Macro-கதைகள் ஜூலியின் கொலை

ஜூலியின் கொலை

2021 Oct 29

ஜூலி இரத்த வெள்ளத்தில் கிடந்ததை முதலில் பார்த்தது பார்த்தீபன் தான். அவள் முதுகில் குத்தப்பட்டு செங்குத்தாக நின்றுக்கொண்டிருந்த கத்தியை பார்த்ததும் அவனது முதுகு தண்டு ஜில்லிட்டது. அலறி அடித்துக்கொண்டு அவளது அறையில் இருந்து வெளியே வந்தான்.

அவனால் எதையுமே சிந்திக்க முடியவில்லை. அந்த வீட்டில் அவர்களோடு தங்கி இருந்த மற்ற நண்பர்களுக்கு கால் அடித்தான். வரன், கல்பனா, ஆதில் ஆகிய யாருமே காலை எடுக்கவில்லை. ஜூலியின் காதலன் ரொஷானின் நம்பர் கூட அவனிடம் இருந்தது ஆனால் அவன் அந்த முயற்சியில் இறங்கவில்லை.

அந்த வீட்டுக்குள்ளே இருக்கவே அவனுக்கு பயமாக இருந்தது. வீட்டை விட்டு வெளியே வந்தான். நேரம் மாலை ஆறு மணியை எட்டி இருக்க கண்டியின் அந்த பிரதேசத்தை சுற்றி குளிர் மெல்ல அதிகரித்துக்கொண்டு இருந்தது. ஏன் என்று தெரியாமல் பார்த்தியின் கண்கள் கலங்கின. ஜூலியின் அந்த உடல் அவனது நினைவுகளில் வந்துக்கொண்டே இருந்தது.

ஜூலி ஒரு யூ டியூப் பிரபலம். அடிப்படையில் அவள் ஒரு மாடல். அவளது அழகிலும் கவர்ச்சியான உடையிலும் பார்க்கும் இளைஞர்களை கொள்ளையடித்திருந்தாள். இலங்கையின் பல்வேறு இடங்களுக்கு சென்று அந்த இடத்தின் உணவு வகைகளை உண்டு அதை தனது யூ டியூப் சானலில் பதிவிடுவது தான் அவளது வேலை. அவள் சாப்பிடும் உணவை தாண்டி அவளை பார்க்க என ஒரு கூட்டம் அவளது சேனலில் அலை மோதியது.

இந்த முறை கண்டியின் உணவு பழக்கங்களையும் அங்கிருக்கும் சிறந்த உணவு விடுதிகளில் உண்டு அதை வீடியோவாக பதிவு செய்யவும் அவள் வந்திருந்தாள். கண்டியில் இந்த வீடு ஒரு ரம்மியமான இடத்தில் அமைந்திருந்தது. ஏற்கனவே அதில் மற்றவர்கள் ஒவ்வொரு அறையை வாடகைக்கு எடுத்திருக்க கடைசியாக தான் ஜூலி அங்கு குடி வந்தாள். அதுவும் இரண்டு மாத ஒப்பந்தத்தில் வந்திருந்தாள்.

அவளை தவிர அங்கு மூன்று ஆண்களும் கல்பனா என்ற ஒரு பெண்ணும் மட்டும் தான் இருந்தார்கள். ஜுலியை தவிர மற்ற எல்லோரும் ஆறு மாதத்திற்கு அதிகமாகவே அங்கு வசித்து வருகின்றனர். ஜுலி  அங்கு வருவதற்கு முன்னாலே அவளை மற்ற மூன்று ஆண்களுக்கும் தெரிந்திருந்தது. ஒரு யூ டியூப் பிரபலத்துடன் தங்க போகும் மகிழ்ச்சியில் தான் எல்லோரும் இருந்தார்கள். ஆனால் அவள் வந்த இரண்டு வாரத்திலேயே ரொஷான் என்ற கேமரா மேனுடன் சுத்த ஆரம்பித்தது மற்ற மூவருக்கும் அதிர்ச்சியளித்தது. அவளிடம் இருக்கும் ஷூக்களின் எண்ணிக்கையை விட அவளது போய் பிரண்டுகளின் எண்ணிக்கை அதிகம் என்று அவளே விளையாட்டாக சொல்லுவாள்.

கண்டிப்பாக இது கொலை தான். நன்றாக நடு முதுகில் கத்தி குத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் பார்த்தீபனின் குழப்பம் என்னவென்றால் ஜுலி அன்று  காலையிலேயே வீட்டை காலி செய்து விட்டு எல்லோரிடமும் விடைப்பெற்றுவிட்டு அவர்கள் கண் முன்னால் தான் கண்டி புகையிரத நிலையத்து கிளம்பினாள். காலையில் அவர்கள் வேலைக்கு போகும் முன் கிளம்பிய ஜுலி எப்படி மாலையில் பிணமாக கிடக்கிறாள்.

அங்கிருந்த சி சி டி வி அவனது நினைவுக்கு வந்தது. அதை எடுத்து பார்த்தால் எல்லாம் தெரிந்துவிடும் ஆனால் மறுபடி அந்த வீட்டுக்குள் நிழையும் அளவு அவனுக்கு சக்தி இருக்கவில்லை. சிந்தித்துக்கொண்டு இருக்கும் போதே கல்பனாவிடம் இருந்து கால் வந்தது. அவளிடம் விசயத்தை சொன்னான் பார்த்தீபன்.

பார்த்தீபன் ஏதோ விளையாடுவதாக நினைத்தாள் அவள். வீடு வரும் வரை அவள் நம்பவே இல்லை. பார்த்தி அவளை ஜுலியின் அறை வரை சென்று காட்டியபோது தான் அவள் நம்பினாள். அங்கு தான் பார்த்திக்கு ஒரு விடயம் உறுத்தியது. இந்த இரண்டு மாதத்தில் ஜுலியோடு அதிகம் நெருங்கி பழகியது கல்பனா தான். இருவரும் ஒரு சில இரவுகள் கூட ஒன்றாக ஒரு அறையில் உறங்கி இருக்கின்றனர். ஆனால் தனது தோழி இப்படி குத்துப்பட்டு கிடப்பதை பார்த்தும் அவளிடம் இருந்து ஒரு துளி கண்ணீர் வராதது சந்தேகமாக இருந்தது அவனுக்கு.

அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே வீட்டுக்கதவை திறந்து ஆதில் உள்ளே வந்தான். அந்த வீட்டின் பிரதான சாவி ஒவ்வொருவரிடமும் இருந்தது. ஆதில் உள்ளே நுழைந்த உடனேயே அங்கு ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதை தெரிந்துக்கொண்டான். அவனுக்கும் ஜுலியின் நிலை காட்டப்பட்டது.  கலங்கி போய் நின்றான் அவன்.  போலீசுக்கு சொல்லிவிடலாம் என்றாள் கல்பனா ஆனால் ஆதில் சற்று தயங்கினான். இதனால் அவன் அடுத்த வாரம்  செல்ல இருக்கும் அவனது வெளிநாட்டு பயணம் தடைப்படும் என்று வருந்தினான்.

வருண் மட்டும் தான் பாக்கி அவனும் வந்தவுடன் அவனிடமும் தெரிவித்துவிட்டு போலிஸ் போக தீர்மானித்தார்கள். ஆனால் மூவருக்கும் ஒரு விடயம் சந்தேகிக்கும் படியாக இருந்தது. அந்த வீட்டுல் எப்போது நேரத்துக்கு வருபவன் வரன் தான். எப்போதும் ஐந்து மணிக்கு எல்லாம் வந்து விடுவான். ஆனால் இன்று அவனை காணவில்லை. மொபைலும் ” சுவிச் ஆப்” என்று வந்தது.

திடீர் என கல்பனாவிற்கு ஒரு யோசனை வந்தது. ஜுலி தான் என்ன செய்தாலும் எங்கு சென்றாலும் அதை சமூக தளங்களில் பதிவிடுவது வழக்கம் அப்படி இன்று காலை அவள் புறப்பட்டு சென்றதையும் அவள் பதிவிட்டு இருக்கலாம் என்று தோன்றியது. ஜுலியின் யூ டியூப், வாட்சப், இண்டகிராம் என எல்லாம் அலசப்பட்டதில் மேலும் குழப்பம் தான் அவர்களுக்கு மிஞ்சியது.

இன்று காலையில் அவள் கொழும்புக்கு திரும்புவதாக இண்டகிராமில் பதிவிட்டு இருக்கிறாள், அதுவும் கண்டி புகையிர நிலையத்தில்  வைத்து பதிவிட்டு இருக்கிறாள். காலை பத்து மணிக்கு புகையிரநிலையத்தில் இருந்த ஜுலி பிறகு எப்படி இங்கே செத்து கிடக்க முடியும். மூவருமாக அவளது அறைக்கு சென்றார்கள். எதிலும் கை வைக்காதபடி அறையை ஆராய்ந்தனர். ஜுலி அறையை காலி செய்து விட்டு எப்படி கிளம்பினாளோ  அப்படியே தான் அறை இருந்தது.

ஆதில் நொந்துக்கொண்டான்.  வீட்டு உரிமையாளர் இப்படி ஒரு பெண்ணை அழைத்து வர போவதாக சொன்ன போதே நான் சென்னேன். இது போன்ற பெண்களால் பிரச்சனைகள் வரலாம் என்று என் பேச்சை அவர் கேட்கவே இல்லை. அதிக பணம் கிடைக்கும் காரணத்துக்காக இவளை உள்ளே விட்டார். எனக்கென்னமோ இவளது காதலன் ரொஷான் மீது தான் சந்தேகமாக இருக்கிறது. இவள் இடத்துக்கு இடம் ஒரு காதலனை மாற்றுவதால் அவன் கோபமடைந்து இவளை போட்டு தள்ளி இருப்பான் என்றான்.கல்பனாவும் அவன் செல்வது தான் சரியாக இருக்கும் என்று கூறினாள்.

கார்லிங் பெல் சத்தம் கேட்டது.

வருண் வீட்டின் முன்னே நின்றுக்கொண்டு இருந்தான். அவன் பார்க்க கலைப்பாகவும் கையில் சீராப்புடனும் இருந்தான். எல்லோரும் அவனை ஒரு மாதிரியாக பார்த்தனர். ”சின்ன எக்சிடண்ட் பிரண்ட்ஸ் வர வழியில ஒரு ஆட்டோ காரன் மோதிட்டான். பாக்கெட்ல இருந்த கீயும் எங்கயோ மிஸ் ஆகிவிட்டது” என்று சொல்லி முடிய பார்த்திபன் பாய்ந்தான். ஏன் இப்படி பண்ணினாய் ஜு லி உனக்கு என்ன செய்தாள் என்று கத்தினான்.

வருண் முழித்தான்.

அவனாக தான் இருக்கும் என்று  முடிவுடனேயே எல்லோரும் பேசினார்கள். நடந்ததை சொன்னார்கள். வருண் பேச்சற்று கிடந்தான். பார்த்தீபன் மேலும் பாய்ந்தான் ஜு லி அங்கு வந்து சேர்ந்த ஒரு மாதத்தில் வருண் ஜு லியிடம் கொஞ்சம் சில்மிஷமாக நடந்துக்கொள்ள முயற்சி செய்தான். அவள் ஆரம்பத்தில் இருந்தே வருனிடம் தள்ளியே பழகினாள். அந்த ஆத்திரத்தில் அவளை கொலை செய்துவிட்டு இப்போது எல்லோரும் வந்த பிறகு வீட்டுக்குள் நுழைகிறான் என்றான் அவன். வருனுக்கு கோபம் தலைக்கேறியது. உண்மையில் நான் ஒரு விபத்தை சந்தித்துவிட்டு தான் வந்திருக்கிறேன் அவ்வளவு சந்தேகம் என்றால் போலீசை கூப்பிடலாம். சி சி டி வி கேமராவை பார்க்கலாம் என்றான் அவன்.

உடனடியாக சி சி டி வி யை ஆராய சென்ற அவர்களுக்கு மற்றுமொரு குழப்பமும் காத்திருந்தது. சி சி டி வி யின் வயர் துண்டிக்கப்பட்டு இருந்தது. இத்தனை நாள் ஒழுங்காக ஓடிக்கொண்டு இருந்த சி சி டி வி எப்படி இன்று கழட்டிவிடப்பட்டு இருக்க முடியும். கண்டிப்பாக இது ஒரு திட்டமிட்ட கொலை என்று முடிவெடுத்தனர். தங்களுக்குள் ஒருவர் மீது ஒருவர் கொண்ட சந்தேகங்களை பேச ஆரம்பித்தனர். சண்டை வெடித்தது.

எல்லோரும் மாறி மாறி ஒருவரைஒருவர் சாடிக்கொண்டு இருக்கும் போது அவர்கள் எதிர்ப்பாராத ஒரு சம்பவம் அங்கு நடந்தேறியது.  அவர்களின் முன்னால்  ஜுலி இரத்தம் தோய்ந்த ஆடையோடு வந்து நின்றாள்.

எல்லோரும் பேச்சற்று பேயை பார்ப்பதை போல பார்த்தார்கள்.

ஜுலி மிகவும் சோர்வாகவும் வருத்தத்துடனும் பேசினாள் ”என்னை யாரும் கொல்லவில்லை. நான் நன்றாக தான் இருக்கிறேன். “இட்ஸ் ஜெஸ்ட் அ பிரேக்” போகும் முன்னால் உங்களோடு ஒரு விளையாட்டு விளையாட தீர்மானித்தேன். நான் சொல்ல இருப்பது  இன்றைய இரவு ரயிலில் தான்.” என்றாள்.

எல்லோரும் பேச்சற்று அமைதியாக இருந்தனர்.

ஹாலிலும் அறையில் கேமராவை மறைத்து வைத்தேன். நான் இப்படி கிடந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று பார்த்தேன். இந்த வீடியோவை நான் என் பக்கத்தில் பதிவிட்டால் கண்டிப்பாக அது மிகப்பெரிய அளவில் பகிரப்படும். ஆனால் அத்தோடு சேர்ந்து எனக்கு இவ்வளவு போலியான நண்பர்கள் இருந்திருப்பதும் தெரியவரும். அதனால் நான் இதை எங்கேயும் பதிவிட போவதில்லை. உண்மையில் நான் உங்களை நேசித்து தான் பழகினேன். இனி ஒரு போதும் மீண்டும் உங்களை பார்க்க நான் விரும்பவில்லை. என்று கூறிவிட்டு அவளது அறைக்கு சென்று உடையை மாற்றிவிட்டு பெட்டிப்படுக்கையோடு “குட் பை” என்று சொல்லிவிட்டு திரும்பிப்பார்க்காமல் நடந்தாள்.

P.S.மஹின்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php