2023 Mar 8
தோள் கொடுத்ததும்
நெஞ்சு சாய்த்து தாங்கி தவித்ததும்
உழைத்து காத்ததும்
போதும்
போதுமிவையெல்லாம்
காது கொடுங்கள்
செவி சாய்த்து பேச்சுக் கேளுங்கள்
கண் துடைத்து விடுங்கள்!
காலங்காலமாய் கலாசாரங்காக்க
பெண்ணவர் காலிடுக்குகளை காட்சிப்படுத்தியது போதும்
அவள் சீவி!
சீவன் பிரசவிக்கும் மகோன்னந்தம்!
அடிமையோ அகதியோ அல்லள்
அக்கினிக் கங்கு!
அவள் வானத்தை
அவள் கண்களின் நிர்வாணப் பார்வைக்கு விட்டு விடுங்கள்
வண்ணமடிப்பதென்றால் அவள் சிறகால் அவளே தீட்டிக் கொள்ளட்டும்
கட்டி வைக்காதீர் – அவர்
சிறகுகளை உம் உறவுகளால்!
அவர்களில் சுதந்திரம்
உங்கள் கைகளில் தானே அகப்பட்டுத் தவிக்கிறது
அது அந்தக்குறுவியின் சுதந்திரம்
உங்களின் கூடுகளுக்கு சொந்தமில்லையது
மெல்லமாய் திறந்து விடுங்கள்
பறந்து சென்றந்த வண்ணாத்தி
வானவில்லில் அமரட்டும்!
தீட்டென ஒதுக்கவோ
தீண்டாமையுள் நடத்தவோ
அவள் உங்களின் அடி சுரண்டி அக்கறைக்கேங்கும் அனாதையில்லை
தன் சுயத்தை தானாய் அடைகாத்து ஈனும் பெரும்புறா!
அனுமதி வழங்க அவர் உங்கள் ஆட்சியுள் அடங்கியவரும் இல்லை
நீங்கள் பேரரச பெருந்தகையும் இல்லை
அனுமதிப்பது என்பது ஆண்மையில்லை
ஆதிக்கம் செலுத்தாமையே ஆண்மை!
உங்களுக்கு முன் அவள் ஓடி அடைந்தால் அசூயை கொண்டு நாணத் தேவையில்லை
அவள் உங்களைக் காட்டிலும் உழைத்திருக்கிறாள்
நீங்களும் பயிற்சி செய்யுங்கள்
தோல்வியை ஏற்று
ஓடிய அவள் பாதங்களை முத்தமிடுங்கள்!
கதைசொல்லுமவர் கலை மதியுங்கள்
முட்களை அகற்றி பாதை அமையுங்கள்
நீங்கள் ஒதுங்கியிருந்தாலும்
அவள் பாதையமைத்துக் கொள்வாள்
புது முட்களை பூவென்ற பெயரில் தூவ வேண்டாம்
மூடர் தம் கூட்டம் சேர்ந்து
புனிதப்பொருளாகவோ
தெய்வப் பிறப்பாகவோ பெண்ணை நீர் பார்க்கத் தேவையில்லை
மனிதியாய் அரவணைத்துக் கொள்ளுங்கள்!
பெண்ணெனப்பட்டவள் கருத்தியல் அல்ல
சமூகத்தின் சம கரு!
சமூக பிராணிகளே
அவள் அவளுக்காக வாழட்டும்
நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள்!
-hajan