2023 Mar 29
நம்மில் பலருக்கு பிரியாணி பிடிக்கும். பிடிக்கும் என்பதை விட அலாதி பிரியம். சுட சுட, மண மணக்க மசாலா வகைகளை போட்டு, சில பல பீசுகளோடு, பாஸ்மதி அரிசியில் பிரியாணி என்றால் பலர் உயிரையே விட்டு விடுவார்கள்.
இன்று நாம் நாடியின் “ருசியை நாடி“ பகுதியில் பார்க்கப்போவது அசத்தலான ஒருவகையான சிக்கன் பிரியாணி செய்முறையே.வழக்கமான பிரியாணி செய்முறையிலிருந்து சற்று மாறுபட்டு தேங்காய்ப்பால் கலந்து, மசாலா பொருட்களையெல்லாம் நெய்யிலேயே வறுத்தரைத்து எப்படி பிரியாணி சமைக்கலாம் என்பதை தற்போது பாப்போம்.
செய்முறை விளக்கம்!
முதலில் சுத்தம் செய்த கோழி இறைச்சியினை (இறைச்சியின் அளவைப்பொறுத்து ) தேவையான அளவு உப்பு, மஞ்சள் பொடி, கரம் மசாலா , மிளகாய்த்தூள் , ஒரு சிட்டிகை அளவு தயிர் கலந்து அரைமணிநேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும் அதுபோலவே நீளமான பாஸ்மதி அரிசியினை கழுவி அதனையும் ஒரு இருபத்தைந்து நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.
பின்பு பிரியாணிக்குத் தேவையான மசாலாவை வறுத்து அரைத்துக்கொள்ளும் பொருட்டு, ஒரு வாணலியில் தேவையான அளவு நெய்யை சூடாக்கி ,அதில் சோம்பு பட்டை, ஏலக்காய், கராம்பு போன்ற வாசனை திரவியங்களை இட்டு சற்று பொரிந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி இலை போன்றவற்றையும் அதில் இட்டு வதக்கி ஆறவைத்து மிக்சியில் நன்கு அரைத்தெடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
மூன்றாவது படிநிலையாக ஒரு குக்கரில் நெய், கொஞ்சம் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுவந்ததும், சோம்பு, மராத்தி மூக்கு, நட்சத்திர பூ, பிரிஞ்சி இலை, பட்டை கிராம்பு, ஏலக்காய் எல்லாவற்றையும் சேர்த்து கொஞ்சம் பொரியவிட்டு, நீளநீளமாக வெட்டிவைத்த வெங்காயத்தினை (கொஞ்சம் அதிகமாகவே வெங்காயம் சேர்த்துக்கொள்ளுங்கள்) இட்டு பொன்னிறமாகும் வரையில் வதக்கிக்கொள்ளவேண்டும். பின் பெரிய அளவிலான இரண்டு தக்காளிகளை அறிந்து வெங்காயத்தோடு சேர்த்து (தக்காளி சீக்கிரமாக மசிவதற்காக உப்பு இந்த இடத்திலேயே சேர்த்துக்கொள்ளலாம்) வதக்கி, அதனோடு நெய்யில் வறுத்து அரைத்துவைத்திருக்கும் மசாலா கலவையினையும், ஊறவைத்த சிக்கனையும் ஒன்றாக கலந்து (தண்ணீர் கலக்காமல் ) வேகவைக்கவேண்டும்.
சிக்கன் நன்கு வெந்து வந்ததும் , (நீங்கள் எடுக்கும் அரிசியின் அளவுக்கேற்ப தண்ணீர் மற்றும் தேங்காய்ப்பாலின் அளவு மாறுபடும்) ஒரு டம்ளர் தண்ணீர் மற்றும் இரண்டு டம்ளர் தேங்காய்ப்பால் கலந்து கொதித்து வந்ததும் அதில் ஊறவைத்திருக்கும் அரிசியை கொட்டி நன்கு கலந்துவிடவும். பின் கொத்தமல்லி இலை, புதினா போன்றவற்றையும் கொஞ்சம் தூக்கலாக போட்டு (உப்பு, காரமெல்லாம் சரிபார்த்துவிட்டு) வேகவைத்துக்கொள்ளவும்.
அவ்வளவுதான் சுலபமான முறையில் மணக்க மணக்க சுவையான பிரியாணி தயாராகிவிடும்.
சிக்கன் பிரியாணிக்கு best commination என்றால் அது தயிர் பச்சடி தானே? அதையும் செய்து பரிமாறிப்பாருங்கள் பாராட்டுக்கள் குவியும் …
-ப்ரியா ராமநாதன்