாக கண்ணாடியை உடைப்பது போல் அமைத்திருந்தால் அந்த காட்சி இன்னும் தத்ரூபமாக இருந்திருக்கும் என்பது என்னுடைய கருத்து. ஹீரோ கேரள இசைக்கு ஆடும் காட்சி, ஹீரோவை பார்த்தவுடன் ஹீரோயின் திரையை மூடி அதன் பின்னால் நின்று அழுகின்ற காட்சி மற்றும் ஹீரோயின் பின்னால் ஹீரோ நடந்து செல்லும் காட்சி போன்றன எனக்கு மிகவும் பிடித்திருந்தன.

சரி அடுத்து பாடலுக்கு வருவோம். பாடல் ஆரம்பத்தில் கேட்கும் போது அதன் இசை பெரிதாக ஈர்க்க கூடியதாக இருக்கவில்லை. பாடலில் சிறிது நேரத்தின் பின் ஒலிக்கப்பட்ட கேரள இசை பாடலை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தை விதைத்தது. அதன் பின் வந்த “வான் மழையும் மண்ணோடு சேர…” முதல் “கல் வீசி என் கனவை கலைத்தாயே!” என்ற வரிகள் என் மனதினை கவர்ந்த வரிகள்.
அத்தோடு “நினைவில் வாழ்ந்தே – நான்
என்னை இழந்தேன்
பிரிவின் தீயில் விறகாகி எரிந்தேன்” என்ற வரிகள் எனக்கு மிகவும் பிடித்த வரிகளாகி விட்டன. பாடலை கேட்கும் போது ஹெட் செட் உபயோகிப்பதன் ஊடாக சிறந்த அனுபவத்தினை பெற முடியும் என்பது என்னுடைய கருத்து ஏனெனில் பாடலில் இசையினை விட அதன் வரிகளே மனதின் ஆழம் சென்று ஈர்க்கக்கூடியதாக அமைந்துள்ளன.

காதலில் ப்ரேக் அப் இனால் உருவான வெறுமையில் வாடுவோருக்கும் காதலில் ப்ரேக் அப் பற்றி சிந்தித்து கொண்டிருப்போருக்கும் இந்த பாடலை பரிந்துரைக்கிறேன். இந்த பாடலின் வரிகள், அதன் இசை மற்றும் காட்சிகள் கண்டிப்பாக உங்கள் முடிவினை மாற்ற செய்யும்.

நம் நாட்டு இளைஞர்கள் இத்தனை பொருளாதர சிக்கலிற்கு மத்தியில் தன்னால் முடிந்த முயற்சிகளை செய்து தமது படைப்புகளை வெளியிடல் பாராட்டலுக்குரிய ஓர் விடயம். நீங்களும் பாடலை முழுதாக கேட்டு உங்களுடைய அனுபவத்தினை கமன்ட் பொக்ஸில் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php