மனிதர்களை நாடி யாழின் சா”தீ”யம்

யாழின் சா”தீ”யம்

2023 Jan 9

வேளாளர், பரதேசிகள், மடைப்பள்ளியர், மலையகத்தார், செட்டிகள், பிராமணர், சோனகர்,தனக்காரர்,குறவர்,பரம்பர்,சிவியார்,பள்ளிவிலி,செம்படவர்கடையர் பரவர்,ஒடாவி,சான்றார்,கன்னார்,தட்டார்,யானைக்காரச்சான்றார் கயிற்றுச்சான்றார், கரையார், முக்கியர், திமிலர், கோட்டைவாயில் நளவர், கோட்டைவாயிற் பள்ளர், மறவர்,பாணர், வேட்டைக்காரர்,வலையர், வர்ணகாரர், வண்ணார், தந்தகாரர், சாயக்காரர், தச்சர், சேணியர், கைக்கோளர், குயவர், கடையற்காரர், குடிப்பள்ளர், சாயவேர்ப்பள்ளர், தம்பேறு நளவர், தம்பேறுப்பள்ளர், குளிகாரப்பறையர், பறங்கி , அடிமைகொல்லர்,தவசிகள்,அம்பட்டர்,கோவியர்,தமிழ்வடசிறைநளவர் ,பள்ளர்,பறையர்,துரும்பர்,எண்ணெய்வணிகர்,சாயவேர்ப்பள்ளர், சாயவேர்ப்பறையர், அர்ச்கோயில் பறையர்.

என்ன இதெல்லாம் ? ஏதேனும் பழைய தமிழ்த் திரைப்படங்களின் பெயர்பட்டியலா ? என்றால் . அதுதான் இல்லை. மேற்கூறியவை 1790 களில் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின்போது காணப்பட்ட சாதிகள் பற்றி “யாழ்ப்பாணச்சரித்திரம் “ (1912) என்கின்ற நூலில் அ.முத்துத்தம்பிப்பிள்ளை குறிப்பிட்டிருந்த சாதிகளின் பெயர்களே அவை. தெற்காசிய சமூகங்களின் சாதியத்தின் இருத்தல் பற்றிய பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் இலங்கையும் கூட சாதியத்திற்கான விதிவிலக்கல்ல என்று கூறப்படுகின்றது.

பண்டைய சமூகத்தின் எச்சமான இன்றைய சாதியம், நிலப்பிரபுத்துவத்தின் மறுவடிவமாகவே பார்க்கப்படுகின்றதெனலாம். நாகரீகத்தின் உச்சமும் பொருளாதார மேம்பாடும் அனைத்துக்கும் மேலாக சமத்துவக் கல்வியின் பரம்பலும் சாதியத்தை இல்லாமல் செய்துவிடும் என்கிற கருத்து உண்மையில் இன்றுவரையில் ஓர் கேள்விக்குறியாகவே உள்ளது . முப்பது வருடங்களுக்கு மேலான உள்நாட்டு யுத்தம் , அதனோடு தொடர்புடைய அகதிகளின் உருவாக்கம் , புலம்பெயர்வு என்பவைக்கூட இன்றுவரையில் சாதிய ஒழிப்பில் ஆக்கபூர்வமானதோர் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை என்றே கூறவேண்டும். உலகமயமாதலுக்கேற்றவாறு சாதியமும் தன்னை புதிய வடிவில் தகவமைத்துக்கொண்டே வருகின்றதென்பதுதான் யதார்த்தம்.

முழு இலங்கையிலும் ஏதோவொரு வடிவில் சாதியம் பார்க்கப்படுகின்றதுதான் என்றாலும், வடக்கிலும் கிழக்கிலும் (சிங்களவர்களைப்பொறுத்தவரையில் பௌத்த மதத்தின் முற்போக்குத்தன்மைகளை விட இந்துத்துவ சாதிய அடிப்படைகளையே கண்டியிலும் ) மிக மிக அதிகமாகவே பார்க்கப்படுகின்றதெனலாம் . உண்மையில் யாழ்ப்பாணத்தில் கிபி மூன்றாம் நூற்றாண்டுகளிலிருந்தே தமிழர்கள் வாழ்ந்துவந்துள்ளனர் என ஆராச்சிகள் குறிப்பிட்டாலும் , பதினோராம் நூற்றாண்டில் சோழர் மற்றும் பாண்டியர்களின் படையெடுப்புக்களின் பின்னரே இந்தியாவிலிருந்து வந்த குடியிருப்புக்களின் தொகை வடகிழக்குப் பகுதிகளில் அதிகரித்ததாக ஆய்வாளரான அரசரட்ணம் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தில் உயர்ந்தவர்களாக வேதங்களின் கூற்றுக்கள் மூலம் கருதப்படும் பிராமணர்களை விட யாழ்ப்பாணக் குடா நாட்டில் வேளாளர் சாதியினர் எவ்வாறு ஏனைய சாதியினரை அடிமைகளாக, தமது ஏவலாளர்களாக காலம் பூராகவும் வைத்திருக்கும் வழக்கத்தினை உருவாக்கினார்கள்? எப்போது யாழ்ப்பாணக் குடாநாட்டினை மையப்படுத்தி வேளாளர் சமூகத்தினர் முதன்மை பெறத் தொடங்கினார்கள்? என்கிற கேள்விகளுக்கான விடை இங்கிருந்தே உருவாகின்றன எனலாம்.

விவசாயத்தினை தொழிலாக கொண்ட வெள்ளாள சாதியினர் யாழ்ப்பாணத்தில் அதிகமாக குடியேறியபோது , இவர்களுக்கு சேவகம் செய்வதற்காக வேறுபல சாதியினரும் கொண்டுவரப்பட்டனர். அதனடிப்படையில் வெள்ளாளர்களின் கோவில்களில் பூசகர்களாக இருப்பதற்காக கொண்டுவரப்பட்ட பிராமணர்கள் இந்தியாவைப்போன்று அரசியல் சமூக பண்பாட்டு அதிகாரம் கொண்டவர்களாக இராது வெறுமனே வெள்ளாளர்களின் அர்ச்சகர்களாக மட்டுமே கொள்ளப்பட்டனர் . தேச வழமை சட்டம் என்கிற அடிப்படையில் ஆறுமுக நாவலர் போன்றோரால் மிகத் தந்திரமாக திட்டமிட்டு வளர்க்கப்பட்ட வெள்ளாள சாதியினரது ஆதிக்கமானது ஒவ்வொரு துறையிலும் மனித மாண்பை அக்காலகட்டத்தில் அதிகமாகவே பறித்திருந்ததெனலாம் .

கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கும் உரிமை கூட தடை செய்யப்பட்டது. (இதனடிப்படையிலேயே விடுதலைப்புலிகளின் காலத்திற்கு முன்புவரை கூட பிற மனிதர்களுக்கு சிரட்டையில் குடிநீர் வழங்கும் அநாகரீகம்கூட நடந்தேறியதெனலாம் ) தாழ்த்தப்பட்ட சாதிகளில் ஒருவரான துரும்பாக்கள், வெள்ளாளக் கண்களின் தூய்மையைக் கெடுக்கக் கூடாது என்பதற்காக பகலில் நடக்கத் விதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. மேலாதிக்கவாதியான வேளாளர்களின் மனதில் மட்டக்களப்புத் தமிழர்கள், தோட்டத் தமிழர்கள், சிங்களவர்கள் மற்றும் தமிழ் பேசும் முஸ்லீம்கள் கூட “மற்றவர்கள்” என்கிற இரண்டாம்தர பார்வையிலேயே அணுகப்பட்டனர்.

குடாநாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் தங்கள் தூய்மையையும் மேன்மையையும் தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு வழிமுறையாக வேளாளர்கள் பிரிவினைவாதத்தின் மீது வெறித்தனமாக இருந்தனர். பிரிவினைவாத சித்தாந்தம் அவர்களின் வெள்ளாள மேலாதிக்க வட்டத்திலிருந்து தங்கள் சொந்த மக்களையே ஒதுக்கி வைப்பதில் தொடங்கியது. பிரிவினைவாதம் (இன்றும்கூட யாழ்பாணத்தமிழர்களின் வாயிலிருந்து “எங்கட, எங்கட “என்கிற சுயநலம் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது).

அவர்களின் நிலப்பிரபுத்துவ மற்றும் காலனித்துவ அதிகாரங்கள், சலுகைகள், பதவிகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாப்பதற்கும் ஒரு வழிமுறையாக இருந்தது. தமிழ் தாழ்த்தப்பட்ட சாதியினராக கருத்தப்பட்டவர்களோ அல்லது தமிழ் மற்றும் தமிழ் அல்லாத வெளியாட்களோ வெள்ளாள உற்கட்டமைப்பின் புனிதத்தை மாசுபடுத்தும் எந்தவொரு ஊடுருவலும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டது( இன்றும்கூட சில கோவில்களுக்கான உள்நுழைவு மறுக்கப்படுகின்றமை அவதானிக்கப்படவேண்டியவொன்றே).

சில ஊடுருவல்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆறுமுக நாவலரால் மறுசீரமைக்கப்பட்ட மதச்சார்பற்ற தேசவழமை சட்டமாக இருந்தாலும் சரி, சைவ சமயச் சட்டங்களாக இருந்தாலும் சரி, ஜாதி வெறியர்களான கத்தோலிக்க திருச்சபையினர்களாக இருந்தாலும் சரி முன் பீடங்கள் உயர் சாதியினருக்கும் கடைசி பீடங்கள் தாழ்ந்த சாதியினருக்கும் ஒதுக்கப்படும். ஆளும் அரசியல் சித்தாந்தம், சமூக ஒழுங்கின் அங்கீகரிக்கப்பட்ட மரபுகள் அனைத்தும் ஒன்றிணைந்து “மற்றவர்களை” (குறிப்பாக தீண்டத்தகாதவர்கள் / தலித்துகள்) வெள்ளால சொத்துக்கள், இந்து கோவில்கள், பள்ளிகள், கிணறுகள், பேருந்துகள் மற்றும் வாழ்வதற்கு தேவையான அனைத்து சமூக செயற்பாடுகளிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாகவே கருதப்பட்டனர்.

வேளாளர் கோரிக்கைகளுக்கு அடிபணியவில்லை என்றால், தாம் வேளாளர்களின் நிலங்களிலிருந்து வெளியேற்றப்படலாம், தொழில் உரிமைகள் மறுக்கப்படலாம் என்கிற அச்சத்தின் அடிப்படையிலேயே நீண்டகாலமாக வேளாளர்களின் அடிமைகள் போன்று மற்றைய சமூகங்கள் தம் வாழ்வியலை தொடர்ந்தன . தங்கள் நிலையை உயர்த்த முயற்சிக்கும் மற்றைய சாதியினர், வேளாளர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட குண்டர் கும்பலால் பாதிக்கப்பட்டும், குடிசைகளை எரித்தும், கிணறுகளை விஷமாக்கியும் பலியாக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.

வெள்ளாளர் என்பது பிறப்பால் மட்டும் உருவானதல்ல , காலப்போக்கில் அகம்படியர் , செட்டி , தனக்காரர் போன்ற பல்வேறு ஆதிக்க சாதிகள் இணைந்து வெள்ளாளர் என்கிற ஓர் பரந்த சாத்தியப்பிரிவினுள் அடங்கினர் என்பதே உண்மை . வெள்ளாளர்களுக்குள்ளும் பல உப பிரிவுகள் இருப்பினும் தலித் மக்களுக்கெதிரான செயற்பாட்டில் ஒருங்கிணைந்து செயற்பட வெள்ளாளர் என்கிற பொது அடையாளம் மட்டுமே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.

இதனடிப்படையிலேயே 1929ஆம் ஆண்டு பாடசாலைகளில் இன, மத, சாதி, தேசிய வேறுபாடு காட்டாமல் எல்லாப் பிள்ளைகளுக்கும் சரியாசனம் கொடுக்கவேண்டுமென அரசு அறிவித்தபோது வெகுண்டெழுந்த வெள்ளாளர்கள் பதினைந்து பாடசாலைகளைத் தீக்கிரையாக்கினார்கள்.1930இல் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் முதல்முறையாக தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டபோது அவர்களுடன் வெள்ளாள மாணவர்களுக்கும் சமபோசனம் வழங்குவதை எதிர்த்து சேர் பொன்.இராமநாதன் கவர்னரிடம் முறையிட்டதுடன் , சாதிய ரீதியிலான பாடசாலைகள் அமைக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தார். அத்துடன் சர்வஜன வாக்குரிமையானது தலித்துக்களுக்கும் படிப்பறிவற்றவர்களுக்கும் தலைமையை கைப்பற்ற வழிவகுக்கும் என்பதால் இந்த முறைமை ஆபத்தானது எனவே சகலருக்கும் வாக்குரிமை என்பது இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் கோரினார் . (சிங்களவர்கள் மட்டும்தான் தமிழாளுக்கு எதிரியா என்பதை இங்கே சற்று யோசிக்கவேண்டும்.

நாம் இன்றும்கூட “இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறா ” என்கிற கருத்தியலின் பின்னே மிக நூதனமான யாழ் ஆதிக்க சாதியினரின் நரித்தனம் மறைந்திருக்கின்றன என்பதே உண்மை . ‘’யாழ்பாணத்தில் நீங்கள் எவடம் ? “என கேற்கும் கேள்விகூட இடத்தினை வைத்து சாதியை கண்டுபிடிப்பதற்காகவே. மேலும் திருமணங்களில் மிக இறுக்கமாக சாதியத்தை கட்டிக்காப்பது , அடுத்தவர்களை எடை போடுவதற்காக சாதியை பயன்படுத்துவது, தங்களை மற்றவர்களைவிட உயர்ந்தவர்களாக பேணிக்கொள்வதற்காக சாதியை பயன்படுத்துவது போன்ற பண்புகள் இன்றுவரை இவர்களிடத்தே இருந்தாலும்கூட, இந்த நவீன காலத்தில் பொதுவெளியில் முன்னரைப்போல் சாதிப்பெருமை பேசினால் கிளம்பும் எதிர்ப்புக்களை சமாளிக்க கடினம் என்பதாலும்கூட தற்போதெல்லாம் சற்று அடக்கியே வாசிக்கிறார்கள் என்றுகூட சொல்லலாம் . சாதிய மனோநிலை இன்றுவரை இருந்தாலும் அதுபற்றி பேசுவதன் வீரியம் குறைந்திருக்கின்றதெனலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php