2022 Oct 8
பதினாறாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்து சங்கிலி மன்னனால் சுமார் 700 கத்தோலிக்கர்கள் படுகொலை செய்யப்பட்ட உண்மைச் சம்பவத்தை திரைப்படமாக தந்திருக்கிறது இலங்கைத் திரைப்படமான வித்துக்கள். மூன்று மொழிகளிலும் வெளியாகியிருக்கும் இந்தத் திரைப்படம் பதினாறாம் நூற்றாண்டுக்குரிய சூழல் அமைப்புடன் கடும் மனித உழைப்பினால் உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் பரதவர் சமூகத்தைச் சேர்ந்தவர்ளே இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட கத்தோலிக்க சமூகத்தினவர் ஆவர்.
போர்த்துக்கேயரின் வருகைக்கு முன்னர் சமூகத்தின் கீழ் சாதியினராக நடத்தப்பட்ட இந்த மக்களுக்கு பொதுவெளியில் நடமாட மற்றும் இந்துக்கோவில்களுக்குள் சென்று கடவுளை வணங்க அனுமதி இருக்கவில்லை. சமூகத்தில் எந்தவித அங்கீகாரமும் இல்லாமல் இருந்த மக்களின் அவல நிலையை திரைப்படத்தில் சிறந்த முறையில் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். மேலும் அன்பும் ஆதரவும் சமவுரிமையும் கிடைத்த கத்தோலிக்க சமயத்தை பயபக்தியுடன் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் காட்சிகள் சிறந்த முறையில் வடிவமைக்பட்டுள்ளன.
சஞ்சய நிர்மல் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் பாதிரியர் பிரசாத் ஹர்ஷன் அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திரைப்படத்தில் மறைந்த நடிகர் தர்ஷன் தர்மராஜ் யாழ்ப்பாணத்து சங்கிலி அரசனாக நடித்திருப்பதுடன் யாழ்ப்பாணத்து இளவரசியாக நிரஞ்சனி ஷன்முகராஜா நடித்துள்ளார். கிங் ரத்னம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிகர் தர்ஷன் நடித்த இறுதித் திரைப்படமாக இந்தத் திரைப்படம் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
பதினாறாம் நூற்றாண்டு எனும்போது குறித்த பகுதியை நியாயப்படுத்தும் வகையில் அவர்களுடைய ஆடை மற்றும் வாழ்வியல் அம்சங்கள் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பரதவர் சமூகத்திற்கு இருந்த உணவுப்பஞ்சம் மற்றும் அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் என்பன படத்தில் காட்டப்பட்டுள்ள விதத்தைத் பார்க்கும்போது கிட்டத்தட்ட உண்மையாக நடந்த மன்னார் படுகொலை சம்பவத்தை ஒப்புவிப்பது போலவே இருக்கிறது.
இலங்கையின் ஒட்டுமொத்த கலைஞர்களிலும் மிக முக்கியமான கலைஞரான தர்ஷனின் இழப்பு உள்நாட்டு சினிமா துறையினரை ஆழ்ந்த கவலைக்குள் ஆழ்த்தியுள்ளது. தமிழ் மக்களின் அன்பைப் பெற வேண்டும் என்ற பேரவா தர்ஷனுக்கு இருந்ததாகவும் தான் ராஜாவாக நடிக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு என்றும் வித்துக்கள் திரைப்படத்தில் யாழ்ப்பாணத்து இளவரசியாக நடித்துள்ள புகழ்பெற்ற நடிகை நிராஞ்சனி ஷன்முகராஜா தெரிவித்தார்.
படத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய நிரஞ்சனி “இறந்து சாம்பலாகிய நடிகர் தர்ஷன் வித்துக்கள் என்ற இந்தத் திரைப்படத்தின் மூலம் இன்று மீண்டும் பிறந்துள்ளதாகவே நான் கருதுகிறேன். அவரின் புகழை இன்று அவர் இறந்த பிறகே பேசுகின்றார்கள். இந்தத் திரைப்படத்தின் மூலம் தர்ஷனின் புகழ் மேலோங்கப் போகின்றது. ஆனால் அதைப் பார்க்க தர்ஷன் இன்று உயிரோடு இல்லை” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். மேலும் பேரும் புகழும் நல்ல அங்கீகாரமும் கிடைக்கின்ற ஒரு நாட்டில் சிறந்ததொரு கலைஞனாக மீண்டும் தர்ஷன் பிறக்க வேண்டும் என்று கண்ணீருடன் கூறினார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐந்தாம் மஹிந்தன் கதாபாத்திரத்தில் நடித்த ஷாம் பெர்ணாண்டோ இந்தத் திரைப்படத்தில் பாதிரியராக நடித்துள்ளார். இந்தியாவின் கொச்சியில் இருந்த கத்தோலிக்க சமயத்தை மன்னார் மக்களுக்கு எத்திவைக்கும் கதாபாத்திரமாக அவர் இருக்கிறார். கதையின் உயிரோட்டத்தை தாங்கிச் செல்லும் ஷாம் பெர்ணாண்டோ உள்ளிட்ட மூன்று பாதிரியர் கதாபாத்திரங்கள் தமது பணியை சிறப்பாகச் செய்துள்ளனர். திரைப்பட பாணி மற்றும் கதை சொல்லும் அமைப்பைத் தாண்டி கதைக்களம் சிறந்தமுறையில் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையை குடியேற்ற நாடுகளாக மாற்றி அந்நியர்கள் நம் நாட்டு பிரஜைகளுக்கு செய்த அட்டுழியங்களையே நமது வரலாற்று கல்வி முறைகள் அடிக்கோடிட்டு காட்டியுள்ளன. அதற்கு மாற்றமாக இந்தத் திரைப்படத்தில் நம்நாட்டு மன்னர் செய்த ஒரு மாபெரும் அநீதியை எடுத்துக் காட்டுகின்றது.
இந்து சமயத்தில் தமக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்காத சந்தர்ப்பத்தில் கத்தோலிக்க சமயத்தை ஏற்றுக்கொண்ட மக்களின் சமய பக்தி மிகச் சிறப்பாக வடிவமைக்கப்ட்டுள்ளது. வலுக்கட்டாயமாக சிலையினை வணங்கச் சொல்லும்போது தொடர்ந்து நடைபெறும் விடயங்களை கண்களை கல்லாக உறைய வைக்கிறது. இறுதியில் கொன்று குவிக்கப்பட்ட மனிதப் பிணக்குவியல்களின் காட்சிகள் இதயத்தை கண்ணீரால் நனைத்து விடும்.
சமயங்கள் தொடர்புபடும் இந்தத் திரைப்படத்தில் எந்தவொரு இடத்திலும் இந்து மற்றும் கத்தோலிக்க சமயங்களுக்கு இழிவை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்படாமல் இருந்தது திரைப்படத்தின் பலம் என்றே கூற வேண்டும். யாழ்பாணத்து இளவரசி கத்தோலிக்க சமயத்தினால் கவரப்படுதல் மற்றும் இந்து சமயத்திற்கும் கத்தோலிக்க சமயத்திற்கும் இடையில் உள்ள ஒற்றுமைகள் குறித்து தனது தங்கையிடம் உரையாடும் காட்சிகள் இதற்கு சான்று ஆகும்.
வித்துக்கள் திரைப்படம் சொல்ல மறந்த வரலாறு ஒன்றை தெளிவுபடுத்தும் ஒரு திரைப்படம். படத்தில் என்டர்டெய்ன்மென்ட் என்பதைத் தாண்டி கத்தோலிக்க பிரஜைகளுக்கு சங்கிலி மன்னன் செய்த அநீதிகளை நூற்றாண்டுகள் கடந்தாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்ற முயற்சி பாராட்டத்தக்கது. இவ்வாறே உயிர்த்த ஞாயிறு தாக்குதலிலும் 300 இற்கும் மேற்பட்ட கத்தோலிக்கர்கள் கொல்லப்பட்டார்கள். மன்னார் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் கொல்லப்பட்ட அத்தனை கத்தோலிக்க பிரஜைகளுக்கும் நாடியின் ஊடகக்குழு சார்பாக அஞ்சலிகள்.