கவிதைகள் உலகை நாடி logo மாற்றம் சரிந்த நோக்கியாவின் சாம்ராஜ்யத்தினை மீண்டும் கட்டியெழுப்புமா?

logo மாற்றம் சரிந்த நோக்கியாவின் சாம்ராஜ்யத்தினை மீண்டும் கட்டியெழுப்புமா?

2023 Mar 2

‘ஏறத்தாழ உலகின் அனைத்து தரப்பு மக்களும் ஒரு முறையாவது பயன்படுத்தியிருப்பார்கள்’ என ஒரு brandடை கூறினால் அந்த brand மொபைல் தான்! அந்த மொபைல் நிறுவனத்தின் பெயர் தான் Nokia!

பன்னாட்டு தொலைத்தொடர்பு நிறுவனமான நோக்கியா 60 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாகத் தன்னுடைய லோகோவை கடந்த 26-02-2023 அன்று மாற்றியுள்ளது. பழைய நோக்கியாவின் லோகோ நீல நிறத்தில் ஒரே வடிவான எழுத்தில் இருக்கும். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நோக்கியாவின் புதிய லோகோவில், பல வண்ணங்களும், `NOKIA’ என்ற வார்த்தை ஐந்து வெவ்வேறு வடிவங்களிலும் இருக்கிறது. தற்போதைய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள், சாம்சுங், மோட்டோரோலா போன்ற நிறுவனங்களும், ரெட்மி, விவோ, ஓப்போ, ஒன்பிளஸ் போன்ற சீன நிறுவனங்களும் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற நிலையில் 2010க்கு பிறகு மெல்லத் தனது இடத்தை இழந்த நோக்கியா தன்னை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முயற்சித்து வருகிறது என்பதற்கான ஒரு ஆரம்பமே இந்த லோகோ மாற்றம் என பலராலும் கருதப்படுகின்றது.

ஸ்மார்ட்போன் நிறுவனமாக இருந்த நோக்கியா தற்போது 5ஜி நெட்வொர் மற்றும் தானியங்கு தொழிற்சாலைகளுக்கு தொலைத்தொடர்பு உபகரணங்களை விற்பதில் கவனம் செலுத்தி வருகிறது. ஆனாலும் கை தொலைபேசிகள் அறிமுகமான காலத்தில், பெரும்பாலானவர்களின் வீட்டில் நோக்கியா மொபைல் போன்களே ஆக்கிரமித்து இருந்தன.

150 வருடகால பழமையான நோக்கியாவை நாமெல்லாம் ஒரு ‘Mobile Phone Company’ என்றுதானே நினைத்திருப்போம்? ஆனால் உண்மையில் அதன் ஆரம்பம் வேறு. பின்லாந்து நாட்டில் சுரங்க பொறியியலாளராக இருந்த ஃபிரெடரிக் ஐடெஸ்டாம் (Fredrick Idestam) என்பவர் 1865ல் அந்நாட்டிலுள்ள நோக்கியன்விர்டா நதிக்கரையிலுள்ள நோக்கியா டவுன் என்ற இடத்தில், ஒரு “Paper Bag ”செய்யும் கம்பெனியை உருவாக்கினார். இக்காலகட்டங்களில் முதல் உலகப் போர் சூடுபிடிக்க ஆரம்பிக்கவே, அந்நேரத்தில் அதிக டிமான்டில் இருந்த தகவல் தொழில்நுட்ப கம்பிகள், கேபிள்கள், ரப்பர் பொருட்கள் போன்றவற்றை நோக்கி தங்கள் கவனத்தை திருப்பியது Nokia. தன்னுடைய நண்பரான லியோ மெச்சிலின் (Leo Mechelin) என்பவருடன் சேர்ந்து, 1868ல் இரண்டாவது கிளை கம்பெனியையும் உருவாக்கினார் ஃபிரெடரிக்.

1922-67 காலக்கட்டங்களில் உலகின் சிறந்த ‘ராணுவ ஆயுத விற்பனையாளராகவும்’ நோக்கியா இருந்துள்ளது என்பதுடன் ராணுவ வாகனங்களுக்கான ஒரு வகையான டயரை கூட நோக்கியா நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகப்போர்களின் முடிவின் பின்னரே நோக்கியா தகவல் தொழில்நுற்பம் நோக்கி பயணிக்க ஆரம்பித்திருந்தது . “Nokia Tele Communication” என்ற புதிய நிறுவனம் ‘Connecting People’ என்ற வாசகத்துடன் உருவாகி, தனது கவனத்தை முழுவதுமாக தகவல் தொடர்பு துறையில் மட்டுமே செலுத்த ஆரம்பித்தது.

நோக்கியா ஏன் வீழ்ந்தது?

அதிக ஆயுள் தரும் ஹார்ட்வேரில் கவனம் செலுத்திய நோக்கியாவிற்கு சாப்ட்வேர் இரண்டாம் பட்சமாகவே இருந்தது என்றுகூட சொல்லலாம் .ஈ மெயில் அனுப்புதல், மெசேஜ் அனுப்புதல், இணைய தள பிரெளசிங், புத்தகம் படித்தல், குறிப்புகள் எடுத்தல் போன்ற, செல்போனில் செய்யும் பணிகளுக்கு ஆதாரமானவை apps . செல்போன்களில் இருக்கும் ஆப்ஸ்களின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி, அதனைப் பயன்படுத்தும் வழிகள் அதிகமாகும். நோக்கியா ஸ்மார்ட் போன்களில், விரல்விட்டு எண்ணக்கூடிய ஆப்ஸ்களே இருந்தன.

இந்த நிலையிலேயே 2007 இல் ஆப்பிள் நிறுவனம், தன் ஐ போன்களை அறிமுகம் செய்தது. ஐ போனிலும், ஒரு சில ஆப்ஸ்களே இருந்தன. ஆனால், பார்க்கும் அழகிலும், பயன்படுத்தும் எளிமையிலும், ஐ போன்கள் தலை சிறந்து இருந்தன. தங்கள் மனங்களில் கொடுத்திருந்த நம்பர் 1 இடத்திலிருந்து நோக்கியாவை மக்கள் அப்போதுதான் முதன்முறையாக கீழே இறக்கினார்கள் என்றுகூட கூறலாம் . ஆப்ஸ்கள்தாம் ஸ்மார்ட் போன்களில் வெற்றி காணும் மந்திரச் சாவி என்பதை உணர்ந்த ஐபோன் 2008 இல் 500 ஆப்ஸ்கள் உருவாக்கத்துடன் ஆரம்பித்து 2012 இல் 11 லட்சமாகி தற்போது ஐபோன்களின் ஆப்ஸ்கள் எண்ணிக்கையை நீங்களே சற்று எண்ணிக்கொள்ளுங்கள்.

அதுமட்டுமன்றி கூகுள் கம்பெனி Android என்னும் operating சிஸ்டதினை கண்டுபிடித்ததுடன் அதனைப் பயன்படுத்தும் உரிமையை Royalty முறையில் பிறருக்கு வழங்கியது. சாம்ஸங், HTC ஆகிய கம்பெனிகள் ஆன்ட்ராய்ட் முறையில் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்தார்கள். இந்த போன்களிலும், நோக்கியாவை விட அதிக அளவில் ஆப்ஸ்கள் இருந்தன.அதிக ஆப்ஸ் இருந்தால்தான், அதிக ஸ்மார்ட் போன்கள் விற்கமுடியும் என்பதுடன் அதிக விற்பனை இருந்தால்தான், சாஃப்ட்வேர் நிபுணர்கள் ஆப்ஸ் உருவாக்குவார்கள் என்கிற கட்டாயத்திலேயே நோக்கியா அதன் வீழ்ச்சியை பாரிய அளவிற்கு சந்தித்தது.

2011ம் ஆண்டு, சிம்பியனிலிருந்து இன்னொரு operating சிஸ்டத்துக்கு மாறி, மக்கள் மனங்களில் இழந்த இடத்தைப் பிடிக்க நோக்கியா முடிவுசெய்து தேர்ந்தெடுத்த வழிமுறையும் அதற்கு படுதோல்வியினையையே ஏற்படுத்திக்கொடுத்தது . ஏனெனில் அப்போது 47 சதவிகித செல்போன்களில் iOS மற்றும் 45 சதவிகித செல்போன்களில் ஆன்ட்ராய்டும் operating சிஸ்டம்களாக இருந்தன. iOS ஆப்பிள் நிறுவனத்தினுடையது அதற்கு வேறு யாரும் உரிமை பெற முடியாது. இந்தநிலையில் நோக்கியா, கூகுளிடமிருந்து ஆன்ட்ராய்ட் பயன்படுத்தும் உரிமையை வாங்காது, சுமார்3 சதவிகித போன்களே பயன்படுத்திய வின்டோஸ் ஆப்பரேடிங் சிஸ்டத்தை மைக்ரோசாஃப்ட் கம்பெனியிடம் வாங்கினார்கள். இந்த மாபெரும் தவறே ஆப்பிள், சாம்ஸங் ஆட்சி செய்த ஸ்மார்ட் போன் உலகத்தில், நோக்கியா காணாமல் போக மற்றுமோர் காரணமானது.

வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அதை ஈடுகட்ட தவறியமை, தொலைத்தொடர்பு உலகில் ஏற்பட்ட கடுமையான போட்டியைச் சமாளிக்க இயலாமை போன்ற இன்னோரன்ன காரணங்களினால் நோக்கியா தடுமாறிச் சரிந்தது. எனினும் தற்போது மீண்டும் சந்தையை பிடிப்பதற்கான யுக்தியை தனது லோகோவிலிருந்தே தொடங்கியுள்ள நோக்கியா நிறுவனம் மீண்டும் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்குமா என்பதை காலம் தான் முடிவு செய்யக்கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php