நாடி Review “அயலி” ஓர் பார்வை – நாடி Review

“அயலி” ஓர் பார்வை – நாடி Review

2023 Feb 20

சமகாலத்தில் பெண் விடுதலை குறித்தும் பெண் கல்வி குறித்தும், பெண்கள் மீது காலங்காலமாக திணிக்கப்பட்டிருக்கும் பிற்போக்கான விடையங்களை சமூகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டும் வகையிலும் பல திரைப்படங்களும், வெப் சீரிசுகளும் வெளிவந்துகொண்டிருக்கின்றமையானது மிகவும் ஆரோக்கியமானவொன்று என்றே கூறவேண்டும் . அந்தவகையில், தெய்வ வழிபாட்டின் வழியே உருவான கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களின் ஆக்டோபஸ் கரங்கள் பெண்ணை அடக்கியாள ஆணுக்கு கொடுத்திருக்கும் துணிச்சலை தமிழ் செல்வி எனும் கதாபாத்திரம் எதிர்க்கும் விதம்தான்‘அயலி’ திரைப்பட கதையின் கரு.

சுமார் ஐநூறு வருடங்களுக்குமுன் ஒரு பெண் தன் காதலனோடு ஊரை விட்டு இரவோடிரவாக சென்றுவிடுகின்றாள். சம்பவத்தை தொடர்ந்து எதேச்சையாய் ஏற்படும் பஞ்சத்திற்கும் பிணிக்கும் ஊர் கட்டுப்பாடு தாண்டி ஓர் பெண் வெளியேறியதுதான் காரணம் என கருதும் ஊர் மக்கள் இதனால் மிகப்பெரிய சாமி குற்றம் ஏற்பட்டு விட்டதாக அஞ்சி புலம்பெயர்ந்து வேறு ஒரு இடத்திற்கு சென்று விடுகின்றனர். அங்கு பெண்களுக்கு எதிராக கடுமையான சட்ட திட்டங்களை வகுக்கின்றனர்.

அதன்படி பழமைவாதம், பெண்ணடிமைத்தனம் போன்றவைகளை கடுமையாக பின்பற்றி வரும் அந்த கிராமத்தில் பிறக்கும் பெண்கள் வயதுக்கு வந்த உடனேயே வெளியே எங்கும் செல்லாதபடிக்கு அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கம் நாளடைவில் வழக்கமாகிவிடுகிறது.இப்படியாக தொண்ணூறாம் ஆண்டளவில் விரியும் கதை புதுக்கோட்டையின் பின்தங்கிய வீரபண்ணை கிராமத்தில் தொடங்க ,பருவ வயதை எட்டிய பெண்கள், கோயிலுக்குள் நுழையவோ, பள்ளிக்கூடத்திற்கு செல்லவோ, ஊரைத்தாண்டி அடியெடுத்து வைக்கவோ கூடாது போன்ற பழமைவாதத்தில் ஊறிக்கிடக்கிறது கிராமம்.

இப்படியான ஒரு கிராமத்தில் சகல செல்வ செழிப்புடனும் அப்பாவின் செல்ல மகளாகவும் வளரும் பள்ளி மாணவி தமிழ்ச்செல்வி . அந்த ஊருக்கு வந்துபோகின்ற ஓர் வைத்தியரின் டெத்ஸ்கோப்பினை முதன்முறையாக அணிந்துகொண்டு தன்னுடைய இதயத்துடிப்பினை தானே கேட்ட நொடியிலிருந்து தானும் ஓர் வைத்தியராக வேண்டும் என்பதுதான் தமிழ் செல்வியின் கனவு. ஆனால் அந்த ஊரில்தான் பெண்கள் எட்டாம் வகுப்பினையே தாண்டமுடிவதில்லையே ? பருவம் எய்திய மூன்றாம் மாதமே திருமணம் செய்துவைத்துவிடுவதுதானே ஊர் வழக்கம்! எனவே தன் கனவை நிறைவேற்றிக்கொள்ள, தான் வயதுக்கு வந்த விஷயத்தையே மறைத்துக்கொண்டு வாழ முற்படுகிறாள் தமிழ் செல்வி.

இதனால் என்னென்ன சிக்கல்கள் வருகின்றன, அந்தக் கிராமத்திலிருக்கும் பல பெண்களின் நிலை என்ன தமிழ்ச்செல்வி அந்த ஊரை மாற்றினாளா போன்ற கேள்விகளுக்கு நகைச்சுவை கலந்து சுவாரஸ்யமாகவும், அதே சமயம் சமூகப் பொறுப்புடனும் பதில் தருகிறது ஜீ5 ஓடிடி தளத்தில் இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில், குஷிமாவதி தயாரிப்பில் எட்டு எபிசோடுகளாக வெளிவந்துள்ள இந்த சிரீஸ். இணைய தொடர் என்றாலே திரில்லர் கதையாகவும் ஒரு கொலையை சுற்றி நடக்கும் சம்பவங்களை மட்டுமே பேசும் என்ற வரம்பை உடைத்து இப்படியும் இணைய தொடரை மக்களுக்கு பிடித்தது போல் கொடுக்கலாம் என நிரூபித்திருக்கின்றார் இயக்குனர் முத்துகுமார்.

இயற்கையாக ஏற்படும் பெண்களின் மாதவிடாய்க்கு பல மூடநம்பிக்கைகளை சம்பிரதாயம் மற்றும் வழக்கம் என்கிற பெயரில் காலங்காலமாக திணித்துவைத்திருக்கும் சமூகத்தின் பொதுப்புத்தியில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஒரு கருத்தை ஆர்ப்பாட்டமல் இல்லாமல் சொல்லி இருப்பது பாராட்டத்தக்கது . கிராமமே தெய்வமாக வழிபடும் அயலியும், பாதிக்கப்பட்ட ஓர் அபலைப் பெண்ணாக இருக்கலாம் என்னும் (யார் கண்டா, அயலி சாமிகூட இவனுங்களே கொன்னு பொதச்ச ஒரு பொண்ணாகூட இருக்கலாம் எனும் வசனம்) இடத்தில் இயக்குனரின் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது.

கைகளைக் கட்டி கட்டாயத் தாலி கட்டப்பட்ட பிறகு, தாலியைக் கழற்றி, கட்டியவனின் முகத்தில் வீசி, பளாரென்று அயலி கொடுத்த அறை, அவனின் கன்னத்தில் மட்டும் விழுந்த அறை அல்ல. கழுத்தில் தாலி ஏறிவிட்டது என்பதற்காகவே வேறு வழியில்லாமல் கண்டவனை கணவனாக ஏற்றுக்கொள்ள வைக்கும் சமூகத்துக்கும் , வலுக்கட்டாயமாக தாலி கட்டவைத்து அதன்மூலம் கதாநாயகியை கதாநாயகனுக்கு அடிபணிய வைக்கும் கதையினைக்கொண்ட தமிழ் சினிமாக்களுக்குமான அறை!

கதையில் வசனங்கள் கவனம் ஈர்ப்பதோடு, காத்திரமாகவும் இருக்கின்றன. உதாரணத்துக்கு,

“ஊட்டுல சும்மா படுத்திருக்கேனா… நான் பாக்குற வேலைக்கு எல்லாம் சம்பளம் பேசலாம் வர்றியா?

“நாம எங்க வாழறம் ? நம்ம வாழ்க்கையையும் சேர்த்து நம்ம ஆம்பளைங்கதான் வாழறாங்க

“உங்க குடும்ப கௌரவத்தை ஏன் எங்க காலுக்கு இடையில தேடுறீங்க?”

“அப்படி குடும்ப மானம் முக்கியம்னா, அதை நீங்களே தூக்கிச் சுமக்கவேண்டியதுதானே? அதை ஏன் பொம்பளைங்கக் கிட்ட தர்றீங்க?”

“கோயில இடிச்சிட்டா பொண்ணுங்கள எப்படி கட்டுப்படுத்துவீங்க”
“ஆம்பளைங்க சேலையத்தான் கட்டணும்’ என சொல்லும்போது, ‘கட்டிக்க பொறக்கும்போதே வேட்டியோடவா பொறந்த..’

“உங்க அறிவுக்கு எது சரின்னு தோணுதோ, அதை மட்டும் பண்ணுங்க!

“உனக்கு உண்டானதை நீதான் பாத்துக்கணும்!

சாதாரணமான விஷயத்துக்காகக் கூட உயிரக் கொடுத்து போராட வேண்டியிருக்கு!

நம்ம பேச்சையும் மனசையும் யார் கேட்கப் போறா?

நம்ம வீட்டுக்குள்ள என்ன நடக்கணும்னு முடிவு பண்றதுக்கு இவனுங்க யாரு…?

எங்க ஊர்ல இருக்குறதெல்லாம் பழக்க வழக்கமே இல்ல, பைத்தியக்காரத் தனம்..!

முதுகுக்குப் பின்னாடியே பார்த்துட்டு இருந்தோம்னா, முன்னாடி போக முடியாது..!

நான் எப்படி இருக்கணும்னு நான்தான் முடிவு பண்ணுவேன்..!

என பிரச்சார நெடி இல்லாமல் வசனங்கள் ஒவ்வொன்றும் தெறிக்க வைக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php