2023 Mar 18
ஓரந்தி மழை
தூரத்து மேகம்
துளி துளியாய் தன்சேமிப்பை
குளிரூட்டிக் கொஞ்சம்
மழையெனத் தூவி
செலவு செய்து செல்ல
குளிர் தரும் குதூகலத்தில்
குழந்தையாய் மனம்
ஜன்னல் திரை விலக்கி
ஜன்னலையும் திறக்க
அந்தி வண்ணாத்தி
மலர் மஞ்சத்தில்
மதுரமுறிஞ்சிப் பறக்கும்
மௌன மரணத்தில்
இலைகளை அசைத்துக் காற்று
அனுதாபம் செய்கிறது
மீண்டும் ஒரு மௌன மரணம்!
எதோ ஒரு எச்சத்தை
அசை போட்டு அசை போட்டு
அழகிய நினைவுகளை
ததும்பத் தருகிறது ஏகாந்தம்
மண்ணோடு மழை சேர்ந்தச் சுகந்தம்!
புற்றீசல் புறப்பாடுகளில்
மலைக்குருவி ஒதுங்கலில்
நத்தை நகர்வில்
திடீர் குளிரில்ஏனோ ஒர் புதினப் புழுதி
இயற்கை பேர்கொண்ட
பெரும் புதிராய் சப்தமிடுகிறது
பேரரசு வீழ்ச்சியில்
சிற்றரசு எழுச்சி!
மேற்கு அஸ்தமனத்தில்
மேக மத்தியில்
மெல்லொளியுடன்
திறள் திங்கள்!சூரிய வீழ்ச்சியில்
திரள் சூழ் அரை நிலா!
கைகளை நீட்டுகிறேன்
நீலவானத்தை ஏகமாய் சுருட்டி
ஒற்றைத்துளியாய் கையில்
ஈகிறது இயற்கை
அழகாய் உதிர்ந்த அந்த சொட்டு
அத்தனை அழகை சுமக்க சிணுங்கி
இத்தனை அழகாய் கையில் விழுந்ததோ
அதோ – இன்னோர்
கூறை முனை மழைசொட்டில்
மரணப்படுக்கையில் சூரியன்
தொத்திக்கொண்டாடுகிறது
அந்த சொட்டுமென் கையில் விழும்!
ஈரச்சிறகுடன் வீட்டுக் குருவியொன்று
மாமர மரக்கிளையில் குந்தி கிடக்கிறது
அலகை அசைத் தது
மழை ரசிக்கிறதா?
குளிர் வெறுக்கிறதா?ஆறியத் தேநீரும்
தேக்கிய சுவையை
நடு நாக்கில் நயக்கி
அணைந்தே போகிறது!
நாய் குட்டியும் என்னை
அரவணைக்க இழுக்கிறது
குளிரை விடுக்கவும் மனமில்லை
குளிரால் நடுங்கும் வகை உடலில்லை
அனுமதித்த ஈசல்களே அதிகமாயிற்று
ஜன்னலை மூடும் நேரமாயிற்று!
– அன்புநாதன் ஹஜன் –