கவிதைகள் என் அவர்கள் அல்லது என் இவர்கள் By அன்புநாதன் ஹஜன்

என் அவர்கள் அல்லது என் இவர்கள் By அன்புநாதன் ஹஜன்

2022 Oct 12


அடடா குட் மார்னிங்க்

மன்னிக்கவும் குட் ஈவினிங்!
உள்ளே வந்துவிடுங்கள்
தாழிடவேண்டும்
இப்போதெல்லாம் முன்பிருந்ததாய்
வீட்டுக்கதவு
திறந்தே கிடப்பது கிடையாது
திருட்டுப்பயம்!

குட் ஈவினிங்க்!

கடைசி ஒரு வழியாய்
ஹ்ம்ம்
பொருளேதுமற்ற வீட்டில்
திருட்டுக்கென்ன பயம்?

நவீனத் திருடர்கள்

பொருட் திருடுவதில்லை

மாறாய்?

கருத்திருடுகிறார்

என்றால்?

பேசுவர்
நகைப்பர்
அன்புத்திறப்புக் கொண்டு
திருடிக் கழன்று விடுவர்
அமைதியை

கவனம்!

மீண்டும் மன்னிப்பீர்

ஏன்?

விருந்தாளியிடம்
விசனம்

இருக்கட்டும் ஒரு புறம்

யாரிவர்கள்
புது முகங்கள்!

அதோ அந்த மூலையில்

சார்ல்ஸ் புகோஸ்கியின்
பிளேஷர் ஆப் த டேம்ன்
படித்துக்கொண்டிருக்குமவன்
தனிமையோடு தாம்பத்தியம் பூண்டவன்!
தனிமையென்றால்
அலாதி இஷ்டம்
அந்த மூலையும் புகோஸ்கியும்
அத்துனை இஷ்டம்

இவனொரு இவன்!

இளையராஜாவின் பழைய பாட்டுக்கு
பாதியுடைந்த பழைய கிட்டாரை
பத்து முறை டியூன் செய்து
எட்டுக்கட்டையில் ஏடாகுடம் செய்வான்
எதாவது கேட்டால்
இது தான் இசையென்று
இயற்றி இலக்கணஞ் சொல்வான்

வெளியில் மழையாடும் அவனா?

சுவாதீனமற்றவொரு மடையன்!
வெயிலில் குளிர் காய்வான்;
மழையில் வெயில் காய்வான்
குருவியோடு பேசுமவன்
மனிதரிடத்து மௌனி
மோன நிலைக் கேனை

நாயைக் கொஞ்சுவதும்

பூனையிடம் கெஞ்சுவதும்
இவனுக்கு இதுதான் வேலை
அலைக்கு தலைமூழ்கும்
ஆறறிவு அதுகளை விட
ஐந்தறிவு இவர்களின் கண்
கொள்ளைப் பிரியமிவனுக்கு

பொல்லாதவன் அவன்

அம்பேத்கர் என்பான்
பெரியார் என்பான்
கார்ல்ஸ் மார்க்ஸும் சேசுவேராவும்
தோளுக்குத் தோளான
தோழர் என்பான்
அறைக்குள்ளே கத்தித் திரியுமவன்
சமூகத்திடம் ஊமைக் கோழை!

அடடா
அவன் துஞ்சும் அழகை விழிக்க
கெஞ்சும் என் தமிழ்
இக்கல்லுளி மங்கந்தான்
நெடுநாள் என்னோடு கழித்தவன்
சிரிப்பான்
காதலிப்பான்
கோபிப்பான்
அழுவான்
எரிந்து விழுவான்
இப்போதெல்லாம்
செய்வான் என்பதை விட
செய்தான் எனச்சொல்லல் பொருந்தும்
தோற்று சலித்த நம் தலைவன்
ஏதோவோர் சீன நூல் படித்து
தெளிந்து சயனிக்கிறான்
என்ன மண்ணோ
சென்னோ ஏதோ அதன் பெயர்

அந்த அறையில்

உத்தரத்தில் ஊசலாடுமவனை
தயவு செய்து தொல்லை செய்யாதீர்
தயவு செய்து!
உலகம் பிடிக்காமல்
கயிற்றில் தொங்கியவன்
அமைதிக்காய் ஆடிக்கொண்டிருக்கின்றான்
அறுந்து விடும் அக்கயிறு
அறும் வரை தொல்லை செய்யாதீர்
அறுந்து விழுந்ததும்
கழுத்தைப் பார்க்காமல்
மனத்தைப் பாரும்
அங்குதான் அதிகம் காயப்பட்டிருக்கும்!

வேறாரோ இருப்பதாய் தானே
இடக்கரடக்கல் இயற்றிச் சொன்னீர்!

அது அப்படித்தான்

என் அவர்கள் அல்லது
என் இவர்கள்
தடாகத் தாமரையின்
தளரா இலைமேல்
நின்று நிலை கொளாது
தடுமாறும் தண்ணீர் துகள்கள்!

புதிதாய் அவதரிப்பதும்

அவதரித்து மாய்வதும்
மாயாது திரிபதும்
அவர் வேலை!
அடிக்கடி செத்து
அடிக்கடி பிறப்பார்கள்!
வேறோர் முறை வந்தால்
வேறரோ இருப்பார்கள்!

ஒருக்கிண்ணப் பாலை

ஒருமித்துக் குடித்தப் பூனை
கருவாட்டுப் பானை நோக்குவதாய்
குறு குறுவென பார்க்கிறீர்
நோக்கம் அறிவேன்!

என்னைப்பற்றி சொல்லவில்லையா?

ஹா ஹா
ஒரு வகையில் சொல்லிவிட்டேன்
நான் தான் இவர்கள்!
விளங்கக் கூறின்
தேவையான போது
தேவையான இவரணிந்துக் கொள்வேன்!

அஃது நிமித்தமே
என்னவரென்று அவர் விழித்தேன்!
புரிந்ததா?

நன்றி!

– அன்புநாதன் ஹஜன்

‘நான்
என் சூழல்
என்னை மாற்றியிருக்கிறது மாற்ற விழைகிறது.
நானும் போக்கிற்காய் மாறிக்கொண்டேதான் இருக்கிறேன்.
என்னோடு என் அவர்கள் அல்லது என் இவர்களும் மாறிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.
நாங்கள் எங்களை பிரதிபலித்து
நாங்கள் எங்களை மருவி
நாங்கள் எங்களை ஆசுவாப்படுத்திக் கொள்கிறோம்.
இக்கவிதை எங்கள் நிலைப்பாட்டைப் பற்றிய ஒரு படைப்பு.’

🎭🌍
வாசிக்க இக்கோர்ப்பினை தொடரவும் ♥️.
https://hajananbunathan.blogspot.com/2022/10/blog-post.html

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php