2023 Mar 3
2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி Prabath G மற்றும் Mirun Pradhap இனால் Prabath G youtube தளத்தில் வெளியான பாடல் தான் ‘மலையகன்’. இந்தப் பாடல், Mirun Pradhap இனால் இசையமைக்கப்பட்டு Prabath G மற்றும் Mirun Pradhap இனால் பாடப்பட்டுள்ளது. இப்பாடலுக்கான Mixing மற்றும் Mastering உம் Mirun Pradhap அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இதற்க்கான வரிகள் Prabath G இனால் எழுதப்பட்டுள்ளது. இப்பாடலுக்கான Illustration மற்றும் Animation ஆனது Thamara Nadun Sumanasekara இனால் உருவாக்கப்பட்டுள்ளது.
காலம் காலமாக தொடர்ந்து வரும் மலையக மக்களின் அவலங்களை மூன்று நிமிட பாடலில் தெளிவாக விளக்கியுள்ளனர். இப் பாடலுக்கான காணொளியானது “இலங்கை வாழ் மலையக மக்களின் 200 வருட அர்ப்பணிப்புக்கு இப்பாடல் சமர்ப்பணம்.” என்ற வரிகளுடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து திரையில் தோன்றுகின்ற சோர்ந்த கண்களுடன் காணொளி நகர
“யென்னா..?? இங்க ஓட்ட கூர,
யென்னா..?? மழ தூத்தலோட,
யென்னா..?? நாம கஷ்டப்பட்டா யென்னா..??”
என்ற வரிகளுடன் பாடல் மலர்கிறது. பாடலின் ஆரம்ப வரிகளே மலையக மக்களின் நிலையை எவரும் பொருட்படுத்தாது கடந்து செல்கின்ற நிலைக்கு சாட்சியாகிறது. இன்றும் அந்நிலை தொடர்ந்து நிலைப்பமையே இப்பாடலுக்கான அடித்தளமாக மாறி நிற்கிறது.
பாடலின் ஒவ்வொரு சொல்லும் மலையகனின் வாழ்வின் அவலத்தை வெளிச்சமிட்டு காட்டுகிறது. ஓரிரண்டு வருடங்கள் அல்லவே 200 வருட கால அவலம் இது. ஆட்சிகளும் ஆட்சியாளர்களும் நாகரீகமும் மாறிய போதும் மலையகனின் வாழ்க்கை மாறாது உறைந்திருப்பதனை
“யா என்னய்யா உங்க குண்டு குழி பள்ளம் மேடு போட்ட ஓட்டுல நெறஞ்சிச்சா..??
பார் சின்னையா தொர வீட்டு வாசல் மொத்தமாவும் வேர்வையின் புற்கள் மொளச்சிச்சாம்
நீ பாடுபட்டு வேல செய்யும் காணி பூமி ஒங்கப்பே பேருக்கு இருந்திச்சா..??
ஆம் மக்களே நம்புங்கள் ஓ நானும் நல்லது செய்வேன் உங்க நீல சாயம் வெளுத்துச்சாம்..!!” என்ற வரிகள் மூலமாக படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது. இவ்வரிகள் மாற்றம் காணா வாழ்வை மட்டுமன்றி, உடைந்து நொறுங்கி கிடக்கும் மலையக மக்களின் நம்பிக்கையையும் மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறது.
இந்த பாடலின் இசை மற்றும் வரிகள் கேட்பவரை திருப்திபடுத்தக் கூடிய அளவில் சீராக அமைந்துள்ளன. பாடலானது rap பாணியில் அமைந்திருப்பதால் வரிகளை இணங்காணல் சற்று சவாலாக இருந்தாலும், காணொளியின் description இல் பாடல் வரிகள் முதலில் இருந்து முடிவு வரை முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளமை இலகுவாக இருந்தது. Lyric video ஆக உருவாக்கப்பட்ட போதும் description இல் பாடல் வரிகள் கொடுக்கப்பட்டமை, பார்வையாளர்களுக்கு இக்குழுவினர் கொடுத்துள்ள முக்கியத்துவத்தினை எடுத்துக் காட்டுகிறது. குறைகள் இன்றி உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலில்,
“இங்கபாரு எங்க மொழி எங்க உரிம,
என்னா மச்சா எங்க slang பழம்பெரும,
வேல செய்ய கெளம்புறோம் காலம்பரம,
நாம குனிஞ்சி மேல தூக்குறோம் நாட்டின் முதுகெலும்ப..!!” என்ற வரிகள் என் மனதை வெகுவாக கவர்ந்திழுத்தன. மலையகன் பாடலில் உங்கள் மனதை கவர்ந்த வரிகளை எங்களுடன் கமெண்ட் பாக்ஸில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
Rating 10/10