2023 Mar 9
நம்மில் அநேகர் வலது கை பழக்கமுடையவராகத்தான் இருப்போம் .ஆனால் சிலர் மட்டும் அனைத்து செயல்களுக்கும் இடது கையைப் பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள். உலகில் உள்ள மொத்த ஜனத்தொகையில் சுமார் 10 சதவீதம் பேர் இடது கை பழக்கம் உள்ளவர்களாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இடது கை பழக்கம் உள்ளவர்களை ‘சினிஸ்ட்ராலிட்டி’ என்று குறிப்பிடுவார்கள். இது ‘இடது பக்கம் இருப்பது’ என பொருள்படும் ’சினிஸ்டரா’ என்ற லத்தின் சொல்லில் இருந்து உருவானது. நமது மூளை பெருமூளை, சிறுமூளை மற்றும் ’மெடுல்லா ஆப்லங்கட்டா’ என மூன்று பகுதிகளை கொண்டுள்ளதுடன் இதில் பெருமூளையில் வலது மற்றும் இடது என இரண்டு பாகங்கள் உண்டு. இந்த இரண்டு பாகங்கள்தான் நம் உடலின் அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்துகின்றன. வலது பக்க மூளை இடது புற உடலையும் இடது பக்க மூளை வலது புற உடலையும் கட்டுப்படுத்தும். நம்மில் பலருக்கு இடது பக்க மூளை அதிக செயல்பாட்டில் இருப்பதால்தான் வலது கையை அதிகம் பயன்படுத்துகிறோம். சிலருக்கு, வலது பக்க மூளை செயல்படுவதால் இடது கை பழக்கம் ஏற்படுவதாக இது பற்றிய ஆய்வுகள் கூறுகின்றன . இது மிகவும் இயல்பானது.
பொதுவாக இடதுகைப் பழக்கம் உள்ளவர்களின் நலம் சார்ந்து அவர்களின் வசதிக்கு ஏற்ப எந்த பொருளும் பயன்பாட்டுக்கு வருவதில்லை. வலது கை பயனாளிகளின் மனநிலைக்கு ஏற்பவே அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்கள் முதல் அனைத்துமே தயாரிக்கப்படுகின்றன. இதனால் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் பல சவால்களைச் சந்திக்கிறார்கள். எழுதுதல் வாகனம் ஓட்டுதல், கணினி பாவனை முதல் அன்றாடம் வீட்டுத் தாழ்ப்பாள் திறப்பது வரை அவர்களின் இயல்புக்கு மாறான செயலாகத்தான் இருக்கின்றன.
இந்த சமூகத்தில் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சந்திக்கும் சிரமங்களை மற்றவர்கள் உணரும் வகையில் விழிப்பு உணர்வை ஏற்படுத்த ‘சர்வதேச இடது கை பழக்கம் உள்ளவர்கள் தினம்’ 1976ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13-ம் தேதி கொண்டாடப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது .
இடது கைப் பழக்கம் உள்ளவர்களைக் கட்டாயப்படுத்தி வலது கைப் பழக்கத்துக்கு ஈடுபடுத்தினால், அவர்களின் செயல்திறன் குறைந்துபோவதாக கூறப்படுகின்றது .
இடது கைப் பழக்கம் உள்ளவர்களால், பலதரப்பட்ட பணிகளை (Multi tasking) ஒரே நேரத்தில் செய்ய முடியுமாதலால் கட்டாயப்படுத்தி அவர்களின் பழக்கத்தை மாற்றத்தேவையில்லை எனப்படுகின்றது . இடது கை பழக்கம் உடைய மக்கள் பழங்காலம் முதலே இருந்து வந்துள்ளனர் என வரலாறு கூறுகிறது.அறிவார்ந்த விடயங்களில் இதுவரை வரலாற்றை புரட்டிபோட்ட பல நபர்களும் இடது கையர்களே என்பதும் கவனிக்கத்தக்கது.
அரிஸ்டாட்டில், லியோனார்டோ டாவின்சி, ஐன்ஸ்டின், நியூட்டன் ,நெப்போலியன், பில் கேட்ஸ், மேரி கியூரி ,மைக்கிலாஞ்சலோ ,ஒபாமா, அன்னை தெரசா, சச்சின் டெண்டுல்கர் ,மார்க் ஸுக்கர்பேர்க், சார்லி சாப்ளின், வால்ட் டிஸ்னி, ரொனால்டு ரீகன், மகாத்மா காந்தி, பெஞ்சமின் பிராங்க்ளின்என இடது கை பழக்கமுடையோரின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லக்கூடியது.
-ப்ரியா ராமநாதன்