நாடி Review பேருந்து (LEAVE HER SPACE) – நாடி Review

பேருந்து (LEAVE HER SPACE) – நாடி Review

2021 Apr 22

ஒரு நாளின் பொழுது விடிந்ததும் ஒரு பெண்ணானவள் தனது கல்வித் தேவை மற்றும் குடும்பத் தேவையின் நிமித்தம் வெளியில் செல்கிறாள். இதில் பெரும்பாலான Middle class பெண்களை பொருத்தவரையில், பொது போக்குவரத்து துறையினை நாடியே அவர்களின் பயணம் அன்றாடம் ஆரம்பமாகிறது. சமூகத்திற்கு அது ஒரு சாதரணமான பயணம் எனினும், பெண்களை பொருத்தவரையில் அந்ந பொது வழிப் போக்குவரத்து ஒரு யுத்த களமாகவே இருந்து வருகிறது. ஆம்! பொது வழிப் போக்குவரத்தில், அதிலும் முக்கியமாக பேருந்தில் பயணிக்கும் பெண்கள் எதிர் கொள்ளும் இன்னல்களும் அசோகரியங்களும் எண்ணிலடங்காதவை. அவ்வின்னல்களை வெளிச்சமிட்டுக் காட்டும் மற்றுமொரு படைப்பே இந்த ‘பேருந்து’.

கடந்த 2020 August மாதம் 07 திகதி YouTube தளத்தில், Ruvutharan Santhirapillai அவர்களின் இயக்கத்தில் பேருந்து குறுந்திரைப்படம் வெளியானது. இதில் Shainuja, Tharindi, Jevon, Krishan என பலர் நடித்துள்னர். மேலும் இத் திரைப்படத்திற்கான ஔிப்பதிவு Ajay Raminath. அதேவேளையில் பின்னணி இசை Bharanaven Jeyakumar, Editing – படத்தொகுப்பு Yazir Nizardeen மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக ஏதோ ஒரு தமிழ் திரைப்படத்தில் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். ஒரு சாதாரண பெண் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, ஒரு ஆணால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகுவாள். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவள், “இங்க வாங்க Sir! நாங்க Middle class பொண்ணுங்க. எங்களால Three wheelerல எல்லாம் போக முடியாது, நீங்க என்னதான் உரசினாலும் இதே பஸ்ல தான் போய் ஆகணும்” என்ற மனதை கலங்கடிக்கும் வசனம் இடம்பெற்றிருக்கும். அவ் வசனங்களின் தவிப்பையும், வலியையும் பேருந்து குறும் திரைப்படத்தில் நடித்த Shainuja வசனமே இன்றி தனது நடிப்பில் வெளிக்காட்டி இருப்பது மிகவும் பாராட்டக்கூடிய விடயமாகும். அந்த பெண்ணின் தவிப்பை அவாதானித்துக் கொண்டிருக்கும் சிறுவன், தன் தாயிடம் வினவும் கேள்விகளை, ‘பஸ்ஸில் இருக்கும் எவரேனும் ஒருவர் அந்த ஆணிடம் கேட்கவில்லை’ என்பது, தற்காலத்தில் நம் மக்களின் சமூக அக்கறை Social Media வில் Post போடுவதோடு முடிந்து போய்விடுகிறது என்பதையே சுட்டிகாட்டுகிறது. கதையில் வரும் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கும் நடிகர்கள், இந்தப்படத்திற்கு மிகப்பெரும் பலம். தமது நடிப்பாற்றலை எங்கே, எப்போது, எப்படி வெளிப்படுத்த வேண்டுமோ, அதை சரியாக புரிந்து கொண்டு செய்திருக்கிறார்கள். துணைப்பாத்திரங்களாக நடித்தவர்கள் கூட, அங்காங்கே தமது முகபாவனைகளால் score செய்கிறார்கள்.

சிறுவன் கேள்விகளை கேட்கும் காட்சிகளில், வசனங்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். முக்கியமாக இறுதிக் காட்சி உட்பட மற்றைய காட்சிகளில் வரும் வசனங்கள் வலுவாக இருப்பினும், போதியளவு யதார்த்தமாக அமையவில்லை. அது தவிர பெரும்பாலான இடங்களில் பின்னணி குரல் dubbing Sync ஆகவில்லை என்றே கூற வேண்டும். இயக்குனர் Dubbing செய்யும்போது கூடிய கவனம் செலுத்தியிருக்கலாம். குறும்படத்தின் காட்சிகள், பின்ணனி ஒலி, Dubbing குரல் ஆகிய மூன்றும், சில இடங்களில் சரிவர நெறியாளப்படவில்லையோ என்று தோன்றுகிறது. ஆனால் குறும்படத்தின் ஆரம்பத்தில் வரும் வானொலிக் குரல், கனகச்சிதமாக அமைந்திருக்கிறது. தவிர பெரும்பாலான இடங்களில் பின்னணி ஒலி சிறப்பாக அமைந்திருக்கிறது.

படத்தின் காட்சியமைப்புகளில் ஔிப்பதிவாளரை பாராட்டியே ஆக வேண்டும். ஒரு பஸ்ஸில் எத்தகைய காட்சியமைப்புக்களை செய்ய முடியுமோ, அவ்வளவு நேர்த்தியாக காட்சியமைத்து தனது வேலையை சிறப்பாக செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். எடிட்டிங் திறம்பட செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக படம் முழுவதும் B&W, அதாவது கருப்பு வெள்ளையில் இருப்பது, குறும்படத்திற்கான Mood ஐ முதல் Frame இல் இருந்தே Set செய்கிறது. தவிர, பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சமூக அவலங்கள் தொடர்பான விடயங்களில் நாம் எந்தளவுக்கு பின்தங்கியுள்ளோம் என்பதை அந்த கலர் tone உணர்த்துகிறது. அதேவேளையில், பேரளவில் நிகழும் ஓர் சமூக அவலத்தினை, வெறும் நான்கு நிமிடங்களில் வெளிக்கொணர்ந்த இயக்குனருக்கும் படத்தொகுப்பாளருக்கும் பாராட்டுக்களை வழங்கியே ஆக வேண்டும்.

இலங்கையில் ஒவ்வொரு 90 நிமிடத்திற்கு ஒருமுறை, ஒரு பெண் பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கு இலக்காகிறாள் என்பது வேதனையே! அவ்வாறான தருணங்களில் ‘நமக்கென்ன?’ என்று இருக்காமல், ‘ஏன்?’ என்ற கேள்வியினை எழுப்ப வேண்டும், என்ற உன்னத சமூகக் கருத்து இந்த படத்தில் வெளிப்படுகிறது.

நாடி Verdict – 73/100
‘பேருந்து’ – இனி பெண்களின் வழியில்..
குறும்பட Link – https://youtu.be/cylrzONdjto

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php