Macro-கதைகள் பத்தாவது படியில்

பத்தாவது படியில்

2021 Oct 23

இதே படிகளில் நான்கு கால் பாச்சலில் ஏறி இருக்கிறேன். இப்போது பத்து படிகளுக்கு மேல் ஏற முடியவில்லை. வெறும் இருபத்தி நான்கு வயதுக்குள் முதுமை வந்துவிட்டதை போல ஒரு உணர்வை இந்த படிகள் இப்போது எனக்கு ஏற்படுத்துகின்றது.

இந்த பள்ளியில் ஒன்பது பத்து வருடங்கள் ஆகி விட்டன. இது எங்கள் பள்ளியின் என்பதாவது ஆண்டு விழா. பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் வந்திருக்கிறேன். பள்ளிக்கு மீண்டும் வருவதும், அங்கு சுற்றி திரிவதும் ஒரு அலாதியான உணர்வு.

மெல்ல மெல்ல கூட்டம் வந்துக்கொண்டு இருந்தது. வருவதாக சொன்ன என் நண்பர்கள் யாரையும் காணவில்லை. பள்ளியின் மைதானத்துக்கு பின் பக்கம், பிரதான மண்டபத்துக்கு செல்லும் வழியில் நடந்தேன். சுற்றிலும் மரங்கள் சூழ இருக்கும் அழகிய இடம் அது. அங்கு தான் அந்த படி இருக்கிறது. மிக பழைமையான சிதிலமடைந்தபடி. அதன் ஓரங்களிலும், நடுவிலும் வெடிப்புக்களில் புற்கள் வளர்ந்து காணப்படும். பள்ளி காலத்தில் இந்த படியை நான் துள்ளி குதித்து கடப்பேன். இப்போது என்ன வென்றால் பத்தாவது படிக்கே மூச்சு வாங்குகின்றது.

அப்போது தான் அது நடந்தது. எனக்கு அருகில் இரண்டு ஆடவர்கள் அந்தபடி வழியாக இறங்கிக்கொண்டு இருந்தார்கள். அதில் ஒருவன் என்னை பார்த்ததும் கொஞ்சம் உற்று நோக்கிவிட்டு, “அமுதன் அண்ணா நீங்களா?” என்றான்.

கொஞ்சமும் அடையாளம் தெரியாத முகங்கள். பெரிய தாடியும், பறந்த தேகமுமாக பிரம்மாண்டமாக காட்சியளித்தனர். அவர்களோ தங்களின் பெயர்களை சொல்லி அறிமுகப்படுத்தும் வரை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. அரவிந்தன், மனோகர் இருவரும் நான் சொன்ற பள்ளி “வேனில்” என்னோடு வந்தவர்கள். என்னைவிட மூன்று வயது குறைந்தவர்கள். நாங்கள் முழு காற்சட்டை அணிந்த போது அவர்கள் அரைக் காற்சட்டையோடு குஞ்சு குழுவான்களை போல இருப்பார்கள். இப்போது என்னவென்றால் பார்க்க என்னை விட பெரியவர்களை போல தோற்றமளிக்கிறார்கள்.

அவர்களை பார்த்தது மகிழ்ச்சியளித்தது. என்னுடைய பள்ளி வாழ்க்கையில் “வேன்” பயணங்கள் மறக்க முடியாதவை. வீடு செல்ல இருக்கும் அந்த நாற்பத்தைந்து நிமிடமும் ரணகளமாக இருக்கும். கடைசி இரண்டு சீட்டிலும்  ஆண்கள் இருக்க, முதல் இரண்டு சீட்டிலும் வேறு கல்லூரியின் பெண்கள் இருப்பார்கள். அப்படி பழக்கமானவர்கள் தான் இவர்கள்.

பாதி படியில் நின்றபடியே பேசிக்கொண்டு இருந்தோம். பிரதான மண்டபத்தில் ஏதோ நிகழ்ச்சி நடந்துக்கொண்டு இருப்பதாகவும் அங்கிருந்து தான் வருவதாகவும் சென்னார்கள். அத்தோடு சேர்த்து இன்னொரு விஷயத்தையும் சொன்னார்கள்..

“உங்க ஆளு உஷாவை பார்த்தோம், இன்னும் அப்படியே இருக்காங்க” என்றான் அரவிந்தன்.

பள்ளி படித்த காலத்தில் இருந்த அதே நக்கல் தொனி அவனிடம் அப்படியே இருந்தது.

நல்ல கரு விழியும், அடர்ந்த கூந்தலும், நல்ல உயரமுமாய் பார்க்க பெரிய பெண்ணைப்போல இருப்பாள் உஷா. அவள் மீது ஒரு முறையாவது பார்வை திரும்பும் படியான அழகி. என்னை விட ஒரு வயது கூடிய பெண் என்றாலும் அவள் அழகை நான் ரசிக்காமல் இருந்தது இல்லை.

பள்ளி படிக்கும் போது அவள் மீது ஏராளமான பேருக்கு காதல் இருந்தது. என்னிடமே சிலர் காதல் கடிதங்களை கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள். அப்படி அவளுக்கு வரும் கடிதங்களை வேனில் வைத்து எல்லோர் முன்னிலையிலும் சத்தமாக படித்து சிரிப்பது எங்கள் வழக்கம். அப்படி நான் செய்ததை அறிந்த அவளது முரட்டு காதலர்களில் ஒருவன்; ஒரு முறை என் நடு மண்டையில் ஓங்கி ஒரு கொட்டு வைத்தான். அழுதபடி வேனுக்கு வந்த என் தலையை தடவி கொடுத்து மார்போடு அணைத்துக் கொண்டாள் உஷா. அந்த உணர்வு எனக்கு வித்தியாசமாக இருந்தது.

வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவில் எதையாவது மிச்சம் பிடித்து வேனுக்கு கொண்டு வருவாள். அப்படி கொண்டு வருவதையும் என்னிடம் கொடுத்து தான் பிறருக்கு பிரித்துக்கொடுக்க சொல்வாள். அவளது ஆசை தம்பி நான். அதற்கு பிறகு தான் இவர்கள் எல்லாம்.

பத்தாவது படிக்கும் போது நான் வேறு பள்ளிக்கு மாறியதால் அந்த வேனில் இருந்து மாற்றம் அடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நேரம் வேனில் எனக்காக உஷா மட்டும் தான் அழுதாள். அவள் அப்படி அழுவாள் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. இப்போது இவர்கள் இப்படி பேசுவதற்கு காரணம் அவள் என் மீது காட்டிய அந்த நெருக்கம் தான்.

தொடர்ந்து அவளை பற்றியே பேசிக்கொண்டு இருந்தார்கள். நான் பள்ளி மாறியதோடு உஷாவை பற்றி மறந்துவிட்டேன். இப்போது தான் எல்லாம் நினைவுக்கு வருகிறது. அந்த வேன் வாழ்க்கை ஒரு மறக்க முடியாத காலம் தான். எனக்கு நினைவில் உள்ளவர்களை பற்றி எல்லாம் கேட்டேன். சில பல  நினைவுகளின் மீட்டல்கள் நடந்தது. விடைபெறும் நேரம் வரும் போது அரவிந்தன் அதை சொன்னான்.

“கடைசி வரையிலும் உஷாக்கா உங்களின் மீதிருந்த காதலை சொல்லவே இல்லையே”

அவன் சென்னதை கேட்டு ஸ்தம்பித்தேன். அவனை துருவினேன். என்ன சொல்கிறான் என்று தெளிவாக கேட்டேன். அவன் சொன்னது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

உஷாவிற்கு என் மேல் காதல் இருந்ததாகவும் அதை சொல்ல இருந்த தடைகளால் அவள் அதை மறைந்து வந்தாள் என்றும் சொன்னான். எனக்கு ஒரு நிமிடம் உஷாவின் முகமும் அவளது வசீகரமான அந்த சிரிப்பும் வந்து போனது. உண்மையில் அவள் அழகை பற்றி கொஞ்சம் குறைத்து தான் சொல்லிவிட்டேன். பார்ப்பவரை ஈர்க்கும் அழகி அவள். அவள் என் மீது காட்டிய அத்தனை நெருக்கத்தின் பின்னாலும் அவளது சொல்ல முடியாத காதல் இருந்திருப்பது இப்போது தான் புரிகிறது.

உண்மையின் என் காதல் வாழ்க்கையை பற்றி நான் உங்களிடம் வெளிப்படையாக சொல்லியாக வேண்டும். சொல்ல ஒன்றும் இல்லாத வெறுமையான இடம் அது. பள்ளி படிக்கும் போது மிக  தீவிரமாக ஒரு பெண்ணை காதலித்தேன். கடைசி வரை அது ஒரு பக்க காதலாகவே இருந்துவிட்டது. அதனால் தான் என் கண்களுக்கு உஷா தெரியாமல் இருந்துவிட்டாள் போலும். அதற்கு பிறகு நான் சென்ற வேலைத் தளங்களிலும் எனக்கு அப்படி சம்பவம் அமையவில்லை. வீட்டில் பெண் பார்க்கும் நிலையைக்கு வந்து விடுமோ என்ற பயம் வேறு. எனக்குள் காதலுக்கான ஏக்கம் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது. சில பல எண்ணங்கள் என்னை ஊடுருவியது. உஷாவிற்கு இப்போது எண்ணை பிடிக்க வாய்ப்புக்கள் குறைவு தான். இந்த காலப்பகுதிக்குள் கண்டிப்பாக அவள் வாழ்க்கையில் யாரவது ஒரு ஆண் வந்திருக்க கூடும், அப்படி இல்லாமல் அவள் இன்னும் என்னை போல இருந்தாள். என் மீதான அந்த காதல் மறுபடி தோற்றம் பெற்றாள். எண்ண ஓட்டங்கள் என்னுள் வெடித்து சிதரின.

ஒரு வேலை இது எங்கள் பள்ளியின் என்பதாவது விழாவாக மட்டும் இல்லாமல் என் வாழ்க்கைக்கான தொடக்க விழாவாகவும் இருக்கலாம். மனதுக்குள் ஏதோ ஒரு உணர்ச்சி எனக்கு பரவச நிலையை தந்தது.

எது எப்படி இருந்தாலும் என்னை காதலித்த முதலும் கடைசியுமான பெண் அவள் தான். அவளை சந்தித்தே ஆகவேண்டும்.

அவர்களிடம் இருந்து விடைப்பெற வேண்டும். அதற்கான பேச்சை வளர்த்தேன். விடைப்பெறும் முன் மீண்டும் அவள் பிரதான மண்டபத்தில் தானே இருக்கிறாள் என்று கேட்டு உறுதி செய்துக்கொண்டேன். அவனும் அங்கு தான் பார்த்தேன் என்றான் ஆனால் அத்தோடு சேர்ந்து கூடுதலாக ஒரு தகவலை சொன்னான். இரண்டாம் தரத்தில் படிக்கும் உஷாவின் மகனின் மேடைப்பேச்சு முடிந்ததும் அவள் கிளம்பிவிடுவதாக சொன்னதாக கூறி விரைவாக சென்று பார்க்கும்படி சொல்லி மறைந்தான்.

மீதம் இருக்கும் பத்து படிகளும் முன்பை விட கடினமாக இருந்தது கடக்க.!

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php