2023 Feb 16
கடந்த இரண்டு வருடங்களாக அசைக்க முடியாமல் வலுவாக இருந்த அதானியின் சாம்ராஜ்யத்தினை “ hindenburg” என்ற ஒரே அறிக்கை ஒட்டு மொத்தமாய் சாய்த்து விட்டிருக்கின்றதென்றால் மிகையில்லை. உலகின் மூன்றாவது பணக்காரராக இருந்த அதானியை இரண்டு நாட்களிலேயே உலகின் இருபது பணக்காரர்களின் பட்டியலில்கூட நிற்கவிடாமல் தூக்கியெறிந்த ஹிட்டன்பர்க் அறிக்கையின் 88 கேள்விகளின் விளைவால் அறிக்கை வெளியான இரண்டு நாட்களிலேயே அதானியின் கம்பெனிகளின் பங்குகள் அனைத்தும் 20 சதவீதத்திற்கும் கீழ் சரிந்தது. அதுமட்டுமல்லாமல் அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க்கின் அறிக்கை அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹின்டன்பர்க் அறிக்கையின் சுருக்கம்!
ஒரு நிறுவனத்தின் ப்ரொமோட்டர் 75% தான் ஒரு பங்கில் வைத்திருக்கலாம் என்பது “sebi “ விதி. இல்லாவிடின் பங்கின் விலையைத் தீர்மானம் செய்வது அவர்களாகவே இருக்குமே தவிர பொதுமக்களாகவோ
வெளிப்படைத்தன்மையுள்ளதாகவோ இருக்காது. பங்கு விலையை இவர்களே ஏற்றி இறக்கினால் அதை வைத்துக் கடன் வாங்கலாம், கூடுதல் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கலாம்.
இதனாலேயே பல ஷெல் நிறுவனங்களை உருவாக்கி அதானி நிறுவனம் தன்னிடம் இருக்கும் பணத்தினையே அவற்றிற்கு அனுப்பி மறுபடி அதைப் பட்டியிலிடப்பட்ட பங்குகளில் முதலிடச் செய்திருக்கிறது என்பதுடன் இந்த வழிமுறையினைப்பயன்படுத்தி நினைத்தபடி பங்கின் விலையை ஏற்றி அதன்வழி இன்னும் கடன் வாங்கிப் பல புதிய தொழில்களைத் அதானி நிறுவனம் தொடங்கியுள்ளது. புதிய தொழில்களின் மூலம் வந்த பணத்தைப் பல திருட்டுத்தனமான வழிகளில், அதே ஷெல் நிறுவனங்களினூடாக வெளியே அனுப்பி தங்கள் பொக்கற்றுக்குள் வந்திடும்படிச் செய்திருக்கின்றனர்.
இப்படியெல்லாம் திருட்டுத்தனம் செய்தால் கணக்குவழக்கில் ஒடிடோரியலில் மாட்டிக்கொள்ளமாட்டார்களா என்றால் , அதற்காகவே குறுகிய ஆண்டுக்குள் பல நிதி மேலாளர்களை (CFO) மாற்றியிருக்கின்றன இந்நிறுவனங்கள். தணிக்கை செய்வதற்கும் தகுதியில்லா நிறுவனங்களைப் பிடித்து யாரும் கேள்வி கேட்கமுடியாதபடி செய்திருக்கிறது. சிலவற்றில் சில தணிக்கையாளர்கள் கேள்வி கேட்டாலும் அதனால் எந்தப்பயனும் இருந்திருக்கவில்லை. யாரும் கண்டுகொள்ளவில்லை.
அதுமட்டுமன்றி எப்படிப் பணம் வந்தது என்பதிலேயே பல குழப்பங்கள் இருக்கின்றன. பலமுறை பல வழக்குகள், வரி ஏய்ப்பு , கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் பதியப்பட்டாலும் அரசுகளும், நெறிப்படுத்தும் மையங்களும் கண்டுகொள்ளவில்லை. குற்றச்சாட்டுககும் விசாரணையும் ஓரளவுக்கு மேல் செல்லாமல் அவை தடுக்கப்பட்டுள்ளன.
உள்ளூரில் கேள்வி கேட்ட எல்லாரையும் பணம் கொடுத்து வாங்கியோ மிரட்டியோ சரிகட்டியிருக்கின்றனர். இப்போது வெளிநாட்டுக்காரன் கேட்கிறான் என்றவுடன் தப்பிப்பதற்காக அதானி குழுமம் கையிலெடுத்திருக்கும் ஆயுதம்தான் தேசாபிமானம் . இந்தியர்களின்மீதும் இந்தியாமீதும் வன்மம் கொண்ட மேலைத்தேயர்களால் வீண் வதந்தியாக கட்டியெழுப்பப்பட்டதே இந்த அறிக்கை என அதானி ஆதரவாளர்களால் தொடர்ந்தும் பரப்புரை செய்யப்பட்டு வருகின்றது .
கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் ஊழல்கள் மோசடிகள் போன்றவற்றை அம்பலப்படுத்தும் ஓர் நிறுவனமாக தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் ஹின்டன்பேர்க் நிறுவனத்தின் பெயருக்கான பின்னணி என்ன தெரியுமா ?மனிதர்களால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய இழப்பினை தடுப்பதற்கான ஓர் நிறுவனமாக தாம் இருக்கவேண்டும் எனும் அடிப்படையில் தாம் செயல்படுவதாகவும் அதனால்தான் , 1937 இல் ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சியின்போது ஏற்பட்ட “ Hindenburg disaster “ என வரலாற்றில் குறிப்பிடப்படும் ஓர் பேரழிவு சம்பவத்தினை அடிப்படையாக கொண்டே தமது நிறுவனத்திற்கு அந்த பெயரை வைத்ததாக கூறுகின்றார் .
Hindenburg airship transship விண்கலத்தின் உரிமையாள நிறுவனமும் அதன் பணியாளர்களும் கவனயீனமாக நடந்துகொண்டதன் விளைவாக 36 மனிதர்களின் இறப்பு உற்பட அநேகமானோரின் உடல் காயங்களுக்கு அந்த விபத்து காரணமாகியது . ஆகவே இவ்வாறான ஒரு சில மனிதர்களின் கவனயீனத்தால் ஏற்படப்போகும் மிகப்பெரிய அழிவுகளிலிருந்து அநேகரை காப்பாற்ற வேண்டும் என்பதே எமது நிறுவனத்தின் நோக்கம் என்பதால் அந்த பேரழிவிற்கு காரணமான விண்கலத்தின் பெயரை தாம் தமது நிறுவனத்திற்கு வைத்திருப்பதாக நேத்தன் குறிப்பிட்டுள்ளார் .
ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் (ஷார்ட் செல்லிங்) செயல்பாடுகளை அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கண்காணித்து வருகின்றன என்ற போதிலும் , இதுநாள் வரையில் ஹீண்டன்பர்க் நிறுவனம் மீதோ, அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் மீதோ முன்வைக்கப்பட்டுள்ள குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. அவர்கள் மீது எந்த கிரிமினல் குற்றங்களும் இல்லை என்பதே உண்மை. 2017ல் தொடங்கப்பட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் இதுவரை 20க்கும் மேலான நிறுவனங்கள் பற்றி ஆராய்ந்து அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறது. சீனாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றும் ஈராஸ் இன்டர்நேஷனல் என்ற பாலிவுட் சினிமா நிறுவனம் ஒன்றும் மட்டுமே தம்மீதான அறிக்கை ஆதாரமற்றது என ஹிட்டன்பேர்க் மீது வழக்கு தொடர்ந்துள்ள என்பதும் அந்த வழக்குகள் மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது .