2021 Sep 10
ஒன்றல்ல இரண்டல்ல. மொத்தம் அறுபத்தி எட்டு நாட்கள்.
மொத்தம் அறுபத்தி எட்டு நாட்கள் அவள் வீட்டுக்கு மீண்டும் மீண்டும் டெலிவரி செய்துவிட்டான். சிறியதோ, பெரியதோ, விலை கூடியதோ, குறைந்ததோ, ஏதோ ஒரு பொதியோடு தினமும் அந்த வீட்டு முன்னால் சென்று நிற்பான். ஒரு நாளேனும் அந்த வீட்டுக்கு ஏதாவது ஒரு பொருளை விநியோகம் செய்யாது அந்த பாதையை கடந்ததில்லை அவன்.
சந்துரு ஒரு “டெலிவரி ஏஜெண்ட்” ஆக வேலைக்கு சேர்ந்து இன்றோடு ஐந்து மாதங்கள் கடந்துவிட்டது. பதுளையில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் அவன். மெலிந்த உயர்ந்த தேகத்துடனும், குறுந்தாடியுடனும், துறுதுறுவென காட்சியளிப்பான். ஊரில் அவனுடைய பாட்டியோடு சண்டை போட்டு வேலை தேடி கொழும்பு புறப்பட்டு வந்தான். கொழும்புக்கு வந்த போது கொவிட் காரணத்தினால் அரசாங்கம் இரண்டாம் கட்ட ஊரடங்கை அறிவித்திருந்தது. அந்த நேரத்தில் எந்த வேலையும் அவனுக்கு கிடைக்கவில்லை. ஊருக்கு திரும்பி போக கூடாது என்ற வைராக்கியம் மட்டும் அவனுள் இருந்தது. அவனது பள்ளி நண்பனின் உதவியுடம் எப்படியோ கொஞ்ச காலம் தாக்குபிடித்தான்.
சந்துருவின் பாட்டி வள்ளிக்கு அவன் எப்போதும் அவளுடனேயே இருக்க வேண்டும் என்ற ஆசை. அவனுக்கு பெற்றோர் இல்லை. அவனை சிறுவயது முதல் வளர்த்தது பாட்டி தான். அவனுக்கு இருபது வயது ஆரம்பித்ததில் இருந்தே பெண் பார்க்க ஆரம்பித்திருந்தாள். சந்துருக்கு சொந்ததிலேயே ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் முடித்து வைக்க நினைத்தாள். ஆனால் அவனுக்கு இது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.
சந்துருவிற்கு நிறைய கனவுகள் இருந்தது. அவனது ஊரின் குறுக்கு மறுக்கான பாதைகளில் தன்னுடைய சொந்த ஆட்டோவில் ராஜா போல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சவாரி செய்ய வேண்டும் என ஆசைப்பட்டான். கொஞ்சம் அதிகமாக அதில் ஒரு வெள்ளைக்கார பெண் இவனை பார்த்து காதல் வயப்பட்ட இருவரும் திருமண பந்ததில் இனைவதாகவும் அவனுக்கு கனவுகள் இருந்தது. ஆனால் பாட்டி எல்லாத்தையும் தொம்சம் செய்துவிடுவாள் போல இருந்தது. அதனால் பாட்டியோடு சண்டை பிடித்து கொழும்பு வந்து சேர்ந்தான்.
பாட்டி அவனுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைத்துவிட்டது என்று தெரிந்ததும் தைய தக்கா என்று குதித்தாள், பேரன் பெரிய இடத்து வேலைக்கு போகிறான் என்று தம்பட்டமடித்தாள். அவனது குட்டி கிராமத்தை பொருத்தமட்டில் வீட்டில் யாராவது கொழும்பில் வேலை செய்கிறார்கள் என்பதே அவர்களுக்கு பெருமையான விடயம் தான்.
சந்துருக்கு முதல் இரண்டு மாதம் கொடுக்கப்பட்ட பாதை கொழும்புக்குள் தான் இருந்தது. ஆனால் மூன்றாவது மாதம் கம்பனியால் அவனுக்கு நீர்கொழும்பு பகுதியில் அறை ஒதுக்கப்பட்டது. நீர்கொழும்பு செல்லும் பிரதான வீதியை சுற்றியுள்ள பாதை அவனுக்கான விநியோக பாதையாக மாற்றப்பட்டது.
சந்துருவின் வேலைக்குட்பட்ட இடங்கள் பெரும்பாலும் நீண்ட கடற்கரைகளை ஒட்டிய அழகிய இடங்களாகவே காட்சியளித்தன. அதன் ரம்மியமான தெருக்களில் வண்டியோட்டி அலைவதை அவன் பெரிதும் விரும்பினான். இலங்கையின் மத்திய மலைநாட்டில் பிறந்து வளர்ந்ததாலோ என்னவோ தெரியவில்லை அவனுக்கு கடலின் மீது அளாதியான ஈர்ப்பு இருந்தது. கடல் எப்பொழுதும் அவனுக்கு ஆச்சரியத்தையும் அமைதியையும் தந்தது.
சுற்றுலா பயணிகள் வந்து தங்கும் விடுதிகள், ரெஸ்டாரண்டுகள் அந்த இடத்தில் அதிகம் இருந்தது. அந்த மாதிரியான கடைகளில் சென்று பாலின் விலையை கேட்டால் தேனின் விலையை சொல்வார்கள். ஆகவே அவன் அந்த பக்கம் செல்வதே இல்லை.
தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு விநியோகம் செய்யவேண்டிய பொருட்கள் அவனுக்கு கிடக்கும். ஒரு பெரிய மூட்டையில் அதை போட்டுக்கொண்டு கம்பனி ஸ்கூட்டியில் விநியோகம் செய்ய கிளம்புவான். எப்படியும் மாலை வரை அவனுக்கு வேலை இருக்கும்.
சந்துருக்கு அந்த வேலை பிடித்து போனதுக்கு சில காரணங்கள் இருந்தது. அந்தந்த பொதிகளுக்கு உரிமையானவர்கள் அதை பெற்றுக்கொள்ளும் போது அவர்களிடம் இருக்கும் ஆவல், மகிழ்ச்சி என்பனவற்றை அவன் மிகவும் இரசிப்பான். மகிழ்ச்சியோடு அவனுக்கு நன்றி சொல்லும் சிலரை பார்க்கும் போது ஏதோ தானே அவர்களுக்கு அதை வாங்கி கொடுத்ததை போல உணர்வான். கிறிஸ்துமஸ் இரவுகளில் “சாண்டாகிளாஸ்” ஒரு மூட்டையில் பரிசுகளை எடுத்துக்கொண்டு வலம் வருவதை போல தன்னை சில சமயம் நினைத்துக்கொள்வான். ஆனால் பகல் பொழுதுகளில் உச்சி வெயிலில் வண்டி ஓட்டுவதை நினைக்கும் போது மட்டும் தான் கொஞ்சம் வெறுப்பாக இருக்கும்.
ஒரு சிலருக்கு தொடர்ந்து பொருட்கள் வந்துக்கொண்டே இருக்கும். அது போன்ற நபர்களுடன் அவனுக்கு நல்ல உறவு ஏற்பட்டு இருந்தது. தேவாலயத்துக்கு அருகே இருக்கும் தாரிக்கா என்ற சிங்கள பெண்; அவளது காணாமல் போன தம்பியை போல அவன் இருக்கிறான் என்று அன்பாக சொல்லுவாள், அக்கறையுடன் பேசுவாள். கடற்கரைக்கு அருகே இருக்கும் டாக்டர் கணேஷன் வீடு ; டாக்டர் பேச ஆரம்பித்தால் அவனை விடுவதே இல்லை. வாரத்துக்கு ஒருமுறை அவனுக்கு விடுமுறை கிடைக்கும் போது டாக்டர் வீட்டுக்கு தான் செல்லுவான். மிஸ்டர் அண்ட் மிஸிஸ் குணபால ; அவர்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் இருந்து ஏதாவது அனுப்புவார்கள், உதவிக்கு யாரும் இல்லாததால் சில நேரங்களில் சந்துரு தான் அரிசி பருப்பு போன்றவற்றை வாங்கி கொடுப்பான். சூப்பர் மாடல் சில்மி ; எப்போதும் அவன் கன்னத்தை கிள்ளி தான் பேசுவாள் . இவர்கள் எல்லோரும் அவனுக்கு நண்பர்கள் போல தான். வாரம் இரு முறையாவது அவர்களுக்கு ஏதாவது பொதிகள் வரும். சில நேரங்களில் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து உபசரித்த சந்தர்பங்களும் உண்டு. சந்துருவும் அதே போல யாருடனும் இலகுவாக பேசி ஒட்டிக்கொள்ளும் பழக்கம் உடையவன்.
சந்துருவின் இந்த வாடிக்கையாளர்கள் எல்லாவற்றிலும் இருந்து மாறுப்பட்ட வாடிக்கையாளர் தான் இலக்கம் 81 வீட்டில் வசிக்கும் ஆருத்ரா. ஆள் நடமாட்டமே இல்லாத அமைதியான ரிச்சர்ட் தெருவின் கடைசி வீடு அது. முதல் இரண்டு மூன்று நாட்கள் அந்த வீட்டு முகவரிக்கு டெலிவரி வந்த போது அவன் பெரிதாக ஒன்றும் நினைக்கவில்லை. ஒரு நாள் விடாமல் இது தொடர்ந்த போது தான் அவனுக்கு அசாதாரணாமக பட்டது. எப்போதும் பகல் உணவுக்கு முன் அவன் அந்த வீட்டு கார்லிங் பெல்லை தட்டி விடுவான். அந்த பெண் அப்போது தான் தூங்கி எழுந்து வெளியே வந்து பொருளை வாங்கிச்செல்வாள். தினமும் அவள் வீட்டுக்கு ஏதாவது விநியோகம் செய்வது மட்டுமல்லாது அவளை எழுப்பி விடும் வேலையும் அவன் தான் செய்து வந்தான்.
ஆருத்ரா பார்ப்பதற்கு அழகாகவும் பெரிய இடத்து பெண்ணாகவும் தெரிந்தாள். நல்ல உயரம், கட்டையாக வெட்டப்பட்ட கூந்தல், வசீகரமான பார்வை என காட்சியளித்தாளும் எப்போதும் அவள் முகத்தில் ஒரு சோகம் ஒட்டிக்கொண்டே இருக்கும். அவளுக்கு வரும் பொதிகளின் மூலம் அவள் பெயர் ஆருத்ரா என்பதை அறிந்துக்கொண்டான். ஆனால் அதைத்தாண்டி அவள் பற்றிய எதுவுமே அவனுக்கு தெரியவில்லை.
அந்த வீட்டில் அவளுடன் இருப்பது யார்? எப்போதும் அவள் முகம் வாடி இருப்பது ஏன்? தினமும் அவளுக்கு ஆடர்கள் வருவது ஏன்? அந்த ஆடர்களில் இருப்பது என்ன? போன்ற கேள்விகள் அவனிடம் இருந்தது. அவனது அறையில் தங்கும் சக நண்பனோடு இதைப்பற்றி கேட்டபோது அவள் ஏதாவது ஆன்லைன் பிஸினஸ் செய்ய கூடும். ஆன்லைனில் குறைந்தவிலையில் பொருட்களை வாங்கி அதை நல்ல லாபத்திற்கு வெளியில் விற்பார்கள். அவளும் அப்படித்தான் ஏதாவது செய்வாள் என்று சொன்னான். ஆனாலும் சந்துருவிற்கு ஏதோ தவறாகவே பட்டது.
குறிப்பாக அன்றொரு நாள் அவள் நடந்துக்கொண்ட விதம் அவனை மேலும் சிந்திக்க வைத்தது. வழக்காம அன்றைய நாளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய பொருட்கள் கம்பனிக்கு வரும் போதே அதை பெற்றுக்கொள்ள வேண்டியவர்களுக்கு மின்னஞ்சலும், குறுஞ்செய்தியும் சென்றுவிடும். ஆதே போல வாடிக்கையாளர்களின் மொபைல் இலக்கம் டெலிவரி ஏஜெண்ட்களுக்கும், டெலிவரி ஏஜெண்ட்களின் மொபைல் இலக்கம் வாடிக்கையாளர்களுக்கும் பகிரப்படும்.
அன்று அவன் விநியோக பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்பும் போது அதிசயமாக ஒன்றை கவனித்தான். அந்த பெண்ணிற்கு எந்த பொருளும் வந்திருக்கவில்லை. அவன் வழக்கம் போல விநியோகம் செய்திக்கொண்டிருந்த போது பகல் வேலையை தாண்டி அவனுக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. அழைப்பில் பேசியது அவள் தான்.
ஏன் இன்னும் வரவில்லை? எனக்கு இன்று எந்த பார்சலும் வருவதாக ஏன் குருஞ்செய்தி வரவில்லை என்று கொஞ்சம் அதட்டலாக கேட்டாள். அவள் அப்போது தான் எழுந்திருக்கவேண்டும் என்று நினைத்தான். அன்று அவளுக்கு பொருள் எதுவும் வந்திருக்கவில்லை அது தான் கொண்டு வரவில்லை, நீங்கள் ஏதேனும் ஆர்டர் செய்திருந்தீர்கள் என்றால் அது நாளை வரலாம் என்று கூறினான். அதற்கு அவள் இன்று அந்த பொருள் வீட்டுக்கு வரும் என்று ஆன்லைனில் காட்டியதாக சொன்னாள், சந்துரு அமைதியாக அந்த மாதிரி சில நேரங்களில் நடக்கும் எங்காவது தாமதம் ஏற்பட்டு இருக்கலாம் இது போன்றான சூழ்நிலமைகளில் பெரும்பாலும் மறுநாள் அந்த பொருள் வீடு தேடி வந்துவிடும் என்று சொன்னான். அவள் அடங்கவில்லை. குழந்தைகளுக்கு ஒரு பொருளை வாங்கி கொடுப்பதாக கூறிவிட்டு பிறகு மறுக்கும் போது அவர்கள் நடந்துக்கொள்வதை போல இருந்தது அவளது பேச்சு. எப்படியோ அவளை சமாளித்து அழைப்பை துண்டித்தான். அவனுக்கு வினோதமாக இருந்தது இரண்டு மாதங்களுக்கு மேலாக ஒரு நாள் விடாமல் அவளுக்கு பொருட்களை அவன் டெலிவரி செய்திருக்க, இந்த ஒரு நாளுக்கு அவள் இப்படி நடந்துக்கொள்வது அவனுக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. அவனது அறை நண்பன் சொன்னது போல ஏதேனும் வாங்கி விற்கும் தொழில் தான் செய்கிறாளோ என்று சந்தேகித்தான்.
மறுநாள் அவன் சொன்னது போலவே அவளுக்கான பொருள் வந்தது. அதை எடுத்துக்கொண்டு அன்று வழக்கத்துக்கு மாறாகவே சீக்கிரமாக சென்று அவள் வீட்டு வாசலில் நின்றான். எப்போதும் வாசலில் நின்று இரண்டு, மூன்று கால் கொடுத்தால் போதும் அவள் வெளியே வந்துவிடுவாள். ஆனால் இன்று பல முறை முயற்சி செய்தும் அவள் அழைப்பை ஏற்கவில்லை. முதல் முறையாக அந்த கேட்டை தாண்டி உள்ளே நுழையும் தருணம் வந்தது. நீண்ட முற்றம். வீட்டின் கதவு மட்டும் மண் பாதை. இரண்டு பக்கமும் கவனிக்கப்படாமல் வளர்ந்து கிடந்த செடி கொடிகள். கதவுக்கு நேர் மேலே ஒரு மல்லிகை பந்தல் சுற்றிக்கொண்டிருந்தது. அந்த வீட்டுக்கு அழைப்பு மணி போன்ற ஒன்று இருப்பதாக தெரியவில்லை. கதவை தட்டுப்பார்த்தான். எந்த பதிலும் இல்லை. மீண்டும் மீண்டும் தட்டினான் எந்த சலனமும் இல்லை, நேற்று பொருள் வராததற்கு அவ்வளவு பேசினாள் இன்று ஆளை காணவில்லை என நினைத்துக்கொண்டான். கிளம்பலாம் என தயாரானான் அப்போது தான் அவனுக்கு அந்த கதவு பூட்டப்படாது திறந்திருப்பது தெரிந்தது.
மெல்ல கதவை தள்ள அது திறந்துக்கொண்டது. வீடு முழுக்க ஏராளமான பொருட்கள் அலங்கோலமாக பரப்பி கிடந்தது, பராமறிக்கப்படாமல் குப்பையாக இருந்தது. ஹாலில் ஒரு சோபாவும் அது முன்னால் இருந்த சிறிய மேசையில் ஒரு லாப் டாப் திறந்த நிலையிலும் இருந்து. அதற்கு பக்கத்தில் காலியான ஒரு விஷ்கி பாட்டி விழுந்து கிடந்தது. ஸ்ரீ அவளை அழைத்து பார்த்தான் எந்த பதிலும் இல்லை. ஏதோ தவறாக உணர்ந்தான். இந்த இரண்டு மாதத்தில் இப்படி நடப்பது இது தான் முதன் முறை.
மெல்ல உள்ளே எட்டிப்பார்த்தான் அவனுக்கு பகீர் என்றது. உள்ளே படுக்கை அறைக்கு போகும் வழியில் இரண்டு கால்கள் தரையில் கிடப்பதைப்பார்த்தான். ஒரு கனம் தாமத்தித்தான் மறுகணம் உள்ளே சென்று பார்த்தான் அங்கே அந்த பெண் மயங்கிய கிடந்தாள். அவளிடம் நெருங்கி பார்த்தான். மூச்சு இருந்தது. அவள் மூக்க முட்ட குடித்திருக்க கூடும் விஷ்கி வாடை குப்பென்று அடித்தது. அவள் பெயரை சொல்லி அழைத்தான் அவளிடம் மாற்றமில்லை அவளை அப்படியே விட்டு போக மனமில்லை. அவளை தட்டி எழுப்பினான். அவள் உடலில் நடுக்கம் தெரிந்தது. அவள் கண்களை திறந்தாள் ஆனால் கண்கள் மேலே மேலே சென்றன . சந்துருவிற்கு பயமாக இருந்தது. அவனது டெலிவரி மூட்டையை அப்படியே வைத்துவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு அவன் வாடிக்கையாக சொல்லும் டாக்டர் கனேஷன் வீட்டுக்கு பறந்தான். டாக்டரிடம் நிலைமையை சொல்லி அவரை வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்தான். இருவருமாக அவளை பிடித்து சோபாவில் வைத்தனர். டாக்டர் அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினார். ஆனால் அவளால் பேசவோ எழுந்து நிற்கவோ முடியவில்லை.
டாக்டர் அவளை ஆராய்ந்தார். அவள் உடல் நிலை மிக மோசமாக இருக்கிறது. மிக பலவீனமாக இருக்கிறாள் அவளை அருகில் இருந்து யாராவது பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறினார். இருவரும் அவளை குஷனில் படுக்க வைத்துவிட்டு சென்றனர். டாக்டர் அவள் எழும்பியவிடன் அவளை தன்னிடம் மருந்தெடுக்க வரும் படி அவளிடம் சொல்லிவிடு என கூறினார். அவளுக்கு வந்த டெலிவரி பொருளை அங்கேயே வைத்துவிட்டு கிளம்பினான் அவன்.
அந்த வீட்டுக்குள் அவன் பார்த்த சில விஷயங்கள் அவனை உருத்திக்கொண்டே இருந்தது. வீடு முழுக்க அவன் கண்ட குப்பைகள் எல்லம் அவளுக்கு வந்த பார்சல்களின் கவர்கள் தான், அத்தோடு அந்த வீட்டில் அங்கும் இங்குமாய் அலங்கோலமாய் இருந்த அனைத்து பொருட்கள் அவளுக்கு சந்துரு விநியோகம் செய்த பொருட்கள் தான். அவற்றை அவன் பார்த்த போது அதில் குழந்தைகளுக்கான பொருட்களும் பெரியவர்களுக்கான பொருட்களும் கலந்திருந்தது. ஆனால் அதில் அவளுக்கு தேவையான எதும் இருப்பதாக அவன் காணவில்லை. சந்துருவிற்கு அது வினோதமாக தெரிந்தது. அவளுக்கு என்ன பிரச்சனையாக இருக்கும் என யோசித்துக்கொண்டே இருந்தான். அவன் தினமும் வித்தியாசமான மனிதர்களை சந்திக்கிறான் ஆனால் இந்த பெண் அவனை சற்று சிந்திக்க வைத்தாள். பகல் உணவு உற்கொள்ளும் வேலை அவளது இலக்கத்தை வாட்சப்பில் போட்டு பார்த்தான். அதில் அவளது படம் காட்டியது. அவள் ஒரு ஆடவனோடும் ஒரு சிறுவனோடும் இருக்கும் படத்தை போட்டிருந்தாள். சந்துரு என்றும் பார்க்காத ஒரு சிரிப்பு அவள் முகத்தில் இருந்தது. மகிழ்ச்சியானவளாக தெரிந்தாள். அந்த படத்தில் இருப்பது அவளது கணவனும் குழந்தையுமாக தான் இருக்க வேண்டும் அப்படி என்றால் அவர்கள் இப்போது எங்கே. கேள்விகள் நிறைய உண்டானது.
மாலை வேலை அவன் வண்டியோட்டிக்கொண்டிருக்கும் போது அவளிடம் இருந்து அழைப்பு வந்தது. சடார் என்று பிரேக் அடித்து வண்டியை நிறுத்தினான். ஆருத்ரா அமைதியான குரலில் வீட்டுக்கு வந்துவிட்டு போனது நீங்களா என்றாள். சந்துரு தயங்கியபடி ஆம் என்றான். என்ன நடந்தது என்பதை பற்றி கேட்க அவன் நடந்த எல்லாவற்றையும் சொன்னான். ஆருத்ரா அமைதியாக இருந்தாள். சந்துரு பயந்தான். யாரை கேட்டு இதையெல்லாம் செய்தாய் என திட்டிவிடுவாளா என்று நினைத்தான். நீண்ட அமைதிக்கு பின் அவளிடம் இருந்து “தேங்கஸ்” என்று பதில் வந்தது. அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளை டாக்டரிடம் சென்று பார்க்குமாறு சொன்ன போது அவள் தான் பார்த்துக்கொள்வதாக கூறி அழைப்பை துண்டித்தாள்.
மறுநாள் எப்போதும் போல அவளுக்கான பொதியை எடுத்துக்கொண்டு அவள் வீட்டு வாசலில் நின்று அழைத்தான். அவள் வெளியே வந்தாள். பொதியை பெற்றுக்கொண்டு நன்றி சொன்னாள். சிறிய அமைதிக்கு பின் நேற்று டாக்டர் இவ்வளவு தூரம் வந்திருக்கிறாரே அவருக்கு கொடுக்க உங்களுக்கு ஏதும் பணம் தேவையா? என்றாள் அவன் அப்படி எதுவும் தேவை இல்லை அவர் உங்களை போலவே தன்னுடைய வாடிக்கையான கஸ்டமர் தான் என்றான். அவள் சிரித்தாள். சந்துரு எதிர்ப்பார்க்காத ஒரு விடயத்தை சொன்னாள். அவனை வீட்டுக்கு வந்து டீ குடிக்க அழைத்தாள். அவன் மகிழ்ச்சியோடு கண்டிப்பாக வருகிறேன் ஆனால் இன்று இல்லை நாளை வருகிறேன், இன்று டெலிவரிக்கு பொருட்கள் அதிகாக இருக்கிறது என்றான். புன்னகையுடன் விடைப்பெற்று சென்றான்.
அன்று இரவெல்லாம் அவளது நினைவாக இருந்தான் சந்துரு. எப்படியாவது அவளை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் என நினைத்தான். இன்று அவளது முகத்தில் அவன் பார்த்த அந்த புன்னகையை மீண்டும் பார்க்க நினைத்தான். அவளது வசீகரமான முகம் அவனது நினைவுகளில் வந்து வந்து மறைந்தது.
மறுநாள் எப்போதும் போல அவளது வீட்டுக்கு சென்றான். இந்த முறை ஒரு விருந்தினராக செல்கிறான். அவளுக்கு ஒரு பெரிய பிஸ்கட் பாக்கெட்டும் கொஞ்சம் பழமும் வாங்கிச்சென்றான். அவனை உள்ளே அழைத்து உபசரித்தாள் அவள். ஹால் கொஞ்சம் துப்பரவாக இருந்தது. அவனுக்கு காப்பி போட்டு குடுத்தாள்.இருவரும் மிக சாதாரணமான விஷங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
மெல்ல தைரியத்தை வரவழைத்துக்கொண்டு குழந்தையும் கணவனும் இப்போது எங்கே எனக்கேட்டான். அவள் அமைதியாக இருந்தாள். சம்மந்தமே இல்லாத வேறு எதையோ சொல்ல ஆரம்பித்தாள் . ”என்னுடைய பத்தாவது வயதில் நாங்கள் குடும்பமாக கனடா சென்று செட்டில் ஆகிவிட்டோம். தாத்தா பாட்டி மற்றும் சொந்தகங்கள் மட்டும் இங்க ஊரில் இருக்கார்கள். என்றாவது ஒரு முறை நாங்கள் அவர்களை பார்க்க வருவோம். இந்த முறை அம்மா, அப்பா இரண்டு பேரும் வரவில்லை. பதிலால நானும் என் கணவரும் மகன் ஹர்ஷனும் வந்தோம். அந்த நேரம் தான் இங்கே கோவிட் கொஞ்சம் வீரியமாக ஆரம்பித்திருந்தது என்னுடைய கணவனும், மகனும் கொரோனா பாஸிட்டிவ் ஆனார்கள்….”
அவள் அமைதியானாள். பிறகு மெல்ல நடந்ததை சொன்னாள்.
“அவர்களை காப்பாற்ற முடியவில்லை”
சந்துரு செய்வதறியாது அமைதியாக இருந்தான். அவளது நிலை தாங்கிக்கொள்ளும் பக்குவம் அவனிடம் இருக்கவில்லை. எதை சொல்லி அவளை தேற்றுவது என்றும் அவன் அறியவில்லை.
எனக்கு மறுபடி கனடா சொல்ல விசா கிடைக்கவில்லை. அங்கே நாங்கள் இருக்கும் குடியிருப்பிலும் நோய் தொற்று அதிகமானாதால் நாட்டுக்குள் யாரையும் அவர்கள் எடுக்கவில்லை. இன்று, நாளை என்று நான்கு மாதம் ஆகிவிட்டது. என்னால் ஊரிலும் இருக்க முடியவில்லை. அங்கு ஏகப்பட்ட பிரச்சனை. சொந்தங்களுடன் என்னால் சமாளிக்க முடியவில்லை அது தான் நான் கிளம்பிவிட்டேன் யாருக்கும் சொல்லாமல் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளம்பி வெகு தூரமாக இங்கு வந்து சேர்ந்தேன். ஆன்லைனில் தேடி இந்த வீட்டை பிடித்தேன். இன்றோ நாளையோ எனக்கு விமானம் கிடைத்துவிட்டால் நான் கிளம்பிவிடுவேன். எங்கு போனாலும் இந்த வேதனையில் இருந்து என்னால் மீள முடியாது. இருந்தாளும் எனக்கு இப்பொழுது என் அம்மா, அப்பாவிடன் போகவேண்டும்.
அவளது கண்கள் கலங்கியது. அமைதியாக இருந்துவிட்டு மேலும் பேசினாள்.
“இந்த ஆடர் எல்லாம் என்னுடைய கணவனுக்கும் ஹரிஸ்கும் பிடித்தமான பொருட்கள் தினமும் எதையாவது ஆடர் செய்வேன். இதோட இருக்கும் போது எனக்கு அவர்களுடன்இருப்பது போல இருக்கும்.”
இப்போது அந்த அறைமுழுதும் நிறம்பி இருந்த விளையாட்டு பொருட்கள், ஓவியங்கள், புத்தகங்களை பார்க்கும் போது சந்துருக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அவன் அமைதியாக இருந்தான். என்ன சொல்லுவதென்றே அவனுக்கு தெரியவில்லை.
ஆருத்ரா தன்னைத்தேத்திக்கொண்டு சந்துரு பற்றி கேட்டாள். சந்துரு அவனது பாட்டி பற்றியும் அவன் ஊரை பற்றியும் சொல்ல ஆரம்பித்தான். பாட்டி அவனை கல்யாணம் கட்டிக்கொள்ள செய்த செயல்களையும் அவன் தப்பித்து இங்கு ஓடி வந்து வேலைப்பார்ப்பதையும் சொல்லிய போது ஆருத்ரா சிரித்தாள். கண்டிப்பாக ஒரு நாள் அந்த பாட்டியை சந்திக்கவேண்டும் என்றாள். சந்துரு தனக்கு மீண்டும் ஊருக்கு போவது தான் ஆசை. எல்லாம் ஒரு ஆட்டோ வாங்க காசு சேரும் வரைக்கும் தான். சேர்ந்த அடுத்த நொடி என் ஊருக்கு பறந்துவிடுவேன் என்று சொன்னான். அத்தோடு அவனது ஊர் மக்கள், உணவு, கோவில் திருவிழா, ஆறு, கிடங்கு, நீர் வீழ்ச்சி என அவன் இந்த ஐந்து மாதமாக இழந்தவற்றின் அருமைகளை சொல்லிக்கொண்டே வந்தான். அவளை அன்போடு ஊருக்கு அழைத்தான். அவளை கம்பனியின் முதலாளி அம்மா என்று சொன்னால் போது ஊரே கவனிக்கும் என்றான். ஆருத்ரா அவன் பேச்சை மிகவும் விரும்பினாள்.
நாட்கள் செல்ல செல்ல ஆருத்ராவுக்கும் சந்துருக்குமான பழக்கம் அதிகரித்தது. தினமும் அவளுக்கான டெலிவரியை எடுத்து வரும் போது அவளுடன் கொஞ்ச நேரம் சொலவிட்டு செல்லுவான். ஆருத்ரா பெரும்பாலும் சமைப்பதில்லை. நூடில்ஸ் அல்லது கடையில் ஆடர் செய்து தான் உண்டு வருகிறாள் என்பதை தெரிந்துக்கொண்டதும்; ஒரு நாள் தானே சமையளில் இறங்கினான். அவர்கள் ஊருக்கே உரிய கறிசோறு செய்துக்கொடுத்தான். ஆருத்ரா அத்தனை மாதத்திற்கு பிறகு ஒரு நல்ல விருந்து உண்டதாக சொன்னாள். காரம் மட்டும் கொஞ்சம் பார்த்து போடு என்னால் அதை மட்டும் தான் தாங்க முடியவில்லை என்று சிரித்தாள்.
சந்துரு ஆருத்ராவிற்கு நீர்கொழும்பின் விசேஷங்கள் காட்டினான். அவளை பைக்கில் அழைத்துக்கொண்டு முக்கியமான இடங்களை பார்வையிட கூட்டி சென்றான். அவன் எப்போது வந்து நடைப்போடும் கடற்கரைக்கு கூட்டி சென்றான். அவள் மகன் ஹர்சனுக்கும் கடற்கரை மிகவும் மிடிக்கும் வார இறுதியானாலே பீச்சுக்கு அழைத்து போகும் படி அடம்பிடிப்பான் என்றாள். போகும் இடங்களில் எதைப்பார்த்தாலும் அவளது நினைவுகள் இழந்த அவள் குடும்பத்தையே தொடர்பு படுத்திக்கொண்டு இருந்தது. ஆருத்ரா சந்துருவை அங்கிருந்த ஃபை ஸ்டார் ஹாட்டல்களுக்கு சாப்பிட கூட்டிச்சென்றாள். அவன் வாழ்நாளில் பாத்திராத உணவு வகைகளை வாங்கி கொடுத்து உண்ணவும் பழக்கினாள். அவர்கள் சாப்பிட்ட உணவுக்கான பில்லை பார்க்கும் போது அவனுக்கு தலைச்சுற்றியது. இருவரும் நீர்க்கொழுப்பின் புராதான தேவாலயத்துக்கு போய் திரும்பும் போது ஆருத்ரா அவனிடம் மனமுவந்து நன்றி சொன்னாள். இப்படியாக தன்னால் முடிந்த அளவு ஆருத்ராவுடன் நேரத்தை செலவளித்தான்
மூன்று மாதங்கள் ஓடிப்போனது. குளிர்க்காலம் ஆரம்பித்திருந்தது. அன்று சந்துரு மிகுந்த மகிழ்ச்சியுடனும் அதே சமயம் ஒரு வித குழப்பத்துடனும் இருந்தான். அவனது மகிழ்ச்சிக்கு காரணம் அவன் ஊருக்கு கிளம்புவது. அதுவும் ஆருத்ராவுடன் கிளம்புவது. கண்டிப்பாக இந்த பயணம் அவளது மனக்காயங்களில் இருந்து அவளை கொஞ்சம் வெளியில் கொண்டு வரலாம் என அவன் நம்பினான். அத்தோடு பல மாதங்களுக்கு பிறகு ஊரையும் அவனது பாட்டியையும் காணப்போகும் மகிழ்ச்சியும் இருந்தது. ஆனால் அவனது மனக்குழப்பத்துக்கு காரணம் வேறுமாறியாக இருந்தது.
ஆருத்ரவுடன் அவன் பழகிய இந்த மூன்று மாதங்கள் கண்டிப்பாக அவனது வாழ்வின் மறக்க முடியாத நாட்கள் தான். ஆருத்ராவிற்கு ஸ்ரீ எப்படி ஒரு உறவாக தோழனாக இருந்தானோ அதே போல ஊரை விட்டு பிரிந்து வந்த அவனுக்கு ஆருத்ராவும் ஒரு உறவாக தான் இருந்தாள். அவளிடத்தே மிகப்பெரிய மரியாதையும் அன்பும் அவன் கொண்டிருந்தான். ஆனால் ஒரு சில சம்பவங்கள் அவனை கொஞ்சம் குழப்பியது. அன்றொரு நாள் அவள் டீவி பார்த்துக்கொண்டிருந்த போது அவனது தோழில் சாய்ந்து தலை பதித்தது அவனை கொஞ்சம் நெருடியது. அதே போல் ஒரு நாள் திடீர் என எனக்கு விசா வரக்கூடாது என்று தோன்றுவதாக அவள் சொன்னதை அவனால் புரிந்த கொள்ள முடியவில்லை. ஆருத்ராவின் அந்த மாற்றமும் அவள் காட்டிய அன்பும் அவனை கொஞ்சம் குழம்ப வைத்தது. இது பற்றி அவன் டாக்டரிடம் கூறிய போது அவர் மேலும் குழப்பினார். காதலுக்கு வயதில்லை தான் ஆனால் அதை சுற்றி இருப்பவர்கள் பார்க்கும் விதத்தில் வித்தியாசம் இருக்கிறது என்றார். அவன் நிறைய யோசித்தான். எது எப்படியே அவனை நம்பி ஊருக்கு வரும் அவளை மகிழ்விக்க வேண்டியது அவனது கடமை என்று நினைத்துக்கொண்டான்.
அவன் ஊருக்கு கிளம்புவதாக முடிவானதும் இரண்டு நாட்கள் அவனால் ஆருத்ராவை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. விடுமுறைக்கு முன்னதாக அவன் செய்து முடிக்கவேண்டிய வேலைகள் நிறைய இருந்தது. எல்லாம் முடித்துவிட்டு அவளை காண வந்தான். எப்போதும் போல உரிமையோடு வீட்டின் உள்ளே நுழைந்த போது அங்கே யாரோ இரண்டு ஆடவர்கள் அமர்ந்திருந்ததை பார்த்தான். சற்று திகைத்துபோனான். அவர்கள் சந்துருவை கண்டு யார் நீ? என்பதை போல பாத்தார்கள். அவன் தாடு மாறி நிற்கவே உள்ளே இருந்து ஆருத்ரா வெளியே வந்தாள். அவள் ஸ்ரீயை பார்த்ததும் தடுமாறினாள். அவனை பார்த்து திருப்பி கொடுக்க பொதியொன்றும் இல்லை என்றாள். சந்துருவிற்கு புரியவில்லை. ஆனால் அவனை அந்த இடத்தில் அவள் விரும்பவில்லை என்பதை புரிந்துக்கொண்டான். அவன் வெளியேறியதும் உள்ளே இருப்பவர்களிடம் அவள் நான் ஆன்லைனில் ஒரு பொருளை ஆடர் செய்தேன் அது பிடிக்கவில்லை எனவே ரிடர்ன் ஆப்ஷன் கொடுத்திருந்தேன் ஆனால் இப்போது மனதை மாற்றிக்கொண்டேன் என்றாள். வெளியே வந்த சந்துரு வாசலில் இருந்த இரண்டு ஆடவர் சொறுப்பை அப்போது தான் கவனித்தான்.
அமைதியாக வண்டியை எடுத்து புறப்பட்டான். மிகுந்த யோசையோடு எங்கே என்று தெரியாமல் சென்ற அந்த பயணம் கடற்கரையை சென்றடைந்தது. மணல் தரையில் அமர்ந்து கடலையே வெரித்துப்பார்த்துக்கொண்டிருந்த அவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை. சூரியன் மறையும் நேரம் வானம் நீண்ட சிவப்பு மற்றும் மஞ்சளிலான நிறக்கோடுகளை வானில் பறப்பியிருந்தது. ஆருத்ராவிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. அவனை வீட்டுக்கு வரசொல்லி அழைத்தாள் அவளது பேச்சில் ஒரு தளம்பல் தெரிந்தது.
ஆருத்ரா சோர்வாகவும் பலவீனமாகவும் இருந்தாள். நீண்ட அமைதிக்கு பின் பேச ஆரம்பித்தாள்.நீ சென்ற மறுநாள் எனக்கு கனடா எம்பஸியிலிருந்து அழைப்பு வந்தது. அடுத்த வாரத்தில் எனக்கு பயணம் உறுதியாகிவிடும் ஆகையால் என்னை தயாராக இருக்கும் படி சொன்னார்கள்.
அதை கேட்டு சந்துரு பதில் எதுவும் சொல்ல முடியாமல் இருந்தான், இத்தனை நாள் அவள் ஆசைப்பட்ட விடயம் கிடைத்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாளும் அதை கொண்டாடும் மனநிலை இருவருக்கும் இல்லை.
அத்தோடு நேற்று காலை என்னுடைய இருப்பிடத்தையும் என் கணவனின் நண்பர்கள் கண்டு கொண்டு விட்டார்கள், நேற்று நீ வரும் போது இருந்தது அவர்கள் தான், என் நிலையை கண்டு அவர்கள் மிகவும் வருந்தினார்கள் அடுத்த கிழமை நான் போகும் மட்டும் என்னை அவர்களது கொழும்பு வீட்டு வந்திருக்கும் படி கேட்டுக்கொண்டனர்.
சந்துரு சிரித்துக்கொண்டே சொன்னான் அப்படி என்றால் இருவரும் ஒரே நேரத்தில் தான் பயணிக்க போகிறோம் ஆனால் வேறு வேறு திசையில் என்று. ஆருத்ரா அமைதியானாள். அவள் தலை குனிந்திருந்தது. சந்துரு அடுத்த முறை இலங்கை வரும்ப்போது கண்டிப்பாக எங்கள் ஊருக்கு வரவேண்டும் என்றான் அப்பாவியாக. ஆருத்ராவின் கண்களில் நீர் பொத்துக்கொண்டது. அவள் சந்துருவை கட்டி அனைத்து விம்மி விம்மி அழுதாள். , சந்துருவுக்கு கண்கள் கலங்கியது. அவனும் அவளை அனைத்துக்கொண்டான்.
அன்றிரவு சந்துரு “நைட் மெயில்” ரயிலில் பதுளை நோக்கி பயணமானான். அவன் திரும்பி நீர்கொழுப்பு வரும்போது அங்கே ஆருத்ரா இருக்க போவதில்லை. அந்த வீட்டை எந்த சீண்டலும் இல்லாமல் அவன் கடக்கநேரிடும். அவன் பயணித்த அதேவேளை அவளும் கொழும்பில் உள்ள அவளது கணவனின் நண்பன் வீட்டு பயணமானாள். அவளது கணவனின் நண்பனும் அவர் மனைவியும் வந்து அவளை அழைத்துச்சென்றனர். அதை தூரத்தில் இருந்து பார்த்தபின் தான் சந்துரு ரயில் நிலையத்துக்கு பயணமானான். ரயிலில் அவனது பக்கத்து சீட்டு காலியாக இருந்தது. ஆருத்ராவுக்காக அவன் எடுத்து வைத்திருந்த டிக்கட்டும் அவன் கைக்குள் இருந்தது.
எழுத்து – மஹின் சுப்பிரமணியம்