அறிவியலை நாடி மனித எண்ணங்களை மதிப்போம் மன நலம் காப்போம்!

மனித எண்ணங்களை மதிப்போம் மன நலம் காப்போம்!

2022 Oct 10

ஒருவர் தேவையற்ற மனக்குழப்பங்கள், நடந்த பிரச்சினைகள் அதனால் ஏற்பட்ட மன அழுத்தங்களின் காரணமாக அதிகமாக யோசிக்கும் போது அவர்களின் மனநலன் பாதிக்கப்படுகிறது. இது ஒரு வகையான மோசமான நோயாகும். ஒருவருக்கு ஏற்படும் மனநல பிரச்சினை அவரின் பசி, தூக்கம், நிம்மதி, சிரிப்பு, அழுகை, குணம் என அனைத்தையும் பாதிக்கிறது. ஆகவே ஒரு மனிதனுக்கு தன்னுடைய உடல் நலம் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அவனுடைய மனநலனும் முக்கியமாகின்றது.

இதனை வலியுறுத்துவதற்காகவே ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 10 ஆகிய இன்றைய தினத்தில் உலக மனநல தினம் நினைவுகூரப்படுகிறது. உலகெங்கிலும் மனநல நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வை ஏற்படுத்தவும், இந்த சமூதாயத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களுக்கும் மனநலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இன்றை தினத்தின் நோக்கமாகும். இதனை கருத்திற்கொண்டு எமது அன்பான வாசகர்களுக்கு மனநலன் தொடர்பாக மனதில் எழும் கேள்விகளுக்கும்,குழப்பங்களுக்கும் தீர்வை வழங்கி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இக் கட்டுரை உதவியாக இருக்கும்.

மனநல பாதிப்பு என்றால் என்ன?
ஒருவருக்கு ஏற்படும் உள ரீதியான மாற்றங்களும் அதனால் ஏற்படும் உடல் ரீதியான நடவடிக்கைகளும் மன நல பாதிப்பு என்றாகிறது. எவர் ஒருவர் தனது சுய ஆற்றலை அறிந்து, அவரது அன்றாட வாழ்வில் ஏற்படும் மன கசப்புகளை சமாளித்து, ஆக்கப்பூர்வமாக உழைத்து, சமுதாயத்தில் சிறந்த பங்கினை வகிக்கின்றாரோ அவரே மனநலனுடன் இருப்பவர் என்பது உலக சுகாதார அமைப்பின் கருத்து. இதற்கு மாறாக ஒருவரின் செயல்கள் இந்த சமூதாயத்திற்கு புறம்பாகவோ, சக மனிதனுக்கு புறம்பாகவோ காணப்படுமாயின் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அர்த்தமாகிறது.

ஒருவருக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் அவரை மனநலமற்ற நோயாளியாய் மாற்றுகிறது. இதனை அலட்சியப்படுத்தினால் ஆபத்து தான்.
ஒருவருடைய மனநலன் எவ்வாறு பாதிக்கப்படுகிறது?
நான் ஏற்கனவே சொன்னது போல ஒருவருக்கு உளரீதியாக ஏற்படும் அளவுக்குமீரிய சிந்தனைகள் தான் அவருக்கு மன நல பாதிப்பை ஏற்படுத்துகிறது. அத்தோடு கசப்பான சம்பவங்கள், துஷ்பிரயோகங்கள், அதிர்ச்சி, சமூகத்தில் புறக்கணிப்பு, சமூக நிகழ்வுகள்,வறுமை, தனிமை,பாகுபாடு, சமத்துவமின்மை, நீண்டகாலமாக தீராத பிரச்சினைகள், சோகம்,வெறுப்பு, அதிகமான பயம், அளவு கடந்த யோசனைகள், அதிக நேரம் கைபேசி பயன்படுத்துவது, தூங்கமல் அதிக நேரம் விழித்திருப்பது, சரியாக சாப்பிடாதது இப்படி ஏகப்பட்ட காரணிகள் ஒருவரின் மனநலனை பாதிக்கின்றன.

இதனால் உடல்,உள நோய்கள், தூக்கமின்மை, பசியெடுக்காமை, வேலைகளை ஒழுங்காக செய்யமுடியாமை போன்ற பல அசம்பாவிதங்களை அனுபவிக்க நேரிடும்.
மனநல பாதிப்பால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் யார்?

உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் மனநல நோயால் பாதிக்கப்படுகின்றனர். இப்படிப் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பான்மையான பிரிவினர் குழந்தைகளும், வயதானவர்களும் தான். குழந்தைகளும்,வயதானவர்களும் கிட்டதட்ட ஒரே மாதிரியானவர்கள். அவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பது அவர்களின் நடவடிக்கையிலேயே தெரிந்துவிடும்.
வளரிளம் பருவத்தில் குழந்தைகளின் கற்பனைத்திறனும்,ஆற்றலும் வளர்ந்துகொண்டிருக்கும். அப்படிப்பட்ட இந்த பருவத்தில் அவர்களுக்கு ஏற்படும் மனநல பாதிப்பானது அவர்களின் எதிர்காலத்தையே பாதிக்கும். குறிப்பாக சொல்லபோனால் இன்று நவீனமுறை கற்றல் என்ற பெயரில் அதிகளவான நேரம் கைபேசிகளை குழந்தைகள் பயன்படுத்துவதால் அவர்கள் அதற்குள் கொஞ்சம் கொஞ்சமாக அடிமையாகிக்கொண்டிருக்கின்றனர் என்பது பெற்றோர்களாகிய நீங்கள் அறிய வேண்டிய ஒன்று.

கைபேசிகளுக்கு அடிமையாவதால் குழந்தைகளின் கற்பனைத்திறன்,பேச்சுத் திறன், கற்றல், ஆற்றல் போன்றவை முடக்கப்படுகின்றன. இதனால் அவர்களுடைய குணாதிசயங்களில் மாற்றம் ஏற்படுகிறது. உதாரணமாகச் சொன்னால் ஒரு குழந்தை அதிக நேரம் கைபேசியில் கேம் விளையாடிக் கொண்டிருக்கும் போது அதை பறித்து வைத்து படி யென்று சொன்னால் திடுக்கென்று கோபம் வந்துவிடும். இது போன்ற சம்பவங்கள் பலர் வீட்டில் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. ஆகவே குழந்தைகளின் மனநலனின் கவனம் செலுத்தவேண்டியது மிக மிக முக்கியம்.
வயதானவர்களைப் பொருத்தமட்டில் மிக இலகுவாகவே இவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டு விடுகிறது. முதுமை என்பது காலங்களை கடந்து வந்து கடைசி காலத்தில் எஞ்சியிருக்கும் சொற்ப காலங்களை மகிழ்ச்சியாக எண்ணி வாழ கிடைத்தது.
இருந்தாலும் வயது முதிர்வு காரணமாக நோய்கள், உடல் மற்றும் உள ரீதியான சோர்வுகள் ஏற்படும். இது இயல்பானதொன்றே. இருந்தாலும் அவர்களுக்கு ஏற்படும் மனநல பாதிப்பானது பெரும்பாலும் சுற்றி இருப்பவர்களினாலேயே ஏற்படுகிறது. வயதானவர்களை கவனிக்காமல் அவர்களை தனித்துவிடுதல், அவர்கள் பிள்ளைகளால் கைவிடப்படுதல், அவர்களை இல்லங்களில் கொண்டு சேர்த்தல், மனம் நோகும்படி பேசுதல், அவர்களை புறக்கணித்தல் போன்ற நடவடிக்கைகளினால் மூத்த குடிமக்கள் மனநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு உடல் சம்பந்தமான வேறு நோய்கள் ஏற்பட்டு வாழ்க்கை மீதான நம்பிக்கை இழக்கப்படுகிறது. ஆகவே குடும்பத்தினர் அனைவரும் இது பற்றி சிந்தித்து செயற்பட வேண்டும்.

மனநலனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம்?
உடல் நோய் என்பது உடலோடு சம்பந்தப்பட்டது. கை வலி, கால் வலி, இடுப்பு வலி இவற்றையெல்லாம் மிக விரைவிலேயே குணப்படுத்திவிடலாம். ஆனால் உள நோய் என்பது மனதோடு சம்பந்தப்பட்டது. இதனை அலட்சியம் செய்தால் பின்னாளில் ஏற்படும் பாரதூரமான பிரச்சினைகளுக்கு நாம் முகங்கொடுக்க நேரிடும். இதனை குணப்படுத்த முடியாமலும் போய்விடும். ஆகவே மனநலன் என்பது அவசியமாக நாம் கருத்திற்கொண்டு பாதுகாக்க வேண்டிய ஒன்றாகும். நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நமது சிந்தனை, உணர்வுகள், நடத்தை ஆகியவற்றை தீர்மானிப்பது மனநலம் தான். உடல் நலம் பாதிக்கப்பட்டால் மனநலன் பாதிக்கப்படும்.

ஆது போலத்தான் மன நலன் பாதிக்கப்பட்டால் உடல் நலமும் பாதிக்கப்படும். மூளை பாதிப்பு, இதய நோய்கள், ப்ரஸர் போன்ற நோய்கள் இதன் மூலம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. ஆகவே இதனை அலட்சியப்படுத்த முடியாது.
தற்கொலை செய்து கொள்வது கூட மனநல பாதிப்பின் உச்ச கட்டமாகும். நொடிக்கு ஒருவர் எங்கோ தற்கொலை செய்துகொண்டுதான் இருக்கிறார். வருடத்தில் 8 லட்ச பேர் தற்கொலை செய்து தன்னுயிரை இழக்கின்றனர். ஆதாவது மன நோய் ஒருவர் தற்கொலை செய்யுமளவிற்கு தீவரமான நோய் என்பதே உண்மை. ஆகவே மன நல நோய் குறித்து மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

மனநல பாதிப்பை எவ்வாறு குணப்படுத்துவது?
மனநல நோயால்; பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மனநல மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவது சாலச்சிறந்தது. உளவியல் ஆலோசகர்கள், உளவியலாளர்கள், மன நல மருத்துவர்கள், சிறப்பு பயிற்சியாளர்கள் போன்ற மனநல பணியாளர்களை அணுகுவதன் மூலம் மனநல பாதிப்பை குறைக்கலாம்.
உளவியளாளர்கள் உளவியல் ஆலோசனைகளை வழங்குவார்கள். உளவியல் ஆலோசனை என்பது ஒரு கலந்துரையாடல் போன்றது. ஒவ்வொரு மனிதனும் அவரவர் பிரச்சனைகளை எதிர்கொள்ள வலிமையுள்ளவர்கள். அவ்வலிமையை மேலும் பலப்படுத்துவதே உளவியல் ஆலோசனையின் குறிக்கோள் ஆகும். நீங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தைரியமாக முகங்கொடுத்து அந்த பிரச்சினைகளை நீங்களே தீர்த்துக்கொள்ள செய்யப்படும் உளவியல் பூர்வமான உதவியையே உளவியல் ஆலோசனையின் பயனாகும்.

உளவியலாளர்களை சந்திக்க செல்வதென்பதில் பலருக்கு தயக்கமிருக்கும். நம்மை பைத்தியக்காரர்கள் என்று ஊர் சொல்லும் என்றெல்லாம் கூட நினைப்பர். உண்மையில் யார் யாருக்கு தங்களுடைய மனநிலை பாதிப்பை குறைப்பதில் அக்கறை இருக்கிறதோ அவர்கள் இதனை நிச்சயம் புறக்கணிக்கமாட்டார்கள். ஆகவே வருடத்திற்கு ஒருமுறையாவது மனநல ஆலோசகரிடம் பரிசோதனை மேற்கொள்ளவும்.
வரும் முன் காப்போம் என்பதற்கு இணங்க ஒருவருக்கு மன நல பாதிப்பு ஏற்படாமல் இருக்க பின்வரும் நடவடிக்கைகளை பின்பற்றலாம்.

நல்ல உறக்கம்
பிரச்சினைகளை யோசித்து தூங்காமல் விடிய விடிய விழித்திருப்பது உடலையும்,உள்ளத்தையும் பாதிக்கும். நிம்மதியான தூக்கமே பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும். ஆகவே நேரத்திற்கு தூங்கி நேரத்திற்கு எழும்புவதை பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.

ஆரோக்கியமான உணவு
மன அழுத்தங்களினால் சிலர் உணவை புறக்கணிக்கின்றனர். இது முற்றிலும் தவறு. ஏதாவது பிரச்சினை வந்தால் அதை எதிர்கொள்ள முதலில் உடலில் தெம்பு இருக்க வேண்டும். அதற்காகவாவது நாம் கவலைகளை புறந்தள்ளிவிட்டு நன்றாக சாப்பிடவேண்டும்.’உணவே மருந்து’ என்பதால் ஆரோக்கியமான உணவுகளை அவசியம் மூன்று நேரமும் உட்கொள்ளவேண்டும்.உடற்பயிற்சி
உள்ளத்தை பலப்படுத்த உதவுவது உடற்பயிற்சி. நீங்கள் உடற்பயிற்சி செய்யும் பொழுது உங்கள் கவனம் முழுவதும் அதில் தான் இருக்கும். வேறு பிரச்சினைகளும் எந்த சிந்தனைகளும் உங்களுக்கு வராது. உடலை மட்டுமல்ல உடற்பயிற்சி மனதையும் பலப்படுத்தும் முக்கிய பகுதியாகும்.

நேர்மறையான எண்ணங்கள்
என்னதான் பிரச்சினைகள் நம்மை சுற்றி நிகழ்ந்தாலும் எப்போதும் நேர்மறையான கருத்துக்களை உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். இவ்வாறு நேர்மறையாக சிந்திப்பதால் நிச்சயம் உங்கள் எண்ணத்திற்கு அனைத்துமே  நல்லதாகத்தான் நடக்கும்.

மனம் விட்டு பேசுங்கள்
ஒரு பிரச்சினையை மனம் விட்டு பேசும் போது நிச்சயம் அதற்கு ஒரு தீர்வு காணலாம். நம் மனதிற்கு பிடித்தவர்களிடம் நம் பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ளும்போது நம் மனதில் உள்ள சுமைகள் குறையும். ஆகவே மனம் விட்டு பேசுவதென்பது மனநலனை ஒரு விதத்தில் பாதுகாக்கும்.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php